புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
இரட்டை வால் சிட்டு

இரட்டை வால் சிட்டு

இந்த வானத்திற்கு ஏன் இப்படித் திடீர்க் கோபம். சற்றுமுன், வரை அமைதியாகத்தானே இருந்தது. சன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறேன். மேகங்களிடையே மின்னல், கொடியாக ஓடிப்பரவுகிறது. வானம் உறுமிக் கொண்டு, அதிர்ந்து குமுறுகின்றது. மழை ‘சோ’ என்ற இரைச்சலுடன் பெய்து கொண்டிருக்கிறது. தெரு விளக்கின் வெளிச்சத்தில், மழைநீர் வெள்ளிக் கம்பிகளாக இறங்குகிறது. ஒரு சுழல் காற்று மழையைச் சுழற்றி அடிக்கிறது. அந்த வேகத்தில் மழைத்துளிகள் என் முகத்தில் அறைகின்றன. முகத்தைச் சுளித்தவனாய்ச் சன்னலை மூடிக் கொண்டு உள்ளே வருகிறேன்.

காற்றின் ஊதல் ஓசையின் ஊடே, கிரீச் கிரீச் என்று ஒரு மெல்லிய ஓசை விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. முதலில் மெலிதாகக் கேட்ட அந்த ஒலி, மெல்ல மெல்லப் பெரிதாகி, பின்பு, அலறல் சத்தமாக ஒலிக்கிறது. யாருக்கோ, அல்லது எதற்கோ ஒரு ஆபத்து, உடனே உதவி தேவை, என்பது போல், என் உணர்வில் தோன்ற, சன்னல் கதவைத் திறந்து பார்க்கிறேன்.

மழை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அபயக்குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மகளைக் கூப்பிட்டு, டார்ச் விளக்கை எடுத்து வரச் சொல்கிறேன். உடனே விளக்கோடு மகள் வருகிறாள்; கூடவே மனைவியும்.

விளக்கின் ஒளி, இருட்டில் ஊடுருவி, அலறல் வந்த திசையில், பாய்ந்து, ஒரு பொருளில் பட்டு நிற்கிறது. அந்தப் புள்ளியில் சென்று உற்றுப் பார்க்கிறேன்.

ஒரு சின்னப் பறவை. பறக்க முடியாமல், கீழே கிடக்கிறது. பக்கத்தில் ஒரு கடுவன் பூனை, அந்தப் பறவையைத் தாக்குவதற்காகத் தயாராக நிற்கிறது. தனக்கு ஓர் இரை கிடைக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், தனது வாலை ஆட்டிக் கொண்டே, கால் நகங்களால், தரையில் பிராண்டிக் கொண்டே, உறுமிக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்மிருட்டிலும். அந்தக் கடுவன் பூனையின் கண்கள், தீப்பந்தங்களாய் எரிந்து கொண்டிருக்கின்றன.

பறவைக்கு நிகழவிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்ட நான். அந்தப் பூனையை விரட்டி விட்டு, பறவையைக் கையில் எடுத்துக் கொள்கிறேன். வீட்டிற்குள் நுழைகிறேன். இப்பொழுது, பறவையின் சிறகுகள் மழையில் நன்றாக நனைந்து, சுருங்கிப் போய், உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. பறவையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகள், வீட்டிற்குள் ஓடி ஒரு துணியை எடுத்து வந்து, குளிரால் துடித்துக் கொண்டிருக்கும் பறவையின் உடலைத் துடைக்கிறாள். அவளும் ஒரு சின்னப் பறவைதானே! சின்னப் பறவையின் துன்பம் அந்தச் சின்னப் பறவைக்கும் தெரிந் திருக்கிறது. அந்தச் சின்ன வண்ணப் பறவையின் இறகுகள் மெல்ல அசைகின்றன. கண்கள் சிறிதே திறந்து மூடுகின்றன. சின்னப் பாப்பாவின் கண்களில் மின்னல் தெரிகிறது.

நான் பறவையைக் கையில் ஏந்திக்கொண்டு, உற்றுப் பார்க்கிறேன். அது ஒரு சிட்டு; அந்த வகையில் சற்றுப் பெரியது.

வெளிர் நீல நிறத்தில் சிறகுகள்; செம்மை பூசிய மஞ்சள் வண்ணக் கால்கள்; வளைந்த முள்ளைப் போன்ற பழுப்பு நிற நகங்கள்; கோதுமை மணி போன்ற தங்க வண்ண சின்ன மூக்கு; குண்டுமணி போன்று உருளும் கண்கள்; அதில் மின்னும் மிரட்சி; தலையில் மயில் தோகை போன்ற சிறிய கொண்டை; முட்டை வடிவத்திலான சாம்பல் வண்ண சின்ன உடல்; உடலைப் போல் மூன்று பங்கு அளவிலான, தென்னங் குருத்தோலை போன்ற நீண்டவால்; அது, இரட்டையாய்ப் பிரிந்து காணப்படுகிறது; முட்டையின் வெள்ளைக்கரு போன்று, தூய வெண்மைத் தோற்றம்; அது ஒரு அழகான சின்னச் சிட்டு; இரட்டைவால் சிட்டு.

நன்றாக உலர்ந்து, சிறகுகள் காய்ந்த நிலையில், அந்த இரட்டைவால் சிட்டு, மெல்ல எழுந்து நிற்கிறது. எங்களைப் பார்த்து இரட்டை வாலை மெதுவாக ஆட்டுகிறது. ஒரு வேளை அது. தன் நன்றியைத் தெரிவிக்கிறதோ, என்னவோ..

இந்தப் பறவையைக் காப்பாற்றி மீண்டும் பறக்க விட வேண்டும்; பறந்தாலும், நமது தோட்டத்திற்குள்ளேயே தோட்டத்து மரக்கிளையிலேயே அது தங்க வேண்டும்.

விடிந்ததும், இரட்டைவால் சிட்டு என்ற எங்கள் புதிய விருந்தாளியைத் தூக்கிக் கொண்டு, கால்நடைமருத்துவ மனைக்குச் செல்கிறோம். மருத்துவரிடம் பறவையைக் காட்டி, எல்லா விவரங்களையும் சொல்கிறோம். அவருக்கு இந்த இரட்டைவால் சிட்டு. ஒரு ஆச்சரியமாக இருக்கிறது.

“இந்தப் பறவையைப் பற்றிப் படித்திருக்கிறேன்; பார்த்ததில்லை. இது ஒரு வெளி நாட்டுப் பறவை!” என்று சொல்லிக்கொண்டே, பறவையைப் பரிசோதிக்கிறார். பின்னர், சிந்தனை வயப்படுகிறார். “உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், மின்காந்த அலை கோபுரம் இருக்கிறதா”, என்று கேட்கிறார். “ஆம், இருநூறு மீற்றர் தூரத்தில்” என்று சொல்கிறேன். அவர் மீண்டும் சற்று ஆழ்ந்த சிந்தனையுடன் சொல்கிறார். ‘அதுதான் காரணம்; நேற்று இரவு பெரிய மழை; காற்றும் வேகமாக வீசியது. அதோடு அந்தக் கோபுரத்திலிருந்து வெளிப்பட்ட மின்காந்த அலையும் தாக்கியதால், தாங்க முடியாத நிலையில் பறவை கீழே விழுந்து விட்டது”, என்று மருத்துவர் விவரமாகச் சொல்கிறார்.

“சரி, டாக்டர், இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யுங்கள்”, என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ, ஒரு திரவ வடிவான மருந்தைப் பறவையின் வாயில் புகட்டுகிறார். ஒரு களிம்பை சிறகுகள் இடையே தடவுகிறார். பறவை. புத்துயிர் பெற்றது போல், எழுந்து நிற்கப் பார்க்கிறது; பறக்கத் துடிக்கிறது.

‘வெளியில் விட வேண்டாம். கொஞ்ச நாள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருங்கள்’ என்று கூறி அனுப்பும்போது, ‘ஒரு வெளிநாட்டு விருந்தாளிக்குச் செய்த மருத்துவம், நலமாகட்டும்’ என்று பறவையைத் தொட்டு விடை தருகிறார்.

நாங்கள் பறவையை எடுத்துக்கொண்டு, வீட்டிற்கு வருகிறோம். சிறு சிறு தானிய வகைகள், பருப்பு வகைகள் முதலான, உணவை ஊட்டி, தண்ணீரும் காட்டி, இரட்டை வால் சிட்டு ஓய்வு கொள்ளுமாறு, ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டுகிறோம். அன்று இரவு துரத்தி, வந்த கடுவன் பூனை, பறவையைத் தேடிவந்து விடாமல், பூனை அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, உறங்கச் செல்கிறோம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, சின்னப் பெண், பறவை இருக்கும் அறைக்குச் சென்று, கதவைத் திறந்து பார்க்கிறாள். ஓடிவந்து என்னைக் கூட்டிக் கொண்டு போய், பறவை தூங்கிக் கொண்டிருக்கும் அழகைக் காட்டிச் சிரிக்கிறாள். பறவை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. கால்கள் இரண்டையும் வயிற்றுப் பகுதிக்குள் அணைத்துக் கொண்டு, மூக்கைத் தரையில் படும் வண்ணம் அமைத்துக் கொண்டு, வெண்மையான இரட்டை வால் இரண்டையும் மிக பதவிசாக, தரையில் கிடத்திக் கொண்டு, மென்மையாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சு விடும் அசைவில் அந்த மயிலிறகு வண்ணக் கொண்டை மேலும் கீழும் அசைந்து, எழில் கூட்டுகிறது. நாங்கள், சிட்டுப் பறவையின் உறக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், மிகவும் பதவிசாகக் கதவைச் சாத்திவிட்டு, அந்தப் பறவையைக் காப்பாற்றும் சிந்தனையில் இருக்கிறோம்.

மனைவி சொல்கிறாள்: “இந்த நிலையில் பறவையை வெளியில் விடக்கூடாது. அடைத்து வைக்கவும் கூடாது. பறவையின் இரட்டை வால் சிதைந்து விடக் கூடிய வாய்ப்புள்ளது சில காலம் நம் வீடு முழுவதும் பறவை பறந்து திரியட்டும். அதற்கு வேண்டிய உணவை இங்கேயே ஊட்டுவோம்.

அதுதான் சரி, என்றே எனக்குப்படுகிறது. வீடு முழுவதையும் பறவைக்குக் கொடுத்து விட்டு, நாங்கள் வெளியில், தங்குகிறோம். இரட்டை வால் சிட்டுக்கு வேண்டிய இரையைக் கொடுத்துக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சின்னப் பாப்பாவுக்குக் கொடுத்து விட்டு, நான் பணிக்குச் செல்கிறேன்.

பறவை நல்ல உடல் நலம் பெறுகிறது. இரையைக் கொத்தித்தின்கிறது. வீட்டுக்குள்ளேயே அங்கு மிங்கும் பறந்து மகிழ்ச்சியாகத் திரிகிறது, ‘வெளிவான வீதியில், சுதந்திரமாகப் பறந்து திரிய வேண்டிய பறவையை, வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது சரி இல்லை’ என்று சின்னவள் சொல்கிறாள்.

‘என்ன செய்வது, பறவைக்குப் பாதுகாப்பு வேண்டும். பறவை மறுபடியும் அந்த மின் காந்த கோபுரத்தின் பக்கம் போய் விட்டால், என்ன செய்வது’ என்று எண்ணித் தயங்குகிறேன்,’ என்றாலும் அந்த இரட்டைவால் சிட்டுக்குச் சுதந்திரம் தேவை!என்று கருதிப் பறவை, தோட்டத்திற்குள்ளாகவே பறக்கட்டும் என்று முடிவெடுத்துக் கதவைத் திறந்து விடுகிறோம்.

பறவை மகிழ்ச்சியாகப் பறந்து தோட்டத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது. மரங்களில் தாவித் தாவித் திரிகிறது. நாங்கள் நாள் முழுவதும் அந்த இரட்டை வால் சிட்டுப் பறவையைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு வேண்டிய இரையப் பால்கனியில் வைக்கிறோம். பறவை இரையைக் கொத்திக் கொத்தித் தின்கிறது. இப்பொழுது, குருவி எங்களைக் கண்டு, பயப்படுவதில்லை; பறப்பதுமில்லை. எங்களில் ஒருவராகக் கலந்து, எங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்கிறது. கிரீச் கிரீச் என்று குரலில் கூப்பிடுகிறது.

ஒரு நாள், நண்பகல் பொழுது, எங்கள் வீட்டுச் சன்னல் பக்கம், எங்களுக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது. எங்கள் இரட்டைவால் சிட்டு, சன்னல் பக்கம் வைக்கப்பட்டிருந்த இரையைக் கொறித்துக் கொண்டிருக்கிறது. அதன் பக்கத்தில், புதிதாக அதைப் போலவே. வேறு ஒரு இரட்டைவால் சிட்டு, எங்கள் இரட்டை வால் சிட்டுடன் சேர்ந்து, இரையைத் தின்று கொண்டிருக்கிறது. எங்கள் இரட்டைவால் சிட்டைப் படி எடுத்ததைப் போலவே. அந்தப் புதிய பறவை தோன்றுகிறது. எங்களைப் பார்த்ததும், ஒருவித புதுமை அச்சத்தால், பறந்து பக்கத்தில் இருந்த எங்கள் தோட்டத்தின் மாமரத்தில் அமர்ந்துகொள்கிறது.

எங்கள் குடும்ப இரட்டைவால் குருவி, புதிதாக வந்த இரட்டைவால் குருவியை நோக்கி கீ, கீ, என்று ஒருவித ஒலி எழுப்புகிறது. தனது இரட்டை வாலை ஆட்டுகிறது. ‘பயப்படாதே, வா! இவர்கள் நம்மவர்கள் தான்’ என்று சொல்வது போல், எங்களுக்குப் படுகிறது. மாமரத்தில் அமர்ந்த பறவை தனது இரட்டை வாலை ஆட்டிக் கொண்டு, பறந்து வந்து, எங்கள் இரட்டைவால் பறவையின் பக்கம், அமர்கிறது. இரண்டு சிட்டுக்களும் தங்கள் கொண்டைகளை ஆட்டிக்கொள்கின்றன. அதற்கு எவ்வளவோ அர்த்தம் இருக்கும். எங்களுக்குத்தான் புரியவில்லை.

நாங்கள் அந்தப் பறவைகளைப் பார்க்கிறோம். இன்னும் இரையும் தண்ணீரும் வைத்திறோம். அவை, தின்றும் பருகியும் மகிழ்ச்சியாக இரட்டை வாலை ஆட்டுகின்றன.

‘அப்போது, அவை, ராஜா - ராணி தலையில் உள்ள கிரீடத்தில் சொருகப்பட்ட குஞ்சங்கள் போல ஆடுகின்றன. அந்த அழகைச் சுவைத்துக் கொண்டே, புதிய பறவையின் பக்கம் போய்ப்பார்க்கிறேன். அதன் கழுத்தில், சிறிதாக ஏதோ ஒன்று மின்னுகிறது. அருகில் சென்று பார்க்கிறேன். அது ஒரு அடையாளத் தகடுபோல் காணப்படுகிறது. அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து, மிகச்சிறியதாக இருப்பதால், கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால், ஒன்று ,மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு நாட்டின் பெயரின் சுருக்கம் அது. நன்றாகப் பார்ப்பதற்காகப் பக்கத்தில் போகிறேன். அந்தப் புதிய சிட்டு, கூச்சத்தால் அங்கிருந்த பறந்து விடுகிறதது.

இப்படியாக, நாள்தோறும், அந்த இரட்டைவால் சிட்டுகள் இரண்டும், வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள இரையைத் தின்பதும். தோட்டத்தில் உள்ள மா, பலா, மரங்களில் தாவித் தாவிப் பறப்பதுமாக மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கின்றன.

ஒரு நாள், பணி முடித்து வீட்டிற்கு வருகிறேன். என் சின்னப்பாப்பா அழுது கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் காரணமில்லாமலும் அழுவாள், உடனே அவன் அம்மா, பாப்பாவின் அழுகையை அமர்த்தக் கையாளும் வழிமுறை நினைவுக்கு வருகிறது. பாப்பாவை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் வருகிறேன். பாப்பாவைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, ‘அதே பார், உன் சகோதரி, இரட்டைவால் சிட்டு,’ என்று வழக்கமாக அவை அமரும் மாமரத்தின் கிளையைச் சுட்டிக் காட்டுகிறேன்.

‘எங்கே எங்கே’ என்று திரும்பித் திரும்பிக் கேட்கிறாள். அவளின் தாயாரும் அங்கே வந்து விடுகிறாள். நானும் அவளும் அந்த மாமரத்துக் கிளையை உற்று உற்றுப் பார்க்கிறோம். அங்கே எங்கள் இரட்டைவால் சிட்டும் புதிதாக வந்த இரட்டைவால் சிட்டும் இல்லை. வழக்கமாக இரை வைக்கும் பால்கனியில் பார்க்கிறோம். அங்கும் பறவைகள் இல்லை. சின்னதாக, வெண்மையாக, இரண்டு இரட்டைவால் சிறகுகள், இரை வைக்கும் தட்டின்மேல் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பாப்பாவின் கையில் கொடுக்கிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.