புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
விஜய சித்திரைப் புத்தாண்டில் சந்தோ'மே சாஸ்வதமாகட்டும்!

விஜய சித்திரைப் புத்தாண்டில் சந்தோ'மே சாஸ்வதமாகட்டும்!

இந்த ஞாலமும், காலத்தின் மாற்றங்களின் பதிவுகளும் இறைவனின் சித்தமே!

கழிந்து போகும் ஒவ்வொரு மணித்துளிகளும் இறைவனால் ஏற்கனவே வரையப்பட்ட சித்திரங்களே!

ஒவ்வொரு நொடியும் கூட இந்தப் பூமி, தான்போன பாதையைச் சந்திக்கின்றது. ஆனால் இந்த உலகில் வாழும் உயிர்களின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.

ஆம் இன்று நாம் நந்தன வருடம் கழிந்து விஜய புதுவருடத்தை சந்திக்கின்றோம். மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே

சிவபுராணம் - (திருவாசகம்) இடைவிடாது மாறுபட்டு மாறுபாடு அடைந்து வரும் இந்தப் பூவுலகில் வெவ்வேறு வடிவங்களோடு நீ அறிவாக இலங்குகின்றாய். தெளிவானவனே, தெளிவினில் தெளிவே. என் நினைவில் ஊற்றாய் சுரக்கும் உண்ணுதற்கரிய அமுதே! என்கின்றார். மாணிக்க வாசக வள்ளல் பெருமான்.

எனவே என்றும் தெளிவான மாறுபாடற்ற இறைவனை நாம் என்றும் நிலைக்கும் நல்வாழ்வை அளித்திடுதேவே! என இப்புனித புத்தாண்டில் இறைவனை வேண்டுதல் செய்தல் எம் கடன்.

காலங்களில் மனதிற்குக் களிப்பூட்டி, பேருவகையூட்டுவது இள வேனில் காலம்தான். மேலும் இளவேனில் முதல் மாதம் சித்திரை என்பதனால் இதற்குத் தனிச்சிறப்பும் உண்டு. சித்திரை நட்சத்திரம் பூரணையுடன் கூடிய காலம் என்பதனால் வசந்த காலத்தின் இம் மாதத்தை சித்திரை மாதம் என்கின்றோம்.

மேலும் இதன் மேன்மை பற்றி அறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது பகவத் கீதையில் பார்த்தனான அர்ஜுனனுக்குப் பின்வருமாறு உபதேசம் புரிகின்றார். ப்ருஹத்ஸாம ததா ஸாம்னாம் காயத்ரீசந்தஸாமஹம் மாஸானாம் மார்கசீர் ஷோஹம் ருதூனாம் குஸ¤மாகா விபூதியோகம் - பகவத்கீதை -35 நான் ஸாம கானங்களில் மிகச் சிறந்த பிருஹத் சாம மாவேன். சந்தங்களில் காயத்ரீயாவேன். மாதங்களில் மார்கழி மாதமாவேன்.

பருவகாலங்களில் வஸந்த காலம் நான் என்கின்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். எமது நாயன்மார் காலத்தின் மேன்மையினை உணர்ந்தறிய வேண்டும். இன்றைய காலத்தின் வளர்ச்சிக்கு திருஞான சம்பந்தர் எமக்கு, காட்டிய நன்னெறியில் எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர்.

நாம் எக்காலத்திலும் இறைவன் திருவருளைப் பெற்றுள்ளோம் என்பதனை மனதினுள் நிறுத்துக. தீய வழியில் சென்ற அரசுகளும் இறைவன் அருளால் உய்ந்தார்கள். சைவ செந்நெறியில் வாழ்வதன்மூலமே நாம் மேன்மையும், இறையடியில் இணைய முடியும். சித்திரை நன் நாளில் நாம் இதனை உணர்வோமாக.

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் தமது பெரிய புராணத்தில் இவ்வாறுபாடுகின்றார்.

சென்றகாலத்தின் பழுதிலாத்திறம்
இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்கும் திருவருளுடையோம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வெற்றி கொள் திருநீற்றொழியினுள் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் பெற்றமை என்பர்.

வருடம் பிறக்கும் போதே சுப கருமங்களையும் ஆரம்பிக்க வேண்டும். எனவே நல்ல நேரம் பார்த்து முதற்கண் தெய்வ வழிபாடு செய்தலே முதன்மைப் பணியுமாகும். நல்லனவற்றையே முதல் முதல்பார்க்கவேண்டும். நற் சிந்தனையை மட்டும் உள்ளத்தில் இருத்தல் வேண்டும்.

இதன் பொருட்டே கேரள நாட்டு மக்கள் சித்திரைப் புதுவருடதினத்தின் முதல் நாளிலேயே, அன்றைய இரவில் புத்தாடைகள், ஆபரணங்கள், நவரத்தினங்கள் அவற்றுடன் கனிகள், அரிசி, பருப்பு, சமையலுக்கான காய் கறிகள் போன்றவற்றை ஒரு கொலுபோல் அலங்காரம் செய்து. அடுத்த நாள் சித்திரை வருடப்பிறப்பு அன்று அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து இறைவனுக்குத் தீபம் ஏற்றி, தூபம் காட்டிவணங்கி அங்கு ஏற்கனவே வைக்கப்பட்ட கொலுவைக் கண்டு, புத்தாடை புனைந்து மகிழ்ந்து கொண்டாடுவர்.

புத்தாண்டில் கைவிஷேஷம் பெறுவது எமது சமய வழக்கமாகும். நாம் உற்றார், உறவினர்களுக்கும் கூட கைவிஷேஷமாக பணத்தை வழங்குவதுண்டு. இறைவன் முன்னாலேயே, பூஜை செய்து பெரியோரை வணங்கி இந்த பாரம்பரிய வழக்கத்தை மேற்கொள்ளுவதே மேன்மையானது. எமக்கு மட்டுமே இந்தப் பண்டிகை அல்ல. ஏழை எளியவர்களையும் களிப்பூட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கேற்ப பது வஸ்திரம், பணம் முதலியனவற்றை வசதி குறைந்தவர்களுக்கும் வழங்குவதையே பெருமான் விரும்புவார் என்பதை அறிந்து கொள்க!.

மேலும் இனிப்பான பொங்கல், சமைத்துச் சூர்யனுக்கு, படையல் இடுவர். ஆயினும் அன்றைய தினம் அறுசுவை உணவையுஞ் சமைத்து படையலிட்டுக் கொண்டாடும். வழக்கம் உண்டும்.

எமது உலகத்தைத் தனது ஒளியாலும், உஷ்ணத்தாலும் போஷிப்பவன் சூரியன் அல்லவோ. தை மாதத்தில் நாம் சூரியனுக்கு எமது நன்றியறிதலைச் செய்வது போலவே, வசந்த காலத்தையே உருவாக்கி இறைவனின் படைப்பாகிய சூரியனை நமஸ்கரித்தல் இன்றிமையாதது.

சீலமாய் வாழ சீர் அருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

- சூர்ய வணக்கம்-

பண்டிகை என்பதே மக்களை வாழ்வாங்கு வாழ்வதற்கு நேயமுடன் அனைவருமே ஒன்றிணைந்து கூடி மகிழ்வதற்கே யாகும். பேதமற்ற வாழ்வை இறை நற் கருணையுடன் தான் வாழமுடியும்.

ஆரா அமுதே அளவில்லாய் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

இறைவனின் பெருமையினைச் சொல்லிக், சொல்லி இன்புறுதல் பெரும்பேறு.

“தெவிட்டாத அமுதே! எந்த அளவிற்குள்ளும் அடங்காத பெருமை மிக்கவரே! ஆராயாதவர் உள்ளத்திலே ஒளிந்திருக்கும் அறிவொளி வடிவானவனே, என் நெஞ்சை நீராக உருகச் செய்து எனது அரிய உயிராய் நின்றவனே! இன்பமும், துன்பமும் இல்லாதவனே” என்று மாணிக்கவாசகர், பாடும் போது இறைவனின் கருணையினை வியக்காமல் இருக்க முடியுமா? கண்களில் நீர் கசியாமல் இருந்திடுமோ!

காலம் தோறும் நாம் இறை பெருமையினுள் ஆழ்ந்திருந்தால் என்றைக்கும் எமக்கு இனிய புத்தாண்டுதான். பூக்கின்ற புதுவருட சந்தோஷம் என்றும் சாஸ்வதமாகட்டும். இறைவா நின் கருணை மழையில் நனைந்துருக என்றும் வரம் தா!

சித்திரையாள் எம் சித்தத்துள் நின்று
சத்திய வாழ்வை நிலைநிறுத்த
அத்தன் திருப்பதம் சேர்ப்பிப்பாள்
புத்தியை அவனிடம் வைப்பிக்க அருள்செய்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.