புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
மலையக வாழ் மக்களின் பண்பாடும் வழிபாட்டு மரபும்

மலையக வாழ் மக்களின் பண்பாடும் வழிபாட்டு மரபும்

ஓர் ஆய்வுப் பார்வை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்று ரீதியிலான வளர்ச்சிக்கும், விழிப்புக்கும், பண்பாட்டிற்கும் இருக்கின்ற தொடர்பை ஆய்வு செய்ய வேண்டியது. அவசியமானதொன்றாகும். பண்பாட்டு ஆய்வு, என்பது ஒரு மக்கள் கூட்டத்தினரின் தனித்துவ ஆன்மிக, தொழில்நுட்ப அம்சங்களை விரித்து விவரணப்படுத்துவதாக அமையாது. அதனை இன்றைய சமூக சிந்தனைக்கான கருவியாக கொள்ளப்பட வேண்டும்.

மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக, அரசியல், பொருளாதார அம்சத்தினை பண்பாடு எவ்வாறு உள்வாங்கி வளர்ந்துள்ளது. இப்பாண்பாட்டினை ஆய்வு செய்வதன் ஊடாக அவர்களின் சமூக விடுதலைக்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையை தோற்றுவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெருந்தோட்டத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சமூகத்தினரை மலையகம் என்ற பதத்தினுள்ளும் இந்த பண்பாட்டினுள்ளும் அடக்கலாம். எனினும் முக்கியமான பெருந்தோட்டத்தொழில் துறையுடன் தம்முடைய வாழ்வியலை இணைத்துக் கொண்ட பின்வரும் மூன்று பிரிவினரையே இக்கட்டுரை அடையாளம் காட்டி ஆராய்கின்றது.

பண்பாட்டு ஆய்வாளர்கள் பெருந்தோட்ட தமிழ் சமூகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளமைக்கு மிக முக்கியமான காரணம், இம்மக்களின் சமூக பண்பாட்டு விடயங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே எனலாம். அவர்கள் தமது லயன் வாழ்க்கை மரபிலிருந்து விடுபட்டு மேனிலை நோக்கி ஒரு சமூக அசைவியத்துக்காக தொழிற்படத் தொடங்கியுள்ளனர். தோட்டத்தின் சமூக பொருளாதார வட்டத்துக்குச் செல்ல விழைகின்றனர். பொருளாதார வரையறைகளுக்கு அப்பாலும் சமூக பொருளாதார வட்டங்களுக்குச் செல்ல விழைகின்றனர். இந்தக் கோட்பாடு மலையகம் எனும் கோட்பாட்டிற்கும் பண்பாட்டு பாரம்பரியத்திற்கும் வலுசேர்க்கிறது.

எனவே இம்மக்களின் பண்பாடு தென்னிந்திய பண்பாடுடன் பெருமளவு ஒத்ததாக காணப்படினும் இம்மக்கள் தமது உற்பத்தி, உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ற வகையில் இந்த மண்ணுடன் ஒட்டியதாக ஒரு தனித்துவமான பண்பாட்டை உருவாக்கியதுடன் அதனை வளர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அவர்கள் வரும்போது கொண்டிருந்த பண்பாட்டுக் கோலங்களுக்கும், இன்றைய பண்பாட்டு கோலங்களையும் ஒப்பிட்டு நோக்கி அறியக்கூடியதாக இருக்கின்றது. மேலும் தொழிலாளர் பண்பாட்டு அம்சங்கள் அந்த தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இருப்பது அதன் மேம்பாட்டுக்கும் சிறப்புக்கும் காரணமாக அமையம் எனலாம்.

தோட்ட வாழ்க்கையோடு சம்பந்தபட்ட வழிபாட்டு முறைகள்

வழிபாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது. இவை தவிரவும் விபூதி மந்திரித்துக் கொடுத்தல், சாமிபார்த்தல் போன்ற விடயங்கள், திருவிழாக்களின் சாமி வந்து ஆடுதல் என்பவற்றில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

எனவே வழிபாடுகளில் பெண்களின் பங்கு மிகக்கூடுதலாக காணப்படுகின்றது. ஆயின் கந்தஷஸ்டி, கார்த்திகை தீபம் என்பன இன்று நடுத்தர வர்க்கப்பெண்களால் அநேகமாக மேற்கொள்ளப் படுகின்றது. எனவே தொழில் துறையோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வழிபாடுகளில் தோட்டத் தொழிலாளர் பெண்களின் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் அவதானிப்பது முக்கியமானதாகும்.

வழிபாட்டுத்தலங்களும் அமைப்பு முறைகளும்

இதை இரண்டு விதமாக பிரித்து நாம் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

01. நகரப் புற சமூகப் பொது நிலை வழிபாட்டுத்தலங்கள்

02. தோட்டப்புற சமூக பொது நிலை வழிபாட்டுத் தலங்கள்

நகர்ப்புற வழிபாட்டுத்தலங்கள் நகரின் மத்தியில் அமைந்திருப்பதை காணலாம். உதாரணமாக கண்டி செல்வ விநாயகர் கோவில், மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில், இரத்தினபுரி சிவன் கோயில், புசல்லாவ கதிரேசன், கம்பளை கதிரேசன் கோயில், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்¨ளாயர் கோயில் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

இங்கு ஏனைய மதத்தவரும் நேர்த்தி கடன் வைத்து வழிபாடு செய்கின்றனர். பொதுவாக விஷ்ணு, முருகன், விநாயகர் சிவன் தெய்வங்களே முதன்மைப்படுத்தப்பட்ட தெய்வங்களாக காணப்படினும் இக்கோயில்களின் உள்ளே மாரியம்மன், இராமர் போன்ற தெய்வங்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். அத்துடன் தற்போது பல தெய்வங்களின் சிலைகளும் பிரதிட்சைபடுத்தபடுகின்றன. திருவிழாக்கள் தவிர ஏனைய இந்து மதத்தின் முக்கிய உற்சவங்கள், திருமணங்கள் என்பன இங்கு நடைபெறும்.

தோட்டப்புற வழிபாடுகளை பொறுத்தளவில் இவை நகர்ப்புற கோயில் அமைப்புக்களில் இருந்து வேறுபடுகின்றன. இவை தோட்டத்தின் மத்தியில் அனேகமாக காணப்படும். சில வேளைகளில் தோட்ட முகப்புக்களில் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இவை அமைவிடம் கட்டடம், ஓவிய, சிற்ப அமைப்புகளில் நகர்ப்புறங்களில் இருந்து வேறுபடுகின்றன. இவை மூடிய அமைப்புடையவை என கட்டட ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வெள்ளிக் கிழமைகளில் விசேட பூஜை நடை பெறும். வருடாந்த திருவிழா தவிர தைப்பொங்கல், நவராத்திரி, சரஸ்வதி பூசை என்பன முக்கியமான பூஜை நிகழ்வுகளாக காணப்படுகின்றன. இங்கு முத்துமாரியம்மன் பிரதான தெய்வமாக காணப்படுவதுடன் முருகன், விநாயகர், விஷ்ணு போன்ற தெய்வங்களும் காணப்படுகின்றன. பெளத்த மதத்தின் தாக்கம் காரணமாக கோயிலின் முன் பெருமாள்சாமி என்ற கருத்தில் புத்தர்சிலை போதிவடிவில் கட்டப்பட்ட கூட்டினுள் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கட்டட அமைப்பு முறையில் நகர்ப்புறம் சார்ந்த கோயில்கள் திராவிட கட்டடக்கலையை அடிப்படையாக கொண்டதுடன், தென்னிந்திய கைவினைஞர்களால் செய்யப்படுகின்றன. ஆனால் தோட்டப்புறக் கோயில்கள் இதில் வேறுபாடுடையதாக காணப்படுகின்றன.

தோட்டப்புற வழிபாட்டுத்தலங்கள் தொழிலாளர் ஆதிக்கத்தில் இருப்பதை அவதானிக்கலாம். கோயில்களில் கொண்டாடப்படும் விழாக்களும் பூசை முறைகளிலும் கூட வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தவிர தோட்ட சந்தியில் காவல் தெய்வம் என்ற வகையில் முருகன், முனியாண்டி, தெய்வானையம்மன் எனத் தெய்வங்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது நகர்ப்புற கோயில்களுக்கு ஒப்பான ஆலயங்கள் அமைக்கும் பணிகள் தோட்டப்புற மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குல மட்ட, குடும்ப மட்ட, தோட்டத்தொழில் நிலை வழிபாடுகள் பொதுவாக இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வழிபாட்டை ஆய்வாளர் பின்வரும் பிரிவுகளில் உள்ளடக்குவர்.

01. குடும்பமட்ட வழிபாடு

02. குலமட்ட வழிபாடு

03. தோட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாடு

04. தோட்ட வரையறைக்கு அப்பாற்பட்ட வழிபாடு

மேற்கூறிய வழிபாட்டு முறைகள் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இதில் தென்னிந்தியாவில் அவர்கள் மேற்கொண்ட வழிபாட்டு முறையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

குடும்பமட்ட வழிபாடு

குடும்ப சுபீட்சத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த வழிபாட்டில் விநாயகர், முருகன் விஷ்ணு, சரஸ்வதி சிவபெருமான், இலட்சுமி, இராமர், சீதை, அனுமான், நாராயணன், சத்திய சாயிபாபா, அம்மா பகவான், இறந்த அங்கத்தவர் ஆகியோர் இடம்பெறுகின்றனர். சிலைகள் உருவப்படங்கள் என்பவற்றை வீட்டுச் சுவரில் தொங்க விடுதல், தனியறையில் வைத்தல் பலகையில் பெட்டியடித்து வைத்தல் என வழிபாடுகள் இருக்கின்றன. வாழைப்பழம் படைத்தல், விபூதி, சாம்பிராணி, சூடம், வெற்றிலை, பாக்கு, குத்துவிளக்கு என்பன வைத்து பூசை செய்யப்படுகின்றன.

குலமட்ட வழிபாடு

இது சாதி, கோத்திரம் சுபீட்சம் பெற வேண்டும் என்பதற்காக பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குலங்களுக்கு ஏற்ப தெய்வங்கள் மாறுபட்டு காணப்படும். ரெட்டியாட்டி, வரதம்மா, பேச்சியம்மா, பெரியம்மன் என தமது பரம்ரையில் இடம்பெற்ற இறந்தவர்களையும் மாரியம்மன், பழனியாண்டி, மகாலட்சுமி, முனியாண்டி, சங்கிலிகருப்பன், கபட்டுமுனி, கருப்பண்சாமி, வீரமாகாளி, வால்ராசா, ருத்திரகாளி, சுடலைமாடன் என்பன பலி மூலமான வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக காணப்படுகின்றன.

தோட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாடு

இவ்வழிபாட்டில் ஆண்கள் ரோதைமுனி, தவறணை முனி, கம்பிமுனி, கவ்வாத்துமுனி எனும் தெய்வங்களையும் பெண்கள் கொழுந்துசாமி, மட்டத்துசாமி எனும் தெய்வங்களையும் தொழிலோடு இணைந்து தெய்வங்களாக வழிபடுகின்றனர். இத்தெய்வங்கள் கல், மரம், சூலம், வேல் என்பவற்றை குறியீடாக வைத்து வணங்கப்படுகின்றன. கொழுந்து சாமியின் வழிபாடு தேயிலை செடியொன்றுக்கு வழங்கப்படும்.

பின்வரும் தெய்வங்கள் காட்டுமலைத் தெய்வங்களாகும் மாடசாமி, மதுரைவீரன், முனீஸ்வரன், மகாமுனி, வால்முனி, மயானமுனி, செண்டாக்கட்டி, இரட்டைமுனி, வீரமாமுனி, வீரமாகாளி, மஞ்சல்பாளி, வடபத்திரகாளி, காமாட்சி கொழுந்துசாமி, பூச்சியம்மா, மட்டத்துசாமி என்பன சாந்தமான பண்பு கொண்டவை என்றும் கருதப்படுகின்றது.

இத்தெய்வங்கள் அனேகமாக முச்சந்தி, தோட்ட எல்லைகள், சந்தி, மரத்தடி, நீறூற்றுகள், ஆற்றங்கரை போன்ற இடங்களில் சிறிய ஆலயங்கள் அமைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. ஆடு, கோழி என பூசாரி பலியிட்ட பூசையினை நடத்துகின்றார். பச்சை அரிசி, பால், பழம், வெற்றிலை, பாக்கு என்பனவும் படைக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட தமிழரின் பண்பாட்டு கோலம் முழுவதையும் இக்கட்டுரை சிறப்பாக வெளிக்கொணராவிட்டாலும் பெருந்தோட்ட தமிழரின் பண்பாட்டாய்விற்கான ஒரு அடித்தளத்தை இதிலிருந்து பெறமுடியும்.

தவிரவும் தோட்ட தொழிலாளரிடையே நாட்டார் வழக்காற்றின் அடிப்படையிலும், அவர்கள் இங்கு வரும்முன் வாழ்ந்த சமூகத்தின் அடிப்படையிலும் அமைந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், இந்தத் தொழிலாளர்களிடையே இருந்து தோன்றிய ஒரு நடுத்தர வர்க்கத்தினர் ஒரு மிதக்கும் அல்லது போலியான ஆகம முறைகளை அதாவது, இந்த சமூகத்தின் பண்பாட்டிற்கு வெளியில் ஏனையோரால் உயர்ந்தது என கூறப்படும் பூசை முறைகள், ஆசாரங்கள் நோக்கி நகர்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே மலையக மக்கள் மலையக பண்பாட்டையும் வழிபாட்டு மரபையும் பேணி பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.