புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

கற்கோயில்

கடல் அலைகள் மோதி உருவான

கற்கோயில்

இந்தோனேஷிய தீவான பாளியில் கடல் நடுவே ஒரு கோயில் உள்ளது. ‘தானா லொட்’ என்னும் இந்தக் கோயில் பல நூற்றாண்டுகாலமாக கடல் அலைகள் பாறை மீது மோதி உருவானதாகும்.

இது ஒரு புனித யாத்திரை தலமாகவும் அதேவேளை பிரபல சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அடையாள சின்னமாகவும் திகழ்கிறது.

பாளி மொழியில் தானாலொட் என்றால் கடலில் உள்ள பூமி என்று பொருளாகும்.

பாரிய பாறையொன்றின் மீது அமைந்துள்ள இந்தக் கோயில் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டு காலமாக கடல் அலைகள் மோதி உருவானதாகும்.

இது ஒரு கோவிலாக உருவாகக் காரணம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிரர்தா என்னும் மதகுரு ஒருவர் என்று கூறப்படுகிறது.

அவர் இந்தப் பகுதியில் பயணம் மேற்கொண்ட போது இந்தப் பாறை அமைப்பின் அழகால் ஈர்க்கப்பட்டு அங்கு தங்கினாராம்.

அவரைப் பார்த்த மீனவர்கள் சிலர் அவருக்கு சில பரிசுப் பொருட்களைக் கொண்டுபோய் கொடுத்துள்ளனர். நிரர்தா பின்னர் அந்த சிறிய தீவில் அன்றிரவைக் கழித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் அந்த மீனவர்களிடம் தான் அந்த இடத்தின் புனிதத் தன்மையால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் பாளி கடல் தெய்வங்களை வழிபடும் வகையில் அந்தப் பாறையில் ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைக்குமாறும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் தானாலொட் கோவில் அமைக்கப்பட்டதுடன் பாளி புராணக் கதைகளில் ஒரு பகுதியாகவும் இருந்து வந்துள்ளது.

பாளி கடலில் அமைந்துள்ள ஏழு கடல் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு இந்துக் கோவிலாகவே வழிபடப்பட்டு வருகிறது.

இந்தக் கோவிலுக்குள் ஊடுருவ முயற்சிப்போர் மற்றும் தீய சக்திகளை தடுக்கும் வகையில் இந்தக் கடல் தீவுக்கு அடியில் இராட்சத பாம்பு உட்பட விஷமுள்ள கடல் பாம்புகள் கோவிலைப் பாதுகாத்து வருவதாக நம்பப்படுகிறது.

பாளிதீவில் தானாலொட் கோவில் மிக அழகிய இடமாகும். பார்வைக்கு இந்த ஆலயம் கடலில் மிதப்பது போல் காட்சியளிக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.