புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்

இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழகத்தின் நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், திரை உலகுடன் தொடர்புடைய அனைவரும் கடந்த வாரத்தில் இலங்கைத் தமிழர்களையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் தத்ரூபமாக சோகம் தோய்ந்த முகத்துடன் உண்ணாவிரப் போராட்டத்தில் பசிப்பட்டினியுடன் ஈடுபடுபவர்களைப் போன்று சொந்த வாழ்க்கையிலும் நடித்தார்கள்.

தமிழ்நாட்டின் இந்த கூத்தாடிகளை நேரில்வந்து பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட பொதுமக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்று இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.

அன்று மு.ப. 11.00 மணிக்கு நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூரியா, தனுஷ், பிரசாந்த், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண்விஜய், கே. பாக்கியராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஸ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார், மன்சூரலிகான், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், கலைப்புலி தானு, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ரேகா, ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி ஆகிய பழைய நடிகைகளும், நடிகர் ரஜனிகாந்த், கமல், அஜித், அர்ஜுன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகத்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கான தனிநாட்டை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

இதில் அஜித், அர்ஜுன் ஆகிய இரு நடிகர்களும் கலந்து கொண்டார்கள். போன தடவை இதுபோன்ற ஒரு இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தினால் இவர்களின் படங்கள் பகிஷ்கரிக்கப்படும், சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் போன்ற அச்சுறுத்தல்கள் எழுந்தன. இதற்கு பயந்து அவர்கள் இருவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

இலங்கை அகதிகள்

தமிழ்நாட்டில் அகதி அந்தஸ்துடன் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்களில் வாழ்பவர்களாவர். இவர்கள் அனைவரும் மண்டபம், இடைத்தரிப்பு முகாமில் இருந்து பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களாவர்.

இரண்டாவது பிரிவினர் முகாம்களில் வாழாமல் வாடகை வீடுகளில் அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் இருக்கும் இலங்கை அகதிகளாவர். இவர்களுக்கு தமிழக மாநில அரசாங்கத்தின் உதவிகள் கிடைப்பதில்லை. இலங்கை அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியில், அதுவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களில் வாழ்கிறார்கள்.

மூன்றாவது பிரிவைச் சேர்ந்த இலங்கை அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கையில் இருந்த போது நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்களாவர். இந்த பிரிவைச் சேர்ந்த இலங்கை அகதிகள் விசேட முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விசேட முகாம்கள் 1991ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டன.

1983ம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்துக்கு பின்னர் இலங்கையில் இருந்து அலை அலையாய் வந்த தமிழ் அகதிகள் ராஜபாலையம் அகதி முகாமில் வைக்கப்பட்டனர். இவர்களும் மூன்று பிரிவுகளாக வைக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் முகாம்களில் இருந்தனர். இன்னுமொரு பிரிவினர் முகாம்களுக்கு வெளியில் அகதிகளாக இருந்தனர். ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் மூன்றாவது முகாமில் வைக்கப்பட்டனர்.

அவசரகால நிலை 1983 இல் ஏற்பட்டபோது தமிழ் நாடு அரசாங்கம் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றது. இந்தியாவில் மொழிப்பிரச்சினை இருப்பதனால் மற்ற பிராந்தியங்களின் மொழி தெரியாத இலங்கை அகதிகளை இந்திய அரசாங்கம் வெளியில் அனுப்ப விரும்பாமல் தமிழ் நாட்டிலேயே அவர்களுக்கு சர்வதேச ரீதியில் உதவிகள் கிடைப்பதை தவிர்ப்பதற்காக இந்திய அரசு அரசசார்பற்ற அமைப்புகளை தடை செய்தது.

தமிழ் நாட்டில் மாத்திரம் 132 முகாம்களில் 80 ஆயிரம் அகதிகள் இருந்தார்கள். ஒரிசாவில் ஒரே ஒரு முகாமே இருந்தது. சகல அகதி முகாம்களும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி, பணமாகவும், இருப்பிட வசதியும், சுகாதார வசதிகளும் உடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உலக தரத்திலான கல்வி வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. ஆயினும் 1991ம் ஆண்டில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி எல்.ரி.ரி.ஈ. குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த சலுகைகளை இந்திய அரசு வாபஸ் வாங்கியது. அதையடுத்து இலங்கை அகதிகளின் வெளியிட நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்த முகாம்கள் அனைத்தும் நாட்டின் உள்ளக பிரதேசத்திற்கு மாற்றப்பட்டன. வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளுடன் இலகுவில் ஏற்படக்கூடிய தொடர்பை கட்டுப்படுத்தவே இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முகாம்களில் இருப்பவர்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் மூன்றாம்தர பிரஜைகளாக நடத்தப்பட்டார்கள்.

முகாம்களின் விதிகளுக்கு அடிபணிய மறுப்பவர்களுக்கான இலவச உலர்உணவுகள் தண்டனையாக நிறுத்தப்படுவதுண்டு. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கண்காணிப்புக்கு அனுமதிக்கப்படவில்ல. இதுமட்டுமன்றி இந்த முகாம்களில் உள்ள மனித உரிமை துஷ்பிரயோகங்களை அவதானிப்பதற்கு எந்தவொரு அமைப்புக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் செல்வம் படைத்த இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியில் தனித்தனியான வீடுகளில் அகதிகளுக்கான சலுகைகளை பெறாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் செல்வந்த வர்த்தகர்கள். மேலும் சிலர் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், போன்றவர்கள்.

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது முகாம்களுக்கு உள்ளும், வெளியிலும் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியப் பிராஜாவுரிமை மிக விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருக்கிறது.

நடிக, நடிகையரின் போலி நடிப்பு

இவை அனைத்தும் மேடையில் நடந்த உண்மை சம்பவங்களாகும். அடுத்து நாம் மேடைக்கு பின்னால் திரைமறைவில் நடந்த திருகுதாளங்களை அட்டவணைப்படுத்தி வெளியிட விரும்புகிறோம்.

மேடைக்கு பின்னால் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து சுடசுட கொண்டுவரப்பட்ட இட்லி, உழுந்துவடை, தோசை, பூரி போன்ற பலதரப்பட்ட தின்பண்டங்களும், மென்பானங்களும், ஐஸ்கிரிம், புருட்செலட் போன்றவையும் தாராளமாக கொண்டுவந்து மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன.

வெளியில் தங்களை பார்ப்பதற்கு உச்சிவெயிலில் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களை காக்கவைத்துக் கொண்டிருந்த இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி எழுந்து திரைக்கு பின்னால் சென்று வயிறுமுட்ட தோசையையும், இட்லியையும், வடைகளையும் விழுங்கிவிட்டு ஏப்பம்விட்டவாறு மென்பானத்தை அருந்திவிட்டு களைப்புடனான சோகத்தை வெளிப்படுத்தும் முகபாவத்துடன் மேடை யில் வந்து அமர்ந்தார்கள். இலங்கை தமிழ் மக்கள் மீது பேரபிமானம் கொண்டவர்கள் போன்று நடிப்பதை தான் நேரில் பார்த்தாக அந்த பத்திரிகை நிருபர் அறிவித்தார்.

சாமி படத்தில் “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா? தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிகலாமா” என்ற பாடலில் நடிகர் விக்ரமுடன் ஆடிப்பாடி கும்மாளம் போட்ட நடிகை த்ரிஷாவுக்கு ஜஸ்கிரிம் என்றால் பொல்லாத ஆசை. ஐஸ்கிரிம் குடிப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கும் போது, இந்த நடிகை உண்ணாவிரதம் செய்து கொண்டிருந்த மேடைக்கு பின்பக்கமாக சென்று ஒரு பெரிய கப்பில் ஐஸ்கிரிமை சுவைத்துக் கொண்டிருந்த காட்சியை பார்த்த சிலர் ஆத்திரமடைந்த நிலையில் மேடைக்கு வர எத்தனித்த போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்விதம் தான் தமிழ்த்திரையுலகின் நடிகர், நடிகையர் பணம் சம்பாதிப்பதற்கு நடிப்பைத் தொழிலாக செய்வதைப் போன்று தங்கள் சுயநலத்திற்காக எந்தத் துரோகத்தையும் சொந்த வாழ்க்கையிலும் செய்வதற்கு தயக்கம் காட்டுவதில்லை.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி பேரலையினால் இலங்கை மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஆயிரக்கணக்கில் உயிர்துறந்த போது இலங்கையில் தங்கள் திரைப்படங்களை காட்டி கோடிக்கணக்காக சம்பாதித்த இந்த திரையுலக நடிக, நடிகையர்கள் ஒரு செப்பு காசைக்கூட சுனாமியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு கொடுத்து உதவ முன்வரவில்லை. இளைய தளபதி என்ற பட்டத்துடன் திரையுலகிலும் ஒரு மாவீரனைப் போன்று நடிக்கும் விஜய் மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாவை சுனாமி மீட்பு பணிகளுக்காக கொடுத்தார்.

இலங்கையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதித்த நடிகர் விஜய் ஒரு இலட்சம் ரூபாவை நம்நாட்டு மக்களுக்காக தூக்கி வீசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவர் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ் பெண்ணை மணமுடித்திருப்பதே அதற்கான காரணமாகும்.

இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் இடம்பெற்றன என்று தேசத்துரோகிகள் பரப்பிய பொய்ப்புரளியை நம்பி, யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே இலங்கை தமிழர் மீது மோகம் கொண்டு உண்ணாவிரதம் செய்யும் தமிழகத்து திரையுலகின் பிரபலங்கள் 2009ல் யுத்தம் முடிவடைந்தவுடன் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒரு நயா பைசாவைக் கூட கொடுத்து உதவாது போல் உண்மை வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் நடிக, நடிகை யருக்கு நம்நாட்டு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கோ, அவர்கள் மீது பாசம் காட்டு வதற்கோ எவ்வித அருகதையும் இல்லை.

1983ம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டில் இருக்கும் சுமார் 80 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளை ஒரு தடவையாவது இந்த தமிழ் நாட்டு திரையுலக நடிக, நடிகையர் அவர்கள் வாழும் முகாம்களுக்கு போய் பார்த்திருப்பார்களா? அல்லது பொருளாதார உதவி செய்திருக்கிறார்களா? அவர்கள் அவ்விதம் செய்யமாட்டார்கள். உண்மை வாழ்க்கையிலும் நல்லவர்களைப் போல் நடிக்கும் இந்த நடிக, நடிகையர்களுக்கு கருணை உள்ளம் இல்லாதிருப்பதே அதற்கான காரணமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.