புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
கண்ணதாசன் நினைவில் கால்நூற்றாண்டு காலமாக விழா!

கண்ணதாசன் நினைவில் கால்நூற்றாண்டு காலமாக விழா!

அலைகடலுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்கள் வாழும் எந்த இடத்திலும் நடக்காத நிகழ்வொன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்!

எட்டாம் வகுப்பு மட்டுமே பாடசாலை செல்ல முடிந்த முத்தையா என்கிற ஒரு க (ல்)லாநிதி கண்ணதாசன் நினைவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாய்த் தொடர்ந்து அங்கே விழா எடுத்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் முப்பதில் 26ஆம் ஆண்டு முழுநாள் விழாவாக இராஜா லாவுட் ஜாலானில் (வீதி) அமைந்துள்ள நகராண்மைக்கழக மண்டபத்தில் (டவுன் நூல்) நடத்தினார்கள். மண்டபம் கொள்ளாத கூட்டம். ஜமாய்த்து விட்டார்கள்.

ஆரம்ப காலங்களில் கண்ணதாசனின் தாசனு தாசர்களான மலேசிய முன்னணிக் கலைஞர்கள் எலன் நந்தா, கரு. கார்த்திக், வெ.தங்கமணி என்போர் விடாக்கண்டர்கள் கொடாக் கண்டர்களாக நடத்த ஆரம்பித்து அதிலொருவர் (எலன் கந்தா பதினொரு) ஆண்டுகளுக்கு முன் இயற்கையெய்த மற்றிருவரும் தொடர்ந்து முரசு கொட்டுகின்றனர்.

அதுவும் வெறும் அமைப்பாக அல்லாமல், கண்ணதாசன் பெயரில் ஒரு நம்பிக்கை நிதியமே (டிரஸ்ட்) உருவாக்கப்பட்டு நடக்கிறது. அதன் தலைவராக இன்றைய புது ஆட்சியன் இளைஞர், மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன் திகழ்கிறார்.

பிறகென்ன, கவியாசர் கண்ணதாசன் தமது மறைவின் பின்னும் மலேசிய மண்ணில் மணிச்சுடராக வெளிச்சமிட்ட வண்ணமுள்ளார்.

இதுவரை ஒவ்வொரு ஆண்டிலும் கவிஞரின் பாடல்களை மட்டும் மையப்படுத்தி நடந்து வந்த விழாவில் இம்முறை ஒரு புதுமையாக அவர் ஆக்கிய இலக்கிய நூல்களிலிருந்து நான்கு சிறந்த படைப்புக்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிய விளக்க உரைகளையும் கருத்துகளையும் கூற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, விசேடமாக தமிழகம் திருவாரூர் நகைச்சுவை அரசு, சண்முக வடிவேல் கன்னியாகுமரிக் கவிஞர் நீலம் மதுமயன் சென்னை இலக்கியச் சுடர், வழக்கறிஞர் த.இராமலிங்கம் ஆகியோருடன் தமிழகக் கண்ணதாசன் மன்றத் தலைவி பேராசிரியர் திருமதி சரஸ்வதி இராமநாதனும் வருகை புரிந்திருந்தனர்.

‘வனவாசம்’ நூலுக்கு ஆய்வுரை ஆற்றுவதன் மூலம் ஆரம்பத்திலேயே நிகழ்வுகளைக் களைகட்டச் செய்த திருவாரூர் சண்முக வடிவேல், கண்ணதாசன் சுதந்திரமான மனிதன். அவரை யாரும் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியாது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களைக் கூட தனது பாடலின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர் கவலை இல்லாத மனிதன் ‘படத்தை எடுத்தேன். அப்புறம் தான் கவலையே வந்தது என்றார் கவிஞர்.

அரசியல் வாழ்க்கையில் அவர் பட்ட துன்பங்களை, சோதனைகளை தெளிவாக வனவாசத்தில் பதித்திருக்கிறார். அதைப்படித்தால் அவரது தனித்துவம் புரியும் என்று எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, அட்டனத்தி ஆதிமந்தி காவியத்தைப் பற்றி கருத்துரைத்த கவிஞர் நீலம் மதுமயன், காதலில் தோற்றவர் வென்றார். வென்றவர் தோற்றார் எனும் கருத்தைக் கொண்டே இக்காவியம் புனையப்பட்டுள்ளது. இதன் சிறப்புப் படைப்பைப் புரிந்து கொண்ட திரைப்படத்துறையினர் எம்.ஜி.ஆர்.நடிக்க மன்னாதி மன்னன் படத்தை வழங்கினர் என்றார்.

அடுத்து ‘மாங்கனி’ எனும் காப்பியத்தைப் பற்றி கருத்துரைத்த தமிழகக் கண்ணதாசன் மன்றத் தலைவி பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், கண்ணதாசன் காவியத் தாயின் இளைய புதல்வன். தனது 26 ஆம் வயதிலேயே தமிழ்த் தாகத்தின் பிரதிபலிப்பால் அவர் எழுதிய முதல் காப்பியமாக ‘மாங்கனி’ திகழ்கிறது. இதை எழுதி முடிக்க அவருக்கு ஆறு மணிநேரகால அவகாசமே அவசியப்பட்டது. மொத்தம் நாற்பது பகுதிகள் உள்ளன என்ற அரிய தகவலைத் தெரிவித்தார்.

இறுதியாக ‘தைப்பாவை’ என்னும் இலக்கிய நூலை ஆய்வு செய்த சென்னை வழக்கறிஞர் ராமலிங்கம், ‘கண்ணதாசன் கற்றது எட்டாம் வகுப்பு வரையே. ஆனால் அவரது தமிழ் இனிமையையும், புதுமையையும் உலகமே இன்று போற்றி இரசிக்கிறது என்றால் அந்தத் தமிழறிவு அவருக்கு எப்படி கிடைத்திருக்கும் என்பது இது நாள் வரை ஒரு புதிராகவே உள்ளது’ என்ற அவர், தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘திருப்பாவையையும், திருவெம்பாவையையும் மனத்தில் கொண்டு அவர் புனைந்திருப்பதே இந்தத் ‘தைப்பாவை’ நூலாகும். தை மாத காலத்தில் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப் பெண்ணின் முப்பது நாள் உணர்வுகளை செந்தமிழில் பாடியுள்ளார் கவிஞர்” என்றுரைத்தார்.

இதன்பின் விழாவின் முதல் அங்கம் முடிவுக்கு வந்து, அனைவருக்கும் நண்பகல் உணவு அறுசுவையாக வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகல் இரண்டரைக்கு தொடங்கிய இரண்டாம் அங்கம் கெளரவிப்பு வைபவத்துடன் ஆரம்பித்தது.

கண்ணதாசன் அறவாரியத்தினர் அவருக்கு விழா எடுப்பது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கலை - இலக்கிய - ஆன்மிக சீலர்களைக் கெளரவிப்பதையும் இலட்சியமாகக் கொண்டு செயல்படுவதை அன்று கண்ணெதிரே கண்டுகளிக்க முடிந்தது.

நாட்டின் மூத்த கலைஞர் பாடகி புஸ்பா ராமசாமி, ஆய்வெழுத்தாளர், நாவலாசிரியர் பா.சந்திரகாந்தம், மூத்த நாடக நடிகர், சந்திரபோஸ், ஓவியர் லெட்சுமணன் என்ற லேனா சமூக ஆர்வலர், சைவமணி ஆதி பெருமாள் ஆகியோரை வாழும்பொழுதே வாழ்த்திப் பொற்கிழி வழங்கிச் சிறப்புச் செய்தனர்.

அதன் பின்னர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம், கண்ணதாசனை கவியரசு எனப் போற்றுவதற்குக் காரணமாக அமைந்தது திரையிசைப் பாடல்களா, தனிப்பாடல்களா எனும் தலைப்பில் பெரும் விவாதப் பொருளாகத் திகழ்ந்தது.

நல்ல நகைச் சுவைக்கும் பஞ்சமில்லாமல், சிறப்பான சீரிய கருத்துக்களுக்கும் குறைவில்லாமல் கலகலப்பாக சுமார் மூன்று மணி நேரம் மலேசியத் தமிழர்களை அந்த நகரசபை மண்டபத்தில் அமர்த்தி வைத்திருந்தது.

மாலை ஆறு மணிக்கு அவர்களை உடனேயே வழியனுப்பி வைக்காமல் நல்ல சிற்றுண்டி கொடுத்து, தேநீர் - கோப்பி வழங்கி அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம் எனப் பிரியாவிடை கொடுத்தார்கள்.

முழு நிகழ்வுகளையும் மலேசிய மூத்த கலைஞரும், அறிவிப்பாளருமான தங்கமணியும், மின்னல் பண்பலைப் புகழ் பொன் கோகிலமும் அழகுத் தமிழில் அற்புதமாகத் தொகுத்து வழங்கினார்கள்.

அவர்களைப் பாராட்டியவாறே நானும் நிழலும் மஸ்ஜித் ஜாமேக் தரிப்படத்தில் தொடர்வண்டியில் சொகுசுப் பயணத்தைத் தொடங்கினோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.