புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
வைரமுத்து

வைரமுத்து

தாத்தா!

உங்களை நினைக்கும்போது எங்கேதான் பதுங்கி இருக்குமோ இந்தக் கண்ணீர்....

இப்படி எழுந்து வருகிறதே! ஏன் தாத்தா?

என் பிஞ்சுப் பிராயத்தில் ஒரு கோழிக்குஞ்சாய் நான் கண் விழித்தபோது என்மீது சுள்ளென்று அடித்த சூரியன் நீங்கள்தான்.

அதனால்தானா?

இந்த வானத்தின் கீழ் வாழ்க்கையின் சில சதுர மைல்களை எனக்கு அறிமுகப்படுத்திய ஆத்மா நீங்கள்தான்!

அதனால்தானா?

மாதுளம்பழம் பழுத்து வெடிக்கையில் உள்ளிருக்கும் முத்துக்கள் பாதிச் சிரிப்புச் சிரிப்பது மாதிரி - மனசு பழுத்து வெடிக்கையில் உங்கள் ஞாபகங்கள் முக்கால் பங்கு நீரில் மூழ்கிய பனிக்கட்டியாய் முகங்காட்டுகின்றன.

உங்களை நினைத்தால் நான் அழுது விடுகிறேன் தாத்தா. துக்கமில்லாமலும் வெட்கமில்லாமலும் என்னால் அழப்படும் ஒரே அழுகை அதுதான் தாத்தா.

பஞ்சு மிட்டாய்க் கலரில் ஒரு கம்பளி வைத்திருந்தீர்களே! ‘மாசி பங்குனி மச்சும் குளிரும்’ என்ற பழமொழி சொல்லி - அந்தக் கம்பளிக்குள் என்னை அடைகாத்திருக்கிaர்களே - என் மனசுக்குள் அந்த எட்டு வயசு இன்னும் இருக்கிறது தாத்தா.

கத்தரிக்காய் மூட்டையின் மேல் என்னையும் ஓர் உயிர் மூட்டையாய் ஏற்றிவைத்து அழைத்துச் சென்று தேனி சந்தையில் எனக்கு முதன்முதலில் அல்வா வாங்கிக் கொடுத்தீர்களே! அந்த இனிப்பின் ஈரம் என் நாவிலும் ஞாபகங்களிலும் உயிரின் கடைசிச் சொட்டு இருக்கும் வரை உலர்ந்து போகாது தாத்தா.

முழுக்கைச் சட்டைக்குத் துணிவாங்கி அரைக்கைச் சட்டையாய்த் தைக்கப்பட்ட உங்கள் சட்டை ஆணியில் ஆடும்போது உள்ளிருக்கும் சில்லறைகள் தேவகானம் பாடுமே -

உலக வானொலியின் எந்த அலைவரிசையிலும் அப்படி ஓர் ஒலிபரப்பை இன்றுவரை நான் கேட்டதில்லை தாத்தா.

உங்களுக்குப் படிக்கத் தெரியாது; நிமிஷத்திற்கு இரண்டு வார்த்தைகளே எழுத்துக் கூட்ட முடியும். ஆனால், படிக்கத் தெரியாத உங்களிடம் நான் படித்துக் கொண்டது அநேகம்.

“போலீஸ் ஸ்டேஷன் - கோர்ட் - ஆஸ்பத்திரி மூன்றுக்கும் மனிதன் போகக் கூடாது” என்று எனக்குப் பாடம் சொன்னது நீங்கள்தானே!

உங்களுக்கு எழுதத் தெரியாது; கல்வெட்டுக்குச் செலவாகும் நேரத்தில் கையெழுத்துப் போடுவீர்கள்.

‘பொன்னையாத் தேவர்’ என்று கையொப்பம் இடுகையில் ‘னை’ வரும்போது தமிழ் உங்களோடு தகராறு செய்யும். ‘னை’ யைக் கடந்துவிட்டால் நன்னம்பிக்கை முனை அடைந்த வாஸ்கோடகாமாவாய் முகத்தில் ஓர் ஆனந்த வெளிச்சம் அடித்துவிட்டுப் போகும்.

எழுதத் தெரியாத உங்களிடமிருந்துதான் உண்மை - நேர்மை - ஒழுக்கம் என்ற வார்த்தைகளை எழுதிக் கொண்டேன் தாத்தா. அந்த ஊரிலேயே போலிஸ்காரர்கள் தட்டாத கதவு பொன்னையாத் தேவர் வீட்டுக் கதவுதான். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால், கோயிலுக்குப் போவதில்லை.

உங்களுக்கு மூடநம்பிக்கை உண்டு; ஆனால், அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை.

ஆண்டிபட்டிப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிaர்கள். நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்டு எதிர்காலத்தை விற்றுக் கொண்டிருக்கும் ஒரு லாட்டரிச் சீட்டுப் பையன் உங்களை மொய்க்கிறான்.

“அடுத்த வாரமே நீங்கள் லட்சாதிபதி! வாங்கிக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்துகிறான்.

நீங்கள் மெளனமாய் மறுக்கிaர்கள்; அவன் விடவில்லை. உங்கள் மேல் மூட்டைப் பூச்சியாய் விழுந்து கம்பளிப் பூச்சியாய் ஊர்ந்து அட்டையாய் ஒட்டுகிறான்.

நீங்கள் வேண்டாமென்று சுடுசொல் வீசுகிaர்கள். பாவம்! அவன் வயிறு அவனுக்கு.

“உங்கள் கஷ்டமெல்லாம் தீரும்! நாளைக்கே நீங்கள் லட்சாதிபதி” கூவியது கூவும் சேவலாய்க் கூறியது கூறுகிறான்.

அதற்குமேல் பொறுமைக்காக அவகாசமில்லை உங்களுக்கு.

“டேய்! அதை நீயே வச்சுக்கிட்டு நீயே லட்சாதிபதியாகி உன் கஷ்டமெல்லாம் தீர்றா போடா!” என்று பொரிந்து தள்ளிவிட்டுப் போகிaர்கள்.

உழைக்காத காசில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை.

வெகுநாட்களாகவே எனக்கு விளங்காதது உங்கள் குளியல் முறைதான். நீங்கள் குளிப்பதே ஒவ்வொரு நாளும் நடக்கும் ஓரங்க நாடகம்.

உங்களுக்குப் பெரும்பாலும் மாலைக் குளியல்தான். உழைப்பாளிகளுக்கு ஏது காலைக் குளியல்?

வெந்நீர் கொதிக்கவிட்டு, வாசலில் அண்டாவைத்து, உங்கள் பதத்திற்கு நீங்களே அளாவி, அன்று பயன்படுத்திய துண்டைக் கோவணம் கட்டி நீங்கள் குளிக்க ஆரம்பித்தால் - ஒரு தமாஷ் பார்க்க மனசு தயாராகும்.

சொம்பில் வெந்நீர்மொண்டு கொண்டு ஓரிடத்தில் நிற்காமல் ஓடுவீர்கள். ஓடிக்கொண்டே ஊற்றுவீர்கள்; ஊற்றிக்கொண்டே ஓடுவீர்கள்.

வாசல் முழுக்க வலம் வருவீர்கள். ஏன் இந்த ‘ஒலிம்பிக் குளியல்’ என்று எனக்கு ஒவ்வொரு நாளும் யோசனைதான். பாட்டியைக் கேட்டுக் கடைசியில் கண்டுபிடித்தேன்.

குளிக்கிற தண்ணீர் விரயமாகக் கூடாதாம். அது வாசலின் புழுதியடங்கப் போய்ச் சேர வேண்டுமாம்! அதற்குத்தான் அந்த ஓட்டமாம்.

தனக்கும் வாசலுக்கும் சேர்த்துக் குளித்தவர் நீங்களாய்த் தானிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன். என் மீதுதான் உங்களுக்கு எத்தனை பாசம்!

கடவுள் பேர் சொன்னால் அழுதுவிடும் நாயன்மார் மாதிரி என் பெயரை யார் சொன்னாலும் அவசரமாய் அழுது விடுவீர்கள்.

சலவக்குப் போடும் சட்டைப் பையோடு எது போனாலும் கவலைப்பட மாட்டீர்கள்; கூடவே நான் போட்ட கடிதமும் போய்விட்டால் குலுங்கி அழுதுவிடுவீர்கள்.

“எத்தனை நாள்தான் இந்தக் கூட்டுக்குள் இருப்பீர்கள்; என் வீட்டுக்கு வாருங்கள்” என்று சென்னைக்கு அழைத்தேன்; நீங்கள் மறுத்தீர்கள்:

“வேண்டாம்! உன் வீட்டில் எச்சில் துப்ப எனக்கு வசதியில்லை.”

உங்கள் ‘பராசக்தி’ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன்.

உங்கள் தோள்கள் பொன்னாடைகள் தரித்துக் கொண்ட பொழுதில் என் கால்சட்டைப் பொத்தான்களைச் சொந்தமாயப் போட்டுக் கொள்ளும் சுயம்கூட இல்லை எனக்கு.

மார்கழி மாதத்துத் திருப்பாவையாய்... எனது வாழ்வின் வைகறையில் உங்கள் குரல் எங்கிருந்தோ வந்து என்னை எழுப்பியிருக்கிறது.

இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்புகளாய்த் தொடுத்துக் கட்டப்பட்ட கலைஞரின் தமிழ், உங்கள் நாவின் பசை தடவி என் இதயப் பரப்பில் வந்து அப்படியே அப்பிக் கொண்டது.

மனசின் மர்மப் பிரதேசங்களைத் துழாவித் தொட்டது உங்கள் குரல்.

என் பிஞ்சு வயதில் பிரமிக்க வைத்தது உங்கள் உருவம். உதடுகளால் பேச முடியாத வார்த்தைகளை உச்சரித்துக் காட்டியது உங்கள் புருவம்.

என்னோடு சண்டை பிடித்தது உங்கள் மெளனம். ராஜ தோரணையோடு இளவரசனாய் நீங்கள் எட்டு வைத்தபோது, உங்கள் அரையின் இடப்பக்கம் தொங்கியது வாள்; வலப்பக்கம் தொங்கியது நான்.

மனசு, எழுதப்படாத சிலேட்டாய் இருந்த காலையில், சரித்திர புருஷர்களை வரையப் போனால் உங்கள் உருவமே திரண்டு நின்றது.

கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், உங்கள் அசைவுகளின் மூலம் அடையாளம் கண்டுகொண்ட பிறகு நிஜங்கள் பிம்பமென்றும் இந்த பிம்பமே நிஜமென்றும் நம்பினேன்.

வித்தையில் கீரியும் பாம்பும் சண்டையிடா என்று தெரிந்தும், கடைசிவரை காத்திருக்கும் கிராமத்துச் சிறுவன் மாதிரி, புராணங்கள் பொய்யென்று தெரிந்த பிறகும் உங்கள் அபிநயங்களுக்காகவே ஆராதித்தேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டும்தான் கால்சட்டைப் பைகளில் நிரப்பிக்கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.

எங்கள் ஊரில் உப்புத்தண்ணீர்க் கிணற்றுக்குப் பக்கத்தில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை, ஈரம் காய்வதற்குள் வந்து வாசித்துவிட்டுப் போகிறவன் நான்தான்.

மனோகரா பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து, சங்கிலிக்குப் பதிலாய் தாம்புக்கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக்கொள்ளச் செய்துவிட்டு, புளிய மரத்தை புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா?

வீரபாண்டிய கட்டபொம்மன் பார்த்துவிட்டு, சோளத் தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா?

பாடல்களை உங்கள் உதடுகள் உச்சரித்து உழுகிறபோது டி.எம்.செளந்தரராஜன் உங்களுக்காகப் பாடுகிறாரா இல்லை டி.எம்.செளந்தரராஜனுக்காக நீங்கள் பாடுகிaர்களா என்று நான் நெற்றி உயர்த்தி வியந்தது நிஜமல்லவா?

அப்போதெல்லாம் நினைத்தேனா - உங்களுக்காக நான் இயற்றப் போகும் பாடல் எனக்கு தேசிய விருதைத் தேடித்தரும் என்று.

திரைப்படத்தின் மூலமாய் எனக்குக் கல்வி வந்தது. அந்தக் கல்வியில் ஒரு பகுதி உங்களால் வந்தது. மரபுரீதியான குணாம்சங்களை - செல்லரித்த வாழ்க்கையின் வக்கரிப்புகளை - நவீன வாழ்க்கையின் நச்சுப் பற்களில் சிக்கிச் சிக்கி சிதிலமாகிப் போன பன்முகப் பாத்திரங்களை - இந்த மண்ணில் இன்னும் அறுந்து போகாதிருக்கிற நல்லியல்புகளின் சல்லி வேர்களை எங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் பக்கத்தில் வந்து வந்து பரிமாறியது நீங்கள்தான்!

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக - தமிழர்களின் சாயங்காலத்துச் சந்தோஷம் நீங்கள். ஆனால், நானொன்று சொல்வேன் நடிகர் திலகம் அவர்களே!

தமிழனாய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்பட்டுக் கொள்ள எவ்வளவு காரணங்களுண்டோ அவ்வளவு காரணங்கள் சிறுமைப்பட்டுக் கொள்வதற்கும் உண்டு. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ - என்றோமே! தந்தோம், எவன் வாங்கிக் கொண்டான்? வாங்கவில்லை.

முதற் காரணம் - நம் சுருங்கிய எல்லை.

நம் எல்லையைப் போலவே குறுகியிருக்கும் மனோபாவம். ஒரு கலைஞனை உணரவோ உணர்த்தவோ முடியாத ஊமைத்தனம். என்னதான் ஏற்றினாலும் நம் தீபங்கள் திருவண்ணாமலைக்கு மேல் தெரிவதில்லை.

உங்கள் ஆற்றலுக்கு நீங்கள் இருந்து வருகிற உயரம் சரி; ஆனால், தெரிந்திருக்க வேண்டிய உயரம் இது இல்லை. என்னவோ வாயில் வராத பெயர்களையெல்லாம் வரிசைப்படுத்துகிறார்களே - மார்லன் பிராண்டோ, கிரிகரிபெக், ரிச்சர்ட் பர்ட்டன், ஓமர் ஷெரீப், சார்லஸ் பிரான்சன், சீன் கானரி, ஓலிவியாடி ஹவில்லாண்ட் -

இவர்களையெல்லாம் விட எங்கள் இனிய கலைஞனே! நீங்கள் எத்தனை மில்லிகிராம் எடை குறைந்தீர்கள் அவர்களுக்கெல்லாம் இல்லாத சில ஆற்றல் உங்களுக்குண்டு. இன்று ஓரளவு விவரம் தெரிந்த பிறகுகூட வியந்துதான் நிற்கிறேன்.

தனக்கொரு ‘இமேஜ்’ என்ற எல்லை கட்டிக்கொள்ளாமல் குரூபியாய், தொழுநோயாளியாய், விழியிழந்தவராய், மூத்துச் சிதைந்த முதியவராய், குடிகாரனாய், கொள்ளைக்காரனாய், அத்தனை பாத்திரங்களையும் ஏற்கத் துணிந்த உங்கள் ஆண்மையை வியக்கிறேன்.

மேல்நாடுகளில் ஒரு பாத்திரம் நடிக்க ஓராண்டு ஈராண்டு ஒத்திகை பார்ப்பார்களாம். எந்தப் பாத்திரத்திற்கும் ஒத்திகை தேவையில்லாத உங்கள் உன்னதம் கண்டு வியக்கிறேன்.

எந்த மனிதனைப் பார்த்தாலும் அவனை மனதுக்குள் சேமித்து வைத்து - தேவைப்பட்டபோது எடுத்துச் செலவழிக்கிaர்களே! அந்த வித்தையை அறிந்து வியக்கிறேன்.

இரண்டு மூன்று சிரிப்புகளை ஒட்ட வைத்து சிரிப்பில் புதிய கலவைகளைக் கண்டுபிடித்தவர் நீங்கள் என்று வியக்கிறேன்.

எங்கள் தலைமுறையில் இத்தனை பேராற்றல் கொண்ட ஒரு மாபெரும் கலைஞனுக்கு உரிய உயரம் ஏன் மறுக்கப்பட்டது?

ஒரு வேளை நீங்கள் உள்ளூர்ச் சரக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டதுதானா?

குணச்சித்திரத்தில் மூன்று வகையான பாத்திரங்கள் உண்டு.

வட்டாரப் பாத்திரங்கள், சமகாலப் பாத்திரங்கள், உலகப் பாத்திரங்கள்.

முதல் இரண்டு பாத்திரங்களாய் நீங்கள் வார்க்கப்பட்டீர்கள்; வாழ்ந்து காட்டினீர்கள்.

முழுநீளப் படத்திற்கும் உலகப் பாத்திரங்கள் ஏற்று நீங்கள் உயர்ந்திருக்க வேண்டாமா?

யார் பிழை அது?

கலையின் பிழையா?

கதையின் பிழையா?

காலத்தின் பிழையா?

உலக சமுத்திரங்களில் கலந்து, சமுத்திரத்தையே கடைய வேண்டிய நதியை எங்கள் சுயநலத்துக்காகச் சின்னச் சின்னப் பாத்திரங்களில் சிறை வைத்து விட்டோமா?

இன்னொன்று.

அரசியல் இருக்கிறதே அரசியல்! அது உங்கள் அங்கவஸ்திரம்.

அங்கவஸ்திரமே ஆடை என்று கருதிக் கொண்டிருக்கும் விபத்திலிருந்து உங்களால் விடுபட முடியவில்லை.

இதுவரை பதவியால் நீங்களோ, உங்களால் பதவியோ பயன்பெற்றதாய் ஆவணக் கிடங்கில் ஆதாரம் இல்லையே.

உங்கள் ஆற்றல், உங்கள் புகழ், உங்கள் செல்வம், உங்கள் அனுபவம் எல்லாவற்றையும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய இடம் ஒரு கட்சி அல்ல.

நீங்கள் தொடங்கியிருக்க வேண்டியது ஒரு சிவாஜிகணேசன் பல்கலைக்கழகமே தவிர, கலந்து கலந்து கரைந்துபோகும் ஒரு கட்சி அல்ல.

செல்லுலாய்டு பிம்பங்களுக்கு 50 வருடங்களுக்கு மேல் ஆயுள் இருக்குமா என்பது ஐயப்பாடு. அதன்பிறகு உங்கள் பேராற்றலின் பேர்சொல்லத் தக்க ஆய்வுகளோ அடையாளங்களோ வேண்டாமா?

ரஜினி கட்டியிருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்திறப்பு விழாவுக்கு வந்திருந்தீர்கள்.

அந்த விழாவில் நீங்கள் உள்பட எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.

ஆனால், நான் மட்டும் உங்களுக்காக அழுது கொண்டிருந்தேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.