புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

யாரிடம் முறையிடலாம்?

யாரிடம் முறையிடலாம்?

- கவிஞர் அ. கெளரிதாசன் -

“பச்சமுத்தார்” வளவி லொரு
பனைமரத்தில் ‘குளவி’கள் தாம்
இச்சையுடன் கட்டியுள்ள
இணையில்லாப் ‘பெருங் கூடு!’

சாலையிலே செல்ப வரும்
சஞ்சலங்கள் கொள்வதில்லை
வேலை செய்து மீள்ப வரும்
வில்லங்கம் கண்ட தில்லை!

நகர்சுத்தம் செய்ப வரும்
நடுங்கி ஒடுங்க வில்லை
பகர்ந்தால் குளவிகளால்
பயமில்லை எனும் கருத்தே!

இப்படியே நம்பி நம்பி
இருக்கின்ற காலையிலே
ஒப்பாரி வைத்தழவே
ஒரு நிகழ்ச்சி நடந்தது மெய்!

“பள்ளிவிட்ட நேர மதில்
பாலர்கள்தாம் வருகை” யிலே,
சொல்லிவைத்து செய்தது போல்
“கல்லெறிந்தான் ஒரு சிறுவன்!”

குளவிகளோ சினமடைந்து
கூடுவிட்டு வெளியேறி,
‘மளமளெ’ன்று பிள்ளைகளை
மனம் போலக் கொட்டியது!

“வைஸ்ணவி”யாம் ‘மீனு’ மகள்
வாய்விட்டுக் கதறி யழ-
இஸ்டம்போல் “குளவிகள் தாம்
இரைந்திரைந்து கொட்டியது!”

அந்தோ’ பரி தாப நிலை’
ஆரிடம் போய் முறையிடலாம்?
விந்தைமிகு உலகாள்வோன்
விளையாட்டாய் எண்ணுவதா?

‘தீபஒளித் தினத் தன்று
தெருவினிலே பட்டாசு
வெடித்திட்ட சத்தத் தால்
வீதியெலாம் குளவி மயம்!’

தீயிட்டுக் கூட்டினையே
தீய்த்திடலாம் ஆனாலும்,
தீயிட்டால் பனைமரத்தில்
தீபற்றி எழுந் தெரியும்!

“மின்சாரக் கம்பி களோ
மேலிருக்கும் காரணத்தால்-
முன்வருவார் எவருமில்லை,”
முயற்சியெலாம் கைவிட்டார்!

பகரவழி இலையென்ற
படியாக ஊர் கூடி,
“நகர பிதா பார்வைக்காய்
நல்லமடல்” சேர்க்கின்றோம்!

தகுந்தபடி ஆய்வு செய்து
தவிசாளர், தகமை பெற்ற-
“நகரபிதா நல்ல தொரு
நடவடிக்கை எடுக்கட்டும்!”

சீனியே வாழவிடு!

- மூதூர் எம். எம். ஏ. அனஸ் -

சீனி நோயே! சீரழிவே!
சிறந்த வாழ்வின் பேரழிவே!
மானிட வாழ்வின் மகிமையினை
மடியச் செய்யும் பெருநோயே!

திடமே கொண்ட மானிடரைத்
தீண்டி நலியச் செய்கின்றாய்
விடவே நல்ல உணவுகளை
வழியாய் நீயும் வந்துள்ளாய்

தவிட்டு அரிசி திண்பதற்கு
தக்க வழியை வகுத்துள்ளாய்
புவிக்குப் பெரிய இடரதனைப்
புரிந்து பூரிப் படைக்கின்றாய்.

இனிப்புப் பண்டம் உண்பதற்கும்
இயலா நிலையைத் தந்துள்ளாய்.
கனியைக் கூட உருசிக்கக்
கடுமைத் தடையை இட்டுள்ளாய்

இருபது வீத மாந்தர்களில்
இலங்கை நாட்டில் நீயுள்ளாய்
பெருகி இன்னும் செல்கின்றாய்.
பெரிய தொல்லை ஆகிட்டாய்.

நீரிழிவுநோய் என்றின்று
நிலைத்த உந்தன் பெயரதுவும்
பாரில் மடிந்து போகாதோ!
பெருத்த தொல்லை நீங்காதோ!

பாடையை நினையாத படலை!

- ஜலால்டீன் -

அவனுக்கு
வேலி வைப்பதில் ஆர்வம்!

யாரும் இல்லாத நேரத்தில்
வேலி வைக்கவே
அதிகம் ஆர்வம் காட்டுகிறான்
கொஞ்சம்
மற்றவனின் பக்கம்
தள்ளித் தள்ளி நாட்டுவதற்காக!

தளை மரம் நட்டு நட்டு
வேலிப் பொதுவில்
தண்ணீர் ஊற்றுகிறான்
மரம் பருத்துப் பருத்து
மற்றவனின் மண்ணை
கவ்விக்கொள்ளட்டும் என்று!

வேலிப்பொதுவை
நெருக்கி நெருக்கித்தள்ளி
அவன் போகும் வரும் வழியையும்
நெருக்கிச் சிறிதாக்கி
படலையும் கட்டியிருக்கிறான்
உறவினரும் பிச்சைக்காரனும்
நெருங்காமல் இருக்க!

நாய் வந்த ஓட்டையில்
சுருக்கு வைத்து
அம்புட்ட பூனையை
கட்டிப் போட்டடிக்கிறான்
பக்கத்து வீட்டு
கோழியின் காலை முறித்து
சிறகையும் பிடிங்கியனுப்புகிறான்
பறந்தும் வராமல்!

அப்படி அவனக்கு
வேலியில் ஆர்வம்!

எல்லோருக்கும் போல்
அவனுக்குமொருநாள்
மரணம் வரும்!

அன்றைக்கு
அவனின்
படலையையும் வேலியையும்
பிரித்துத்தான்
பாடையை
வெளியிலெடுக்க வேண்டியிருக்கும்!

பாவம்
பாடையை நினையாமல்
படலையைக் கட்டியிருக்கிறான்!

மனையாளின் ந்திரம்

- பதியத்தளாவ பாறூக் -

தலையணை மந்திரத்தை
தந்திரமாய் ஓதுகின்ற
மந்திரவாதிகளாய
உங்களின்
இல்லாளை நீங்கள்
இனங்காணுகிaர்கள்!

இதனால்
உங்களின்
சந்தேகப் பேயின்
சலனங்களுக்கு முன்னால்
நாங்கள்
சபலமாகி விடுகிறோம்!

ஆமாம்
புருஷ லட்சணங்களை
புரிந்து கொள்ள முடியாத
உங்களைப் போன்றவர்களால்
குடும்ப உறவுக்கு
கோடு கீறிய
திருக்குறள் கூடத்
திருட்டுப் போய் விட்டது!

நீங்கள் நினைப்பது போல்
கட்டில்களின்
காவல் நாய்களல்ல நாங்கள்
தொட்டில் முதல்
சுடுகாடு வரை
தொடருகின்ற
சுகங்களுக்கும் சொந்தங்களுக்கும்
சொந்தக்காரிகள்!

தாலி கட்டியவள்
தரக்குறை வானவளல்ல
இவள்
தன்மானத்தின்
வேலி என்பதை
மறவாதீர்கள்!

பிள்ளைகளைப் பெறுகின்ற
பெறும் யந்திரமாய்
பெண்களைப் பார்ப்பதினால்தான்
அடிமைப்படுத்தலை
அகராதியாக்கிக் கொண்டீர்கள்!

பெண்ணுரிமை என்பது
நாட்டுக்குள் மட்டுமல்ல
வீட்டுக்குள்ளும்
விழித்திருக்கிறது என்பதற்கு
விடை காணுங்கள்!

உங்களின்
கோணப் புத்திகளால்
கோவலனாகிக் கொண்டாலும்
நாங்கள் என்றும் கண்ணகியாகவே
இருப்போம்!

மனைவி என்பவள்
மந்திரவாதியல்ல
மனமொத்த வாழ்க்கையின்
மந்திரி எனும் மத்திரத்தை
மாறிக்கொள்ளவில்லை என்றால்
தலையணைக்கல்ல
உங்களின்
தலை விதிக்கே
ஓதுவோம்!

நாட்டுக்குி வாங்க மச்சான்

- ஜே. வஹாப்தீன் -

நாடு விட்டுப் போன மச்சான்
நாலு ரெண்டு வருசமாச்சே
வீடு வந்து சேருங்க
விழி இரண்டும் தேடுதிங்க!

கூடு கட்டி என்மனசு
குருவி போல வாழுதுங்க
மாடும் கன்று ஈண்டுடிச்சு
மறுக்காம ஊர் வாங்க!

வெளிநாட்டு அப்பிள்
வேணுமெண்டு கிடக்காம
வெளிக்கிட்டு வாங்க மச்சான்
வெத்தில நான் காத்திருக்கன்!

ஒட்டகத்து எறச்சிக்காய்
ஒங்க மனம் எனை மறந்தா
வட்ட நிலா நான் தேஞ்சி
வானத்தில் மறஞ்சிடுவேன்!

அரவு நாட்டு வாழ்க்கையில
அனைத்துமே வசதி எண்டு
வரமறுத்து நீங்க நீண்டா
வஞ்சி என்ட நிலையென்ன?

நாட்டுக் கோழி நானாக்கி
நல்லகறி சோறு தாறன்
வீட்டுக்கு வாங்க மச்சான்
விசாரிக்கான் நம்ப புள்ள...!

ஆயிரம்தான் காசு பணம்
அடுக்கடுக்காய் அனுப்பினாலும்
அன்பான கணவர் போல்
அஃது எனக்கு நிம்மதியா?
பத்து மாடி வீட்டினிலே
படுத்துறங்கும் மச்சானே
முருங்கை இலை பாலாணம்
விரும்பி உண்ண வருவாயா?

புள்ளையோடு நானழுது
கொள்ளையாக நானேங்க-
வெள்ளை நிலா பல தேடி
வெளிநாட்டில் அலையிaங்க...!

பன்பாயில் படுத்தாலும்
பசியோடு துடித்தாலும்
கண்ணான மச்சான் நீங்க
கண்னெதிரில் இருக்க வேண்டும்!

நாடு விட்டுப் போன மச்சானே
நானுனக்கு வேணுமென்டா
கோடி கொட்டத் தேவையில்லை
ஒழுக்கமுடன் வா மச்சான்!

மாட்டுக்கு மாலை போடு

- பொத்துவில் அஸ்மின் -

காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு -

மூலைக்கு மூலை கூடி
முதுகினை சொரிந்து எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை” கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு...?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசையில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள் நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!

கால் ஆனேன்!

- பாலமுனை பாறூக் -

காலை எடுத்தால் தான்
காப்பாற்ற லாம் என்றார்!
காலா...? உம்மாவா?
கால் என்றேன் தாயே.....!
கலங்கித் தான் நான் நின்றேன்!

இந்தத் தடவை - உன்னை
வைத்தியசாலையிலே
வைத்திட்ட அப்போதில்....

“என்ன கஷ்டம் தான் பிள்ளைக்கு
என்னை ஏத்துறதும்
இறக்கிறதும்....,”
என்று நீ சொன்னாய்!

என்ன கஷ்ட மும்மா எங்களுக்கு?
எதுவுமில்லை....!
எத்தனை வருடங்கள், எம்மை நீ
ஏற்றி, மடி இருத்தி
தூக்கி சுமந்து மகிழ்ந் திருப்பாய்
தாயே...!

பணிவிடைகள் செய்வ தெங்கள்
பாக்கியமாய் நினைக்கின்றோம்.

பெண் மக்கள் இருவருமே
உன் கரமாய் இருக்கின்றார்
பேரன் பேத்தி யெலாம்
பின் பலமாய் நிற்கின்றார்.
ஆதலினால் -
காலா...? உம்மாவா...?
கேட்டார்கள்...!
கால் என்றேன் தாயே!
நான் உனது கால் ஆனேன்!

tவிலங்கான நீ

- எம். ஏ. றமீஸ் -

தாவரத்திற்கு வேர் எப்படி
விலங்காகின்றதோ...
அதேபோல்
நீ எனக்கு....
*
இலையில் தோன்றிய
பனித்துளி போன்றது
நம் காதல்
எப்படித் தோன்றியதென்று
தெரியவில்லை
ஆனால்-
எப்படியும் ஆதவன் வந்து நம்மை
பிரித்துவிடுவான்
என்று தெரிகிறது.
*
உன்னில் சிறைப்படவும்
முடியவில்லை
வெளியேறவும்
வழி தெரியவில்லை

நானும் ஓர் உயிர்

- நுஸ்ரா நவாஸ் -

இதயத்தின் ஓசைகள்
உணரப்படும் நாளில்...
சுவாசத்தின் வேகத்தை
அளக்கப்படும் நாளில்...
கண்களின் பார்வைகள்
கணிக்கப்படும் நாளில்...
செவிகளின் கேள்விகள்
கேட்கப்படும் நாளில்...
மொழிகளின் மெளனங்கள்
சுமக்கப்படும் நாளில்...
வினாடிகளில் விடும் மூச்சுகள்
ரணமாகும் நாளில்...
நானும் ஓர் உயிராய்
இருப்பேன் - அத்தனை
நிலைகளும் என்னையும்
விட்டுவைக்கப்போவதில்லை...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.