புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
சின்னஞ்சிறு கைதகள்

அந்தப் பட்டிக்காட்டு மனிதன் கெடியாரக் கடைக்குள் நுழைந்தபோது, முதலாளி வெளியே போயிருந்தான். அவனுடைய பிள்ளைதான் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கு மலிவான கெடியாரமாக ஒன்று வேண்டும் காண்பிக்கிaரா?” என்று கேட்டாள் அந்த மனிதன்.

முதலாளியின் பிள்ளை அவனை அழைத்துக் கொண்டு போய், ஒரு கண்ணாடி பீரோவைத் திறந்தான். அதற்குள் மூன்று வரிசைகள் கெடியாரங்கள் இருந்தன. ஒரு வரிசையிலிருந்த கெடிகாரங்கள் ஒவ்வொன்றும் இரண்டு ரூபாய் என்றும், அடுத்த வரிசையில் ஐந்து ரூபாய் கெடியாரங்கள் என்றும், மூன்றாம் வரிசையில் பத்து ரூபாய் கெடியாரங்கள் என்றும் பையன் சொன்னான்.

அந்த மனிதன் ஒவ்வொரு ரகத்திலும் ஒவ்வொரு கெடியாரத்தைப் பார்வையிட்டான். பிறகு அவைகளில் ஒன்றும் பிடிக்காதவன் போல், சுவரில் மேலே மாட்டியிருந்த கெடியாரங்களை நோக்கினான். முதலாளியின் மகனும் திரும்பி அந்த மனிதன் பார்த்த இடத்தை நோக்கினான்.

இந்தச் சமயத்தில், அந்தப் பட்டிக்காட்டான். இரண்டு ரூபாய் கெடியாராம் ஒன்றைப் பத்து ரூபாய் கெடியாரம் இருந்த வரிசையில் வைத்து விட்டு, பத்து ரூபாய் கெடியாரம் ஒன்றை இரண்டு ரூபாய் வரிசையில் மாற்றி வைத்து விட்டான். பிறகு, வேறு எதையெல்லாமோ பார்ப்பது போல் கடை முழுவதும் பார்த்தான்; கடைசியில் திரும்பவும் கெடியார பீரோவிடம் வந்து நின்றான். இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு, தான் மாற்றி வைத்து பத்து ரூபாய் கெடியாரத்தைப் பார்த்து எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தான்.

அவன் போய்ச் சற்று நேரத்துக்குப் பிறகுதான் முதலாளியின் பிள்ளைக்கு அவன் செய்த சூழ்ச்சி தெரிய வந்தது. மிகவும் குழப்பம் அடைந்தவனாக, தந்தை வந்தவுடன் நடந்த விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டான்.

முதலாளி சிரித்தான்: “வருத்தப்படாதே! அதனால் பரவாயில்லை. அந்த மூன்று வரிசைகளிலுள்ள கெடியாரங்களும் நான் ஒரே விலைக்குத்தான் வாங்கினேன். ஒவ்வொன்றும் ஒன்றரை ரூபாய். ஆகையால் இப்போது நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை?” என்றான். பிறகு ஆச்சரியத்துடன், “அது கிடக்கட்டும்! போய் விட்டுப் போகிறது. இப்படி நடுக்கடைத்தெருவில் வந்து மோசம் செய்யும் ஆசாமி எவ்வளவு அயோக்யனாக இருக்க வேண்டும்?” என்றான்.

ஜகதீசய்யருக்கு ட்யூஷனிலேயே மாதம் முப்பது ரூபாய்க்கு மேல் வரும்படி வருகிறது. எட்டுப் பையன்களை வரிசையாக உட்கார்த்தி வைத்துக்கொண்டு, புத்திமதிகள் சொல்லிக் கொடுக்கும் அழகைப் பார்த்த பேரெல்லாம் மெச்சிக் கொள்வார்கள். ஒரு நாள் அவர் மாணாக்கர்களுக்குச் செட்டும் சிக்கனமுமாக இருக்கும் முறைகளைப் பற்றி “லெக்சர்” செய்தார்.

“செட்டாக வரும்படிக்குள் செலவு செய்வதைப் போல் சிறந்த முறை வேறெதுவும் இல்லை. ஒருவன் கடனில் விழுந்து விட்டால், பிறகு மீள்வதற்கு இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. கேளுங்கள்; அவன் கடனையும் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கிறது; சொந்தச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பெருமுயற்சி வேண்டும் அல்லவா?

“இரண்டாவதாக, கடன் வாங்கும் வழக்கம் சோம்பேறித்தனத்துக்கு அறிகுறியாக இருக்கிறது. தானே சம்பாதித்துக் கொள்ள வசதி இருக்கும் போதே, கடன் வாங்கும் பழக்க முள்ளவர்கள், சம்பாதித்துக் கொள்ளாமல் இலகுவாகக் கை மாற்று வாங்கப் போவார்கள். இது சோம்பலை வளர்க்குமா? வளர்க்காதா?

“கடைசியாக, கடன் வாங்குவதால், நம் கெளரவம் குறைகிறது. அதைத்திருப்பிக் கொடுக்கச் சால்ஜாப்புகள் சொல்லும் போதே, மானமே போய் விடுகிறது. சரியான காலத்தில் வாங்கின கடனைக் கொடுக்காமல் இருப்பதால் ஒருவன் வார்த்தை தவறியவனாகிறான். அப்புறம் கடனைக் கொடுத்து விட்டுச் சால்ஜாப்புக் கேட்டுக் கொள்பவன் எவ்வளவு இழிவாக நினைப்பான்!”

இந்தச் சமயம் அறைக்குள் ஒரு பையன் வந்து நின்றான். “மளிகைக்கடை முருகேசம் செட்டியார் பார்த்துவரச் சொன்னாரு. மளிகை பாக்கி நாலு மாசமா நின்னு போயிடுத்து, மேலேயும் கொடுத்துண்டு வர்ரோம். பணம் கொடுத்தாலொழிய இனிமே சாமான் கொடுக்கு மாட்டேன்னு சொல்லச் சொன்னாரு” என்றான்.

“சரிதான், அப்பா! கொஞ்சம் பொறு! மாதக் கடைசியிலே எப்படியாவது பார்த்துக்கொடுக்கிறேன்!” என்றார் ஐயர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.