புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
14. நம்பிக்கை

14. நம்பிக்கை

மயிலாப்பூரில் ஸ்ரீகலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய ஸமஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீசுப்பிரணமிய ஐயர் செய்த ஆசி வசனங்களிடையே ராமானுஜாசார்யருடைய மகிமையைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்.

ஸ்ரீமான் நீதிமணி ஐயர் பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்குத் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைத என்ற மூன்று கட்சியும் ஸம்மதம், ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராசார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாக அவருடைய சரித்திரம் சொல்லுகிறது.

பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாச்சாரியார் ஒருவர்; பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும், இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்கவேண்டும்.

நோய் வந்தால் அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும். செல்வம் வேண்டுமானால் தெய்வத்தினிடம் கேட்க வேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்டவரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்மவிதி. ‘அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா’.

எனவே, நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன் கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல், தெய்வ பக்தியையும், அதனாலுண்டாகும் ஊக்கத்தையும், முயற்சியையும் துணையாகக்கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளைத் தெய்வபக்தி வெல்லும். இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன்; அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கைகூடும். நம்பு, கேள், ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே.

தெய்வம் நிச்சயமாக வரம்கொடுக்கும். தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்து முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின் மானத்தைகக் காத்தது. சிவாஜி ராஜாவுக்கு நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமானுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார். ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலையொளி நிற்பது கண்டு, அவற்றை வேதம் போல் கருதவேண்டும் என்று போதனை செய்தார்.

ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம். அப்படி இருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜை செய்யலாமென்று ராமானுஜர் நியமித்தார். முற்காலத்தில் பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்கு தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும், பொய்க் கதைகள் சொல்லி ஹிந்து தர்மத்தை அழிக்க விரும்புகிற கிருஸ்துவப் பாதிரிகளும் அவ்விடத்துச் சிஷ்யர்களும் ராமானுஜாசாரியார் பிராமணர் என்பதை அறியமாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சி நம்பியை ராமானுஜர் குருவாகக் கொண்டு அவருடைய உச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங்கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒரு சமயம் கோயிலுக்குள் வரலாமென்று ஸ்ரீமாரானுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்து வருகிறது.

இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தை இக்காலத்தில் வரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் ஸ்ரீகண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில் பிற மதங்களும் உண்மை என்ற சமரஸ ஞானத்தை ஊட்டத் தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச் சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டு நம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை மிருகங்களைப் போல் ஆக்கிவிடும். வேததர்மம் ஒன்று. அதில் ராமானுஜர் தர்மம் ஒரு கிளை.

பாஷ்ய விசாரணை நல்லது. உண்மையான பக்தியே அமிர்தம், எல்லா உயிர்களிடத்திலும் நாராயணன் விளங்குவது கண்டு அந்த ஞானத்தாலே கலியை வென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படி கண்ணன் செட்டியார் கலாசாலையிலும் அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்தி அருள் செய்க.

15. தைரியம்

நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸமஸ்கிருதபாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷைஎன்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளை யெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.

அந்தப் பாஷையிலே தைரியம் என்பதோர் சொல் உண்டு. தீரனுடைய இயற்கை தைரியம், தீரன் என்ற வார்த்தையின் தாதுப்பொருளைக் கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது. எனவே ‘தைர்யம்’ என்ற சொல் அறிவு உடைமை என்றும் துணிவு உடைமை என்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கு ஒரே சொல்லை வழங்குவது அந்தப் பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.

உலகத்திலே வேறு எந்தப் பாஷையிலும் மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக் கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்த பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால், துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நம் முன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி என்றும் சொல்வானானால், அவனை நம்பாதே; அவன் முகத்தை நோக்கிக் காறி உமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வ ருமாறு சொல் :- அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராமபாணப் பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒரு வேளை வாழ்நாளை வீணாக்கியிருக்கக் கூடும். ஆனால், அச்சம் இருக்கும்வரை நீ அறிவாளியாக மாட்டாய். அஞ்சாமைக்கும், அறிவுக்கும் நம் முன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்!”

ஆம், அச்சமே மடமை, அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன், அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமலும், துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ அவனே ஞானி, ‘ஹரி ஓம்’ என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான்.

சிவாஜி மஹாராஜா தமது சொந்தப் பிரயத்தனத்தினாலும், புத்தி கூர்மையாலும் அவுரங்கசீப்பின் கொடுங்கோன்மையை அழித்து மகாராஷ்டிரம் ஏற்படுத்தி தர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப் படிப்பில் தேர்ந்தவர் அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் படித்துப் பரீஷைகள் தேறி, பதினைந்து ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும், ஆத்மாவையும் விலைப்படுத்தக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான சுவடிகள் படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராஷ்டிர ராஜ்யம் லாபம். இவ்விருவரிலே யார் சிறந்தவர். இவ்விருவரிலே யார் அறிஞர்?

பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்கும் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் ‘துணிவு வேண்டும்’ என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

16. உயிரின் ஒளி

சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீஜகதீசசந்திர வஸ¤ தமது “வஸ¤மந்திரம்” என்ற கூடத்தைப் பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், ‘உயிரின் ஒளி’ என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.

அவருடைய கொள்கை எப்படியென்றால்: நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது. ஜந்துக்களைப் போலவே விருக்ஷ¡திகளுக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆகவே, மண், செடி, ஜந்து மனுஷ்யன் அத்தகைக்குள்ளும் ஒரே விதமான ப்ராணசக்தி இருக்கிறது. ‘இந்த உலகமே உயிர்க்கடல்’ என்பது அவரது சித்தாந்தம். அவர் பல நுட்பமான கருவிகள் செய்திருக்கிறார்.

ஹிந்து தேசத்து தொழிலாளிகளைக் கொண்டு அந்தஸ¥க்ஷ்மக் கருவிகளை எல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப்பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும், யந்திரிகளும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவியின் உதவியால், ஒரு பூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். புகைப்பட்ட ஒரு கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது! அதாவது கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால், மேற்படி செடியின் உள்ள நிலையை அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.

செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைப்போடுகிறது. மறுபடி தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபா னம் செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது.

செடியின், சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப் பார்க்கும்போது, செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பது ருஜுவாகிறது.

இவ்விதமான பரீட்சைகளினால் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படி ஜகதீச சந்திவஸ¥ நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின் மேன்மையைப் பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது அந்த வார்த்தைகளிலே மிகச் சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும் போ§ த படிப்போரின் ஜீவசக்தி மிகுதிப்படுகிறது.

அவர் சொல்லுகிறார்- “சாதாரணக் கருவிகளால் மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின் ஸந்ததியிலே நாம் பிறந்திருக்கிறோம்... ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுவதும் தன்னை ஈடுபடுத்தினால் அடைத்திருந்த

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.