புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
சாண்டில்யனின்

சாண்டில்யனின்

“அப்படியானால் அவர்கள் தொழுகையை நீ காக்க வேண்டிய அவசியமென்ன?”

“தொழுகை ஆண்டவனைப் பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். ஆனால் அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவதுபோல, தொழுகையை யார் எந்தப் பெயரில் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேருகிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். ஆகையால் தொழுகையை - அதை யார் செய்தாலும் காப்பது இந்துவின் கடமை”

இதைக் கேட்டதும் அந்த வீரன் பலமாகவே நகைத்தான், “நீ வேதாந்தி போலிருக்கிறதே!” என்றும் கேட்டான், நகைப்பின் ஊடே. “ஆம்” வாலிபன் பதிலில் உற்சாகமிருந்தது. “அப்பொழுது வாளெதற்கு உனக்கு?” என்று அந்த வீரன் வினவினான். இளம்பரிதி புன்முறுவல் கொண்டான். “தர்மத்தைக் காக்க” என்றான் புன்முறுவலின் ஊடே.

“யார் தர்மத்தை?”

“தர்மம் கடவுளைப்போல் ஒன்றானது. ஆளுக்கொரு தர்மம், சாதிக்கு ஒரு தர்மம் கிடையாது. எது தர்மமோ அதை இந்த வாள் காக்கும்.” என்று கூறிய அவன், வாள் பிடியிலிருந்த கையை அகற்றித் தனது வாளின் உறையை ஒருமுறை தட்டிக் காட்டினான்.

சிவப்புப் புரவி வீரன் அடுத்து இளம்பரிதியை நோக்கிப் புரவியை நடக்கவிட்டான். “அப்படியானால் வாளை எடுத்துக்கொள். நீ இத்தனை நேரம் உபதேசித்த ஆண்டவனிடம் உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறி, தனது பெருவாளை உருவினான்.

இளம்பரிதி வாளை உருவவில்லை. “சிறிது நேரம் பொறுத்தால் வாளை எடுக்கிறேன்” என்று கூறினான். கூறியதன்றி மற்றவர் தொழுவதையும் சுட்டிக் காட்டி, “நமது வாள் சத்தம் அவர்கள் தொழுகையைக் கலைக்கும்” என்றும் சொன்னான்.

அவன் சொல்லி முடிப்பதற்கும், வாஸப்பும் அவனது பணியாட்களும் தொழுகை முடிந்து எழுந்திருப்பதற்கும் சமயம் சரியாகவே இருக்க, இளம்பரிதி தனது வாளை உருவினான். வாஸப் அவர்கள் சண்டையை தனது கையசைப்பால் தடுத்தான். “சண்டைக்கு அவசியமில்லை, இதைச் சுலபமாகத் தீர்க்கலாம்” என்று கூறினான், புரவி வீரனை நோக்கி.  புரவி வீரன் வாஸப் பயந்துவிட்டதாக நினைத்து உற்சாகத்தைக் காட்டினான். “வாஸப்! உன் தலையில் மூளை இருக்கிறது” என்று பாராட்டவும் செய்தான்.

“சிலபேரிடம் அது இல்லாதிருப்பதால்தான் சங்கடங்கள் விளைகின்றன” என்று பொதுப்படையாகச் சொன்னாலும், புரவி வீரனை உற்றுநோக்கிய வாஸப், “இந்தப் பெண்ணை நீ அழைத்துப் போகலாம் - எனது மூன்று கேள்விகளில் இரண்டுக்காவது பதில் சொன்னால்” என்று கூறினான்.  புரவி வீரன் திகைத்தான் ஒரு வினாடி. “சரி, கேள்” என்று பதில் சொன்னான் முடிவில்.

“உன் பெயர் என்ன?” என்று எழுந்தது முதல் கேள்வி. “சொல்ல முடியாது” வீரன் பதில் திட்டமாயிருந்தது. அடுத்து வாஸப் கேட்டான் இரண்டாவது கேள்வியை, “நீ அமர்ந்திருப்பது போன்ற புரவிகளை வரவழைக்க உங்கள் மன்னர் ஓராண்டுக்கு எத்தனை பணம் செலவழிக்கிறார்?” என்று.

“தெரியாது. அதை அறிவது என் வேலையுமில்லை” என்றான் வீரன். “நல்லது. இந்தப் புரவிகளுக்குச் செலவழிக்கப்படும் பணம் எங்கிருந்து வருகிறது?” என்று மூன்றாவது கேள்வி கேட்டான் வாஸப்.  “எனக்குத் தெரியாது. உன்னிடம் பரீட்சைக்கு நான் வரவில்லை” என்றான் வீரன். வாஸப் இகழ்ச்சி நிறைந்த தனது விழிகளை அவன் மீது நிலைக்க விட்டான்.

“நீ உட்கார்ந்திருக்கும் புரவியைப் போல் எத்தனைப் புரவிகள் - எத்தனை விலையில் ஆண்டுதோறும் வருகின்றன என்பது உனக்குத் தெரியாது. பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் உனக்குத் தெரியாது. அப்படியிருக்க உனக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?” என்று இகழ்ச்சியுடன் பேசிய வாஸப், “நான் சொல்கிறேன் கேள், ஆண்டுதோறும் இப்புரவிகளை வாங்க இருபத்திரண்டு லட்சம் தினார்கள் (நல்ல பத்தரை மாற்றுத் தங்கப் பவுண்கள்) பாண்டிய நாடு செலவழிக்கிறது. இந்தப் பணம் அரசர்கள் கஜானாவிலிருந்து வரவில்லை. உங்கள் கோயில்களின் நிலபுலன்களிலிருந்து கிடைக்கும் ஏராளமான வருமானத்திலிருந்து கிடைக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.

சிவப்புப் புரவி வீரன் இதைக் கேட்டதும் அசந்து போனான். “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவவும் செய்தான்.  அப்துல்லா பெருமைப் புன்முறுவல் கொண்டான். “உள்ளதை உள்ளபடி ஆராய்வது சரித்திர ஆசிரியன் கடமை” என்றான் அப்துல்லா.  அதுவரை பொறுமையாயிருந்த சிவப்புப் புரவி வீரன், “இந்த வீண்கதை எனக்கு அவசியமில்லை. அவளை நான் அழைத்துப் போக வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான் உஷ்ணத்துடன்.

அப்துல்லா அவன் புரவிக்கு எதிரில் போய் நின்று கொண்டான். “வீரனே! நீ யாராயிருந்தாலும் சரி. என் பரீட்சையில் தேறவில்லை. உனது நாட்டு சரித்திரம் உனக்கு வீண் கதையாயிருக்கிறது. அது போகட்டும். அந்தப் பெண் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளை யாரும் இஷ்டவிரோதமாக அழைத்துச் செல்ல முடியாது. அவள் வந்தால் அழைத்துப் போ” என்று உறுதியான குரலில் கூறினான். பிறகு பர்தாவுக்குள்ளிருந்த அரசகுமாரியை நோக்கி, “இவனுடன் நீ செல்ல விரும்புகிறாயா?” என்று வினவினான்.

“இல்லை” அரசகுமாரியின் பதில் திட்டவட்டமாக வந்தது பர்தாவுக்குள்ளிருந்து.

“அப்படியானால் நான் ஏதும் செய்வதற்கில்லை” என்ற அப்துல்லா திரும்பினான் புரவி வீரனிடமிருந்து. அந்தச் சமயத்தில் புரவி வீரன் தனது பெரிய வாளை ஓங்கி வாஸப்பின் கழுத்தின்மீது அதை வேகமாக இறக்க முயன்றான். அந்த வாள் இறங்கியிருந்தால் வாஸப்பின் ஆயுள் அங்கேயே முடிந்திருக்கும்.

ஆனால் அந்த வாளை இளம்பரிதியின் வாள் தடுத்தது மிக வேகமாக. வாஸப் சிவப்புப் புரவியை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவுடனேயே எச்சரிக்கை அடைந்துவிட்ட இளம்பரிதி, பக்கவாட்டில் மெதுவாக நடந்து வாஸப்பை அணுகினான். எதிரியின் வாள் இறங்குமென்று முன்னமேயே எதிர்பார்த்ததால் தனது வாளையும் உருவித் தயாராக வைத்திருந்தானாதலால் மின்னல் வேகத்தில் அந்த வீரனின் வாளைத் தடுத்தான்.

இதனால் சினமடைந்த புரவி வீரன் புரவியை இளம்பரிதியின் மீது பாயவிட்டு வாளையும் இரண்டாம் முறை ஓங்கினான். இளம்பரிதி பக்கவாட்டில் நகர்ந்து தனது அருகில் பாய்ந்த அந்தப் புரவியின் மீதிருந்த வீரனின் வாள் கரத்தைப் பிடித்துக் கீழே அவனை உருட்டிவிட்டு விட்டான். விழுந்த வீரனும் விநாடி நேரத்தில் எழுந்திருக்கவே, இருவருக்கும் பயங்கரமான வாள்போர் நிகழலாயிற்று. “அடே முகம்மதியன் அடிமையே! உன் ஆயுள் இன்றுடன் முடிந்துவிட்டது” என்று கூறி தனது பெருவாளால் இளம்பரிதியை வெட்ட முயன்றான் மும்முறை. மும்முறையும் இளம்பரிதியின் வாள் அவன் வாளைத் தடுத்தது, இழுத்தது வேகமாக. இழுத்த வேகத்தில் நெருப்புப் பொறிகள் இரண்டு பறந்தன இரும்புச் சலாகைகளில் உராய்ந்த காரணத்தால் அதேசமயத்தில் புரவி வீரன் கண்களிலும் நெருப்புப் பொறிகள் பறந்தன. அவன் வாளும் திரும்பத் திரும்பச் சுழன்றது.

வெறும் மாமிச பலமும் வாளின் பரிமாணமும் சண்டையை வென்றிருக்க முடியுமானால் அன்று இளம்பரிதி மாண்டிருப்பான். ஆனால் வாஸப்பிடம் பாரசீகப் புதுப்போர் முறைகளைக் கற்றதால் புதுப்புது விதமாகத் தனது வாளைச் சுழற்றி எதிரியின் வாளை இளம்பரிதி பலவிதத்தில் தடுத்தான். சில விநாடிகளுக்குப் போரை நீடிக்கவிட இஷ்டப்படாத இளம்பரிதி தனது வாளை ஒரு சுழற்றுச் சுழற்றிவிட்டு எதிரியின் வாளை நிலத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டான். பிறகு அவன் கையின் கவச உறையைத் திருகி கீழே போட வைத்தான்.

ஆனால் சிவப்புப் புரவி வீரன் வாளை எடுக்கவில்லை. தனது கையைத் தூக்கி ஏதோ சைகை செய்தான். அடுத்த விநாடி எதிர்மேட்டின் மறைவிலிருந்து பதினைந்து புரவி வீரர்கள் வாள்களைச் சுழற்றிக்கொண்டு அங்கு விரைந்து வந்தார்கள். அதுவரை வாளாவிருந்த வாஸப், “இளம்பரிதி! நீ அரச குமாரியைப் பார்த்துக்கொள். இவர்களை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்” என்று கூறி தனது புரவியின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தனது வளைவு வாளை எடுத்துக் கொண்டான். இரு அடிமைகளுங் கூட போருக்குத் தயாரானார்கள்.

அதனால் நிராயுதபாணியாகிவிட்ட சிவப்புப் புரவி வீரன் இளம்பரிதியை எரித்து விடுவதுபோல் நோக்கினான். அப்பொழுது இளம்பரிதி சொன்னான். “திரும்ப வாளை எடுத்துக்கொள். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும். அடுத்த முறை எனது வாள், உன் தலைக் கவசத்துக்கு இடையில் தெரியும் கழுத்தில் பாய்ந்து விடும்” என்று. இப்படிச் சொல்லிவிட்டு, எதிரி வாளை எடுத்துக்கொள்ள இடம்விட்டு சிறிது விலகியும் நின்றான்.

ஆனால் அந்தச் சமயத்தில் நேர்ந்தது அவர்கள் யாரும் எதிர்பாராத ஓர் அற்புதம். விரைந்து வந்த புரவி வீரர்கள் சற்று எட்டவே சட்டென்று நின்றார்கள். அவர்களில் ஒருவன் சிவப்புப் புரவி வீரனிடம் தூரத்திலிருந்த ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான். அடுத்த விநாடி அந்த வீரன் தூரத்திலிருந்த அந்த இடத்தைக் கவனித்தான். பிறகு அவனும் தனது புரவியைத் திருப்பிக் கொண்டான். அப்துல்லாவையும், இளம்பரிதியையும் நோக்கி, “இது இத்துடன் முடியவில்லை” என்று எச்சரித்துவிட்டு அவனும் பறந்துவிட்டான்.

இந்த நிகழ்ச்சி, எதற்கும் அசையாத அப்துல்லா வாஸப்பையே அசைய வைத்தது. அந்த வீரர்கள் கவனித்த இடத்தை அவனும் கவனித்தான். அந்த இடத்தில் விசேஷமாக எதுவும் தெரியவில்லை. ஒரு கிழ முஸ்லிம் நமாஸ் செய்துகொண்டிருந்தார். வாஸப் அவரைப் பார்த்த சமயத்தில் அவரும் வாஸப்பைப் பார்த்திருக்க வேண்டும். மெள்ள எழுந்திருந்து வாஸப் இருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார். அவருக்குப் பின்னால் அவரைப் போலவே தளர்ந்த நடையுடன் ஒரு புரவி நடந்து வந்தது.

அவரைக் கண்டதுதான் தாமதம், அரசகுமாரி தனது முக்காட்டைக் களைந்து எறிந்தாள். “அப்பா!” என்று கூவிக்கொண்டு அந்தக் கிழவரை நோக்கி ஓடினாள். ‘அரச மகள் ஆவலுக்கும் சிவப்புப் புரவி வீரன் அச்சத்துக்கும் பாத்திரமான இந்த முதியவர் யாராயிருக்க முடியும்?’ என்று வாஸப் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

ஓடிவந்த அரசகுமாரியை அணைத்துக்கொண்ட அந்த முதியவர், வாஸப்பையும், அவர் நண்பர்களையும் அணுகி சலாம் செய்தார். வாஸப்பும் பதில் சலாம் செய்தான். “யாத்ரிகரே! இவரை மண்டியிட்டு வணங்குங்கள்” என்று ஒலித்தது அரசகுமாரியின் ஆக்ஞை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.