புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கப்பட்டதே தேசிய இனப்பிரச்சினை

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கப்பட்டதே தேசிய இனப்பிரச்சினை
 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த

 

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் ஆற்றிய உரை

"வரவு செலவுத் திட்டமானது இலங்கையின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் அனைவருக்கும் சமவாய்ப்பு, கிராமத்தைக் கட்டியெழுப்புதல், தொழில் முயற்சியாண்மை மிக்க பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற மக்களை மையப்படுத்திய பொருளாதார சிந்தனைகளைக் கொண்டுள்ளது”

இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மாற்றங்ளையே கண்டு வந்திருக்கிறது. வியக்கத்தக்க முன்னேற்றங்களையே அடைந்து வந்திருக்கிறது.

இதற்கு, அழகிய எங்கள் இலங்கைத்தீவும் விதி விலக்கானது அல்ல. இன்று நாம் மாற்றங்களை கண்டிருக்கின்றோம்.

இந்த மாற்றங்கள் கடந்த காலங்களை விடவும் பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றது.

மாற்றத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களும் தமது உயரிய வாழ்வின் இலட்சியங்களை நோக்கி அதற்கான பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

யுத்தமும், இரத்தமுமாக அமைதியற்று, அவலப்பட்டு, இருட்டில் கிடந்த எமது தேசம் இன்று நிம்மதிப்பெரூமூச்சு விட்டு நிமிர்ந்து நிற்கிறது.

இப்போது இங்கு பிணங்கள் இல்லை. ரணங்கள் இல்லை. எல்லாமே இங்கு ஒழிந்து முடிந்து விட்டன.

எங்கள் தேசம் தன் கருவறையில் சுமந்திருந்த சமாதானக் குழந்தையை பிரசவித்து விட்டது. சமாதானம் இங்கு பூப்பூத்திருக்கிறது.

நாம் விரும்பும் சமாதானம் என்பது வெறுமனே யுத்தம் இல்லாத பூமி மட்டுமல்ல இரத்தம் சிந்தான மனித வாழ்வு மட்டுமல்ல.

சகல இன சமூக மக்களும் அமைதியான எங்கள் இலங்கைத்தீவில் சமவுரிமை சுதந்திரத்தோடு முகமுயர்த்தி நிமிர்ந்து நிற்கும் சூழலே நாம் விரும்பும் சமாதானமாகும்.

எமது இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கும் ஓர் அமைச்சராக நான் இருப்பினும், தமிழ் பேசும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயகப் பிரதிநிதியாகவும், தமிழ் கட்சி தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று மக்களின் அங்கீகாரத்தை பெற்ற நிலையிலும் இந்த சபையில் நான் நிற்கின்றேன்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் என்ற வகையில் ஒட்டு மொத்த இலங்கை தீவின் அரசியல் பொருளாதார சமூக விடயங்கள் குறித்தும் பேச வேண்டிய கடமை எனக்குண்டு.

ஆனாலும்... எமது தமிழ் பேசும் மக்களை தவறான வழிமுறையில் இது வரை வழிநடத்தி வந்த சுயலாப தமிழ் தலைமைகளின் வெறும் கற்பனாவாத சிந்தனைகளை உணர்ந்து,

சுய லாப தமிழ் தலைமைகளால் எதையுமே பெற்றுத்தராத, பேரிழப்புகளை மட்டுமே எமது மக்களுக்கு இது வரை பெற்றுத்தந்த துயரங்களையும், அவலங்களையும் கருத்தில் கொண்டு...

தமிழ் பேசும் மக்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை வழங்க விரும்பி, இந்த சபையில் நான் தமிழ் பேசும் மக்களின் சில பிரச்சினைகள் குறித்தே பிரதானமாக உரையாற்ற விரும்புகின்றேன்.

அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது, பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கின்றது. எமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் இருந்தே தொடக்கி வைக்கப்பட்டது.

இலங்கைத்தீவை ஆட்சி செய்து வந்த காலனியாதிக்கவாதிகளால் திட்டமிடப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டது.

1948 ம் ஆண்டில் காலனியாதிக்க வாதிகளின் கைகளில் இருந்து எமது இலங்கைத்தீவு விடுவிக்கப்பட்ட நிலையில்,

அன்றில் இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய அரச தலைவர்களும் தவறானதோர் அரசியல் வழிமுறையினையே தொடர்ந்தும் கடைப்பிடித்திருந்து வந்திருக்கிறார்கள்.

சிங்கள சகோதர மக்களுக்கும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டன.

ஆனாலும், இவைகள் குறித்து பேசுகின்ற தார்மீக உரிமையினை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன.

காரணம், தமது தேர்தல் வெற்றிக்காக, வாக்குகளை அபகரிப்பதற்காக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழ் இனவாத வெறியை அடிக்கடி ஊட்டி, எமது மக்களை உசுப்பேற்றி விடுவதும், தமிழ் மக்கள் வீதிக்கு வரும் போது மக்களை நடுத்தெருவில் கைவிட்டு, தமது குடும்பங்களோடு நாட்டை விட்டு ஓடியும் விடுகின்றார்கள்.

அப்பாவி மக்களை பலிக்களத்திற்கு கொல்லக் கொடுத்து விட்டு தாம் மட்டும் உலக நாடுகளெங்கும் உல்லாச பயணம் நடத்தி வருகின்றனர்.

இவர்களால் தூண்டி விடப்பட்ட அப்பாவி மக்கள் அவலங்களை சுமந்து நின்றார்கள். ஆனால் இவர்களது குடும்பங்களோ வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்வு நடத்துகின்றார்கள்.

1956ம் ஆண்டில் இந்த நாட்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டனர்.

ஆனாலும், இவைகள் குறித்தும் பேசுகின்ற தார்மீக உரிமையை சுய லாப தமிழ் அரசியல் தலைமைகள் அன்றே இழந்து விட்டன.

காரணம்,... அன்று தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட போது அன்றைய நாடாளுமன்றத்தில் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இடது சாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள் அதற்கு ஒரு மாற்று யோசனை ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் சிங்களத்தை கற்பது என்றால், சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்றும் தீர்க்க தரிசனமாக தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை அன்று நாடாளுமன்றத்திலும், அதற்கு அப்பாலும் இருந்த சிங்கள தலைவர்கள் பலரும் வரவேற்றிருந்தனர்.

ஆனாலும், அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் அதை ஏற்றிருக்கவில்லை. எதிர்த்தார்கள். சிங்களம் கற்பது தவறு என்று சாதாரண தமிழ் குடிமக்களுக்கு உணர்ச்சி பொங்க போதனைகள் நடத்தி விட்டு. தாம் மட்டும் இரகசியமாக சிங்களம் கற்றுக் கொண்டார்கள். தமது சுயலாபங்களுக்காக தமது பிள்ளைகளை மட்டும் சிங்களம் கற்பிக்க வைத்தார்கள்.

இன்று எமது தமிழ் பிஞ்சுகளும், பெற்றோர்களும் இலங்கையில் உள்ள இரு மொழிகளையும் கற்பதற்கு மாறாக புலம்பெயர்நாடுகளெங்கும் சென்று அந்தந்த நாடுகளில் உள்ள பல மொழிகளையும் பொருளாதார காரணங்களுக்காகவும், கல்வி வசதிகளுக்காகவும் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்காது.

இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்கள் சிங்களத்தை கற்பதற்கும், சிங்கள மக்கள் தமிழ் மொழியை கற்பதற்குமான நிதியினை ஒதுக்கியிருப்பதை நான் இந்த இடத்தில் வரவேற்கின்றேன். அதே வேளை எவரும் செய்யத் துணியாத செயலாக ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியிலும் பேசி வருவதை இந்த சந்தர்ப்பத்தில் இந்த சபையில் மீண்டும் எனது மக்களின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய இலங்கை அரச தலைவர்களால் பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் என்பன கிழித்தெறியப்பட்டன.

ஆனாலும் இவைகள் குறித்து பேசும் தார்மீக உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்து விட்டனர்.

காரணம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இருந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து ஒப்பந்த முயற்சிகளையும், சுய இலாப தமிழ் தலைமைகளே உடைத்து சிதைந்திருக்கின்றார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து நான் தொடர்ச்சியாக கேட்டு வந்திருக்கின்றேன்.

அழிவு யுத்தம் எதையும் பெற்றுத்தராது... அது எமது மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தும். எமது இளைஞர் யுவதிகளை பலியெடுக்கும், அப்பாவி மக்களை கொன்று பசி தீர்க்கும். ஆகவே அரசியல் தீர்வின் மூலம் அடைய வேண்டிய இலக்கினை பெறுவோம், யுத்தத்தை கைவிட்டு வாருங்கள் என்று நான் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வுக்கு வாருங்கள் என்று எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பதற்காக அறை கூவி வந்த எமக்கு தமிழ் மக்களின் அவலங்கள் குறித்தும், நடந்து முடிந்த அழிவுகள் குறித்தும் பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டு என்று கூறுகின்றேன்.

எல்லா மக்களும் சரி சமனானவர்களே என்ற தனது விருப்பங்களையும், கொள்கையினையும் முன்னிலைப்படுத்தி 2012 ம் ஆண்டிற்கான இந்த வரவு செலவு திட்டத்தினை இந்த சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளும் கட்சியின் யோசனைகளை எதிர்த்தே தீர வேண்டும் என்ற உங்களது வழமையான சுயலாப சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு இன்று இந்த வரவு செலவு திட்டத்தை முன்னின்று எதிர்ப்பது உங்களில் யார் என்ற போட்டியில் ஈடுபட்டு வருகின்aர்கள்.

நீங்கள் ஒரு அணியாகவே இருந்து கொண்டு யார் உங்களில் தமிழ் தேசிய வாதிகள் என்பதை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு காட்டுவதற்காகவும்,

உங்களில் யார் தமிழ் இனவாதத்தை பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து நாடாளுமன்ற நாற்காலிகளை கைப்பற்றி உங்களது சுக போகங்களை அனுபவித்து விடலாம் என்ற போட்டியில் ஈடுபட்டு வருகின்aர்கள்.

தமிழ்த் தேசியம் என்பது வெறுமனே தமிழ் இன உணர்ச்சிகளை மட்டும் ஊட்டிவிட்டு மக்களை வீதிக்கு இழுத்து விட்டு நீங்கள் மட்டும் நாட்டை விட்டே ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் அல்ல.

வெளிநாட்டு ராஜதந்திரிகளும், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் இங்கு வந்தார்கள் யாராக இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியே தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சொல்லி விட்டு போகிறார்கள்.

ஆனால், நீங்கள் மட்டும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து அரசியல் தீர்வை இறக்குமதி செய்து தருகிறோம் பாருங்கள் என்ற தோரணையில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வருகின்aர்கள்.

நான் உங்களோடு போட்டி அரசியல் நடத்த விரும்பவில்லை. அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பி ஜனநாயக வழிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வந்தால் நான் புலிகளோடு மாற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்க மாட்டேன் என்று அன்று பகிரங்கமாகவே சொல்லி வந்தது போல,...

தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய உங்களுக்கும் கூறி வைக்கின்றேன். நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன விருப்பங்களோடு வந்தால். நான் உங்களோடு மாற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்க மாட்டேன்.

ஜனாதிபதி உங்களோடும் பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகின்றார். அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்.

இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நீங்களும் அங்கம் வகிப்பதன் மூலம் எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் இலக்கு நோக்கி முன்னேறலாம்.

இலங்கையை ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியமாக மாற்றுகின்ற தொலைநோக்கினை மையமாகக் கொண்டே 2012ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நாம் கடந்த கால யுத்தத்தின் மூலம் அழிந்து சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை தூக்கி நிறுத்த முடியும்.

ஆனாலும், நீங்கள் ஒத்துழைத்து வருவீர்களோ இல்லையோ அரசியல் தீர்வும், அபிவிருத்தி பணிகளும் தமிழ் மக்களின் வாழ்வியலில் நடைமுறை யதார்த்தங்களாக நிகழத்தான் போகின்றன.

இந்த வரவு செலவுத்திட்டமானது இலங்கையின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் அனைவருக்கும் சமவாய்ப்பு, கிராமத்தைக் கட்டியெழுப்புதல், தொழில் முயற்சியாண்மை மிக்க பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற மக்களை மையப்படுத்திய பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இந்த சம வாய்ப்பையும், கிராமங்களை கட்டியெழுப்பும் திட்டங்களையும் ஏற்று நாம் அழிந்து போன எமது தேசத்தை கிராமங்கள் தோறும் புதிதாக கட்டியெழுப்புவோம்.

எமது அரசின் பொருளாதார கொள்கையானது சந்தைப் பொருளாதார சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவையாகும். சந்தைப் பொருளா¡தாரத்தை மிகையாக நம்பியிருப்பதும் (neoliberal economic policies) அதிகரித்த அரச தலையீடும் பாதிப்பானவை என்பதை உலகம் கற்றுக் கொண்டுள்ளது. “மஹிந்த சிந்தனை- எதிர்காலத்திற்கான தொலைநோக்கு” கிராமத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்தி உபாயத்தின் (Rural centric development strategy) மூலம் அனைவரையும் உள்ளடக்கிய (inclusive) சமமான (equitable) பொருளாதார அபிவிருத்தியினையும் தேசிய அபிவிருத்தி அபிலாசைகளை (national development aspiration) நிறைவு செய்யக் கூடியதுமான ஓர் அபிவிருத்தியை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை 2010/2011ம் ஆண்டுகளில் அடைந்துள்ளது. கிராமங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மூலம் வாழ்வெழுச்சியின் மூலம் (திவிநெகும) பணவீக்கமானது 5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. வேலையின்மை 5 சதவீதமாகவும் வறுமை 8.9 சதவீதமாகவும் குறைவடைந்திருப்பது அபிவிருத்தியின் பலாபலன்கள் பின்தங்கிய பிரதேசங்களிற்கு சென்றிருப்பதை வெளிப்படுத்துகின்றது. முன்பு 1000 அமெரிக்க டொலரிற்கும் குறைவாகவிருந்த தலா வருமானம் இன்று 2,800 அமெரிக்க டொலராகவுள்ளது. 2016ம் ஆண்டில் தலா வருமானத்தை 4000 அமெரிக்க டொலராக ஆக்குவது மஹிந்த சிந்தனை இலக்காகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.