புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 

தனித்துவமான பாரம்பரியம் கொண்ட விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர்

தனித்துவமான பாரம்பரியம் கொண்ட விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர்

இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் வருடந்தோறும் நடைபெற்று வரும் விம்பிள்டன் பகிரங்க போட்டிகள் டென்னிஸ் விளையாட்டின் மிகப் பழைமையான தொடர் மட்டுமன்றி டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற போட்டி தொடராகும்.

‘கிரான்ட் ஸ்லாம்’ (Grand Slam) எனும் பகிரங்க போட்டி ஸ்தானத்தை கொண்ட போட்டிகள் நான்கில் விம்பிள்டன் தொடரும் ஒன்றாகும். ஏனைய பகிரங்க போட்டிகள் அவுஸ்திரேலியா பிரெஞ்சு மற்றும் அமெரிக்க (U.S) பகிரங்க போட்டிகளாகும்.

விம்பிள்டன் பகிரங்க போட்டிகள் மட்டுமே புற்தரையில் நடாத்தப்படும் ஒரே தனித்துவம் வாய்ந்த டென்னிஸ் போட்டியாகும். இவ்வகையான தரையில் ஆரம்ப காலத்தில் விளையாடி வந்தமையாலே இவ்விளையாட்டு ‘லோன் டென்னிஸ்’ (Lawn Tennis) என்ற பெயரையும் பெற்றது.

வரலாற்று பின்னணி

லண்டன் நகரத்தில் விம்பிள்டன் பகுதியில் அமைந்துள்ள ‘ஆல் இங்கிலன்ட் லோன் டென்னிஸ் கழகத்தினால் (All England Tennis Club) 1877 இல் விம்பிள்டன் பகிரங்க போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆண்கள் பிரிவு போட்டிகள் மட்டுமே நடாத்தப்பட்டன. 1877 இல் நடைபெற்ற முதல் விம்பிள்டன் பகிரங்க போட்டித் தொடரில் வெற்றி பெற்ற பெருமை பிரித்தானியாவின் ஸ்பென்சர் கோர் (Spensar Gore) என்பவருக்கே உரித்தாகும்.

1884 ஆம் ஆண்டு மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் இரட்டையர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1913 முதல் இத்தொடருக்கு மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

135 வருட சரித்திரத்தை கொண்ட இத்தொடரின் ஆரம்ப காலத்தில் பிரித்தானியாவை சேர்ந்த வீரர்களே அதிகம் விளையாடி வந்தனர். ஆனால், காலப்போக்கில் (1910 இன் பின்) ஏனைய நாட்டு வீரர்களும் கலந்து கொண்டு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

1922 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற விம்பிள்டன் தொடர்களில் முன்னைய ஆண்டு வெற்றியாளர் நேரடியாக அடுத்த வருட தொடரின் இறுதி போட்டிக்கு தகுதியடையும் பழக்கம் இருந்தது. ஆனால், இம்முறைமை 1922 இன் பின் மாற்றப்பட்டு அனைத்து வீரர்களும் தகுதி சுற்றுகளில் விளையாட வேண்டிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. 1937 இல் விம்பிள்டன் பகிரங்க போட்டிகள் முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதுவரை காலம் நடைபெற்றுள்ள விம்பிள்டன் போட்டிகளில் அதிகபட்சமான கிண்ணங்களை ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் முறையே அமெரிக்க வீரர்களான பீட் சாம்பிராஸ் (Pete Sampras) மற்றும் மாட்டினா நவரட்டினலோவா (Martina Navaratilova) ஆகியோர் சுவீகரித்துள்ளனர். பீட் சாம்பிராஸ் 1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 7 தடவைகளும் மாட்டினா நவரட்டினலோவா 1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1990 ஆண்டுகளில் மொத்தம் 9 தடவைகளும் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்துள்ளனர்.

விம்பிள்டன் பகிரங்க போட்டிகளின் செல்வாக்கின் பின்னுள்ள இன்னொரு காரணம் அதன் வெற்றியாளர்களுக்குரிய பரிசுத் தொகையாகும். இந்த பரிசுத் தொகையானது வருடாவருடம் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2011 இல் மொத்த பரிசுத் தொகை 14.6 மில்லியனாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் தலா 1.1 மில்லியன் வழங்கப்பட்டது.

தனித்துவமான பாரம்பரியம்

விம்பிள்டன் பகிரங்க போட்டிகள் வருடந்தோறும் ஜூன் மாத இறுதி வாரத்திலும், ஜூலை மாத முதல் வாரத்திலும் நடாத்தப்படும். போட்டிகள் வழமையாக ஜூன் 20 முதல் 26 வரையான காலப்பகுதியில் ஆரம்பமாகி 13 நாட்களுக்கு நடைபெறும். அதாவது ஜூன் மாத இறுதி வாரத்தில் வரும் திங்கட்கிழமையன்று போட்டிகள் ஆரம்பமாகி தொடரின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடையும்.

தொடரின் இரண்டாவது சனிக்கிழமையன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியும், அடுத்த நாள் (ஞாயிறு) ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியும் நடைபெறும். பொதுவாக தொடரின் முதல் ஞாயிறு அன்று போட்டிகள் நடைபெறமாட்டாது. அதேபோல், இறுதி போட்டிகள் மழை குறுக்கீடு போன்ற காரணங்களினால் தடைபட்டால் ‘மக்களின் திங்கள்’ (People’s Monday) எனும் மேலதிக நாளன்று நடைபெறும்.

வருடாவருடம் இப்போட்டிகள் பின்வரும் 5 பிரிவுகளில் நடைபெற்று வருகின்றன.

1. ஆடவர் ஒற்றையர் பிரிவு

2. மகளிர் ஒற்றையர் பிரிவு

3. ஆடவர் இரட்டையர் பிரிவு

4. மகளிர் இரட்டையர் பிரிவு

5. கலப்பு இரட்டையர் பிரிவு

இவற்றில் ஒற்றையர் பிரிவில் 256 வீர, வீராங்கனைகளும் (128 ஆடவர் மற்றும் 128 மகளிர்), இரட்டையர் பிரிவில் 128 ஜோடிகளும் (64 ஆடவர் மற்றும் 64 மகளிர் ஜோடிகள்), கலப்பு இரட்டையர் பிரிவில் 48 ஜோடிகளும் கலந்து கொள்வார்கள்.

விம்பிள்டன் பாரம்பரியங்களில், பாலேடுடன் கூடிய செம்புற்றுப்பழம் மிக விசேஷமானது. இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கொண்ட ஒரு விடயமாகும். மேலும், வீரர்களுக்கான கண்டிப்பான உடையணித் தோற்றம், அரச புரவு, மற்றும் விளையாட்டு களத்தில் விளம்பர பலகைகள் இன்மை போன்ற பாரம்பரியங்களை கொண்ட உன்னதமான தொடர் விம்பிள்டன் பகிரங்க போட்டிகள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.