புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னம்

இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னம்

 மச்சு பிக்ச்சு(Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில்இருந்து 80 கி.மீ வட மேற்கே காணப்படுகிறது. பொதுவாக ‘இன்காக்களில் தொலை ந்த நகரம்’ என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூற்றாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்வர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் அரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007 ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்க ளுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள ‘இன்டிகுவாட்டான’ என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400, 000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.