புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

விைடயில்லாத ேகள்விவிகள்

விைடயில்லாத ேகள்விவிகள்

‘ராசு.... டேய் ராசு...’... வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில், வளைந்து நெளிந்தோடிய வாய்க்கால் கரையில் குந்தியிருந்து.... பலமாக யோசித்துக் கொண்டிருந்த ராசு என்னும் அந்த பதினான்கு வயது சிறுவனுக்கு தாய் ராணியின் கூப்பிடு குரல் கேட்டாலும், அதை எரிச்சலோடு கேட்டு அலட்சியப்படுத்தியவனாய், நீரோடையை உற்றுப் பார்க்கிறான்.

தாய் மீன்... குஞ்சுகளோடு நீர்ப்பாசுகளை கொத்தி, கும்மாளமிட்டு, ஒன்றை ஒன்று துரத்தி, தாயை தழுவி, குதூகலிக்கிறது.

தாய் கூப்பிட்டதும், குட்டி நாயாய், காலடியில் நிற்கும் ராசுவுக்கு.... நாலைந்து நாளாய்..... மனசே சரியில்லை, தாய் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு வந்திருக்கிறது....!

இறுதியுத்த காலத்தில்.... தகப்பன் சந்திரன் காணாமல் போக, அழுது குளறி, ஒப்பாரி வைத்து தன்னை அணைத்தபடி.... எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்து திரிந்து, சாப்பிட ஏதுமற்று ஷெல்லடிகளுக்கு மத்தியிலும் தன்னை காப்பாற்றிய தாயின் பாச உணர்வை எண்ணி அவன் விம்மி விம்மி குளறியிருக்கிறான்.

தாய், தகப்பனின் அலட்சியமான போக்குகளினால் ஏராளமான சிறுவர்கள் காணாமலும் யுத்தகளத்தில் சிக்குண்டு சிதறிமாண்டும் போனார்கள், தாயின் அரவணைப்பினால் தெய்வாதீனமாக ராசு தப்பியிருக்கிறான்.

எனினும் தந்தையை இழந்த சோகத்திலே அவன் அமிழ்ந்தே போனான்.

‘ராசுக்குட்டி....’ ராசு....

அம்மா.... மூச்சிரைக்க.... பல முறை கூப்பிடுகிறாள், வேண்டா வெறுப்பாக.....! குடிசையின் பக்கம் வரண்ட மனதோடு திரும்பிப் பார்க்கிறான்...!

ராணி....! வாசலில் நின்று....வேறு எங்கோ? பார்த்தபடி நிற்பது தெரிகிறது....

அண்மைக் காலமாக அம்மாவின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் அவனை வேதனைக்குள்ளாக்கிருக்கிறது.

அந்தக் கண்ணாடிக் காரனை அம்மா, எங்கு சந்தித்தாளோ? என்ன உறவோ? ராசுவுக்குப் புரியவில்லை. தகப்பன் வாழ்ந்த காலத்தில் கூட, ராசு இவனைக் கண்டதேயில்லை;

ஒரு மழை நாளில்.... மதிய வேளையில் பைநிறைந்த உணவுப் பொருட்களுடன், தற்காலிகமாக தங்கியிருந்த முகாம் குடிசையருகே...... ! ஆட்டோ ஒன்றில் வந்துறங்கிய அவனை..... ! ஏற்கனவே அறிந்ததைப் போன்றும், வருமாறு அழைத்தது போன்றும் அம்மா ஓடிச் சென்று சிரித்து பையை வாங்கி.... அவனை கூட்டி வருகையில்.... முதற் தடவையாக ராசுவின் மனதில், ஒரு சலனம் ஏற்படுகின்றது.

இன்று காலையில் நடந்த சம்பவங்கள் ராசுவின் நினைவுக்கு வருகிறது....! என்றுமில்லாதவாறு காலையிலே எழுந்த அம்மா....! அவனையும் எழுப்பி குளிக்கவைத்து, அவளும் குளித்து....! பால் தேனீர் போட்டுக் கொடுத்து......! அவளும்.... இலேசாக அலங்கரித்தது...... இதற்குத் தானா? ராசுவின் தகப்பன் இருக்கும்போதும்.... இப்படித்தான் அம்மா நடந்துகொள்வாள்....! வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் அப்பா பையில் றிறைய சாமான்கள் வாங்கி வரும்போது.......! சிரித்த முகத்தோடு....! அம்மா.....! எவ்வளவு சந்தோஷமாக ஓடிச் சென்று அம்மா...... அழைத்து வருவாள்......!

அப்பா.... காணாமல் போன பின்னும் கூட அழகிய அவரது படத்தை அலங்கரித்து.....! ஒவ்வொரு காலையில் வணங்கி.....! கண்ணீர் சிந்துவாள்.... அப்போது.... ராசுவின் கண்களும் குளமாகும்....அப்பா....! என்றாவது ஒரு நாள்.... நீ..... வருவாயப்பா.....! ‘மனது நடுங்கிச் சோரும்....!

‘ராசு.....’ இவர் உண்ட மாமாடா, இந்தியாவில் இருந்து வாறார்.....! வாங்க ரவி....அம்மா..... அவசரமாக ........... அதைக் கூறியவளாய், செயற்கைப் புன்னகையொன்றை ராசுவின் மீது வீசி.... ‘ரவி....! இது....! மகன்... ராசு... எனச் சொல்ல, ‘ஆ...’ அப்படியா.... அடே..... தம்பி.... கிட்டவாடாப்பா... ‘என, ராசுவின் கையை ரவி பிடிக்க எத்தனிக்க... ராசு.... சரேலென விலகிக் கொள்ளுகிறான்... இருவரும்.... குடிசைக்குள் நுழைய... ராசு...’ இறுக்கமான.... முகத்தோடு வெளியே வருகிறான்....’ இப்போது.... முதன் முதலாக, தாயைப் பிடிக்காத உணர்வு மிக அருவருப்பாக... அசிங்கமாக... தலைகாட்ட ஆரம்பிக்கிறது.

‘ராசு!.... இந்தாடா... சாப்பிடு...’ மாமாக வாங்கி வந்தவரு.... என்ற ராணி ஒரு அப்பிள் பழத்தை ராசுவின் கையிலே திணித்தவளாய், ‘போய்...’ விளையாடிட்டு வா...’ தோசை போட்டுட்டு கூப்பிடுறன்....’ என்றபடி இயந்திர கெதியில் ஓடிப்போகிறாள்....’

சந்திரன் காணாமல் போனபின்... அவள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தது இன்றுதான்...! அந்த கண்ணாடியின் பார்வையும், நடையும்.... திருடனின், அல்லது தீமை புரியும் எண்ணம் கொண்டவனின் சாயலை ஒத்திருந்தது.... ராசுவின் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிய.....! அவன் கையிலிருந்த அப்பிள் பழத்தை சூடேறிய கண்களோடு பார்க்கிறான். தவறான நடத்தைகளுக்கு அனுமதி கோரி, அல்லது, அவைகளை கண்டும் காணாதது போல நடந்துகொள் என்பதற்கான அச்சாரமாக தரப்பட்ட அதனை... சாப்பிடவோ? கையில் வைத்திருப்பதோ? அவமானமாக தென்பட... அதனை வேகமாக சுழற்றி.. வீச... அது மரத்தில் மோதி சிதறிப் போகிறது. ‘ஏன்டா... ராசு.. ! ஆட்டோவில் வந்தவன் ஆருடா.. ‘

எதையோ? வெகு ஆழமாக சிந்தித்தபடி நின்று கொண்டிருந்த ராசுவிடம்... பக்கத்து குடிசை மாமி அவனை ஒரு விதமாகப் பார்த்தபடி கேட்க, ராசு.... ‘அவர்.... எங்கட... ! மாமா...’ என்கிறான்.

கிழவி.... சிரித்து கெக்கலித்து... ராசுவை.... ஏமாறும் சோணகிரிப்பயலாக, மிக அற்பமாகப் பார்த்துச் சொல்கிறாள் ‘அட, மடையா?.... அது மாமா... இல்லடா, உனக்கு சின்னப்பா...! இனி.... அவன் தான் அப்பா...! ராசுவை.....! ஏளனமா நோக்கி..... ராணியின் குடிசைப் பக்கம் பார்த்து.....! காறித் துப்பியபடி..... பாவம்... அந்தப் பொடியன்...! அவன்ட நிலைமை என்னென்று தெரியா...! அதுக்குள்ள அவளுக்கு....! ஆள் தேவப்படுது.... யா..... மக...

கிழவி.... மிக ஆத்திரமாக, புறுபுறுத்துக்கொண்டே நடக்கிறாள்.

அதிர்ந்து போய்..... கல்லாகி குந்துகிறான் ராசு...’ அவனது கணிப்பீடும்... கிழவியின் ஆய்வுத் திறனும் தாயைக் கூண்டில் நிறுத்தியுள்ளதை அவன் புரிந்துகொண்டான்.

ராசுவின் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்த அப்பாவுக்கு இணையாக யாரையும் நினைக்க முடியாது...! அம்மா... புதிய நபரை மாமா என்கிறாள்... கிழவியோ! அப்பா என்கிறாள்! எது எப்படியோ? அம்மா... அபபாவின் நினைவுகளிலிருந்து சறுக்கி, அல்லது விலகி, புதிய துணையொன்றை தேடியிருப்பது... மிக உண்மையாக தென்படுகிறது!

இதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு நேரம்,, அவ்வாறு நின்றானோ? தெரியவில்லை. ராசு... இஞ்ச வா.. தம்பி...’ என்ற அம்மாவின் குரல் கேட்டு... மெதுவாக குடிசைக்குள் நுழைகிறான் ராசு.....!

குடிசைக்குள் மாமா... சட்டையை கழட்டி வெறும் உடப்புடன் புதிய பாய் விரிப்பில்... படுத்தபடி.. எவருடனோ கைப் போனில் சத்தமாக கதைத்து சிரித்தபடி ராணியை நோக்கி கண்ணடித்து.... கைப் போனை ராணியிடம் கொடுக்க, அவளும், எதையோ? கதைத்து சிரிக்கிறாள்..... அடுப்பில் கோழிக்குழம்பு கொதித்து மணக்கிறது...!

‘தம்பி.... ‘ராசு...’ மாமாவுக்கு அரை போத்தல் சாராயமும்.... மூணு சிகரெட்டும் வாங்கிவாடா...! நம்மட பாலா அண்ணண்ட கடையில் இருக்கு...’ வாங்கிவா....’ அம்மா... ஐந்நூறு ரூபா தாளை ராசுவிடம் நீட்டுகிறாள்.

குமுறி வெடிக்கும் கோபத் தோடு... செய்வதறியாது ராசு அந்த பாவப்பட்ட பணத்தை வாங்கியபடி திரும்புகிறான். அவனுக்கு... அப்பாவின் ஞாபகம் வருகிறது.

அப்பா... எதுவும் வாங்க ராசுவை கடைக்கு அனுப்பியதேயில்லை... ‘சிறுபையனிடம், அதுவும் பாடசாலை மாணவனிடம், போதை தரும் சாமான்களை வாங்க அனுப்பக்கூடாது என சண்டை பிடிப்பார், ‘அப்பா....’ நீ ... வரவேண்டும் என, நான் சாமியிடம் அழுது வேண்டியிருக்கிறேன், நீ....! வந்தால் எனது முதுகிலே முள் குத்தி காவடி எடுத்து.... அம்மனின் தீக்குளியிலே.... நடப்பதாக சபதம் எடுத்திருந்தேன்....’ ஆனால், அப்பா... இனி.... நீ! இங்கு வரவேண்டாம்... ! உயிரோடு இருந்தால்...நீ.... ! எங்காவது போய்விடு.....’ கை குவித்து அழுகிறான் ராசு.

பாலா... அண்ணனின் கடையில் சனக் கூட்டம் நிரம்பி வழிகிறது....! பாலா அண்ணன் என்பவர் நல்ல கருணையும், தர்ம சிந்தனையும், அன்பும் உள்ளவர். ஆனாலும், அவரது கடையில் உணவுப் பண்டங்களோடு, சாராயம் போன்ற போதையூட்டும் பானங்களையும் விற்பார்.

பாலா அண்ணன் ராசுவைப் பார்க்கிறார் ‘என்ன.... ராசு... எதுவேணும்’ என்று கேட்க, கரகரத்த சோக குரலில் .... அரைபோத்தல் சாராயம்... மூணு சிகரெட் என்றபடி ஐந்நூறு ரூபா தாளை நீட்டுகிறான் ராசு.

காற்றுவாக்கில் ராணியின் நடத்தை பற்றி அறிந்திருந்த பாலா அண்ணன், அனுதாபமாக அவனைப் பார்க்கிறான். அந்தப் பார்வையின் மெளனத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தன் பார்வையை வேறு கோணத்தில் திருப்புகிறான் ராசு....! சந்திரனுக்கு தூரத்து உறவுக்காரனாக பாலா அண்ணண் இருந்தமையினால் முன்பு தொடக்கம் நல்ல பாசமும், பரிச்சயமும் கொண்டிருந்தார்.

பாலா அண்ணணுக்கு விசயம் ஓரளவிற்கு எட்டியிருந்ததனால், மேற்கொண்டு எதுவும் பேசாமல், கேட்டவைகளை கொடுத்துவிட்டு....! ராசுவை அனுதாபமாய் பார்க்கிறார். தன்னை எல்லோரும் கேவலமாய் பார்ப்பதை இனியும் பொறுக்க முடியாது... குமுறி அழுகிறான் ராசு..... ராசு.. என்னடா? இவ்வளவு நேரமாச்சு ... மாமா பசியோட இருக்கார்... கெதியா ஓடிவாடா....’ அம்மா, வெளியே வந்து சத்தம் போட, கண்களை துடைத்தபடி ராசு... தாயிடம் சாமான்களையும் மிகுதிப் பணத்தையும் கொடுக்கிறான்! அம்மா...! அவசரமாக உள்ளே நுழைகிறாள். ராசு மீண்டும்.. அந்த ஓடைக் கரைக்கு வந்து குந்திருந்த போதுதான் அம்மா கூப்பிடத் தொடங்கியிருந்தாள்! ராசுவின் மனம் கல்லாகிற்று..’ எரிமலை போல் எழுந்து நின்றான், இந்தச் சமூகம் தன்னை வாழவிடாது என்பதும், சிலவேளை.... தன்னை யார்? வீட்டிலாவது விட்டுவிட்டு அம்மா..... அவனோடு போனாலும் போவாள், என்ற எண்ணம் மேலோங்க அவன் நடந்தான்.

பாலா அண்ணன்....! ஒரு தாடிக்காரனுடன் ஏதோ? க¨த்ததவர்.... ராசுவை கண்டதும்... ‘டேய், சந்திரன்.. இந்தாவாரது உண்ட மகன் ராசுடா....’ எனக் கூறியபடி... ‘ராசு.... உங்க அப்பாடா.. அப்பா..’ எனச் சத்தமிட்டார்.

ராசு உடல் சிலிர்க்க நின்று பார்த்தான்.... அப்பா தான்...அப்பா... என ஓடிவந்து.. கண்ணீரோடு... சந்திர னை கட்டிப் பிடிக்க, இரு கண்களையும் இழந்திருந்த சந்திரன்.... தடவியபடி.... ராசு... விம்மலோடு அணைத்துக் கொண்டான். நடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட சந்திரன்.... பொறுமையுடன் மிக நிதானமாக சொன்னான் ‘ராசு...’ அவளுக்கு... நான் இறந்து போனதாகவே, இருக்கட்டும்.... நான் திரும்பி போறன்... நீ!

அம்மாட்ட போ... நல்லா இரு.... இரண்டு கண்ணும் தெரியாத என்னோட வந்து என்ன செய்யப் போறா?’ அழுதான் சந்திரன், ‘இல்லப்பா....’ இனி அங்க போகமாட்டான்... நான் உங்களுக்கு துணையாக இருப்பன்... ‘கட்டி அணைத்து கதறினான் ராசு...! தந்தையின் கைக்கோலை முன்னால் பிடித்தபடி ராசு போகிறான்....’ இப்போது மிகச் சந்தோஷமாக அவன் சிரித்துக்கொள்கிறான்.....

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.