புத் 63 இல. 49

கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08

SUNDAY DECEMBER 04,  2011

 

ஹொரணை மில்வேவ தமிழ் வித்தியாலயத்தின் பரிதாப நிலை

ஹொரணை மில்வேவ தமிழ் வித்தியாலயத்தின் பரிதாப நிலை

nநீhரணை கல்வி வலயத்தின் கீழ் வரும் மில்லேவ தமிழ் வித்தியாலயம் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலை குறித்து பெற்றோர் மிகுந்த விசனம் தெரிவித்துள்ளனர். தரம் 1 முதல் 5 வரையில் இயங்கி வரும் இப்பாடசாலையில் தற்பொழுது 12 மாணவர்களே இருந்து வருகின்றனர். தரம் 1ல் 2 பேரும், தரம் 2ல் ஒருவரும், தரம் 3ல் 2 பேரும், தரம் 4ல் 2 பேரும், தரம் 5ல் 5 பேருமே இருந்து வருகின்றனர்.

இங்கு அதிபர் ஒருவரும் மூன்று ஆசிரியர்களும் கடமையிலிருந்து வருகின்றனர். அதிபராக இருந்து வருபவர் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பெண் சிங்கள அதிபராவார். மூன்று ஆசிரியர்களில் இருவர் சிங்கள ஆசிரியர்கள் இவர்களில் ஒருவர் ஆங்கிலமும், மற்றவர் சிங்களமும் கற்பித்து வரும் ஆசிரியர்களாவர். ஒரு ஆசிரியரே தமிழ் ஆசிரியராவார்.

சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ்ப் பிள்ளைகளில் சிலர்

இவர் 2007ம் ஆண்டு நியமனம் பெற்று வந்தவர். இவர் வருவதற்கு முன்னர் இப்பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் எவருமே இருக்கவில்லை. இவர் இங்கு வந்து கடமையைப் பொறுப்பேற்ற போது மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாகவே இருந்துள்ளனர். இவர் வந்த பின்னரே மாணவர்களுக்கு எழுத, வாசிக்க கற்பித்துக் கொடுத்துள்ளார்.

இவரோடு மற்றுமொரு தமிழ் ஆசிரியர் வந்த போதிலும் அவர் அதே ஆண்டு இறுதியில் வேலையை விட்டு விலகிக் கொண்டுள்ளார். கடமையிலிருந்து வரும் ஒரேயொரு தமிழ் ஆசிரியரும் 2009-04-27ல் பயிற்சிக்காக வெளியேறிச் சென்று பயிற்சியை பூர்த்தி செய்து இவ்வாண்டு ஜனவரி முதல் மீண்டும் வந்து கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். பயிற்சிக்காக இந்த ஆசிரியர் சென்றிருந்த இரு வருட காலப் பகுதியில் இப்பாடசாலையில் தமிழ்க் கல்வி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தமிழ் ஆசிரியர் மீண்டும் வந்த போது, 2007 முதல் 2009 வரையில் கற்றுக் கொடுத்த பாடங்களையும் மாணவர்கள் மறந்திருந்தனர்.

தமிழ் பாடங்களைப் படிப்பிக்க தமிழ் ஆசிரியர்களும், தமிழ் மொழி புழக்கமும் இல்லாமையே இந்நிலைக்குக் காரணமாகும். தற்பொழுது இந்த ஒரேயொரு ஆசிரியரின் தயவினாலேயே இங்கு தமிழ் புழக்கம் காணப்படுவதுடன் மாணவர்களுக்கான அனைத்து தமிழ்ப் பாடங்களையும் சிரமத்துக்கு மத்தியில் தம்மால் இயன்ற வகையில் படிப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு இரு மாணவர்கள் தோற்றி 53, 17 என்ற புள்ளிகள் பெற்றிருந்தனர்.

சீடா நிறுவனத்தினால் கட்டப்பட்ட இப்பாடசாலையில் 80 X 20, 40 X 20 என இரு கட்டடங்கள் உள்ளன. 80 X 20 அளவிலான கட்டத்தின் இரு தொங்கல் பகுதிகளிலும் இரு ஆசிரியர் விடுதிகளும், நடுவில் வகுப்பறைகளும் உள்ளன.

மாணவர்கள் சிலருடன் தமிழ் ஆசிரியை

ஆசிரியர் விடுதிகளில் எவரும் தங்கியிருப்பதில்லை. இக்கட்டடம் மோசமான நிலையில் இருந்து வருவதால் அறை குறையாக திருத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதுடன் 40 X 20 அளவிலான கட்டடத்திலேயே வகுப்புக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டடமும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. பழைய கிணறு உடைந்து வீழ்ந்ததையடுத்து புதிதாக குடிநீர்க் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கென புதிய மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான மலசலகூடம் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது. பாடசாலையைச் சுற்றி வேலி இல்லாத காரணத்தினால் கட்டாக் காலி மாடுகள் கண்டபடி ஊடுருவி அசுத்தப்படுத்தி வருகின்றன. பாடசாலை வளவு புல்பூண்டுகள் வளர்ந்து சுற்றாடல் காடு மண்டிய நிலையிலேயே காணப்படுவதுடன் அங்குள்ள தென்னை இறப்பர் போன்றவற்றின் பலனை வெளியாரே அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இப்பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் இன்மையால் மில்லேவ தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகள் ஆரம்பம் முதல் சிங்கள பாடசாலைகளுக்கே கல்வி கற்கச் செல்கின்றனர். இதனால் இங்குள்ளவர்களின் பேச்சு வழக்கம் என்பன மாறுபட்டே காணப்படுகின்றன. பிள்ளைகளை தாய்மொழியாகிய தமிழ் மொழியில் படிக்க வைக்க விருப்பமாக இருந்த போதிலும் அதற்கான சூழல், வசதி, வாய்ப்பு இன்மையால் சிங்களம் படிக்க அனுப்புகின்றோம் என பெற்றோர் தெரிவிக்கின்றனர். அண்மையில் இங்கு தமிழ் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும் இங்கு போதுமான ஆசிரியர்கள் இருக்கின்றனர் எனக் கூறி கல்விப் பகுதியினர் நியமிக்கப்பட்ட ஆசிரியரை தடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஹோமகம கல்வி வலயத்தின் கீழ் இருந்து வந்த பாதுக்க ஹேவாகம பாடசாலை இதே நிலையை அடைந்து மூடு விழா கண்டதைப் போன்று இந்தப் பாடசாலைக்கும் அத்தகையதொரு நிலை ஏற்படுமாயின் அது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை கல்வி வலயத்தின் கீழ் வரும் தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பொறுப்பாக இருந்து வரும் தமிழ் அதிகாரி ஒருவர் அண்மையில் இப்பாட்சாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான
மலசல கூடம்.

இந்தப் பாடசாலையின் இந் நிலைக்குக் காரணம் மற்றும் இப்பாடசாலையைச் கட்டியெழுப்பும் திட்டம் ஏதும் உண்டா என தொடர்பு கொண்டு அந்த தமிழ் அதிகாரியிடம் கேட்ட போது எதுவும் கூறமறுத்து வலயப் பணிப்பாளரிடம் கேட்குமாறு கூறினார்.

அத்துடன் ஹொரணை வலய தமிழ் பாடசாலைகள் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து கொள்ள முற்படும் போது இந்த அதிகாரி தகவல்களைத் தருவதைத் தவிர்த்துக் கொள்கின்றார்.

எதுவாகினும் மில்லேவ தமிழ் வித்தியாலயத்தைக் கட்டியெழுப்பி தமிழ்ப் பிள்ளைகள் இங்கு கல்வியைத் தொடரும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டியது தமிழ் அதிகாரிகளின் தலையாய கடமையாகும். தமிழ்ப் பிரிவுக்கென பொறுப்பாக இருந்து வரும் தமிழ் அதிகாரிகளுக்கே தமிழ்ப்பாடசாலைகளின் உண்மை நிலை பற்றி அறியக் கூடியதாக இருக்கும். எனவே பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு பெயரளவில் மட்டும் தமிழ் அதிகாரிகளாக இருந்து வருவதைத் தவிர்த்து மனச்சாட்சியுடன் செயல்பட தமிழ் அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளையில் இப்பாடசாலையின் நிலை குறித்து இதுவரையில் எந்தவொரு தொழிற்சங்கவாதியோ தமிழ் அரசியல் வாதியோ கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வராததுடன் இந்தத் தோட்டத்துக்குள் எவருமே காலடி எடுத்து வைக்கவும் இல்லைனெ பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

சங்கத்துக்கு ஆட்களைச் சேர்க்கவும், ஒட்டு கேட்கவுமே தோட்டக் கமிட்டித் தலைவர்களும், மாவட்டப் பிரதிநிதிகளும் போட்டி போட்டுக் கொண்டு வந்து பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு தலை மறைவாகி விடுகிறார்கள் என மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.