புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
Feature

என் இனிய நண்பர்களே,

இந்து மதத்திற்குப் புதிய பிரசாரங்கள் தேவையில்லை.

ஏற்கெனவே உள்ள பிரசாரகர்கள், உபன்யாசகர்கள் யாரும் சக்தி குறைந்தவர்களல்லர்.

சொல்லப் போனால், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களையே, நான் இப்போது எழுதப்போகிறேன்.

ஆகவே, ‘புதிய பிரசாரகன் கிளம்பி இருக்கிறான்’ என்ற முறையில், இந்தத் தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவையில்லை.

நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே!

அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக்காலத்திலேயே!

நான் எப்படி ஆத்திகனானேன்?

கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகக் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமரிசித்து, ‘கம்பரசம்’ எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.

படித்தேன்; பல பாடல்களை மனனம் செய்தேன். விளைவு?

கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமை யானேன்.

புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்.

நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்.

மேலும் மேலும் கம்பனைப் படித்தேன்; கடவுளைப் படித்தேன்!

என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன; பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகளெல்லாம் கவிதையிலேயே தோன்றின.

புரட்சி என்கிற பேரில் குருட்டுத்தனமான நாத்திக மனப்போக்குத் தொடர்ந்திருந்தால், எனது எழுத்துக்கள் சுருங்கி, கருத்துகள் சுருங்கி, என் பெயரும் சுருங்கியிருக்கும்.

ரஷ்ய மக்களுக்கு நாத்திகவாதம் பொருத்தமாக இருக்கலாம். அவர்களது மூதாதையர்கள் ஆக்கி வைத்த மதங்களில், இந்து மதத்தில் உள்ளது போல் இவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள் இல்லை. அருமையான கவிதை கலைகளில்லை.

‘வாழ்க்கையில் நீ எந்தச் சாலையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய். அந்த எதிரொலியில் இந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!’

ஒருவன் சராசரி மனிதனாயினும் சரி, தலைமை வகிக்கும் மனிதனாயினும் சரி, ஒரு கட்டத்தில் உள்ளூர இறைவனை நம்பத் தொடங்குகிறான்.

அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக, ஏதாவதொரு, இந்துமதக் கதை அவன் நினைவுக்கு வருகிறது. ‘அன்றைக்குச் சொன்னது சரியாகப் போய்விட்டது’ என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொள்கிறாள்.

நாத்திக வாதத்தில் பணம் கிடைப்பதால், ஒரு சிலர் மட்டுமே, தங்களை ‘இங்கர்சாலின் மாப்பிள்ளை’ களாகக் கருதிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆனால், சமுதாயத்தை ஏமாற்றாத எந்தச் சராசரி மனிதனும், இந்துமதத் தத்துவத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவன் போகும்சாலை இந்துமதம் போட்ட சாலையாகத் தான் இருக்கும்.

‘தெய்வ தண்டனை’ என்று இந்து மதம் சொல்கிறதே, அதை நானே பலமுறை கண்ணெதிரில் கண்டிருக்கிறேன்.

சிறுவயதில் நான் வேலையில்லாமல் அலைந்த போது, ஒருவர் ஒரு மோசமான வேலையைச் சொல்லி, கேலியாக, “அந்த வேலைக்குப் போகிறாயா?” என்று கேட்டார்.

‘அதற்குத்தானா நாம் லாயக்கு’ என்றெண்ணிய நான் அழுதுவிட்டேன்.

என்ன ஆச்சர்யம்!

சில ஆண்டுகளில், அதே வேலைக்கு அவருடைய மகன் போய்ச் சேர்ந்தான்.

நான் இதோ உங்கள் மத்தியில் நிற்கிறேன்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஓர் அதிகாரியின் மனைவியோடு கள்ள நட்பு வைத்திருந்தார். தன் மனைவியைப் பற்றி மட்டும் அவர் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய நல்ல மனைவிகூடச் சில ஆண்டுகளில் வேறு ஒருவரோடு கள்ள நட்புக் கொண்டார்.

அந்த மனிதர் நிம்மதியின்றி அழுதார், அலைந்தார்.

அவரை நான் சந்தித்தபோது, என் நினைவுக்கு வந்தது இந்து மதம்!

நான் படமெடுத்தபோது, என் பங்காளி ஒருவருக்குக் கையெழுத்துப் போடும் உரிமை கொடுத்திருந்தேன்.

அவர், தமக்கு வேண்டிய ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, என் கம்பெனி லெட்டர் பேப்பரில், வெறும் பேப்பரில், கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார்.

அவர், அதை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பூர்த்தி செய்துகொண்டு என்னை மிரட்டினார்.

இரண்டு வருட காலங்கள் நான் நிம்மதியில்லாமல் இருந்தேன்.

இரவில் திடீர் திடீரென்று விழிப்பு வரும். ‘கண்ணா கண்ணா!’ என்று அழுவேன்.

அந்தப் ‘பினாமி’ நபர், ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அந்தக் கம்பெனியின் உபயோகத்திற்காக, அவசரமாக ஒரு வெறும் பேப்பரில் கையெழுத்துப் போட்டு, கம்பெனி மானேஜரிடம் கொடுத்துவிட்டுப் போனார்.

அந்த மானேஜருக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டை வந்தது.

அந்த மானேஜருக்கு, நான் ஏமாற்றப்பட்ட விதம் தெரியும்.

ஆகவே, ஒருநாள் அதிகாலையில் அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.

நான் அதிலே எழுபத்தையாயிரத்துக்குப் பூர்த்தி செய்து அவரைக் கூப்பிட்டுக் காட்டினேன்.

பினாமி நபர் என் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.

பிறகு இரண்டு பேருமே இரண்டு பேப்பர்களையும் கிழித்துப் போட்டுவிட்டோம்.

அப்போது என் நினைவுக்கு வந்தது இந்துமதம்!

என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது ‘நம் மூதாதையர்கள் முட்டாள்களல்ல’ என்பதே.

ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்து மதம், உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு விநாடியையும் அளந்து கொடுக்கிறது.

இந்தியாவின் வடஎல்லையில் தோன்றி, இந்தியா முழுமையிலும் ஓடி, சீனா முழுவதையும் கவர்ந்து ஆசியாக் கண்டத்தையே அடிமை கொண்ட பெளத்த மதம், இந்து மதத் தத்துவங்களாலே சீரணிக்கப்பட்டு, இந்தியாவில் இல்லாமல் ஆகிவிட்டது.

தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதி காரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி நான்கும், சமண பெளத்த மரபுகளைக் காட்டுவதை நாம் எண்ணிப் பார்த்தால், சமண பெளத்தத்தின் செல்வாக்கு தென்குமரிவரை எப்படியிருந்தது என்பதை அறிய முடியும்.

ஜைன - பெத்த மதங்கள் பெற்றிருந்த செல்வாக்கை நமது வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

அவை எங்கே?

இந்து மத்தத்தின் தத்துவங்களுக்குள் அவை அடங்கிவிட்டன.

அந்த நதிகள் இந்து மாக்கடலில் சங்கமமாகி விட்டன.

வள்ளுவன் குறிப்பிடும் ‘ஆதிபகவன், உலகியற்றியான்’ அனைத்தும், புத்தரை அல்லது ஜைன -சமயக் கடவுளையே!

இப்படி நான் சொல்வதற்குக் காரணம், வள்ளுவனுக்குப் பின்வந்த ஐம்பெரும் இலக்கியங்களில் சமண பெளத்த மரபு கலந்திருப்பதால்.

ராமானுஜர் காலத்திலிருந்து இந்துமதம் உத்வேகத்தோடு எழுந்திருக்கிறது.

அமைதியான முறையிலேயே அத்தனை மதங்களையும் ஆட்கொண்டிருக்கிறது.

காரணம், அதன் ஆழ்ந்த தத்துவங்களே!

சிலப்பதிகாரத்திலும் துர்க்கை கோயில் வருகின்ற தென்பதியிலிருந்து இந்து மதம் முன்பும் செழிப்பாகவே இருந்தது என்றாகிறது.

ஆனால், பல பூர்வீக மதங்களையும், தன்னுடைய கிளை அலுவலகமாக ஆக்கிக்கொண்டு, தானே தலைமை தாங்கத் தொடங்கிய காலம் ராமானுஜர் காலமே!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.