புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
இரு தலைகள் மோதின

இரு தலைகள் மோதின

ஜனதா அமைச்சரவையில் இருந்து கொண்டே, ராஜ்நாராயண் ஜனதா அரசுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார். பொது மேடைகளிலும், பத்திரிகைகளிலும் ஜனதா கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக விமர்சனங்களைச் செய்யத் தொடங்கினார். சஞ்சய் காந்திக்கும், அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அமைச்சராக இருந்து கொண்டே, ஆட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைச் செய்யத் தொடங்கியதால், ராஜ்நாராயண் மந்திரிசபையை விட்டு வெளியேற நேர்ந்தது.

ராஜ்நாராயண், சரண்சிங்கின் வலது கரம் - சரண்சிங்கின் துன்மந்திரி - என்றும் சொல்லலாம். இதனால் ராஜ்நாராயணனின் வெளியேற்றம், சரண்சிங்கின் கோபத்தை அதிகப்படுத்தியது. பிரதமர் மொரார்ஜியுடன், ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அவர் மோத ஆரம்பித்தார். ஆட்சியை குறை கூறத் தொடங்கினார். ஜனதா கட்சியின் உட்பூசல்கள் உக்கிரமடைந்தன.

ஜனதா கட்சி ஆட்சி புரிந்த மாநிலங்களிலும் பிரச்சினைகள் அதிகமாயின. வெவ்வேறு மாநிலங்களில் தன் செல்வாக்கு வேண்டுமென்றே தகர்க்கப்படுகிறது என்று சரண்சிங் நம்பத் தொடங்கிவிட்டார். தன்னை மீறி ஜனதா கட்சியினாலும், ஆட்சியினாலும் செயல்பட முடியாது என்ற நம்பிக்கை அவருக்கு வளர, உட்பூசலை உச்சகட்டத்துக்கு எடுத்துச் சென்றார். அமைச்சரவையை விட்டு அவரும் வெளியேற வேண்டியதாயிற்று.

ஜனதா கட்சி உடைந்து சின்னாபின்னமாகி விடும் என்ற நிலை தோன்றத் தொடங்கியது. மொரார்ஜிக்கும், சரண்சிங்கிற்கும் இடையே முழு மன ஒற்றுமை ஏற்பட்டால் ஒழிய, ஆட்சியும், கட்சியும் அல்பாயுசில் போகும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். மொரார்ஜியோ வேறு விதமாக நினைத்தார். ‘அமைச்சராக இருந்து கொண்டே - ஆட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டே - உட்பூசலை வளர்க்க சரண்சிங் முயற்சி செய்ததால் தான், அவருக்கு பலம் கிட்டியது.

அமைச்சரவையிலிருந்து வெளியேறி இதே முயற்சியை அவர் தொடரும் போது முந்தைய பலம் அவருக்குக் கிட்டாது. அதனால் உட்பூசலை வளர்க்கும் அவருடைய முயற்சிகள் பலவீனமடையும். ஒரு மூத்த அமைச்சர் ஆட்சிக்கு எதிராக வேலை செய்வது என்ற நிலை ஆட்சிக்கும் நல்லதல்ல. ஆகையால் சரண்சிங் வெளியே இருப்பதால், பெரிய ஆபத்து வந்து விடாது. அவர் உள்ளே இருந்துகொண்டு விளைவிக்கக் கூடிய ஆபத்துதான் பெரிதாக இருக்கும்’ என்பது மொரார்ஜியின் கருத்தாக இருந்தது.

ஆனால் மொரார்ஜிக்கும், சரண்சிங்கிற்குமிடையே சமாதானம் ஏற்பட்டால் ஒழிய, அந்தச் சமாதானத்தின் மூலமாக சரண்சிங் மீண்டும் அமைச்சரானால் ஒழிய, கட்சியும், ஆட்சியும் சிதறுண்டு போகும் - என்று ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்களும் நம்பினார்கள். அவர்களிடம் எல்லாம் பேசிய நான், மொரார்ஜியிடம் அவர்களுடைய கருத்தைத் தெரிவித்தேன். (அது ஏற்கெனவே மொரார்ஜிக்கும் தெரிந்த விஷயம் தான்) ‘சரண்சிங்கைச் சந்தித்து, சமாதான முயற்சிகளை நான் மேற்கொள்ளலாமா’ என்று மொரார்ஜியிடம் கேட்டேன். தன் கருத்து வேறு மாதிரியாக இருந்தாலும் கட்சியில் மற்ற மூத்த தலைவர்கள் எல்லோருமே சரண்சிங் மீண்டும் அமைச்சரவையில் வருவதையே விரும்பினார்கள் என்பதால், மொரார்ஜி சம்மதம் தெரிவித்தார்.

சரண்சிங்கையும், மொரார்ஜியையும் பல முறைகள் சந்தித்தேன். மொரார்ஜியுடனான ஒவ்வொரு சந்திப்பும் சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்தில் முடியும் என்றால், சரண்சிங்குடனான சந்திப்புகள் ஒன்றரை மணியிலிருந்து மூன்று மணி நேரம் வரை கூட நடந்தன.

இந்த இடத்தில் சரண்சிங்கின் குணாதிசயத்தை சிறிது விளக்குவது நல்லது. நேர்மையில் மொரார்ஜிக்குச் சிறிதும் குறைந்தவரல்ல அவர். பொதுச் சொத்தையும், பணத்தையும் நெருப்பு மாதிரி பாவித்தவர். லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் அவரிடம் என்றுமே நெருங்காதவை. ஆனால் நாற்காலி ஆசை அவரிடம் ஒரு வெறியாகவே அமைந்திருந்தது. தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், பதவி மோகத்தினால் அவர் விட்டுக் கொடுத்த கொள்கைகளும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளும் ஏராளம்! அதே சமயத்தில் அவர் மிகவும் வெகுளியான மனிதர். மனதில் இருப்பதை அப்படியே வெளியே கொட்டி விடுவார். அதில் கொஞ்சம் கூட கூச்சமோ, தயக்கமோ அவருக்கு ஏற்பட்டதில்லை.

அவரை நான் சந்தித்துப் பேசிய போதெல்லாம், அவர் வெளியிட்ட பெரிய மனக்குறை - மொரார்ஜி தனக்குரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்பது தான். “ஒருமுறை கூட மொரார்ஜி என்னிடம், ‘ஐ ஆம் ஸாரி’ என்றோ, ‘ப்Zஸ் எக்ஸ்க் யூஸ் மீ’ என்றோ சொன்னது கிடையாது. என் எதிரில் சர்வ அலட்சியமாகத் தான் அவர் உட்காருவார். இதெல்லாம் ஏன்?” என்று மீண்டும் மீண்டும் கேட்ட போதெல்லாம், அவர் கிட்டத்தட்ட அழுதே விட்டார்.

ஒரு பழுத்த அரசியல்வாதி, ஒரு சாதாரண விஷயத்திற்கு இவ்வளவு மனம் கலங்கியது எனக்கு பெரும் வியப்பை அளித்தது. “மொரார்ஜியின் இயற்கையான சுபாவம் நீங்கள் அறிந்தது தான். அவர் போலி மரியாதைகளை யாரிடமும் காட்டுவதில்லை. அதனால் மற்றவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறார் என்று அர்த்தமாகி விடாது. நீங்கள் அந்த மாதிரி நினைத்துக்கொண்டு வருத்தப்படாதீர்கள்” என்று சரண்சிங்கிடம் சொல்லிப் பார்த்தேன்.

இதற்கு அவர் அளித்தது, பதில் அல்ல - வெடிகுண்டு. “உனக்கு விஷயம் தெரியாது, அதனால் தான் இப்படி பேசுகிறாய். மொரார்ஜி எனக்கு ஏன் மரியாதை தருவதில்லை தெரியுமா? அவர் பிராமணர்! நான் பிராமணன் இல்லை! அது தான் காரணம்”

இப்படி சரண்சிங் சொன்னவுடன் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மொரார்ஜியைப் பற்றி ஒருவர் இப்படி நினைக்க முடியும் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜாதி, மத வித்தியாசங்களையெல்லாம் கடந்து நின்றவர் மொரார்ஜி. தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே அந்த உயர்ந்த நிலையை எய்தியவர் அவர். குஜராத் மாநிலத்தில், தேசம் சுதந்திரம் அடைவதற்கு பல வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு உள்ளாட்சித் தேர்தலில், மொரார்ஜி போட்டியிட்டிருந்தார்.

அவரை எதிர்த்த வேட்பாளர், ஜாதிப் பிரச்சினையை கொண்டு வந்தார். மொரார்ஜி பூணூல் அணிவ தில்லை. ஒரு பிராமணராக இருந்துகொண்டு பூணூல் அணியாத மொரார்ஜிக்கா உங்கள் ஓட்டு? என்று பிராமணர்கள் நிறையவே இருந்த அந்த உள்ளாட்சித் தொகுதியில், அந்த வேட்பாளர் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்க, இந்த விஷயம் பெரிதாகிக் கொண்டிருந்தது. மொரார்ஜி பார்த்தார். மேடை ஏறினார். “நான் பூணூல் போடுவதில்லை. அது மட்டுமல்ல, மற்ற ஜாதியினரை விட, பிராமணன் உயர்ந்தவன் என்றும் நம்பவில்லை. பூணுலூக்குத் தான் ஓட்டு என்றால், என்னை எதிர்க்கும் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள். நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்குப் போடுங்கள்” என்றே பிரச்சாரம் செய்தார். வெற்றி மொரார்ஜிக்குத்தான் கிட்டியது.

இப்படிப்பட்ட மொரார்ஜியைப் பற்றி சரண்சிங் ‘அவர் பிராமணர் என்பதால் எனக்கு மரியாதை தரவில்லை’ என்று கூறியது, எனக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் சரண்சிங்கோ, தான் பின் தங்கிய வகுப்பைச் சார்ந்தவர் என்பதாலும், மொரார்ஜி பிராமணர் என்பதாலும் தான், அவர் தனக்கு மரியாதை காட்டவில்லை என்று பிடிவாதம் பிடித்தார்.

நான் சரண்சிங் எதிர்பாராத ஒரு விஷயத்தைச் சொன்னேன். “நீங்கள் என்னிடம் மட்டும் எப்படி மனம் விட்டுப் பேசுகிaர்கள்? நானும் பிராமணன் தான்” என்று கூறினேன். சரண்சிங்கிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பிறர் மனதை புண்படுத்த வேண்டும் என்பதும் அவர் நோக்கம் அல்ல; தன்னுடைய ஜாதிவாதத்தை விட்டுக் கொடுக்கவும் அவர் தயாராக இல்லை. பார்த்தார். என் கையைப் பிடித்துக் கொண்டார். அதை இழுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார். “நீ நல்ல பிராமணன்” என்றார்!

எனக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. ‘எவ்வளவு பெரிய பதவிகளை வகித்தவர், எவ்வளவு தியாகங்களைச் செய்தவர், இவ்வளவு ஏற்கத்தகாத வகையில் நடந்துகொள்கிறாரே?’ என்ற ஏக்கம் தான் என் மனதில் தலைதூக்கியது. சரண்சிங்கின் நாற்காலி ஆசை அவருடைய சிந்தனையையே விபரீதமாக்கி விட்டிருந்தது.

சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த நான், மொரார்ஜியின் சார்பாகவே பேசி, அவருடைய உயர்ந்த குணங்களை விவரித்து, சரண்சிங்கின் எரிச்சலை மேலும் தூண்டி விடத் தயாராக இல்லை. அதனால் ஜனதா கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை - அவருக்கே தெரிந்திருந்த விஷயத்தை - மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தேன். இறுதியில், சரண்சிங் ஒரு வழிமுறைக்குச் சம்மதித்தார். அவர் உதவி பிரதமராக்கப்பட வேண்டியது, ராஜ்நாராயணும் மீண்டும் அமைச்சராக்கப்பட வேண்டியது.

இதில் ராஜ்நாராயண் அமைச்சராவது என்பதை மொரார்ஜி ஏற்க மாட்டார் என்பது அவரே பேசியதிலிருந்து ஏற்கனவே எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சரண்சிங்கிடம் மன்றாடினேன். ஏதோ நான் தான் எல்லாவற்றையுமே முடிவு செய்பவன் போல, “ராஜ்நாராயணை ஒரு இடைவெளிக்குப் பிறகு அமைச்சராக்கிக் கொள்ளலாம். முதலில் நீங்கள் மீண்டும் மந்திரிசபைக்குப் போய்விடுங்கள். பிறகு ராஜ்நாராயண் விஷயத்தையும் கவனிக்கலாம்” என்று வாக்குறுதி அளித்தேன்.

சரண்சிங் உண்மையாகவே அப்பொழுது மிகவும் பலவீனமான நிலையில் இருந்திருக்க வேண்டும். அதனால் இதற்கு அவர் சம்மதித்து விட்டார். அவர் எதிர்பார்த்தது உதவி பிரதமர் பதவியும், நிதி இலாகாவும்.  மொரார்ஜியிடம் நான் கேட்டபோது, நிதி இலாகாவை சரண்சிங்கிற்கு தர அவர் சம்மதிக்கவில்லை. பொருளாதாரமே குட்டிச்சுவராகப் போய் விடும் என்று பயந்தார்.

மீண்டும் சரண்சிங்கிடமே சென்று மன்றாடினேன். அவரிடம் அவருடைய விவசாயப் பின்னணியைச் சுட்டிக் காட்டினேன். நாட்டின் விவசாயத் துறைக்கு அவர் பொறுப்பேற்றால், பெரும் விவசாயப் புரட்சியே ஏற்பட்டு விடும் என்று வாதிட்டேன். இறுதியில் சரண்சிங் விவசாய இலாகாவை ஏற்க ஒப்புக்கொண்டார்! ‘உதவி பிரதம பதவி; விவசாய இலாகா’ என்ற அவர் நிபந்தனையை மொரார்ஜி ஏற்றுக்கொண்டு விடுவார் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. ஏனென்றால், சரண்சிங்கை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை, மூத்த தலைவர்கள் எல்லாம் மொரார்ஜிக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதனால் இந்த யோசனை பலித்து விடும் என்ற நம்பிக்கையில், சரண்சிங்கிடம் ‘இதற்கு மொரார்ஜி சம்மதிப்பார்’ என்று சொல்லிவிட்டேன். ‘ராஜ்நாராயணை பிறகு சேர்க்கலாம்’ என்று ஒரு வார்த்தையை எப்படியாவது மொரார்ஜியை சொல்ல வைத்து விட்டால், இப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தது - என்ற நிலை உண்டாகியது.

பெரும் சாதனை புரிந்ததாக எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டு, மொரார்ஜியை மீண்டும் சந்தித்தேன். அவர் சரண்சிங் உதவி பிரதம மந்திரியாவதையும், விவசாய இலாகா பொறுப்பேற்பதையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், ‘ராஜ்யநாராயணை பிறகு சேர்த்துக் கொள்ளலாம்’ என்று ஒரு பேச்சுக்காகக் கூட தன்னால் சொல்ல முடியாது என்று உறுதியாகக் கூறி விட்டார்.

ஒரு வார்த்தைக்காக இப்போது சொல்லி வைக்கலாமே - என்று நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். மொரார்ஜி மசியவில்லை. அந்த மாதிரி தன்னால் பொய் பேச முடியாது என்று கூறி விட்டார். அப்போதும் கூட, சரண்சிங் மீண்டும் உள்ளே வந்தால்தான் ஆபத்து அதிகமே தவிர, வெளியே இருப்பதால் பெரிய தீமை வந்துவிடாது என்ற தன் கருத்தையும் மீண்டும் வலியுறுத்தினார்.

சரண்சிங்கை மீண்டும் சந்தித்தேன். இதுவே இறுதி சந்திப்பு என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால், எனக்கு சென்னையில் வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. துக்ளக் வேலைகள், சட்ட ஆலோசனை சம்பந்தமான சில விஷயங்கள், சினிமா ஷ¥ட்டிங், நாடகம் - என்று எல்லாவற்றையுமே தள்ளிப் போட்டு விட்டு, மொரார்ஜிக்கும், சரண்சிங்கிற்கும் இடையே எத்தனை நாள் தான் தூது போய்க் கொண்டிருப்பது? நான் செய்துகொண்டிருந்த போஸ்ட்மேன் வேலையில் எனக்கே கொஞ்சம் அலுப்பு தட்டவும் ஆரம்பித்து விட்டது. இறுதியாக சரண்சிங்கிடம் கேட்டு விடுவது என்று முடிவு செய்து கொண்டு, அவரைச் சந்தித்து, ‘ராஜ்நாராயண் விஷயத்தை மட்டும் இப்போது பேசவே வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டேன்.

(19ஆம் பக்கம் பார்க்க)

இரு தலைகள் மோதின

(08ஆம் பக்கத் தொடர்)

அவர் மறுத்தார். தன் மரியாதையைக் குறைப்பதற்காக செய்யப்படுகிற சதி இது என்று அவர் வாதிட்டார். ‘ராஜ்நாராயணை மந்திரிசபையில் பிறகு சேர்க்கலாம் என்ற ஒரு வார்த்தையை கூட பெற்றுக் கொள்ளாமல், என்னை நம்பிய அவரை நான் கைவிட்டு விட்டால், பிறகு என்னை யாருமே நம்ப மாட்டார்கள். நான் ஆதரவே அற்றவனாகப் போய்விடுவேன். அதற்காகச் செய்யப்படுகிற சதி இது. அதனால் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்’ என்று அவர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

மொரார்ஜியிடம் இதை நான் தெரிவித்த போது, அவர் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சரண்சிங் மீண்டும் அமைச்சரவையில் சேர்வதற்காக செய்யப்பட்ட முயற்சி தோற்றுப் போனதால், கட்சியில் யாரும் தன்னை நிர்ப்பந்திக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார். எடுத்த முயற்சியில் தோல்வி கண்ட நான் சென்னை திரும்பினேன். என்னுடைய முயற்சிகளுக்காக நன்றி தெரிவித்து, மொரார்ஜி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் போலவே நீண்ட தந்தி ஒன்றை சரண்சிங் அனுப்பினார். அதோடு இந்த விவகாரத்தில் என் தலையீடு முடிந்தது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சரண்சிங் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்த நிர்ப்பந்தத்தை மொரார்ஜிக்கு ஜனதாவின் மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்தினார்கள். சரண்சிங் நிதி இலாகாவையும் பெற்றார். உதவி பிரதமரும் ஆனார். நிதி இலாகாவை சரண்சிங் பெற்றதால், படு மோசமான பட்ஜெட் வந்தது. ‘நான் முயற்சி செய்த போதே சரண்சிங்கை அமைச்சரவையில் சேர்த்திருந்தால், அவருக்கு விவசாய இலாகா கொடுத்திருந்தால் போதுமே? நிதி இலாகாவை கொடுக்க வேண்டி வந்திருக்காதே’ என்ற ஆதங்கம் என் மனதில் ஏற்பட்டது.

ஆனால் நான் செய்த முயற்சியே கூட தவறு தானோ - என்ற சந்தேகம் எனக்கு வர வெகுநாள் ஆகவில்லை. சரண்சிங் வெளியே இருப்பதை விட, உள்ளே மீண்டும் வருவதுதான் ஜனதா கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து - என்று மொரார்ஜி நினைத்தது தான் சரி, என்பதை பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எனக்கு உணர்த்தின. மொரார்ஜியின் அரசியல் அனுபவமும், தீர்க்கமான அறிவும் எடுத்த எடுப்பிலேயே அவருக்கு உணர்த்திய உண்மையை - எனக்குக் காலம் தான் உணர்த்தியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.