புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
நாவலர் பணிகள்

நாவலர் பணிகள்

இத்தொகையுடனன்றிச் சேரும் பொருளுக்கிசைய நடாத்தவும் விரும்பினார். ஆனால் நாவலர் எதிர்பார்ப்பதற்கு மாறாகப் பொருள் சேரவில்லை. இதனால் அவர் இந்நோக்கத்தினைக் கைவிட நேர்ந்தது.

நாவலர் “தமிழ் கற்றலின் கண்ணும் தமிழ்க் கல்வியையும் சைவசமயத்தையும் வளர்த்தலின் கண்ணும் ஊக்கங் கிளராவண்ணம் தடை விளைகின்றதே” என்று கவலையுற்ற நாட்களோ பல. அவர் தமிழ் கல்வியிலும் தமிழ்க்கல்வியையும் சைவசமயத்தையும் வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளிலும் போக்கிய காலத்தினை “இங்கிலிசிலே போக்கி உத்தியோகமும் செல்வமும் பெற்று” வாழ்வதை விரும்பவில்லை.

தமிழ்க் கல்வியும் சைவசமயமும் அபிவிருத்தி யாதற்குக் கருவிகள் முக்கிய தலந்தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரகாசஞ் செய்வித்தலுமேயாம் என்பதை நடைமுறையிற் செய்துகாட்ட முனைந்தார். 1865 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் சுப்பிரமணியதேசிகர் என்னும் உபயகுருமூர்த்திகள் சிதம்பரத்துக்கு எழுந்தருளினார். நாவலரின் பாடசாலையினைப் பார்வையிடுவதற்கு ஏற்கனவே ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

நாவலர் அப்பொழுது சென்னையில் இருந்தார். நாவலர் சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு விரைந்து சென்றமை தம் பாடசாலயின் நன்மையைக் கருதியன்று. “அவர்களுக்கு வித்தியாசாலையைக் காட்டி அவர்களாலே செயற்பாலனவற்றை வெகுஜன சமூகத்திலே பிரசங்கிக்கின் அவர்கள் இனியாயினும் தங்கள் தலங்களில் இப்படி வித்தியாசாலைகளைத் தாபித்துக் கல்வியறிவொ ழுக்கங்களையும் சமயத்தையும் வளர்த்தல் கூடுமே என்றெழுந்த பேராசையாலும், நான் சென்னபட்டணத்தை விடுத்தலால் எனக்கு விளையும் நட்டத்தை எட்டுணையேனும் நோக்காது, புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தேன்” என்ற கூற்று நாவலரின் உயர்ந்த நோக்கத்தினை விளக்கும்.

1871ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் யோன் கில்னர் (Rev.John Kilner) என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவமாணாக்கர் விபூதியணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாவலர் அப்பிள்ளைகளின் நன்மையினைக் கருதி ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையினை வண்ணார்பண்ணையில் 1872 ஆம் ஆண்டில் நிறுவினார். போதிய பணமில்லாமையாலும் பிள்ளைகள் பலர் சேராமையாலும் இவ்வாங்கிலப் பாடசாலை நான்காண்டுகளே நடைபெற்றது.

(அ. Jaffna News, March 1st, 1871.M.Ceylon Patriot, December 30, 1871 இ.த.கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டனம், காலயுத்தி தை) வயது முதிர்ந்தோர் கல்வியையும் (Adult Education) நாவலர் மறந்துவிடவில்லை. நல்லூர்க் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணைச்சிவன் கோவில், கைலாச பிள்ளையார் கோவில், தில்லைச்சிவன்கோவில், தாம் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலைகள் முதலிய இடங்களில் புராண விரிவுரைகளும் சமயப் பிரசங்கங்களும் நிகழ்த்தி முதியோர்க்கும் கல்வி வளர்ச்சியில் உபகாரியானார். அவரது சமயக் கல்வியறிவு பொதுமக்களிடையேயும் பரவியது.

எல்வெற்றியசு (Helvetius) மத்தியூ ஆர்னொல்டு (Mathew Arnold) தயானந்தா, அநகாரிக தர்மபால முதலிய கல்விச் சீர்திருத்தவாதிகளுக்கு நாவலர் தம் கல்வித் தொண்டில் இணையானவர். கல்வி பற்றி நாவலர் கூறுவனவற்றிற் சிலவற்றினை நோக்கின் இவ்வுண்மை வலியுறும்.

கல்வி பற்றிய கருத்துக்கள்

நாவலர் கல்விபற்றிக் கொண்ட கருத்துக்கள் யாவை? அவர் சைவசமயத்தினை வளர்ப்பதற்குத் தமிழ்க்கல்வி ஒரு கருவியெனக் கருதினார். “இவைகளெல் லாவற்றிற்குங் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்” (க. ஆறுமுகநாவலரின் விக்கியாபானம், விபவ சித் திரை மீ ஆறுமுகநாவலர் சரித்திரம், த. கைலாச பிள்ளை. வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், காலயுத்தி தை) “தமிழ் கற்கப் புகுஞ் சைவசமயிகள் முன்னர்ப் பாலபாடங்களைப் படித்துக் கொண்டு.,.....” (தமிழ்ப் புலமை: திருக்கோவையார், ஆறுமுகநாவலர் பதிப்பித்தது, முத்தமிழ் விளக்கவச்சுக்கூடம், சென்னப்பட்டணம், ரெளத்திரி ஐப்பசி மீ அநுபந்தம்) முதலிய கூற்றுக்கள் இதனை வலியுறுத்தும்.

கற்றற்குரிய நூல்கள்

கற்றற்குரிய நூல்களாவன அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு, இலக்கணம், கணக்கு முதலிய நூல்களுமாம். (கல்வி: மூன்றாம் பாலபாடம், க. ஆறுமுகநாவலர்)

கல்வியின் பயன்

கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக்குப்பயன் ஒழுக்கமுமாம்.

கற்றோர் கடமை

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன்மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனானக் கொள்ளல் வேண்டும். இவ்வியல் புடையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர்.

கல்வி முறைகள்

நாவலர் நன்மாணாக்கர் நல்லாசிரியரைத் தேடி அடையும் முறையையும் அவர்வழி ஒழுகி நூல்களை அணுகும் முறையையும் அவற்றினைக் கற்கவேண்டிய மரபினையும் தாம் வகுத்த கல்வி முறையில் விளக்குகின்றார். “இளமையிற் கல்” என்ற ஒளவைவாக்கினை உணர்ந்த நாவலர் இளம் மாணாக்கருக்குத் தம் மூன்றாம் பாலபாடத்திற் கற்கும் முறைகள் பற்றிப் போதித்தவற்றுட் பல இக்காலக் கல்வி முறைக்கும் பெரிதும் உகந்தனவாகக் காணப்படுகின்றன. அவை காலங்கடந்தும் கற்கப்படும் என்பதற்கு ஐயம் இல்லை. அவர் வாக்குகள் வருமாறு:

கல்வியை நல்லாசிரியரிடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக்கற்றல் வேண்டும். கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங் கேட்ட பொருள்களைப் பலதரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியரை அடுத்து அவைகளைக் குறைவுதீரக் கேட்டலும், ஒரு சாலை மாணாக்கர் பலருடனும் பல தரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும் அவர் வினாவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும், ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்குக் கடன்களாம்.

நூல்களிலே சில நாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லராதலும் அரிது. பல நாட் பழகினால் மந்தர்களாயினும் பலவற்றில் வல்லவராவார். பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும். (கல்வி மூன்றாம் பாலபாடம்)

முடிவுரை

நாவலர் காலத்தில் பண்டிதர், வித்துவான் முதலிய பட்டங்களை வழங்கும் பரீட்சைச் சபைகள் இயங்கவில்லை. இந் நிலையினைக் கண்டு நாவலர் “தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமையின் வாழுவாது பரீட்சை செய்து, அதில் வல்லவர்களென நன்கு மதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமும் கொடுக்கும் சபையார் இக்காலத்தில் இல்லாமையால், தமிழ்க் கல்வியில் வல்லவர்களும் வல்லவர்களல்லாதவர்களும் ஒப்ப மதிக்கப்படுகிறார்கள்” (தமிழ்ப் புலமை: திருக்கோவையார், ஆறுமுகநாவலர் பதிப்பித்தது. முத்தமிழ் விளக்கவச்சுக் கூடம், சென்னபட்டணம், ரெளத்திரி, ஐப்பசி - அநுபந்தம்) என வருந்திக் குறிப்பிட்டார்.

“நீ சமஸ்கிருத பாடம் ஒப்பித்து விட்டாயா?” (முதலாம் பாலபாடம், 23ஆம் பாடம்) என்றற்றொடக்கத்து வாக்கியங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, நாவலர் வகுத்த கல்விமுறையை நோக்கில் அறிவியற் கலைகளுக்கு அப் பாடத்திட்டத்தில் இடமிருக்கவில்லையென்றும், மாணாக்கர் பாடங்களை மனனஞ்செய்து ஒப்பிக்கும் கல்விமுறையே அவர் பாடசாலையில் நிலவியது என்றும் நாவலர் கல்வி கற்பிக்க வகுத்த கல்வி விதிகளிலும் முறைகளிலும் குறைபாடுகளும் இருந்தன என்றும் சிலர் கருதக்கூடும்.

ஆனால் நாம் நாவலரின் நோக்கத்தினையும் அக்காலத்திலிருந்த வசதிகளையும் கல்வி முறைகளையும் சீர்தூக்கி ஆராயும்பொழுது இக்குறைபாடுகளைவிடப் பல நிறைவுகளையே அவர் வகுத்த கல்வித்திட்டத்திற் காண்கின்றோம். பல யாண்டுகளாக மாணாக்கர்க்கு உண்டி, நூல், கல்வி முதலியன வழங்கியும் ஆசிரியர்களை வேதனமின்றிக் கடமையாற்றச் செய்தும், ஊக்கத்துடன் பல நூல்களை அச்சிட்டும், பாடசாலைகளை நிறுவியும் அவற்றினைப் பலவிடங்களில் ஆங்காங்கு நிறுவும்படி பலரைத் தூண்டியும், பாடநூல்களுக்கு உரை, வசனம் சூசனம் ஆகியன எழுதியும், புதிய நூல்களை எழுதியும், பல சமஸ்கிருதத்திலிருந்த சாத்திர நூல்களைத் தமிழிற் சமய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உபகாரமாகுமாறு எழுதி அச்சிற் பதிப்பித்தும் உழைத்த நாவலரை நாம் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்தால் மறக்க முடியுமா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.