புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் நட்பு வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு

டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் நட்பு வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு

பெண்கள், ஆண்களுடன் பேசுவதே தவறு என்று இருந்த காலம் மாறிவிட்டது. பருவப் பெண்கள் எங்கு பார்த்தாலும் தனது போய்பிரண்ட் என்ற சொல்லிக் கொண்டு உலா வருகின்றனர். சில பெண்கள் ஆண் நண்பர்கள் இல்லை என்றும் ஆண்கள் பெண் நண்பர்கள் இல்லை என்றும் வருந்தவும் செய்கின்றனர். ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான், என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக்கூடாது. ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஜொலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள். ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள். தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றியும் பெற்றோரிடமும் பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் போய்பிரண்டின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்துவிடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் இலட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர் பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது.

அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. இயல்பாக பழகியும் விடுகிறார்கள். பள்ளி வயதில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக ஆரம்பிக்கின்றனர்.

நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கித் தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என் பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கின்றன.

கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகின்றன. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில் போய்பிரண்ட் வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது. இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னவாகும்.

பெண்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் போய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழக நேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளூர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.

இதற்குப் பிறகு கணவன் - மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது போய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான், அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.