புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
வேதாளம் சொன்ன பதினோராவது புதிர் கதை “நுட்ப உணர்ச்சி உடையவள் யார்?”

வேதாளம் சொன்ன பதினோராவது புதிர் கதை “நுட்ப உணர்ச்சி உடையவள் யார்?”

வம்சகேது என்ற அரசன், வில்லி நகரத்தை ஆட்சி செய்தான். அவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். அரசன் ஒருநாள் மூத்த மனைவியோடு பூந்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவளுடைய கூந்தலில் சூடியிருந்த மலரை ஒரு வண்டு வந்து மொய்த்தது. வண்டைப் பார்த்ததும் மூர்ச்சித்து விழுந்துவிட்டாள் மனைவி.

மற்றொரு நாள் அரசன், தன்னுடைய இரண்டாவது மனைவியோடு நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தான். நிலா வெளிச்சத்தால் அவள் மேனி அப்பொழுது கொப்பளித்துவிட்டது.

பிறகு ஒருநாள், மூன்றாவது மனைவியோடு அந்தப்புரத்தில் அரசன் உல்லாசமாக இருந்தான். அப்பொழுது உலக்கை இடிக்கும் சத்தம் கேட்டது. அதனால் அவளுடைய விரல்கள் கன்னிப்போய் விட்டன.

“அரசனுடைய மூன்று மனைவியரில், யார் நுட்ப உணர்ச்சி உடையவள்?” என்று கேட்டது வேதாளம்.

“உலக்கைச் சத்தம் கேட்டு விரல்கள் கன்னிப்போன மூன்றாவது மனைவியே நுட்ப உணர்வு உடையவள்” என்று கதையை விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக் கொண்டு ஓடி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. விக்கிரமாதித்தன் அதைத்தொடர்ந்து போய் கட்டித்தூக்கிக் கொண்டு வந்தான்.

வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

வேதாளம் சொன்ன பன்னிரண்டாவது புதிர் கதை

“அரசனின் சீரழிவுக்கு அமைச்சனே காரணம்”

(கதைக்குள் கதை)

வம்சமார்க்கன் என்ற அரசன் வாரணாபுரத்தை ஆட்சி செய்தான். அவனுடைய மனைவி சந்திரவதனை மிகவும் அழகு வாய்ந்தவள். அவளுடைய கவர்ச்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்து, அரசாங்க அலுவல்களைக் கவனியாமல், எப்பொழுதும் அந்தப்புரமே கதியென்று கிடந்தான் அரசன்.

அதனால், அரசாங்க அலுவல்களை எல்லாம் அமைச்சனே கவனித்து வந்தான். அதைக் கண்ட பொதுமக்கள் அனைவரும், “அரசனை, அமைச்சன் ஏமாற்றிவிட்டு, தானே எல்லாவற்றையும் அனுபவித்து ஆனந்தமாயிருக்கிறான்” என்று தூற்றத் தொடங்கினார்கள்.

அவர்களுடைய பேச்சு அமைச்சனுக்கு எட்டியது. அதனால் மனம் வெறுத்து, வேறு ஒரு நகரத்துக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கே அவனுக்கு ஒரு வர்த்தகனின் தொடர்பு உண்டாயிற்று.

அந்த வர்த்தகனும் அமைச்சனும் வியாபாரத்துக்காகக் கப்பல் ஏறி, வெளிநாடு சென்றார்கள். வழியில் கப்பல் ஒரு தீவை அடைந்தது.

அவர்கள் இருவரும் கப்பலை விட்டு இறங்கி, ஒரு தீவுக்குள் சென்றனர். அங்கே ஒரு கோவில் இருந்தது. அதை அடுத்திருந்த மேடையில் ஓர் அழகான பெண் படுத்திருந்தாள். அவள் ஒரு தேவதையோ என அவர்கள் நினைத்தார்கள். மேலும், அவள் தங்களைச் சபித்தாலும் சபிக்கக்கூடும் எனப் பயந்து, கப்பலில் ஏறிப் புறப்பட்டனர்.

வெளிநாட்டுக்குப் போய் வந்த அமைச்சனை அரசன் சந்தித்தான். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். பிறகு அமைச்சனிடம், “வெளிநாட்டில் சிறப்பான நிகழ்ச்சி ஏதாவது உண்டா?” என்று கேட்டான். அங்கே தான் ஒரு தேவக் கன்னிகையைக் கண்டதாக அமைச்சன் கூறினான்.

அந்தத் தேவகன்னிகையை தனக்குக் காண்பிக்கும்படி அமைச்சனை அரசன் கேட்டுக்கொண்டான். அரசனை அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறி, முன்னர் சென்ற தீவுக்குச் சென்றான் அமைச்சன். அங்கே படுத்திருந்த அழகான பெண்ணைக் கண்டு ஆசைப்பட்டு, தன்னை மணந்துகொள்ளும்படி அவளைக் கேட்டான் அரசன். அவளும் சம்மதித்தாள். இருவரும் மணம் புரிந்துகொண்டனர்.

பிறகு, தன்னுடைய நகரத்துக்கு வருமாறு அவளை அழைத்தான் அரசன். அதற்கு அவள், “நான் ஒரு விரதம் மேற்கொண்டிருக்கிறேன். அது நிறைவெய்தியதும் வருகிறேன்” என்றாள்.

அவளுடைய விரதம் முடியும் வரையில், அரசனும் அங்கேயே காத்திருந்தான். விரதத்தின் கடைசி நாளில், அருகில் இருந்த குளத்துக்கு நீராடப் போனாள். அவள் நீராடிக்கொண்டிருக்கையில், நீரில் வாழும் அரக்கன் ஒருவன் அவளை விழுங்கிவிட்டான். அதை அறிந்த அரசன் அரக்கனின் வயிற்றைப் பிளந்து அவளை மீட்டான்.

அவள், அரசனிடம் “நாதா, நான் தேவலோகத்தைச் சேர்ந்த மிருகாங்கதனின் மகள். என்னோடு பிறந்தவர்கள் ஆயிரம் பேர்கள். என் தந்தை, என்னை விட்டு ஒருநாளும் உணவு உண்ணமாட்டார்”

ஒருநாள் நான் பார்வதி நோன்பு நோற்கப் போயிருந்தேன். திரும்பி வருவதற்கு நேரமாகிவிட்டது. உணவு வேளையில் என்னைக் காணாத என் தந்தை கோபத்தோடு, என்னை ஒரு அரக்கன் விழுங்க வேண்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார்.

பிறகு, “வம்சமார்க்கன் என்ற அரசனை மணந்து, நீரில் உள்ள அரக்கனால் விழுங்கப்பட்ட உன்னை உன் கணவன் காப்பற்றுவான் என சாப விமோசனமும் கூறினார். அதன்படி இன்று நடந்துவிட்டது. இனி நாம், இருவரும் உங்களுடைய நகரத்துக்குப் போகலாம்” என்றாள் அவள்.

அரசனும் புதுமனைவியும் சொந்த நகரத்துக்குப் போனார்கள். அரசன் முன்போலவே அந்தப்புரமே கதி என்று கிடக்கலானான். அதை அறிந்த அமைச்சன் நஞ்சை உண்டு தற்கொலை செய்துகொண்டான்.

“அமைச்சன் ஏன் தற்கொலை செய்துகொண்டான்?” என்று வேதாளம் கேட்டது.

“தேவகன்னிகைப் பற்றிக் கூறி, அவள் இருந்த இடத்தை அரசனுக்குக் காண்பித்ததால், அரசன் மறுபடியும் முன்போலவே, அந்தப்புரத்திலே மதிமயங்கிக் கிடக்கலானான். அதற்கு தானே காரணம் என்று உணர்ந்தே அமைச்சன் தற்கொலை புரிந்துகொண்டான்” என்று கூறி கதையை விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக் கொண்டு ஓடி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. விக்கிரமாதித்தன் அதைத்தொடர்ந்து போய் கட்டித்தூக்கிக் கொண்டு வந்தான்.

வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

வேதாளம் சொன்ன பதின்மூன்றாவது புதிர் கதை

“மந்திரம் ஏன் பலிக்கவில்லை?”

(கதைக்குள் கதை)

புட்பபுரம் என்ற நகரத்தில், பாழடைந்த கோவில் ஒன்று இருந்தது. பசியால் களைப்படைந்த பிராமணன் ஒருவன் அந்தக் கோயிலில் படுத்திருந்தான். அந்தக் கோயிலுக்கு வந்த முனிவன் ஒருவன் பிராமணனைக் கண்டு, இரக்கப்பட்டு அவனுக்கு உணவு அளிக்க எண்ணினான். உடனே தன் தவ வலிமையால் ஒரு வீட்டை உண்டாக்கி, அங்கே பசியோடு இருந்த பிராமணனுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தான்.

பிராமணன் உண்டு களைப்பு நீங்கியதும், முனிவரை வணங்கி, தனக்குச் சில மந்திரங்களை அருளும்படி வேண்டிக்கொண்டான். முனிவரும் அவனுக்குச் சில மந்திரங்களை போதித்தார். பிறகு, அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு வந்து, மந்திரங்களை உச்சரிக்குமாறு கூறினார் முனிவர்.

பிராமணனும் முனிவர் கூறியபடியே செய்தான். ஆனால் பிராமணனுடைய மகன் எதிரே வந்து நிற்பது போலவே அவனுக்குத் தோன்றியது. முனிவரிடம் சென்று விவரத்தைக் கூறினான் பிராமணன்.

“பிராமணனுக்கு மந்திரம் ஏன் பலிக்கவில்லை?” என்று கேட்டது வேதாளம்.

“மந்திரம், தவம், வழிபாடு அனைத்தும் ஒரே கவனத்தோடு, மனத்தை வேறு சிந்தனையில் ஈடுபடுத்தாமல் செய்தால்தான் பலன் அளிக்கும். இல்லாவிடில் பலன் அளிக்காது ” என்று விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக் கொண்டு ஓடி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. விக்கிரமாதித்தன் அதைத்தொடர்ந்து போய் கட்டித்தூக்கிக் கொண்டு வந்தான்.

வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

வேதாளம் சொன்ன பதினான்காவது புதிர் கதை

“பாராட்டத்தக்கவர் யார்?”

(கதைக்குள் கதை)

ஒரு நகரத்தில் வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பருவ வயதில் ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆனால், அவள் ஒரு பிராமண இளைஞனோடு இரகசிய உறவு கொண்டிருந்தாள்.

அயலூரில் இருந்து வந்திருந்த வணிகன் ஒருவன், அந்தப் பெண்ணை மணம் புரிந்துகொண்டு சில நாட்களில், மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டான்.

கணவன் வீட்டுக்குச் சென்றதும், தன்னுடைய ஆசை நாயகனைக் காண இயலாத ஏக்கத்தினால், அவள் இறந்து விட்டாள். அவள் இறந்த செய்தியை அறிந்த ஆசை நாயகனான பிராமணனும் இறந்து போனான்.

தன்னுடைய புது மனைவி இறந்த துக்கம் தாளாமல், அவளுடைய கணவனான வணிகனும் இறந்து விட்டான்.

“இறந்து போன மூவரில் பாராட்டத்தக்கவர் யார்?” என்று கேட்டது வேதாளம்.

“இரகசியத் தொடர்பு கொண்ட பிராமணனும், அந்தப் பெண்ணும் இறந்து போனதில் வியப்பு இல்லை. மணம் செய்துகொண்டு, சில நாட்களே அவளோடு வாழ்ந்தவன் தன் மனைவியின் நடத்தையின் சந்தேகம் கொள்ளாமல், அவள் இறந்ததும் தானும் உயிர் துறந்த கணவனே பாராட்டத்தக்கவன்” என்று கதையை விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக் கொண்டு ஓடி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. விக்கிரமாதித்தன் அதைத்தொடர்ந்து போய் கட்டித்தூக்கிக் கொண்டு வந்தான்.

வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.