புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
கலகி பார்த்திபன் கனவு

“குழந்தாய், கேள்! என்னுடைய இளம் வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூரதூர தேசங்களுக்கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன்.

அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே என்றுதான் உன்தமையனைச் சிங்களத் தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்” என்றார் சக்கரவர்த்தி.

“அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது” என்று குந்தவி சொல்வதற்குள்ளே, “உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூரண சம்மதம், அம்மா! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? என்று எனக்குத் தோன்றுவதுண்டு” என்றார் சக்கரவர்த்தி.

“நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்ஸன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்” என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கின.

சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி, “வா! குழந்தாய்! இன்னொரு சமயம் வந்து சாவகாசமாய்ப் பார்க்கலாம். ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்றதும், குந்தவி அவரண்டை வந்து, “அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்கப் போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்கு மல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிaர்கள்?” என்று கேட்டாள்.

சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:-

“இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு, அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக் கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!”

“ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன், அப்பா! அவருடைய மகள்...?” என்று, குந்தவி சொல்வதற்குள், “அதோயாரோ குதிரை மேல் வருகிறானே, யாராயிருக்கும்?” என்றார் மகாமல்லர். பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்னபோதிலும் உண்மையில் கொஞ்ச தூரத்தில், ஒரு குதிரை வந்து கொண்டு தானிருந்தது. சக்கரவர்த்தியும் குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும் சரியாயிருந்தன.

குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நிட்டினான். “அடியேன், தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத பல்லவரயார் இந்த ஓலையை ஒரு கணமும தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச் சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்” என்றான்.

சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார். அதில் என்ன எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி, “நீ போகலாம்! இதில் அடங்கிய விஷயங்களைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோம்” என்றார்.  தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து சென்றான்.

“நன்றாயிருக்கிறது, அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?” என்று கோமகள் கேட்டாள். “என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா? சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பெளர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான்.

நீ வேணுமானால் படித்துப் பார்!” என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார். குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை நோக்கினாள். “உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?” என்றாள். சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும் அமர்ந்தார்கள். வழியில் கோமகள், “அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக் கொடுத்து வைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்!” என்றாள்.

“ஆமாம், குழந்தாய், ஆமாம்! அவனைச் சும்மா விடப்போவ தில்லை. காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் சக்கர வர்த்தி.

கலைத் திருநாள்

மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்ல புரவாசிகள் அவரவர்களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.

மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகரவாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங்காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள் வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.

அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குச் சன்மானம் அளித்தார்கள். கலைக்கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியார்களுக்குப் பொன்னும் புது வஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரிலே ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். (தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.