புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
கிளியின் கதை

“அம்மா, சாப்பிட என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என குட்டிப் பூதங்கள் கேட்டன.

“குழந்தைகளே, அழகான இளைஞன் ஒருவனை கொண்டு வந்திருக்கிறேன். அவனை பசி தீர உண்டு மகிழுங்கள்” என்று பெண்ணாக வந்த பூதம் கூறிற்று.

பூதம் சொன்னதைக் கேட்ட உடனே இளவரசன் சந்தடி செய்யாமல் வெளியே வந்து குதிரை மீது ஏறி அமர்ந்து அரண்மனையை நோக்கி வேகமாக விரைந்தான். அரண்மனையை அடைந்ததும், தந்தை சிந்துபாத்தை சந்தித்து காட்டில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினான்.

தான் இட்ட கட்டளையை மீறி இளவரசனைத் தனியாக அனுப்பியதால்தானே இந்த மாதிரி பேராபத்தினை மகன் சந்திக்க நேர்ந்தது என, ஆத்திரமுற்று மன்னன் சிந்துபாத், அமைச்சனைக் கொன்றுவிடுமாறு கட்டளை யிட்டான்.

வெட்டப்பட்ட தலை பேசியது

மன்னன் யூனான் சொன்ன கதையைக் கேட்ட அமைச்சன், “மன்னர் அவர்களே, துறவி துபான் ஒரு சூன்யக்காரன் போல இருக்கிறான். மருந்தே கொடுக்காமல் உங்கள் நோயைக் குணப்படுத்திய துபான் இதேபோல மந்திர தந்திர சக்தியைப் பயன்படுத்தி உங்கள் ஆற்றலையே அழித்துப் போடக் கூடுமல்லவா. ஏன் தனது மந்திர சக்தியினால் கண்மூடித் திறப்பதற்குள் உங்கள் உயிரை வாங்கவும் இவனால் முடியுமல்லவா! அசாதாரண சக்தி படைத்த ஒரு மனிதனை முழுமையாக நம்ப முடியுமா?” என்று எடுத்துச் சொன்னான்.

அமைச்சன் கூறிய தகவல் மன்னன் யூனானின் மனத்தைக் குழப்பத் தொடங்கின.

“அமைச்சனே, நீ சொல்லும் விஷயங்களையும் ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. துறவி துபானை என்ன செய்வது நல்லதென்று உனக்குத் தோன்றுகிறது?” என மன்னன் வினவினான்.

“இதில் யோசிப்பதற்கு ஒற்றுமே இல்லை. துறவி துபானுக்கு மரண தண்டனை விதித்து உடனே அவன் தலையை வெட்டி வீழ்த்த ஏற்பாடு செய்யுங்கள்” என அமைச்சன் யோசனை சொன்னான்.

மன்னன் யூனான் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, துறவி துபானை அழைத்துவரச் சொன்னான். துபான் வந்து சேர்ந்ததும், “துறவியே, உமக்கு மரண தண்டனை விதித்திருக்கிறேன். நீர் எனது எதிரியான ஒரு மன்னனின் ஒற்றன் என்பதை விளங்கிக் கொண்டுவிட்டேன்.” என்றான் மன்னன் யூனான்.

“தீராத நோயைத் தீர்த்த உமக்கு நன்மை செய்ததற்கு இதுதான் நீர் செய்யும் பதில் உபகாரமா? உன்னுடைய நியாயமற்ற தீர்மானத்தை நீ மாற்றிக்கொள்ள மாட்டாய் என்று தெரிகிறது. என் உயிர் போவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்றாலும், நான் இறப்பதற்கு முன்னால் என் வீட்டுக்குச் சென்று அங்கே நான் சேமித்து வைத்திருக்கும் அருமையான மருத்துவ நூல்களை எடுத்து வந்து உமது நூல் நிலையத்தில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று துறவி துபான் கேட்டுக்கொண்டான்.

மன்னன் யூனான் துறவியின் வேண்டுகோளுக்கு இணங்கினான். துறவி வீட்டுக்குச் சென்று சில மருத்துவ நூல்களைக் கொண்டு வந்தான்.

துறவி துபான் ஒரு நூலை எடுத்து மன்னன் கையில் கொடுத்து, “என் நூல்களின் மகிமையை நீர் விளங்கிக் கொள்வதற்கு நான் ஒரு வாய்ப்பு தருகிறேன். எனது தலையை வெட்டிய பிறகு அதனை ஒரு தங்கத் தாம்பாளத்தில் வையுங்கள். பிறகு இந்த நூலின் முதல் மூன்று பக்கங்களைத் தள்ளி, நான்காவது பக்கத்தில் உள்ள விஷயத்தை வாசியும். அப்போது வெட்டப்பட்ட என் தலை உம்முடன் உரையாடும்” என்று கூறினான்.

பின்னர் துறவியின் தலை துண்டிக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மன்னன் வெட்டப்பட்ட துறவியின் தலையை தனக்கு எதிரே ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைக்குமாறு கூறினான்.

பிறகு துறவி கொடுத்த நூலைப் பிரித்துப் பக்கங்களைப் புரட்ட முயன்றான்.

பிரிக்க முடியாத அளவுக்கு நூலின் பக்கங்கள் ஒட்டி இருந்ததால் மன்னன் தன் விரலை நாக்கில் வைத்துத் தொட்டு நூலின் ஏடுகளில் தடவிப் பக்கங்களை பிரித்துப் பார்த்தான்.

நூலின் மூன்று பக்கங்களைத் தள்ளி, நான்காவது பக்கத்தைப் பார்த்தபோது, அங்கே ஏதும் எழுதப்பட்டிருக்கவில்லை.

“துறவி துபான் சொன்ன மாதிரி நூலின் நான்காவது பக்கத்தில் எதுவுமே எழுதப்பட்டி ருக்கவில்லையே” என மன்னன் யூனான் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான்.

அப்போது வெட்டுண்ட துபானின் தலை வாய் திறந்து, “மன்னனே, பொறுமையுடன் மேலும் சில பக்கங்களைப் புரட்டிப் பாரும்” என்றது.

வெட்டப்பட்ட தலை வாய் திறந்து பேசியதைக் கண்டு மன்னன் யூனானும், அங்கு குழுமியிருந்த மற்றவர்களும் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். மன்னன் யூனான் நாக்கில் கை வைத்து ஒட்டிக் கொண்டிருந்த நூலின் பக்கங்கள் மேலும் சிலவற்றை புரட்டினான். அங்கும் ஏதும் எழுதப்பட்டிருக்கவில்லை.

“மன்னரே, மேலும் சில பக்கங்களைப் புரட்டுங்கள்” என்று வெட்டப்பட்ட தலை கேட்டுக்கொண்டது.

யூனான் மன்னன் கிட்டத்தட்ட நூல் முழுவதையும் புரட்டிவிட்டான். எல்லாப் பகுதிகளும் வெற்றுத்தாள்களாகவே இருந்தன. அதைக் கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்த மன்னனை நோக்கி, வெட்டப்பட்ட துபானின் தலை அட்டகாசமாக சிரித்தது.

பிறகு தலை, “மன்னரே, நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதப்பட்டிருந்த விஷயம், உமது கண்களுக்குப் படவில்லை. ஆனாலும் எழுதப்பட்டிருந்த விஷயங்களின் பலனை நீர் அனுபவிக்க இருக்கிaர். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கொடிய நஞ்சு தடவப்பட்டிருக்கிறது. நீர் நாக்கில் விரலை வைத்து எச்சில் ஈரத்தில் ஒட்டப்பட்ட பக்கங்களைப் பிரித்தபோதல்லாம், கொடிய நஞ்சு உமது விரல் மூலமாக வாய்க்குச் சென்று, உமிழ் நீர் வழியாக உம் வயிற்றுக்குள் சென்று, அதன் சக்தியைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் சில விநாடிகளுக்குள் நீர் உயிரிழந்து சாயப் போகிaர்” என்று கூறிவிட்டு, துபானின் தலை மறுபடியும் கலகலவென நகைத்தது.

துபானின் தலை சொல்லி வாய் மூடுமுன் யூனான் மன்னனின் உடல் உயிரற்று சிம்மாசனத்திலிருந்து கீழே சாய்ந்துவிட்டது.

இவ்வளவு நேரமாக பூதத்திடம் இந்தக் கதையை கூறிவந்த செம்படவன், பூதத்தை நோக்கி, “பூதம், நான் உன்னைக் கடலில் போடாமல் விட்டு விட்டால் நீயும் அந்த யூனான் மன்னன், துறவியைக் கொன்றது போல என்னைக் கொன்றுவிடுவாய், ஆகவே நீ அடங்கியுள்ள இந்தச் சொம்பை நான் கடலில் எறிந்துவிடத் தான் போகிறேன்” என்றான்.

“என்னை நீ இந்த தடவை பெரிய மனது வைத்து விடுதலை செய்தால் நிச்சயமாக உன்னை நான் கொல்லமாட்டேன்” என்று பூதம் சத்தியம் செய்தது.

மனம் இளகிய செம்படவன் சொம்பின் மூடியைத் திறந்து பூதத்தை விடுதலை செய்தான். பூதம் செம்படவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் பின்னால் அவனை வரச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தது. செம்படவன் அதைப் பின் தொடர்ந்தான்.

பூதம் அவனை அழைத்துக் கொண்டு ஒரு மலைக்குச் சென்றது. மலையை ஒட்டி ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரி நீரில் பலவித வண்ணங்களுடன் கூடிய மீன்கள் காணப்பட்டன. வலையை வீசி மீன்களைப் பிடிக்குமாறு பூதம் செம்படவனைக் கேட்டுக் கொண்டது.

செம்படவன் வலையை வீசினான். நான்கு வெவ்வேறு வண்ணங்களுடன் கூடிய மீன்கள் வலையில் சிக்கின.

பூதம் செம்படவனை நோக்கி, “இந்த அதிசய மீன்களை மன்னனிடம் கொண்டு சென்று விற்றால் மன்னன் உனக்கு நிறைய பணம் கொடுப்பான். ஆனால் ஒரு நாளில் ஒரு தடவைக்கு மேல் இந்த ஏரியில் வலை வீசக் கூடாது” என்று கூறிவிட்டு பூதம் மறைந்து போய்விட்டது.

செம்படவன் மீன்களை எடுத்துக்கொண்டு மன்னனிடம் சென்று விற்று ஏராளமாக பணம் வாங்கிச் சென்றான். மன்னன் தான் வாங்கிய மீன்களைத் தன் அமைச்சரிடம் கொடுத்தான். அமைச்சன் அவைகளைச் சமையற்காரியிடம் அளித்துச் சமைக்கச் சொன்னான்.

சமையற்காரி அந்த மீன்களைக் கொன்று கழுவி வாணலியிலிட்டு வறுக்கத் தொடங்கினாள். அப்போது அருகேயிருந்த சுவர் வெடித்தது. அந்த வெடிப்பிலிருந்து அழகான இளம் பெண்ணொருத்தி தோன்றினாள்.

அவள் தன் கையிலிருந்த கழியினால் அடுப்பிலிருந்த வாணலியில் தட்டி, “மீன்களே! ஒப்பந்தப்படிதானே நடந்து வருகிaர்கள்” என்று கேட்டாள்.

வாணலியில் கொதித்துக் கொண்டிருந்த மீன்கள் “ஆமாம்” எனப் பதில் கூறின. அந்த அழகி தன் கையிலிருந்த கழியினால், வாணலியை அடுப்பினுள் கவிழ்த்தாள். அதிலிருந்த மீன்களெல்லாம் நெருப்பில் விழுந்தன. உடனே அந்தப் பெண் சுவர் வெடிப்பு வழியாக மறைந்து விட்டாள்.

அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமையற்காரி திகைப்பும், பீதியும் அடைந்து மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள். அவள் மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது மீன்களெல்லாம் அடுப்பு நெருப்பில் விழுந்து கருகிப் போயிருந்தன. சமையற்காரி உடனே அமைச்சனிடம் சென்று தான் கண்ட அதிசய நிகழ்ச்சி பற்றி அவனிடம் எடுத்துரைத்தாள். அமைச்சன் அந்த அதிசயம் பற்றி மன்னனிடம் சென்று தெரிவித்தான்.

மறுநாள் மன்னன் செம்படவனை வரவழைத்து மறுபடியும் நான்கு மீன்களைக் கொண்டு வருமாறு சொன்னான். செம்படவன் ஏரிக்குச் சென்று வலை வீசி நான்கு வண்ண மீன்களைக் கொண்டு வந்தான்.

மன்னனும், அமைச்சனும் மீன்களை சமையற்காரியிடம் கொடுத்து சமைக்குமாறு உத்தரவிட்டனர். மன்னனும், அமைச்சனும் அடுப்படியிலேயே காத்திருந்தனர்.

சமையற்காரி மீன்களைச் சமைக்கத் தொடங்கியதும் முன்பு நிகழ்ந்தது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. மன்னனும், அமைச்சனும் அந்த நிகழ்ச்சிகளைத் தங்கள் கண்களினாலேயே கண்டு பிரமிப்பு அடைந்தனர்.

மன்னன் செம்படவனை வரவழைத்து அந்த அதிசய மீன்களைப் பிடித்த இடத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். செம்படவனும், மன்னனை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினான். செம்படவனை அனுப்பிவிட்டு மன்னன் அந்த ஏரிக்கரையிலேயே தங்கிவிட்டான். அந்த ஏரியின் அதிசய மீன்களைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் ஊர் திரும்புவதில்லை என திடமுடிவு கொண்டான்.

மன்னன் அந்த ஏரிக் கரையின் மீது தொடர்ந்து நடந்து சென்றான். இவ்வாறு இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்த பின்னர் பிரமாண்டமாகக் காட்சி தந்த ஓர் அரண்மனை வாசலை அடைந்தான். அந்த அரண்மனை முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அங்கு மனித நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியே இருக்கவில்லை. வியப்படைந்தவனாக மன்னன் ஓரிடத்தில் அமர்ந்தான்.

அந்தச் சமயம் பார்த்து அரண்மனைக்குள்ளிருந்து சோகமயமான பாடலொன்று காற்றில் மிதந்து வந்தது. மன்னன் அரண்மனையை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான்.

உள்ளே படுக்கையறையில் அமர்ந்தவாறு ஓர் அழகிய இளைஞன் பாடிக்கொண்டிருந்தான். மன்னன் அரண்மனைக்குள் பிரவேசித்து அந்த இளைஞனை நெருங்கினான். அவனை நோக்கி, “அழகிய இளைஞனே, இந்த அரண்மனையில் நீ மட்டுமே தனியாக இருக்கிறாய் போலிருக்கிறதே! என்ன காரணம்?” என்று கேட்டான்.

மன்னனைக் கண்டதும் அந்த இளைஞன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ‘கோ’வெனக் கதறி அழுதவாறு, “என்னுடைய வரலாறு வினோதமானது.... துன்பமயமானது. நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறியவாறு இளைஞன் தன் மீது போர்த்திருந்த துணியை அகற்றினான்.

மன்னன் அடைந்த திகைப்பிற்கும், வியப்பிற்கும் அளவே இல்லை. அந்த இளைஞனுடைய இடுப்பிலிருந்து கால்வரை கல்லாக இருந்தது. இடுப்பிற்கு மேல் தலை உச்சிவரை அந்த இளைஞன்’ மற்ற மனிதர்களைப் போல இருந்தான்.

அந்த இளைஞன் தன் கதையைக் கூறத் தொடங்கினான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.