புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

கனிமொழி... காத்திருக்கும் கட்சிப் பொறுப்புக்கள்

கனிமொழி... காத்திருக்கும் கட்சிப் பொறுப்புக்கள்

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன். சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன். என்முறை வருமென்று...

இவை கனிமொழியின் ‘கருவறை வாசனை’ கவிதைத் தொகுப்பில் வரும் கவிதை வரிகள்.

கனிமொழியின் கவிதைகள் சமகாலக் கவிஞர்களின் கவிதைகளுக்கு நிகரானவையல்ல எனப் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இலக்கிய வாரிசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொது வெளிக்குள் நுழைந்தவர் கனிமொழி.

தந்தை சங்ககாலக் கவிதைகளைக் கையிலெடுத்தார். மகளோ சமகாலக் கவிதைகள் வடித்தார். சமூக ஆர்வலராக, இலக்கியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட கனிமொழி, அவரை நன்கறிந்தவர்களுக்கு மிகவும் கூச்ச சுபாவங்கொண்ட, நளினமான பெண். கனிமொழியின் இந்த கூச்ச சுபாவம்தான் அரசியலில் நுழையுமாறு அவருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்புகளையெல்லாம் நிராகரிக்கச் செய்திருக்கிறது.

கனிமொழி கலைஞரின் மூன்றாவது தாரமான ராஜாத்தியம்மாளின் ஒரே வாரிசு. தயாளு அம்மாளின் ஆண் வாரிசுகள் அரசியலில் கொடிகட்டிப் பறக்க தனது மகளும் அரசியலில் இறங்க வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் ஆசைப்பட்டார். ராஜாத்தியம்மாளின் நச்சரிப்புக்கு கலைஞர் இணங்க, கனிமொழி தந்தையின் சொற்கேட்டு அரசியலில் இறங்க வேண்டியதாயிற்று. கனிமொழி 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது எல்லாமே என்னால் தானே என்று ராஜாத்தியம்மாள் அழுதது பலருக்கு நினைவிருக்கலாம்.

கனிமொழி அரசியலில் நுழைந்த போது அவரது எழுத்துக்களைப் படித்திருந்த பலர் அவர் ஒரு கண்ணியமான மக்களுக்காக உழைக்கக் கூடிய அரசியல்வாதியாக வருவார் என்றே நம்பினர். ஆனால் இன்று அவரும் தன் தந்தையின் வழியில் தன் ஊழல்களை மறைக்க, இலக்கிய முகமூடியைப் பயன்படுத்துகிறார் என்பது நிதர்சனமாகியிருக்கிறது. மு. க. ஸ்டாலினுக்கோ, மு. க. அழகிரிக்கோ அது வாய்க்காததால் அவர்கள் அராஜக, அரசியல்வாதிகளாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

2007 ஆம் ஆண்டு கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிகையில் சிபிஐ சேர்த்தது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று கூறிய சிபிஐ, கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரையும் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் வரவேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் திகதி கனிமொழியும் சரத்குமாரும் சி பி ஐ நீதிமன்றில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜராகிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம். கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண் குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடிவிட மாட்டார். எனவே முன்பிணை தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மே 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் திகதி கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி கனிமொழியை உடனடியாகக் கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்பிணை கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்துவிட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டார்.

கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கக் கோரி அவர் சமர்ப்பித்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் பிணை மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இம்மாதம் முதலாம் திகதி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்த நிலையில் சிபிஐ தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், கனிமொழி கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குஸோக்கான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கித் தீர்ப்பளித்தது.

திஹார் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய கனிமொழிக்கு பாரிய அங்கு வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது. சிறை சென்று திரும்பிய கனிமொழியை ஒரு தியாகியாக அவரது கட்சிக்காரர்கள் பலர் வர்ணிக்கின்றனர். 1960களின் ஆரம்பத்தில் கலைஞர் கருணாநிதியும் சிறைசென்றார். இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு அவர் சிறை சென்றார். தொடர்ந்து அவர் 1969 இல் தனது 45 ஆவது வயதில் தமிழகத்தின் முதலமைச்சரானார். கனிமொழியும் சிறை சென்று திரும்பியிருக்கிறார். அவருக்கு இப்போது 43 வயது. சிறை சென்று திரும்பியிருக்கும் கனிமொழிக்கு திமுக வில் ஆதரவு வலுவடைந்திருப்பதால் அவருக்கு கட்சி கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூட சில ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தைத் தொடர்ந்து திமுகவின் மத்திய அமைச்சர்களான ராசா மற்றும், தயாநிதி மாறன் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்தனர். கனிமொழியின் 6 மாதகால சிறைவாசம் முடிவடைந்ததையடுத்து அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. திமுகவின் அமைச்சரவை வெற்றிடத்துக்கு கனிமொழியின் பெயர் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் கலைஞர் சந்திப்பில் பிரேரிக்கப்பட்டதாகவும் சில பத்திரிகைகள் கூறுகின்றன.

திமுக வில் கனிமொழிக்கு தற்போது வழங்கப்படும் முக்கியத்துவம், தமிழகத்தின் தலைவிதியை பெண்கள் இருவர் தீர்மானிக்கும் நிலையை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தந்தையின் சொற்படி கேட்ட கனிமொழியின் காத்திருப்பு என்னவோ வீண்போகவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.