புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
நாவற்பழத்தை ஊதிவிட்டுச் சாப்பிடும் ஒரு மாட்டிடையன் மாதிரி

நாவற்பழத்தை ஊதிவிட்டுச் சாப்பிடும் ஒரு மாட்டிடையன் மாதிரி

என்னைப் பொறுத்தவரையில் ‘நான்’ என்பது இந்தச் சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம். சின்னஞ்சிறு வயது முதல் என் இதயக் குளத்தின் மேற்பரப்பில் அலைகள் கிளப்பியவர்கள் - சலனம் செய்தவர்கள் - பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் பலர்.

அந்தப் பலரில் சிலர் மட்டும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த முயற்சியின் நோக்கம் தனி மனிதர்களின் குணாதிசயங்களைக் கொண்டாடுவதன்று.

என்னை பாதித்த பெருமக்களைப் புள்ளிகளாய்க் கொண்டு என் சமகால சமூகக் கோலம் வரைந்து காட்டுவதே இதன் நோக்கம். இன்னொரு வகையில் சொல்வதானால் இது நன்றி பாராட்டும் ஒரு நாகரிக வடிவம்.

பாறையாய்க் கிடந்த என்னை இலக்கியவாதியாய் இளக்கியவர்கள் - தமிழுக்கு என்னைப் பழக்கியவர்கள் - லட்சியங்களை எனக்குள் விதைத்தவர்கள் - என் மெல்லிய புலன்களை மயிலிறகால் வருடியவர்கள் - வாழ்வின் முக்கியமான நிமிடங்களில் என்னை முடிவெடுக்க வைத்தவர்கள் - சமுத்திரம் நிலப்பரப்பை பாதிப்பது மாதிரி என் சமகாலத்தையே பாதித்தவர்கள் - சராசரி மனிதர்களாய் இருந்தும் என்னுள் சரமழையாய் விழுந்தவர்கள். இவர்களெல்லாம் எனது சின்னத் தூரிகையில் சித்திரமாகியிருக்கிறார்கள். இந்த ஜீவனுள்ள மக்களைச் சிந்திப்பதன் முக்கிய விளைவுகள் மூன்று.

* சில மாமனிதர்களின் சமூகப் பங்கை இதில் சத்தமில்லாமல் மதிப்பிட முடிகிறது.

* நசிந்துபோன பல இதயங்களுக்கு இதில் நம்பிக்கை பிறக்கிறது.

* என் இறந்த காலத்தில் மீண்டும் வசித்து வர எனக்கொரு வசதி கிடைக்கிறது.

என்னை பாதித்த பலரிடமும் நான் நல்லவை மட்டுமே கண்டிருக்கிறேன்.

மண்ணில் விழுந்த நாவற்பழத்தை ஊதிவிட்டுச் சாப்பிடும் ஒரு மாட்டிடையன் மாதிரி ஒவ்வொரு மனிதரிலும் அற்புதமான அம்சங்களை மட்டுமே நான் ஆராதிக்கிறேன்.

நல்லவை எண்ணும்போதும் நல்லவை எழுதும்போதும் மட்டுமே நெஞ்சில் நிம்மதி நிறைந்து நிற்கிறது. காழ்ப்புகள் - கட்சிகள் - மாச்சரியங்கள் - மதங்கள் - நசிந்து கொண்டிருக்கும் நல்லுணர்வுகள் இவைகளால் சர்வதேச மனிதம் சரிந்து கொண்டிருக்கிற ஒரு மோசமான நூற்றாண்டின் முடிவிலும் ஒரு துன்பமான நூற்றாண்டின் தொடக்கத்திலும் நாமிருக்கிறோம். அன்பை விதைப்பதும், புதுப்பிப்பதும், மனிதர்களை மதிப்பதுமே இந்த நூற்றாண்டின் தேசியத் தேவை, அதை இது செய்யலாம். செய்யும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.