புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
சுவாமி விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர்

விபுலாநந்தரின் கலை, இலக்கியப் பங்களிப்பு

கலை இலக்கியங்கள் சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரைகள் முதல் அவரது ஆராய்வின் கொடுமுடி எனக் கருதப்படும் யாழ்நூல் வரை தொகுத்து நோக்கின் உலகக் கலை இலக்கியங்களைத் தமிழருக்கு அறிமுகம் செய்வதும் இரண்டிற்குமிடையே காணப்படுகின்ற அபேதத் தன்மைகளை இனம் காட்டுவதும் உலக, கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கித்தமிழரை முன் தள்ளுவதும் அதே நேரம் தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச்சியை உணர்த்துவதுமே அவர் நோக்கங்களாயிருந்தன.

மதுரையில் நிகழ்ந்த முத்தமிழ் மாநாட்டின் இயற்பகுதிக்குத் தலைமை தாங்கி அடிகளார் உரையாற்றும்போது (01.08.1942)

விபுலாநந்தர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசியவாதம் வளர்ந்து வந்தமை முன்னரே குறிப்பிட்ட ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியம் பேசியோர் இருநிலைக்குள் அடங்கினர். ஒரு சாரார் இந்திய நாகரிகத்தின் ஒரு கூறாகவே தமிழ் நாகரிகத்தைக் கண்டனர். நீலகண்டசாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் இவ்வகையினர். இன்னொரு சாரார் தமிழர் நாகரிகத்தினையே இந்தியாவின் புராதன நாகரிகமாகக் கொண்டனர். பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கர், வீ. கனகசபைப்பிள்ள, ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் இவ்வகையினர், ஆனால் இரு சாராருமே தம்மால் முடிந்தளவு தமிழ்த் தொண்டு புரிந்தோரே.

தமிழரின் தனித்துவத்தை வெளிக் கொணர மேற்சொன்ன இரு சாராருமே முயன்ற இந்த வேளையிலே ஒவ்வொரு துறையிலும் தமிழ் வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஏட்டிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரும் தமிழருக்குரிய தத்துவம் எனக் கூறிச் சைவ சித்தாந்தம் அதனோடு ஒத்த முருக வழிபாடு என்பதை அறிமுகம் செய்வதில் மறைமலை அடிகள், திரு. வி. க. முதலியோரும் தமிழருக்குரித்தான நாடகத்தைக் காணுதலில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள் போன்றோரும் தமிழரின் இசையைக் காண்பதில் ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலைச் செட்டியார் போன்றோரும் ஈடுபட்டனர். ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகைய பின்னணியிலே தான் அரங்கிற்கு வருகிறார் விபுலாநந்தர். அவரும் தமிழரின் தனித்துவம் பற்றி, தமிழ்க்கலை இலக்கியம் பற்றித் தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு வகையில் அவரது கலை இலக்கியப் பணிகள் அன்றைய காலத்தின் தேவையுமாகும். அடிகளாரின் கலை பற்றிய அவரது நோக்கினையும் பணிகளையும் பின்வரும் மூன்று தலையங்கங்களின் கீழ் நோக்குதல் பயனுடையதாம்.

கலைகள் பற்றி நோக்கும் பணியும்:

கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய அவரது பின்வரும் கட்டுரைகள் உதவுகின்றன: நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரக் கலைச் செல்வம், மேற்றிசைச் செல்வம், ஐயமும் அழகும், உண்மையும் வடிவும், நிலவும் பொழிலும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் நகரும்.

மட்டக்களப்பு காரைதீவில் முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள அடிகளார் பிறந்த இல்லம்

கலைவரலாறு இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு பாட நெறியாகியுள்ளது. தமிழர்களின் கலை வரலாறு இன்னும் ஒழுங்காக எழுதப்படவேயில்லை. பூர்வாங்க முயற்சிகள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன. பேர்ஸி பிறவுண், ஸ்டெலா காமேஷ், சிம்மர், ஆனந்தக்குமாரசுவாமி ஆகியோர் இந்தியக் கலை வரலாற்றின் பல அம்சங்களை விரிவாக எழுதியுள்ளனர். இந்நிலையில் தமிழர்கலை வரலாற்றை எழுத முயன்றோருக்கு விபுலாநந்த அடிகளார் உலகக் கலை வரலாற்றை ‘நாகரிக வரலாறு’ எனும் கட்டுரையில் தொட்டுக் காட்டிச் செல்கின்றார்.

இன்று கலை வரலாறு, சரித்திரத்திற்கு முந்திய கலை வரலாறு, எகிப்திய கலை வரலாறு, கிரேக்க கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலைவரலாறு, மத்திய கால கலை வரலாறு, மறுமலர்ச்சிக் கால கலை வரலாறு, நவீன கலை வரலாறு எனப்பாகுபடுத்திப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏறத்தாழ இதே வரலாற்று அணுகு முறையைச் சுவாமிகள் கையாளுகிறார். பண்டைய நாகரிகமான பாரசீகம், அசிரியும், பபிலோனியா ஆகியவற்றின் நாகரிகங்கள், கலைகள் எடுத்துக் கூறப்படுகின்றன.

‘எகிப்திய நாகரிகம்’ எனும் கட்டுரையில் எகிப்தியரின் பிரமிட்டுக்கள் பற்றிக் கூறுகிறார். அந்நாகரிக காலத்தை கி.மு. 3335 (கலியுக ஆரம்பத்திற்கு 234 வருடத்திற்குமுன்) எனக்கணிப்பிட்டு அக்காலத்தில் கட்டப்பட்ட Lopero Hounit Temple at the Head of the Lake இனை குளத்தலை முற்றத்துக் கோயில் என அழைத்து அக்கோயிலின் அழகை பிரமிட்டுடன் ஒப்பிடுகிறார்.

மொசப்படேமியாவில் நடைபெற்ற அகழ்வாராய்வின் போது கண்டெடுத்ததும், பாக்தாத் நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுமான யாழ்க்கருவி பற்றிக் குறிப்பிடுகிறார். இக்கருவி பின்னாளில் இவர் தமிழரின் பண்டைய யாழ்களை அமைக்கும் முயற்சிக்கு உந்துதலை அளித்திருக்கலாம். 1922ல் எகிப்தில் துட்டங்காமனின் பிரமிட் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டமை உலகக் கலை வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதனைத் தனது கட்டுரையிற் குறிப்பிடும் அடிகளார் அங்கு காணப்பட்ட அழகு பொருந்திய கருங்காலிக் கட்டில்களையும் நவமணி இழைத்த ஆபரணங்களையும்பற்றிக் கூறுகிறார்.

எகிப்தினையடுத்து கிரேக்க நாகரிகமும் கலை வளமும் கூறும் அடிகளார், கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாக உருவான றோம நாகரிகம் பற்றியும் மத்திய கால நாகரிகம் பற்றியும் குறிப்பிடுகிறார். இக்கட்டுரைகளில் இரண்டு அம்சங்களைக் காண முடிகிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைத்து சுமேரியர் - தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமிழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த்துதல்.

அடிகளாரின் பிறப்புச் சாட்சிப்பத்திரம்

தமிழர்கள், உலகக் கலை வரலாற்றை, நாகரிகத்தை அறிய வேண்டும். பண்டைய நாகரிகங்களுடன் தாமும் தொடர்பு உடையோர் என்று அறிய வேண்டும், தமக்கென்று தனித்துவமான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கு அவருக்கு 20 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது.

இந்ந நோக்கு அவரது முதிர்ந்த வயதுகளில் மேலும் வளர்ந்து முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. அம்முதிர்ச்சியின் உதாரணங்களாகத் திகழ்வனவே 1942ல் மதுரையில் இயற்றதமிழ் மாநாட்டுக்கு தலைமை தாங்கி, அவர் ஆற்றிய உரையும் 1947ல் அவர் வெளியிட்ட யாழ்நூலும்.

மேலை நாட்டவரது செல்வப் பெருக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்து விபுலாநந்தர் அவர்களது ‘அரசியல் முறையும் புலநெறி வழக்கமும் கலை பயில்மையும், பொருள் செயல் வகையும்’ தான் அதற்குக் காரணம் என்று கூறி அவர்களின் கலை வரலாற்றை, நாகரிகவரலாற்றைத் தமிழருக்குணர்த்துவதன் மூலம் தமிழரையும் முன்னேற்றலாம் எனக் கருதினார்.

அந்நிய நாகரிகம் என்று ஐரோப்பியக் கலைகளை ஒதுக்கினா ரல்லர் அடிகள். அங்கிருந்து நல்லன பெற்று தமிழர் கலைகள் தழைக்க வேண்டும் என்ற கோட்பாடே விபுலாநந்தரின் கோட்பாடாயிற்று. பரந்த உலகப் பின்னணியில் தமிழர் கலைகளை இனம் காண்பதும் அதை வளர்ப்பதும் அவரது பிரதான கலை நோக்கம் எனலாம்.

சிற்பம், ஓவியம், கட்டடக்கலைகள் பற்றி அவர் கூறிச் செல்லும் கருத்துக்கள் இக்கலைகள் பால் அவருக்கிருந்த அறிவைக் காட்டும். வண்ணமும் வடிவும், ஐயமும் அழகும் என்ற கட்டுரைகள் இதற்குச் சான்றுகளாம். ஓவியத்தை இரசித்தல் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.

‘நவிலும் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும்

பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையாளர்

தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் அறிவுடையோனுக்கு

உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவியம்”

வெறும் காட்சியாக மாத்திரம் ஓவியத்தை இரசிக்க முடியுமா? காட்சிக்குப் பின்னாலுள்ள ஓவியனின் உள்ளத்தைக் காண முயல வேண்டுமென்பது ஓவிய ரசிப்பின் இன்றைய கொள்கையாகும். இதுவே இந்திய மரபின் ரசக் கொள்கையுமாகும். ஐயமும் அழகும் என்ற வியாசத்தில் வரும் “காட்சியில் ஐயம் மிக்கது. ஐயமே உண்மைப் பொருளை உணர்த்தும்” என்ற கூற்றில் கலை ரசிப்பின் நவீன நோக்குகள் விபுலாநந்தரில் தொனிப்பதைக் காண முடிகிறது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில், சிகிரியாக் குகை, அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் சிற்பம், ஓவியம் பற்றி அடிகளார் குறித்துச் சொல்வது அவரது சிற்ப, ஓவிய ஈடுபாட்டிற்கு உதாரணங்களாகும். இவ்வகைச்சிற்ப. ஓவியங்களையும், அவற்றை ரசிக்கும் முறையினையும் தமிழ் மக்களுக்கு ஊட்டுதலும் அடிகளாரின் கலை நோக்கினுள் அடங்கும்.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.