புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
அர்ப்பணிப்புடனான சிருஷ்டியே கலை நாட்டியத்தால் எய்த முடியாதது வேறில்லை

அர்ப்பணிப்புடனான சிருஷ்டியே கலை நாட்டியத்தால் எய்த முடியாதது வேறில்லை

தலைசிறந்த நாட்டிய மேதை கலாசூரி வாசுகியின் நினைவலைகள் கலை சிருஷ்டி என்பது தியானம், மந்திரம், சாதனையுடன் தொடர்புடையது. மன ஒருமைப்பாடு, புலனடக்கம், ஆழ்ந்த தியானம் போன்ற அர்ப்பணிப்போடான சிருஷ்டி கர்த்தவால் தான் காவியங்கள், காப்பியங்களுக்கு உயிரோட்ட கலையம் சத்தைக் கொடுக்க முடிகின்றது.

தமது பக்தி பிரார்த்தனையுடன் கலை, பண்பாடு, கலாசார விழுமியங்களையும் தமது வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்து பல தெய்வாம்சம் பொருந்திய கலைவடிவங்களை நாட்டிய நாடகமாகவும், நடனமாகவும் வாரி வழங்கி அவையோரினதும், அகிலத்தினரினதும் பாராட்டைப் பெற்று நடனத்திலகமாகத் திகழும் கலாசூரி வாசுகி ஜெகதிஸ்வரனின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கிறேன்.

பெற்றோரைப் பற்றி...

தெய்வீகத் தத்துவத்தையும், பக்தி மார்க்கத்தையும், முத்திக்கு வழியையும் விளக்கிக் காட்டும் பொருள் பதிந்த மிருதங்க வித்வானாக திகழ்ந்தவர் என் தந்தை கே.

சண்முகப்பிள்ளை. ‘ரேடியோ சிலோன்’ காலத்து வானொலி புகழ் கலைஞர் இவர். மரபு வழிக்கலை வடிவங்களின் சமயம், சமூகம் சார்ந்த மனதைப் பரவசப்படுத்தும் ஆற்றல்மிக்க நடனத்தையும் இசையும் போதிக்கும் ஆசிரியையாகத் திகழ்ந்தவர் என் தாயார் விஜயலட்சமி.

நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்ததிலிருந்து தாள நய அபிநயங்கள் அனைத்தும் என் பேச்சு, மூச்சு, சொல்லாகவே இருந்தது. அதுவே என் இரத்த பந்தமாகி விட்டது.


குரு பத்மஸ்ரீ அடையார் கே. லக்ஷ்மணுடன்...

பால்ய பருவத்தில் பதியப்பட்ட கலையம்சமே அதனுட் பொருளை அகத்தே பதியச் செய்து அந்த அகப்படத்தை பாத்திரத்துடன் இனங்கண்டு அதன் பண்புகளை ஒப்பிட்டு நடனங்களை ஒப்புவிக்க முடிகிறது.

அதுவே உயிரோட்டம் பெறுகிறது. அவையோரை ஈர்க்கிறது. என்னுடைய படைப்புக்களின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் கலையம்சமூம் தெய்வாம்சமும் பொருந்திய என் பெற்றோர்களே.

பாடசாலை பால்ய காலத்தைப்பற்றி சொல்லுங்கள்....

கொழும்பு வெள்ளவத்தை சென் லோரன்ஸ் பாடசாலைதான் என் ஆரம்பக்கல்வி முதல் உயர்தர வகுப்புவரை. எனக்கு இரண்டரை வயதில் ஏடுதுடக்கல் வித்யாரம்பம் செய்து வைத்தது என் தாயார்தான்.


குரு பூர்ணிமா வைபவத்தில் சாயிபாபாவின் ஆசீர்வாதம்...

எழுத்தோடு என் குடும்ப கலையார்வ இரத்த பந்தமான நடனமும் அன்றே ஆரம்பமாகி விட்டது. மூன்று வயதிலிருந்தே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்ததால் பாடசாலை வைபவங்களிலெல்லாம் பரிணமிக்கத் தொடங்கினேன்.

அம்மா நடன ஆசிரியை, அப்பா மிருதங்க வித்துவான். தாளமும் நடனமும் என்னுள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் நான் பொருளியல் பட்டதாரியாக வேண்டுமென்ற அவாவிலேயே இருந்தேன்.

உயர்தர வகுப்பை நிறைவு செய்து கொண்டிருந்த நான், அவ்வேளை தமிழகத்தில் தங்கி விஞ்ஞான பட்டதாரி படிப்பை மேற்கொண்டிருந்த எனது சகோதரர் விஸ்வ நாதனுடன் இணைந்து பொருளியல் படிப்பை மேற்கொள்ள நானும் தமிழகம் சென்றேன்.

ஆனால் அங்கே பாரத மண்ணுக்கே உரிய பரதக் கலைக்கு மனம்மாறி விட்டது. அதுவே எனக்கு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. தில்லை அம்பல நடராஜாவே அருளியதுபோல் எனக்கு கிடைத்த குருகுல பாக்கியம்.


நாட்டிய பேரொளி பத்மினியுடன்...

அகில பாரத புகழ் குரு பத்மஸ்ரீ அடையார் கே. லக்ஷ்மன் அவர்களிடம் சிஷ்யையாகும் வாய்ப்பு. என் ஆர்வத்திற்கு நடன நுணுக்கங்களை அறிவூட்டி, மெருகூட்டி இன்றைய உன்னத நிலைக்கு வித்திட்டவர் என் தாய்க்குப் பிறகு அந்தப் பெரியார்தான்.

முழுநேர நடனக் கலை என்னை ஆட்கொண்டு விட்டது. நான்கு வருடம் நடனக்கலையை அவரிடம் கற்றேன்.

நடனம் கற்றுக் கொண்டிருந்த வேளை சக மாணவிகளைக் கொண்டு நாட்டியப்பள்ளி மாணவிகள் மேடையேற்றிய நடன நிகழ்ச்சியொன்றுக்கு அன்றைய தமிழக முதல்வராக இருந்த அமரர். எம்.ஜி. இராமச்சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்.

எனது நான்கு வருட பயிற்சியை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியதும் 1976ஆம் ஆண்டு கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் சமய, சமூகபெரியோர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் இடம் பெற்றது.


நடிகர் சரத்பாபு கெளரவித்தபோது...

என் நடன அரங்கேற்றத்தின் பின் என் தாயார் நடாத்தி வந்த, ‘விஜயலட்சுமி நாட்டிய கலா மன்றத்தை’என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.

பன்னெடும் காலமாக பல நாட்டிய சிஷ்யைகளை உருவாக்கியதும் என் கலையார் வத்திற்கு காலோச்சியதுமான அக்கலாமன்றத்தை கையேற்று வழி நடாத்தும் பொறுப்பில் அதிக ஈடுபாடு கொண்டேன்.

சுமார் முப்பது நடன மாணவிகளுடன் கையேற்ற அந்நடன பள்ளியை “நாட்டிய கலா மந்திர்” என பெயர் மாற்றப்பட்டு இன்றுவரை 37 ஆண்டுகளாக பல நடனமணிகளை உருவாக்கி உலகலாவிய ரீதியில் பிரகாசிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அது தெய்வீக அர்ப்பணிப்போடு நான் ஆற்றும் பணியாகும்.


இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர் வாழ்த்தும் போது...

1980ஆம் ஆண்டு எனது எட்டு வயது சிஷ்யையின் அரங்கேற்றம் அன்றைய தகவல்துறை அமைச்சராக விருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் தலைமையில் கதிரேசன் மண்டபத்தில் அரங்கேறியது.

சபையினரின் கரகோஷம் ஆத்ம திருப்தியைத் தந்தது. அதே கரகோஷம் இன்று வரை நான் அரங்கேற்றிய சுமார் 116 நடன மாணவிகளுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நவீன அணுகுமுறைகளை கையாள்வதால் நல்ல வரவேற்புமிருக்கிறது.

நடன பள்ளியோடு வேறு பங்களிப்புகள் ஏதேனும் இருக்கின்றதா?

பல்பலப்பிட்டி ஹொலி பெமலி கன்வன்டில் கடந்த 25 வருடங்களாக பகுதி நேர நடன ஆசிரியையாகவும், சரசவி பாய, நுண்கலை கல்லூரி, இந்தியா கலாசார நிலையம் என்பவற்றில் உறுப்பினராகவிருந்து பரதத் கலைக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிட்டியுள்ளது.

அத்தோடு இலங்கை கலை பீடத்தின் நாடக நடன மத்தியஸ்தர் குழுவில் அதிமுக்கியஸ்தராகவும் கடமையாற்றியுள்ளேன்.

இலங்கைக்கு வெளியில் அரங்கேற்றிய நடன நிகழ்ச்சிகள் பற்றி...

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளேன். 1985 ஆம் ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டிலும், 1986ல் கனடா வான்கூவரில் நடைபெற்ற கலாசார கண்காட்சியிலும், அதே ஆண்டு மலேஷியா கோலலாம்பூரில் இடம்பெற்ற ஆறாவது உலகத் தமிழர் மாநாட்டிலும் என் நாட்டிய கலா மந்திர் மாணவிகளைக் கொண்டு நாட்டிய நாடகங்களை அளித்து பாராட்டுக்களைப் பெற்றேன்.

 
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் ஜயகொடி அவர்களிடம் கெளரவம் பெற்றபோது...

சர்வதேச ரீதியில் இந்தியா, பங்களாதேஷ், மலேஷியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, கனடா, சுவீடன், அவுஷ்திரேலியா, பிரித்தானிய தேசங்களிலும் நமது பாரம்பரிய கலைகளை மேடையேற்றியுள்ளேன்.

தங்களின் படைப்புக்கள் பற்றி...


கணவர்
மற்றும் மகனுடன்...

பாரம்பரிய நடனங்கள் மற்றும் காவிய நடனங்கள், எனது சிருஷ்டிகள் என சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்துள்ளேன். சக்தி, கிருஷ்ணாமிர்தம், நடேஷ்வரர் அஞ்சலி, ஏழு வகை தாண்டவம், திருநாவுக்கரசர், சித்திரைப் பெண், அஷ்டலட்சுமி, நவ சக்தி, வசந்தோற்சவம், சிற்பியின் கனவு, சகுந்தலை, நள தமயந்தி, மீனாட்சி கல்யாணம், தைத் திருநாள், தீபாவளி வசந்தம், மனிதனின் ஏழு பருவங்கள், சாவித்திரி, கண்ணகி, சாந்த சொருபி, தமிழ் அன்னைக்கு அணிகலன்கள், சிவ தரிசனம், பூரி ஜெகநாத், சுவாமி விவேகானந்தர், சீரடி சாய் போன்றவை குறிப்பிடத்தக்கதும் என் கலைப் பயணத்திற்கு உந்து சக்தியாக அமைந்ததும் என்றும் கூறலாம்.


சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில்...

1998ல் பகவான் ஸ்ரீ சாய்பாபா முன்னிலையில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு இடம் பெற்ற கலாசார நிகழ்வில் இலங்கை கலைஞர்கள் சார்பாக நடனநிகழ்வை அளிக்கும் அரும்பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து 2001ம் ஆண்டிலும் 2005ம் ஆண்டிலும் குரு பூர்ணிமா விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இக்காலப் பகுதியில் முழுமுதற் கடவுள் சிவபெருமான் நடனமாடிய திருத்தலமான சிதம்பரத்தில் சிவராத்திரி தினமொன்றில் இடம்பெற்ற கலைநிகழ்வில் பாரத கலைஞர்களுடன் இணைந்து அரங்கேற்றிய நடன நிகழ்விற்கு நட்டுவாங்கம் செய்யும் அரும் பாக்கியத்தையும் பெற்றேன்.

ஆபிரிக்க டர்பன் நகரில் ஐந்தாவது சைவ மகா பேரவையின் மாநாடு நடைபெற்ற போது எனது ஆக்கமும் அவையினரைக் கவர்ந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பரதக் கலையில் அர்ப்பணித்துக் கொண்ட உங்களுக்கு கிடைத்த கெளரவங்கள் பற்றி...


சக மாணவியுடன் ஒரு நடனத்தில்...

1990 ஆம் ஆண்டு இலங்கை மாதாவின் அதி உன்னத விருதான கலாசூரி பட்டத்தைப் பெற்றேன். அத்தோடு பரத பூஷண திலகம், நர்த்தன நாயகி, நடன கலை அரசி, கலைச்செம்மல், ரத்ன தீபம் என்ற கெளரவ நாமங்களையும் சூட்டினார்கள்.

அகில பாரத நடனத் தாரகை கலாநிதி பத்மா சுப்பிரமணியம் அவர்களால் 2006ஆம் ஆண்டு சென்னையில் வைத்து சூட்டிய கெளரவம்தான் “நடன கலை அரசி” இலங்கை - ஜப்பான் நட்புறவு சங்கத்தால் ‘புங்கா விருது’ம் அளிக்கப்பட்டது.

தேசிய ரீதியில் கொண்டாடப்படும் சமய, கலாசார வைபவங்களில் என்னுடைய கலாமந்திர் மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம் பெறுவதும் எனக்கு கெளரவமாக இருக்கின்றது.

ஜனாதிபதியின் வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெறும் தைத்திருநாள், தீபாவளி, வசந்தம் மற்றும் இந்து கலாசார திணைக்களத்தால் அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி இன்னும் பிற தேசிய வைபவங்களில் குறிப்பிடத்தக்கபங்களிப்புகளை நல்கியுள்ளேன்.

குடும்பத்தைப்பற்றி தெரிந்து கொள்வோமா?

எனது கணவர் ஜெகதீஸ்வரன். வர்த்தகத்துறையை சார்ந்தவர். என்னுடைய கலைத்துறை வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பவர். நாட்டிய கலாமந்திர் நடன நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல பெரிதும் கைகொடுத்து உதவுகிறார்.

என்னுடைய கலை வாழ்விற்கு அவருடைய பங்களிப்பு சொல்லிலடங்கா. ஒரே மகன் அபயகரன். கணக்கியல் பட்டதாரி படிப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு தாங்கள் கூறவிரும்புவது...


அரங்கேற்ற வைபவத்தில் கெளரவித்தபோது...

பரதக் கலை தெய்வீகமானது. அதை பயில விரும்புவோரும் பயிற்றுவிப்போரும் பக்தி உணர்வோடும் கலை அறிவு நுணுக்கத்தோடும் நோக்கவேண்டும்.

கடின உழைப்பு, ஆழமான அறிவு, அர்ப்பணிப்பான செயல்பாடு இருந்தால் தான் பூரணமான கலைஞனாக நீடித்து நிலைத்து நிற்க முடியும்.

நமது பாரம்பரிய கலையை இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களெல்லாம் ஆர்வத்தோடு பேணி வருகின்றார்கள். அதற்கு அடித்தளமாக நம்மண்ணிலிருந்து சென்ற நடன சிஷ்யைகள் பங்காற்றி வருகின்றார்கள்.

மேலும் மேலும் நர்த்தகிகள் உருவாக வேண்டும். பிரகாசிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

 

அடுத்த வாரம்...
எழுத்துருவம் இல்லா மொழிச் சமூகத்தில் உதித்து தேமதுரத் தமிழுக்கு அணி சேர்க்கும் மேமன்கவியை அடுத்த வாரம் சந்திப்போம்.

 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.