புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
தண்டனை தப்பியது யாராலே?

தண்டனை தப்பியது யாராலே?

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய்க் குயவனைத் தேடி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி...

இப்படி ஒரு பாடலை கிராமங்களில் பாடுவார்கள். இதிலே வரும் ‘தோண்டி’ என்ற சொல் நீர் பிடித்து வைக்கும் குடம் என்பதைக் குறிக்கும்.

ஒரு மூதாட்டி அந்தக் கிராமத்தில் சிற்றுண்டி மற்றும் சாப்பாடு தயார் செய்யும் விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தாள். அன்னம்மாள் - அதுதான் மூதாட்டியின் பெயர். தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள். அவள் உறுதியைப் பாராட்டாதவர்கள் அந்த ஊரிலே யாரும் இல்லை.

அந்த ஊரில் ஒரு சிறுவன். ராமன் என்று பெயர். படிப்பு ஆரம்பக் கல்வி வரைதான். ஆனாலும் புத்திசாலி. அவன் ஒரு வியாபாரியின் மகன். இருந்தாலும் அவனுக்குத் தந்தைபோல வியாபாரம் செய்ய விருப்பம் இல்லை.

மற்ற சிறுவர்களுடன் கோலி, கில்லி, பலீங், சடுகுடு, குளத்தில் நீச்சல் அடித்து அடிமண்ணை எடுத்துக் கொண்டு முதலில் மேலே வருதல், பச்சைக் குதிரை தாண்டுதல் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவான்.

பஞ்சாயத்து நடக்கும் இடங்களுக்குச் சென்று எப்படித் தலைவர்கள் வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்கிறார்கள் என்பதை ராமன் உன்னிப்பாகக் கவனிப்பான். நியாயம் எது, அநியாயம் எது என்று அவன் தன் மனதிற்குள்ளே முடிவு செய்வான். தான் மனத்தில் எடுக்கும் முடிவும் தலைவர்கள் சொல்லும் தீர்ப்பும் ஒரே மாதிரியாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவான்.

என்ன? முதலில் தோண்டி, அப்புறம் மூதாட்டி, அதற்கப்புறம் ராமன் என்ற சிறுவன் இப்படிச் சம்பந்தம் இல்லாமல் கதை போகிறதே என்று யோசிப்பவர்களுக்கு, இதோ நான்கு வியாபாரிகள் வருகிறார்கள். அந்த நான்கு வியாபாரிகளும் ஒரே ஊர்க்காரர்கள். அவர்கள் நால்வரும் நண்பர்கள், அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. லாபம் கிடைக்கும் போது உடனே பங்கிட்டுக் கொள்ளாமல், அதை ஒரு குடத்தில் வைத்து மூடி, அரக்கு சீல் வைத்து விடுவார்கள். ஆண்டு முடிவில் பஞ்சாயத்தார் முன்னிலையில் சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

அடிக்கடி நால்வரும் வியாபாரம் செய்வதற்கு வெளியூர் செல்வார்கள். எந்த ஊரில் எது கிடைக்க வில்லை? எந்த ஊரில் எது மலிவு என்ற விபரங்களைத் திரட்டுவார்கள். ஒரு ஊரில் கிடைக்காத பொருளை மலிவாகக் கிடைக்குமிடத்தில் வாங்கிக் கொண்டு வந்து விற்பார்கள். சரக்கு உடனே விற்பனை ஆகிவிடும். அதைப்போல மலிவாகக் கிடைக்கும் பொருளைக் குறைந்த விலையில் வாங்கி வேறு ஊரில் அதிக விலைக்கு விற்பார்கள்.

இந்த நான்கு வியாபாரிகளும், அன்னம்மா பாட்டி இருக்கும் ஊருக்கு வந்தார்கள். சிற்றுண்டி, சாப்பாடு சாப்பிட்டார்கள். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுடன் வியாபாரம் செய்ய முடிவு செய்தனர். பாட்டியிடம், “பாட்டி! நாங்கள் நால்வரும் உங்களுடைய குடிசையில் தான் தங்கப் போகிறோம்! உங்கள் விடுதியில்தான் சாப்பாடு! சில மாதங்கள் தங்க வேண்டும்!” என்றார்கள். பாட்டிக்கு மகிழ்ச்சி. சாப்பாட்டுக்குப் பணம் முன் பணமாகவே கிடைத்துவிடும். தங்குவதற்குத் தனியாக வாடகைப் பணம் வாங்கி விடலாம் என்ற ஆசையில் பாட்டி சொன்னாள், “தாராளமாக தங்கிக்கிங்க! தோட்டம் துரவு இருக்கு. கிணறு இருக்கு! கயிற்றுக் கட்டில்கள் தருகிறேன்! நல்ல காற்று! இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்! அது மட்டுமல்ல; என்னண்டை கோழிங்க இருக்கு! முட்டை வேணும்னு கேட்டா தராம இருப்பேனா! பசுமாடு இருக்கு! பசும்பால் இரவில் காய்ச்சிக் குடிக்க ஆசைப் பட்டால் தயாரா வைப்பேன்! நீங்க அது அதுக்குத் தனித்தனியாக காசு கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்!”

பாட்டியின் அன்பு அவர்களைக் கவர்ந்தது. பணம் வாங்கினாலும் ஒரு தாய்போல நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வாள். அதோடு நமக்கும் பாதுகாப்பு! நம்ம பணத்துக்கும் பாதுகாப்பு என்று முடிவு செய்தனர்.

வியாபாரிகளில் மூத்தவன், பாட்டியிடம் ஊர் நிலவரங்களைக் கேட்டான். அந்த ஊரில் கீரை மலிவு என்றும், கிழங்கு வகைகள் கிடைப்பதில்லை என்றும் தெரிந்து கொண்டான்.

உடனே, நால்வரும், கீரைகளை வெளியூரில் சென்று விற்கவும், வெளியூரிலிருந்து கிழங்கு வகைகளை வாங்கிக் கொண்டு இங்கு லாபம் வைத்து விற்கவும் முடிவு செய்தனர்.

இப்படிப் பல நாட்கள் வியாபாரம் செய்ய அதிக லாபம் கிடைத்தது. பணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க, நால்வரும் ஒரு தோண்டியை வாங்கினார்கள். அதில் லாபப் பணத்தைச் சேர்த்தார்கள். அதை வாய்ப்புறம் மூடி பாட்டியிடம் காட்டினார்கள். “பாட்டி! இதை உங்கள் தோட்டத்தில் புதைக்கப் போகிறோம்! நாங்கள் நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால்தான் இந்தத் தோண்டியைத் தர வேண்டும்!” என்று சொன்னார்கள்.

பாட்டியும் தோட்டத்தில் ஒரு இடத்தைக் காட்டினாள். உடனே ஆழக் குழி தோண்டி மண் அடியில் தங்களின் மொத்தப் பணமும் நிரம்பிய தோண்டியைப் புதைத்தனர். தோண்டியில் இருப்பது என்ன? என்று பாட்டி கேட்க வில்லை. ஆனால், இவர்களுடைய பணம்தான் என்று தெரிந்து கொண்டாள்! அந்த இடத்தின்மேல் ஆட்டுக் கல்லை நகர்த்தி வைத்து விட்டாள்.

ஆட்டுக்கல் அடையாளத்தை வியாபாரம் முடிந்து திரும்பும் நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு நாள் பாட்டியிடம் ராமன் வந்தான். ‘யார் இவர்கள்? ஏன் உங்க குடிசையில் தங்குகிறார்கள்? என்று கேட்டான். பாட்டியும் பொறுமையாக, “இந்த நான்கு பேரும் ஒரே ஊரைச் சேர்ந்த நண்பர்கள். கூட்டாக வியாபாரம் செய்கிறார்கள். இங்கே கொஞ்ச நாட்கள் தங்குவார்கள். சாப்பாட்டுக்குப் பணமும் தங்குமிடத்திற்கு வாடகையும் கொடுக்கிறார்கள்” என்று சொன்னாள்.

பாட்டி ஒரு விஷயத்தை வேண்டுமென்றே ராமனிடம் மறைத்து விட்டாள். அதுதான் புதைத்து வைக்கப்பட்ட தோண்டி. வியாபாரிகள் ‘ரகசியம்’ என்று சொன்னதை யாருக்குமே பாட்டி சொல்லவில்லை. ராமன் சொன்னான்; “பாட்டி! வெளியூர்க்காரனுங்களுக்கு தைரியம், துணிச்சல் ஜாஸ்தி! ஏமாந்து போகாம உஷாரா ஜாக்கிரதையா நடந்துக்க!”

“சரிடா ராமா!” என்று சொல்லி அவனுக்குத் தோசை இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னாள். “வெளியாள் வந்து தங்கறாங்கன்னு இத்தனை நாள் வராம இருந்தியா! நீ எப்பவும்போல வந்து ரெண்டு வார்த்தை பேசுடா ராசா!” என்று ஆறுதல் சொன்னாள்.

வியாபாரிகளுக்கு சொந்த ஊர் ஞாபகம் வந்து விட்டது. “ரெண்டு நாளில் புறப்படப் போகிறோம்!” என்று பாட்டிக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். “பாவம்! வீட்டை விட்டு எத்தனை நாளைக்குத்தான் வெளியிலே இருப்பாங்க!” என்று பரிதாபப்பட்டாள்.

அன்று ஊருக்குப் புறப்பட்டுச் செல்வதால் வியாபாரத்திற்குப் போகவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருந்தனர். நால்வரும் குளிக்கச் சென்றனர். பாட்டியும் அவர்களிடம் கொடுத்து அனுப்புவதற்காகச் சில தின்பண்டங்களைத் தயார் செய்து கொண்டிருந்தாள். தின்பண்டங்களை இலவசமாகக் கொடுப்பது என்று பாட்டியின் எண்ணம்.

குளிக்கச் சென்ற நால்வருக்கும் ஏமாற்றம். கிணற்றில் தாம்புக் கயிறு இருக்கிறது. ஆனால் தோண்டி இல்லை. தோண்டி இருந்தால் தானே கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியும். நால்வரில் சிறுவயதுக்காரனை பாட்டியிடம் அனுப்பி, தோண்டி வாங்கி வரச் சொன்னார்கள்.

அவ்வாறே இளையவனும் பாட்டியிடம் போனான். “பாட்டி! தோண்டி எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்” என்றான். புதைத்து வைத்த தோண்டியைத்தான் கேட்கிறான் என்று பாட்டி நினைத்தாள். “ஏம்ப்பா? நாலு பேரும் ஒண்ணா வந்து கேட்டாத்தானே கொடுக்கணும்! நீ மட்டும் தனியா வந்து கேக்கறியே?” என்றாள்.

‘நான் கேட்டது தண்ணீர் சேந்த ஒரு தோண்டி (குடம்)பாட்டி புரிஞ்சுக்கிட்டது வேறே!’ என்று இளைஞன் மனதில் பட்டது. அதுவரை கூட்டு, ஒற்றுமை என்ற நல்லெண்ணங்களோடு இருந்தவனுக்கு சபலம் தட்டியது.

சற்று உரத்த குரலில் “பாட்டி, கிணற்றருகில்தான் மற்ற மூவரும் இருக்கிறார்கள். நீ வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளேன்!” என்றான்.

பாட்டி உரத்தகுரலில் “தம்பிங்களா! நீங்களா தோண்டி கொண்டு வரச் சொன்னீங்க? என்று கேட்டாள். மூவரில் ஒருவன் அவசரமாகக் குளிக்கணும் என்ற ஆசையில் “பாட்டி! சந்தேகமில்லாமல் தோண்டி கொண்டு வரச் சொன்னது நாங்கதான்! சீக்கிரம் கொடுத்தனுப்புங்க!” என்று எதிர்க் குரல் கொடுத்தான்.

பாட்டி திரும்பி வந்து இளைஞனிடம், “அதோ இருக்கு, கடப்பாரை எடுத்துக்கோ! ஆட்டுக்கல்லை நகர்த்து! சீக்கிரம் தோண்டி எடுத்துக் கொண்டு போ!” என்றாள். பின் சமையலறையில் பலகாரம் செய்யத் தொடங்கினாள்.

‘இதுதான் குருட்டு அதிர்ஷ்டம்! என்று எண்ணிய இளைஞன் ‘மடமட’ வென்று காரியத்தில் இறங்கினான். ஆட்டுக்கல்லை நகர்த்தினான். கடப்பாரையால் மண்ணைத் தோண்டினான். புதைத்து வைத்த தோண்டி கையில்பட்டது. மண்ணிலிருந்து கஷ்டப்பட்டு எடுத்தான். அக்கம் பக்கம் பார்த்தான் யாருமில்லை.

“நான் தோண்டி எடுத்துட்டுப் போறேன்!” என்று பாட்டிக்குக் குரல் கொடுத்து விட்டு யாரும் வரமுடியாத குறுக்கு வழியில் இளைஞன் ஓட்டம் பிடித்தான்.

இன்னுமா பாட்டி தோண்டி கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் குளிக்கும் ஆசையை விட்டுவிட்டு பாட்டியின் குடிசையை அடைந்தார்கள் மற்ற மூவரும்.

“ஏ பாட்டி! ஒரு தோண்டி கொடுக்க இவ்வளவு நேரம் ஆகுமா?” என்று அவர்கள் கோபமாகக் கேட்க பாட்டி “பையன் தோண்டி எடுத்துப் போய் விட்டானே, இன்னுமா வரவில்லை” என்று பதில் சொல்ல, ஆட்டுக் கல்லை நகர்த்திப் பள்ளம் தோண்டி பத்திரமாகப் புதைத்து வைத்த தோண்டி காணாமல் போனது என்று விஷயம் சில நிமிடங்களில் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

“நாம் மோசம் போய் விட்டோம்! இளைஞன் நமக்குத் துரோகம் செய்து விட்டானே!” என்று மூவரும் துக்கம் அடைந்தனர். பாட்டி பதறினாள், “தோண்டின்னு கேட்டப்ப நன் உங்களைச் சந்தேகம் கேட்டேன். நீங்களும் கொடுங்கன்னு சொன்னப்புறம்தான் சின்னத்தம்பிக்குக் கடப்பாரையைக் கொடுத்தேன். அவனாவது தண்ணீர் சேந்த ஒரு தோண்டி அல்லது குடம்தான் வேண்டும் என்று சொல்லவில்லையே!” என்றாள்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பொற்காசுகள் நிறைந்த தோண்டியை நாங்கள் நால்வரும் ஒன்றாகக் கேட்டால்தான் தர வேண்டும் என்று சொன்னோம். வார்த்தையை மீறியது உன் தவறு. நாங்கள் சும்மாவிடப் போவதில்லை, அரசிடமே சென்று முறையிடப் போகிறோம்” என்றார்கள்.

பாட்டிக்குப் பயம் வந்து விட்டது. “நிச்சயம் அரசர் எனக்குத் தண்டனையும் தருவார். அபராதமும் போடுவார். நான் என்ன செய்வேன்!” என்று கதறி அழுதாள்.

சொன்னபடியே வழக்கு அரசரிடம் போயிற்று. அரசர் பாட்டி சொன்னதைக் கேட்டார். ஒப்பந்தத்தை மீறி விட்டாய் என்றார். அதே சமயம், வியாபாரிகளைப் பார்த்து உங்களை ஏமாற்றிய கூட்டாளியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டார். “அவனுக்கு சொத்து கிடையாது. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. திருமணம் ஆகாதவன். ஆகவே பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான். எல்லாப் பணமும் செலவழிந்து போன பிறகு வந்தால் வருவான்!” என்று ஒரு வியாபாரி சொன்னான்.

அரசர் இவ்வாறு தீர்ப்பு கூறினார். “பாட்டிக்குச் சொந்தமான வீடு, நிலம், சேமிப்பில் வைத்திருக்கும் நகை, பணம் அத்தனையும் இனி வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடாக சொந்தமாக்கப்படும்.”

தீர்ப்பைக் கேட்ட பாட்டி அலறித் துடித்தாள். முழுத் தவறும் பாட்டி மீது போடுவது அபாண்டம். அதற்காகத் தண்டனை கொடுப்பது கொடுமை என்று மக்கள் கருதினார்கள். ஆனால், வெளியில் மூச்சு விடவில்லை. ஆனால் தீர்ப்பைக் கேட்ட ராமனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொங்கி எழுந்தான்.

கையிலே வைத்துக் கொண்டிருந்த கோலிகளை ஒவ்வொன்றாக எறிந்து அதே வேகத்தில் தன் கோபத்தைக் காட்டினான். “அக்கிரமக்காரர்கள் நிச்சயம் அழிந்துதான் போவார்கள்.” என்று கத்தினான்.

‘அரசனின் தீர்ப்பை விமரிசனம் செய்தான்’ என்று ஒற்றர்கள் அவனைப் பிடித்து அரசன்முன் நிறுத்தினர், “என் தீர்ப்பு சரியில்லை என்று சாபம் இட்டாயா?” என்று அரசர் கேட்டார். “அரசே! தீர்ப்பு சரியில்லை என்று சொன்னது நிஜமே! ஆனால் சாபமிட்டது உங்களையல்ல. அக்கிரமக்காரர்களுக்குத்தான்!” என்று ராமன் பயமில்லாமல் உறுதியாகச் சொன்னான்.

ராமனை பற்றி முழு விபரம் தெரிந்த பிறகு அரசர், ராமனிடம், “என் தீர்ப்பு சரியில்லை என்றால் உன் தீர்ப்பு தான் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு ராமன் “மறுபடியும் பாட்டி, மூன்று வியாபாரிகள் ஆகியோரை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும்” என்றான். அரசர் மீண்டும் நியாய சபையைக் கூட்டினார். ஜனங்களுக்கு மிக்க ஆச்சர்யம்! ‘சாதாரண ராமனா அரசருடைய தீர்ப்புக்கு மறு தீர்ப்பு சொல்லப் போகிறான்?’ என்று மக்கள் திரள் திரளாகக் கூடினர்.

மந்திரிகளுக்கும் சேனாதிபதிகளுக்கும் உள்ளூரக் கோபம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. அரசருடைய புத்தி இப்படிப் போகக் கூடாது. சாதாரண பையன் பேச்சைக் கேட்டிருக்கக்கூடாது என்று பொருமினர்.

ராமனுக்குத் தகுந்த ஆசனத்தை அரசர் கொடுத்தார். ராமன் முதலில் வியாபாரிகளைப் பார்த்துக் கேட்டான். “உண்மையைச் சொல்லுங்கள். இது ராஜ சபை. பாட்டியிடம் என்ன சொல்லிப் பொற்காசுப் பானையை அதாவது தோண்டியைப் புதைத்தீர்கள்? (தொடரும்...)

அதற்கு முன் ஒரு கேள்வி! பாட்டியே உங்கள் தோண்டியை எடுத்திருப்பாள் என்று நினைக்கிaர்களா?”

வியாபாரிகள் மூவரும் ஒரே குரலில், “பாட்டி எங்கள் தாயைப்போல் உணவும் தங்கும் இடத்தையும் கொடுத்து எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். நாங்கள் நால்வரும் ஒன்றாக வந்து பொற்காசுப்பானையை அதாவது தோண்டியைக் கேட்டால்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் பாட்டி ஒருத்தன் கேட்டவுடன் கொடுத்து விட்டாளே” என்றனர்.

“சரி! நீங்கள் எத்தனை பேர் ஒன்றாக வந்து பொற்காசுப் பானையைக் கேட்டீர்கள்?”

“நாங்கள் மூன்று பேரும்தான் கேட்டோம். ஒருவன்தான் எடுத்துக்கொண்டு ஓடி விட்டானே!”

“அந்த ஒருவனையும் சேர்த்து நான்கு பேராகப் பாட்டியிடம் வந்து கேளுங்கள். மூன்று பேர் கேட்டால் பாட்டியால் எப்படிக் கொடுக்க முடியும்? ஒப்பந்தப்படி நீங்கள் முதலில் நடந்து கொள்ளுங்கள்! அப்புறம் பாட்டியிடம் பானையை வாங்கிக் கொள்ளலாம்!”

தீர்ப்பைக் கேட்டதும் அரசர், ‘இந்த சின்னக் குறிப்பு நமக்குத் தெரியாமல் வீணாக பாட்டியைத் தண்டிக்க முற்பட்டேனே! ராமனுடைய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று பாராட்டினார். வியாபாரிகளைப் பார்த்து “முதலில் உங்கள் ஆளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என் ஒற்றர் படையையும் அனுப்புகிறேன். வீணாக பாட்டி மீது பழியைப் போடாதீர்கள். ராமனின் தீர்ப்புதான் என் தீர்ப்பு. நீங்கள் போகலாம்!” என்று அரசர் சொன்னார்.

பாட்டியைப் பார்த்து, “இந்தத் தள்ளாத வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கிறாய்! வழக்கு உனக்குப் பாதகமாகத் தான் இருந்தது. அதனால்தான் தண்டனை கொடுத்தேன். ஆனால், ராமன் வழக்கின் போக்கை நன்றாகத் தெரிந்து கொண்டு முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் தீர்ப்பு சொன்னான்! நீ தப்பிச்சே!” என்று சொல்லி பாட்டியை அனுப்பினார்.

பிறகு மக்களைப் பார்த்தார். அவர்கள் மலர்ந்த முகத்துடன் இருந்ததைக் கண்டார். பின்பு சொன்னார். “ராமன் சிறுவன்தான்! நீதியின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் பிறவிக் குணம் உள்ளது. ராமன் இனி சாதாரண ராமன் இல்லை. மரியாதைராமன். முக்கியமான வழக்குகளுக்கு ராமனுடைய ஆலோசனையைக் கேட்பேன்!” என்று சொல்லிப் பாராட்டினார். அன்பளிப்பாகப் பொற்காசுகளைக் கொடுத்தார்.

ராமன் நன்றி சொல்லிவிட்டுச் சொன்னான், “அரசே! பொதுமக்களே! இந்த வழக்கிலே முக்கியமாக குறிப்பிடுவது தோண்டி. தோண்டி என்றால் குடம் என்று பெயர். உங்கள் எல்லோருக்கும் தெரியும். தோண்டி என்றால் மண்ணைத் தோண்டி எடு என்று இன்னொரு பொருளும் உண்டு. கிணற்றடியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு தாம்புக் கயிறில் கட்ட வாளி அல்லது குடம் அல்லது தோண்டி தேவைப்படும்.

தப்பாகப் புரிந்து கொண்ட பாட்டி உறுதி செய்துகொள்ள மற்ற மூவரையும் ஒருமுறை கேட்டாள். ஆனால், மற்ற மூவரும் அசட்டை செய்தனர். சொல்லின் பொருளை இடத்திற்குத் தகுந்தாற்போல எடுத்துக்கொள்ள வேண்டும்.”

பாட்டிக்குப் போன உயிர் திரும்பியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.