புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

அன்பு வலயம்

அன்பு வலயம்

நேயம் கொள்பவர்களுக்குத் தனிமையேது துன்பமேது வியாபாரமல்ல அன்பு, பரிவு தயவுடன் நோக்கு எல்லாமே கிட்டும்.

உலகிலேயே மிகவும் சுலபமான விஷயம் என்னவெனில், அதுவே எல்லோரிடமும் அன்பு பாராட்டுவதாகும்.

இதனை விட முக்கியமானது நாம் ஆகக்கூடிய பயனை அடையச் செய்யும் பிரதான காரணியும் இந்த அன்புதான்.

ஸர்வமும் அன்பு மயமானால் ஹிருதயம் பரமானந்த மயமாகிவிடும். இதனை விடப் பெரும்பேறு வேறு எதுவுமேயில்லை.

எனவே, இந்த இலகுவான மார்க்கம் இருக்க, மனிதன் குழம்பிய நிலையில் வாழ்வதுமேன் எனக் கேட்கத் தோன்றுகின்றது.

தேவையற்ற விதத்தின் ஏன் தகாத சிந்தனையில் நொந்து நொடிந்து கொள்ள வேண்டும். எது எதற்காகவோ, ஆசைப்பட்டுக் கண் எதிரில் இருக்கும் அனுகூலங்களைப் புறந்தள்ளுவது?

தன்னைத்தான் தவறாக மிக மோசமாக அறுவை சிகிச்சை செய்ய முயல்வது போலவே அமையும்.

தேவையற்ற, முடியாத காரியத்திற்காகச் மூச்சு முட்டு மட்டும் முயல்வது ஆன்ம சக்தியை விரயமாக்கும் கொடூரசெயல். வேண்டாம் இந்த வேலை!

நியாயமான காரியங்களில் சூழ்ந்துவிடப் போவதுமில்லை. சிலசமயம் தீயவர்களுக்கு இதனால் இவர்களிடம் வெறுப்பு மேலிடலாம்.

ஆனால் நியாயவான்களின் ஒவ்வொரு செய்கைகளுமே? மக்களிடம் செல்வாக்குப் பெற்று விரிவதுடன் அவர்களைச் ஜனங்கள், அன்புமீதூர நோக்குவார்கள்.

எல்லோரையும் நேசிப்பவன் ஏனையவர்களை மகிழ்வூட்டுபவனாக இருப்பதானால் அவனே மகிழ்வைப் பெறும் உரிமையையும் பெற்றுக்கொள்கின்றான்.

எவரையும் நேசிக்காதவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வழியேது கிடையாது.

பிறருக்குத் துன்பமூட்டுபவர் அடையும் குரூர திருப்தி ஈற்றில் இவன் வாழ்வினை நெருப்பில் வீழ்ந்துவிட்ட சிறு பஞ்சுபோல் எரிந்துபோய்விடும்.

எதிலும் தீவிரமாக ஆசைப்படுபவர்கள், அதனை அடைந்தாலும்கூட, அவஸ்தைப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. பேராசைக்காரர்களுக்கும் பிறர் துன்பங்களும் புரிவதுமில்லை.

மரத்தின் உச்சிக்குப் போனால், அதன்பின் இறங்கும் மார்க்கமும் தெரிந்திருக்க வேண்டும். கண் மூடித்தனமாக காரியமாற்ற முடியாது.

விண்ணில் சஞ்சாரம் செய்யும் விண்வெளி வீரர்கள் பத்திரமாக நிலத்தில் இருக்க வேண்டும்.

இந்தக் கலையைத் தெரியாமல் எவர் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் எப்படியாவது முன்னேறினால் சரி எனக் கருதிச் செயல்பட்டால் முடிவில் இவர்களுக்கும், சமூகத்திற்குமான தொடர்புகள் துண்டிக்கப்படலாம்.

நாம் முன்னேற்றங்களுக்கான எமது பணிகளைச் தொடர முன் அதனால் பிறருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.

ஒருவர் அன்பு செலுத்தும் நல்லவர்களாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை எளிதில் ஏமாற்றி விடுவதாகவும் சொல்லுகின்றார்கள்.

என்னதான் நல்லவனாக இருந்தாலும் நல்லவனுக்கு எங்கே காலம்... அவனை ஒரு ஏமாளியாகவல்லவா பார்க்கின்றார்கள்’ எனப் பலர் ஆதங்கமுடன் பேசுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

உண்மையில் ஒரு பாவமும் அறியாதவன் புலம்பலை எத்தனை பேர் செவிமடுக்கின்றார்கள்? இருப்பினும் இனியவர்கள் எக்கணமும், பிறரது தகாத விமர்சனங்களால் அல்லது வில்லத்தனங்களால் மனம் சோர்வடைவதுமில்லை.

மனம் அழகானால், குணம் கெட்டவர்களும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களிடம் சரண் அடையத்தான் வேண்டும்.

அன்புக் கோட்டையில் இருப்பவன் அதிகாரம் செய்ய மாட்டான். தனது செய்கையாலேயே மனங்களை வென்றுகொள்வான்.

இன்று சாமிமார்களும் வீண் சண்டித்தனம் செய்கின்றார்கள். பரிவு என்பதே இல்லாதவன் பரதேசிபோல் நடிக்கின்றான்.

வாழ்வதற்கு வழி தேட கபட நாடகம் இலகுவானது என நம்புவது எத்தனை காலத்திற்குப் பொருந்தி வரப்போகின்றது?

இன்று எத்தனை எத்தனையோ வலயங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், பாதுகாப்பு வலயம், சுதந்திர வர்த்தக வலயம் என்று பலவாறான வலயங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. இவைகளுக்கெல்லாம் புதுப்புது நியதிகள், சட்டங்கள், இவைகள் எல்லாம் நன்மைக்கே என்றும், மனித நலன்களுக்கானது என்றும் உரைப்பர்.

ஆனால் எந்தச் சட்டத்திற்கும் உட்படாத, எல்லோருமே பிரவேசிக்கும் மிகவும் விரும்பும் வலயம், ஒருவன் உருவாக்கும் அன்பு வலயமேயாகும்.

இதனுள் இன்பமே என்றும் ஊற்றெடுக்கும் அனைவருமே வந்து சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அன்பானவர்களை அண்டினால் ஆபத்து இல்லவேயில்லை,

எவரையும் தன்னிலும் உயர்ந்தோராய், தகைமை சார்ந்த மேலோராய் அன்பு கொண்டோர் போற்றி மகிழ்வர்.

சொர்க்கத்தின் மேலாம் இவர்கள் ஈர்ப்பின் விசையினால் மொத்த சமூகமுமே பயன்பெறும். பயமற்று நல்லோரை நாடலாம்.

ஏன் சாமானிய மாந்தர் அனைவருமே அன்பு வலயங்களை உருவாக்க முடியும். இந்த முழு உலகமுமே ‘ஏகம்’ ஆகும்.

அன்பினை நேசிப்போர் நோவு அடைவதில்லை. என்று இன்பசாகரத்தில் மிதப்பார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.