புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
மலரும் புத்தாண்டில் நாம் அனைவரும் நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் பேணிப் பாதுகாப்போமாக...

மலரும் புத்தாண்டில் நாம் அனைவரும் நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் பேணிப் பாதுகாப்போமாக...

சித்திரை முதலாம் நாளையே பழந்தமிழர் புத்தாண்டு நாளாக கொண்டாடி வருகின்றனர். சிங்களவர்களின் அதே நாளையே தமிழர்களும் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இதனால்தான் இலங்கையில் இப்புத்தாண்டை தமிழ் சிங்கள புத்தாண்டு என்று தமிழர்களும் சிங்களவர்களும் அழைக் கின்றார்கள்.

இப்புத்தாண்டுக்கு சிங்கள மக்கள் கொடுக்கும் விளக்கம் “சூரியன் மேட இராசியில் பயணத்தை தொடரும் நாள்” என்பதாகும். இது இந்திய கலாசார தாக்கத்தால் உருவானது என்று சிலர் கூறுகிறார்கள்.

உண்மையில் புத்தாண்டு என்பது பூமியை ஒரு சுற்றுச் சுற்றி, மீண்டும் சுற்றில் பிரவேசிக்கும் தொடக்க நாளாகும். இதனால்தான் ஓராண்டில் 365 நாட்கள் இருக்கின்றன என்று நாம் கூறுகின்றோம்.

கீழைத்தேய நாடுகளில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டதுக்கு பின்பு வணிகத் தொடர்புகள் போன்றவற்றின் தாக்கத்தினால் கிறிஸ்தவர்களின் காலக் கணிப்பு முறை அறிமுகமாகி ஜனவரி மாதம் முதலாம் திகதி புத்தாண்டு தினமாக உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். எனினும் பல்வேறு கலாசாரங்களுக்கு ஏற்புடைய வகையில் புத்தாண்டு தினங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சீனர்கள் வேறொரு தினத்தில் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள்.

இந்துக்கள் தை மாதம் முதலாந் திகதியை தைப்பொங்கல் பண்டிகையுடன் ஆண்டாண்டு காலமாக தமிழர் புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தைமாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தினம் என்று உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்திருந்தார்.

கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டளவில் தேவநம்பிய தீசன் இலங்கையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் பெளத்த மதம் இலங்கையில் அறிமுகமானது. கலிங்கத்துப் போரில் பல்லாயிரக்கணக்கான எதிர்நாட்டுப் போர் வீரர்களை உயிரிழக்கச் செய்து வெற்றி வாகை சூடிய அசோக சக்கரவர்த்தி, யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பை பார்த்து மனவேதனையடைந்த நிலையில் போதிமரத்து மாதவனின் போதனைகளைக் கடைப்பிடித்து. பெளத்த மதத்தை உலகெங்கிலும் பரப்பிய மகத்தான பணியை மேற்கொண்டதாக எமது நாட்டின் வரலாறு சான்று பகர்கின்றது.

புத்த ஆண்டு கால கணக்கிடும் முறை ஒன்றும் உள்ளது. அதன்படி பெளத்த ஆண்டு பிறப்பு மே மாதம் பெளர்ணமி இரவில் ஆரம்பிப்பதாக கூறப்படுகின்றது. அந்த நாளை இலங்கை பெளத்தர்கள் மென் கடதாசிக் கூடுகளை அமைத்து அதற்குள் மெழுகுவர்த்தி அல்லது மின்விளக்குகளை ஒளிரச் செய்து தோரணங்கள் கட்டி வெசாக் பண்டிகையை இரவில் கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பெளத்தர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தும் மகிழ்வார்கள். ஆனால் இப்பொழுது பெளத்தர்கள் புத்த பெருமானின் ஜனனம், பெளத்தத்துவம், அடைந்த தினம் பரிநிர்வாணமடைந்த ஆகிய மூன்று தினங்களும் வெசாக் பெளர்ணமி தினத்திலேயே நடைபெற்றன என்ற நம்பிக்கையில் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழ் சிங்கள புத்தாண்டு உற்றார் உறவினர் நண்பர்கள் ஒன்று கூடி புத்தாடையணிந்து; சிற்றுண்டி உண்டு; பட்டாசு கொளுத்தி கிராமிய விளையாட்டுகளில் பொழுதை போக்கி, உயர்ந்த பலாமரங்கள் போன்றவற்றில் ஊஞ்சல் கட்டி மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டு களிப்படைவார்கள். புத்தாண்டு தினத்தில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார்கள்.

புத்தாண்டு தினத்தில் உறவுகளுக்கு இடையிலும் நண்பர்களுக்கிடையிலும் அயலவர்களுக்கு இடையிலும் இருந்து வந்த பகைமையை மறந்து அன்றைய தினம் நட்புறவை பாராட்டி ஒற்றுமையாக வாழ்வதே நமது நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வரும் சம்பிரதாயமாகும்.

இன்று இலங்கை வன்முறையற்ற ஓர் அமைதியான நாடாக மாறியிருக்கின்றது. இப்போது நாட்டில் பல்வேறு இனங்களிடையே நிலவி வந்த கசப்புணர்வும் சந்தேகங்களும் நீங்கி, எல்லோரும் இலங்கை மாதாவின் அன்பு பிள்ளைகள் என்ற உணர்வு வலுப்பெற்று வருகிறது. இவ்விதம் அமைதியாக எங்கள் தாய் நாட்டை என்றென்றும் பேணிப்பாதுகாப்பதற்கு புத்தாண்டு நன்நாளில் நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.