புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

ஹிதாயத்துல்லா மீர்சா

ஹிதாயத்துல்லா மீர்சா

சகோதரிக்கு வீடு கட்டி, சீதனம் கொடுத்து, கண்ணுக்கு பிடித்த மாப்பிள்ளை எடுத்து கல்யாணம் கட்டிக்கொடுத்தான் சாலி. அதன் பிறகு தானும் கல்யாணம் கட்டிக்கொண்டான். ஒராண்டுக்குள் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது. பெற்றோரிடம் இருக்கும்போதே பெண் சகோதரிக்கு வீடு கட்டி சீதனம் கொடுத்து கல்யாணம் கட்டிக் கொடுத்த சுமை இன்னும் தீரவில்லை.

+அதற்குள் தனக்கும் பெண் பிள்ளை பிறக்க வேண்டுமா? என்ற எண்ணத்துடன், மீண்டும் வீடு வளவு சீதனம் சீர்வரிசை தேட வேண்டும் என்னும் நோக்கத்துடன், தன்னிடம் இருக்கும் ஒரு இலட்சம் ரூபா காசையும் கொடுத்து காணி ஒன்றை வாங்கினால், விவசாயம் செய்து தொழில் செய்வதோடு, பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கும் எதிர்காலத்தில் சீதனம் சீர்வரிசை என்று கொடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டு, நாளைக்கு காணி வாங்க ஆயத்தமானான்.

அடுத்த நாள் காலையில் காணி வாங்குவதற்காக புறப்படவிருந்த சாலியிடம் தனது சகோதரியின் கணவன் ஆசீம் வந்து மச்சினன் சாலியிடம் கூறினான். மச்சினன் நீங்க இப்போது காணி வாங்கத் தேவை இல்லை.

காணி வாங்கும் காசை என்னிடம் தாங்க நான் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லப்போகிறேன். வெளிநாடு சென்று நல்லா உழைத்து உன்னுடைய காசைத் தருகின்றேன். அத்துடன் நான் வெளிநாட்டுக்குப் போய் உங்களையும் அங்கு எடுக்கின்றேன். அதற்குப் பிறகு நாம் நல்லா உழைத்து பல ஏக்கர் காணி தோட்டம் வாங்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினான்.

மச்சான் சொல்லுவதை மறுக்க மனமில்லாத சாலி தன்னிடம் இருந்த காசி ஒரு இலட்சம் ரூபாவையும் கொடுத்தான். காசி ஒரு இலட்சம் ரூபாவையும் வாங்கிக் கொண்ட ஆசீம் மச்சினன் சாலிக்கு தெரியாமல் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு ஒரு காணியை வாங்கியெடுத்து கொண்டு, ஐம்பதாயிரம் ரூபாவை பயன்படுத்தி வெளிநாடு சென்றுவிட்டான்.

வெளிநாடு சென்ற மச்சான் தனக்கு வீசா அனுப்புவார் என்று மாதம் வருடம் என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. எந்தப்பதிலும் இல்லை. தான் காசி கொடுத்ததற்காக ஒரு நன்றி மடலாவது மச்சான் அனுப்பியதும் இல்லை. ஆனால் மச்சான் அவருடைய தங்கையின் பிள்ளைகளுக்கும், அவருடைய மச்சான் மாருக்கும், நண்பர்களுக்கு கடிதம் என்றும், அன்பளிப்பு பொருள்கள் என்றும், அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் அவருடைய தங்கையின் பிள்ளைகள் உடுத்து அழகு பார்க்கும் உடைகள், உண்டு ருசிக்கும் மிட்டாய்கள் விளையாடும் பொருட்களைப் பற்றி யாரும் கேட்டால் கப்பல்ல போன வெளிநாட்டு மாமா அனுப்பியது என்று கூறுவார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்கும் போது, சாலிக்கு அந்த வார்த்தைகள் அவனுடைய இதயத்தை குத்தி வருத்தும் வேதனைச் சொற்களாக வருத்தியது.

தனக்கு வீசா அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, தனது காசை வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்ற மச்சான் வீசாவும் அனுப்பா மல், ஒரு கடிதமும் அனுப்பாமல் இருப்பதன் காரணம் என்ன? என்ற வேதனையுடன், இன்னும் நாம் பொறுத்தால் நிலமை மோசமா கிவிடும் என்று தனது தங்கையிடம் என்னுடைய காசைத்தரணும், இல்லை என்றால், எனக்கு வீசா அனுப்பி எனது காசிக்குரிய முடிவை சொல்ல வேண்டும் என்று கூறினான்.

சில கடினமான கணவன்மார்களைப் போல், மனைவிகளும் நம் சமூகத்தில் உண்டு. என்பதற் கொப்ப, தங்கை கூறினாள் உங்களின் காசை என்ன? தாரமலா விட்டுவிடுவார் என்று நன்றியற்று பாசமற்ற வார்த்தைகளைக் கூறினாள். காசி எப்போதும் தரத்தான் வேண்டும். அவரவர் தேவைக்கு தேவைப்படும் போது கிடைக்கவேண்டும். என்னுடைய காசியை இப்போது இன்றைக்கே வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டான். உடனே தங்கை கணவனுக்கு கோல் போட்டுக் கூறினாள். அவன் ஐம்பதாயிரம் ரூபா காசி அனுப்புகிறேன் கொடு என்று கோலில் கூறினான்.

கோபத்துடன் சாலி தங்கையிடம் கூறினான் ஐம்பதாயிரமா? எனக்குத் தேவை இல்லை. எனது காசி ஒரு இலட்சம் ரூபாவும் வேண்டும் என்று பிறகு அண்ணன் தங்கை என்ற பாசப்பிரிவின் சண்டைகள். கோடு பள்ளி வாசல் என்று பல மனவெறுப்பில் சாலி அவனுடைய காசி ஒரு இலட்சம் ரூபாவையும், இரண்டு வருடங்களின் பிறகு ஐம்பதாயிரம் ரூபாவும், பிறகு முப்பதாயிரம் ரூபாவும் அதன் பிறகு பத்தும் ஐந்தும் என்று வாங்கினான். இப்படியெல்லாம் வாங்கிய காசி இப்போது சாலியிடம் ஒரு சதமும் இல்லை.

ஆனால் ஒரு சம்பவம். சாலி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் ரூபா கொடுத்து வாங்க வேண்டியிருந்த காணி இப்போது ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு மேல் விலை ஏற்றம் ஏறிக்கொண்டிருந்தது. இதை எண்ணிப்பார்த்த சாலி மிகவும் வருந்தினான். தன்னிடமிருந்த மூலதனமான காசை மச்சான் ஆசீம் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்ததால் அந்தப் பணம் முழுவதும் கை நழுவிப்போனது. இப்போது எந்த விதமான வாழ்வாதாரமும் இல்லாமல் சாலி துன்பப்பட்டுக்கொண்டிருந்தான்.

மச்சான் ஆசீம் இப்போது வெளிநாட்டில் உழைத்து பெரும் பணக்காரக் கோடிஸ்வரனா கிவிட்டான். கொழும்பில், கண்டியில் வீடுவளவு. ஊரில் காணி தோட்டம் வளவு. மேலும் கொழும்பிலிருந்து கொண்டு பேரும் புகழும் ஏற்படும் வண்ணமாக வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் வெளிநாட்டு முகவர் வேலையும் செய்கின்றான். இப்படியெல்லாம் செல்வச் செழிப்போடு வாழும் மச்சான் ஆசீம் சாலியைப்பற்றி கொஞ்சமேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை. தன்னிடம் இருந்த காசி ஒரு இலட்சம் ரூபாவை வாங்கி அதன் மூலம் செல்வத்தை தேடிய மச்சான் மனிதனா?

அல்லது இவனை என்னவென்று சொல்வது என்று அவனுக்கு வேதனையை தந்தது. அத்துடன் மச்சான் வெளிநாடு போகும்போது, தன்னிடம் வாங்கிய பணத்தில் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு வாங்கிப்போட்ட காணி இப்போது கோடிக்கு மேல் விலை மதிப்புள்ளதாக இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் சாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலைக்குப் போய் சிகிச்சை பெற்றுக்கொண்டான். வேதனையுடன் வீட்டு முற்றத்தில் சாலி இருந்துகொண்டிருக்கும் போது, தபால்காரன் வந்து ஒரு பாஸ்போட்டைக் கொடுத்தான். பாஸ்போட்டை வாங்கிப்பார்த்த சாலிக்கி மீண்டும் மாரடைப்பு ஏற்படும் வண்ணம் திகில் நிறைந்த காட்சி பாஸ்போட்டில் இருந்தது.

தனது மனைவியின் பாஸ்போட் தபாலில் வந்திருப்பதைக் கண்ட சாலி மனைவியை கோப வெறியுடன் அழைத்து உனக்கு பாஸ்போட் வந்திருக்கி நீ என்ன வெளிநாடு போகப் போகிறாயா? உனக்கு இந்த எண்ணம் எப்போது வந்தது? என்று உடல் நடுங்கும் படியாக கேட்டான். அதற்கு அவள் எந்தப்பயமும் பீதியும் கொள்ளாமல் நிதானமாக வேதனையையும் ரோசத்தையும் அறிந்து “நீங்க எந்தப்பயமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை. இந்தப் பாஸ்போட் நான் வெளிநாடு போவதற்காக எடுத்த பாஸ் போட்ட இல்லை.

உங்களின் மச்சான் ஆசீம் வெளிநாட்டுக்கு பெண்கள் அனுப்புகிறார். பாஸ்போட்டுகளை எடுத்து தரச்சொல்லி அந்தப்பாஸ்போட்டுக்களை பயன்படுத்தி வேறுவேறு பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புவதால் அவருக்கு கடும் உழைப்பாம். எங்களுக்கு ஒரு பாஸ்போட் எடுத்துக்கொடுத்தால் ஐயாயிரம் ரூபா காசி தருகிறார். எனக்கு காசி தேவைப்பட்டது நானும் பாஸ்போட்டுக்குரிய ஆவணங்களைக் கொடுத்தேன் இப்போது பாஸ்போட் வந்திருக்கி. உடனே பாஸ்போட்டை கொண்டு கொடுக்க வேண்டும் தாங்க” என்று கூறிய அவள் சாலியின் கையிலிருந்த பாஸ் போட்டை வாங்கிக் கொண்டாள்.

இப்படியவள் கூறிக்கொண்டு, கணவனின் கையிலிருந்த பாஸ்போட்டை வாங்கியதும் அவன் கூறினான். புள்ள இப்படிப்பட்ட விடயங்கள் பின்னுக்கு பெரும் ஆபத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் தாங்கும் சக்தியும் மன வலிமையும் உனக்கு இருக்கா என்று கண்டிப்புடன் கேட்டான்.

நீங்க கவலைப்படாதீங்க. இப்படி எத்தனையோ வருடங்கள் நமது பகுதியில் உள்ள பெண்க ளெல்லாம் இப்படி பாஸ்போட் எடுத்து கொடுத்துப் போட்டு காசி வாங்கி இருக்காங்க.

இதில் ஏதாவது சங்கடங்கள் ஏற்பட்டால் அதன் முழுப்பொறுப்பையும் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் முகவர்களே பார்த்துக் கொள்ளுகிறார்கள் என்று கூறினாள்.

மனைவியின் செய்கை சாலிக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளுக்கு இருக்கும் வறுமையின் தட்டுப்பாடு காசி வேண்டும் என்பதால், பசி வந்தால், மானம், குலம், கல்வி, வன்மை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, அன்பு என் னும் பத்துப் பண்புகளும் பறந்துவிடும். மச்சான் ஆசீம் வெளிநாட்டு முகவர் வேலை செய்கி றான். வெளிநாட்டுக்கு பணிப்பெண்கள் அனுப்புகிறான் என்றெல்லாம் சாலிக்கு தெரியும். ஆனால், சட்டத்துக்கு எதிரான முறையில் பாஸ்போட் எடுத்து வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புகிறான் என்பது தெரியாது.

சில பேர்வழிகளுக்கு பணம் உழைக்கும் எண்ணம் வந்து விட்டால் எப்படியெல்லாம் செயல்படு கிறார்கள். போலி பண நோட்டுகளை மனிதன் உற்பத்தி செய்கிறான். நல்ல பண நோட்டுகள் போலி மனிதர்களை உற்பத்தி செய் கின்றதே. என்றெல்லாம் சாலி கவலைப் பட்டுக் கொ ண்டான்.

சாலியின் பெண் பிள்ளை படித்து கெட்டித்தனமாக சித்தியடைந்திருந்தாள். அவளுக்கு அரசாங்கத்தில் ஒரு வேலை எடுத்துக் கொடுத்தால் தனக்கு இருக்கும் வறுமையும், துன்பமும் தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில், தனது சொந்தக்காரரான பக்கத்து அயலூர் அரசியல்வாதி ஒருவர் அவருக்கு ஆதரவாக செயல்பட்டால் தனது பெண் பிள்ளைக்கு கட்டாயமாக வேலை வாய்ப்பை பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சாலி அரசியலில் ஈடுபட்டான்.

தனது மச்சினன் சாலி அயலூரானுக்கு ஆதரவாக செயல்படுகிறான் என்பதை அறிந்த மச்சான் ஆசீம், கடைத்தெருவால் வந்து கொண்டிருந்த சாலிக்கு குத்தல் வார்த்தைகளை பேசினான்.

மச்சான் ஆசீம் இப்படிக் குத்தல் வார்த்தை கூறுவதைக் கேட்ட சாலியால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தான் கட்டிக்கொடுத்த வீட்டில் தங்கையை திருமணம் செய்துகொண்டு, தன்னிடம் இருந்த பணத்தை வாங்கி தன்னை வறுமையிலும் துன்பப்படுகுழியிலும் வீழ்த்திவிட்டு, தான் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பவன், ஏன்? நான் எனது பெண் பிள்ளையின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பாதையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்துக்கு இவன் இப்படி இழிவு பேசுவதன் காரணம் என்ன? என்ற கோபம் அவனுடைய உயிரை வதை செய்ய ஆரம்பித்தது. அதனால் சாலி கோபாவேசத்துடன் நான் கட்டித்தந்த வீட்டில் இருந்துகொண்டு நான் தந்த பணத்தில பொருள் தேடிக் கொண்டு எனக்கு சூது செய்றா என்று எசினார்.

வரும் வழியெங்கும் சுவர்களிலும் மின்சாரக் கட்டைகளிலும் ஆசீம் மச்சானின் தாடி வைத்த தொப்பி அணிந்த தோற்றத்துடன் விளம்பர அறிக்கை ஓட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வீட்டில் பணிக்காக போக விரும்பும் பெண்கள் உடனே ஆசீம் வெளிநாட்டு முகவர் நிலயத்துக்கு வரவும். இலவசப் பயணம் கூடிய சம்பவம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். என்று ஒட்டப்பட்டிருந்த அறிவித்தலைக்கண்ட சாலிக்கு தலை சுழலுவதைப்போல் இருந்தது. வீட்டுக்கு வந்தான்.

வீட்டில் அதிகமான பொலிஸ்காரர்கள் வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பொலிஸ் அதிகாரி சாலியின் மனைவியை அச்சுறுத்தியவாறு உனது பெயர் கொண்ட பாஸ்போட்டில் ஆள்மாறாட்டம் செய்துகொண்டு போன ஒரு பெண் வெளிநாட்டில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதால் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உடனே பொலிஸ் நிலையத்துக்கு வா என்று அதட்டிக் கொண்டிருந்தார்கள்.

பொலிஸ்காரர்களின் உத்தரவைக் கேட்டு நடுநடுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் நிலைமையையும், தனது மச்சான் ஆசிம் செய்த பாஸ்போட் மோசடிச் செயலையும் கண்ட சாலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவிக் கொண்டான். கணவன் மரணித்துவிட்டான் என்பதை அறிந்த மனைவி சித்தங்கலங்கி நின்றாள்

ஆசீம் வெளிநாட்டு முகவர் சாலியின் மனைவியுடைய பாஸ்போட்டை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து அனுப்பிய பெண் வெளிநாட்டில் சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதை பொலிஸ்காரர்கள் புரிந்து கொண்டார்கள்.

அவளை கைது செய்ய வந்த பொலிஸ் காரர்கள் கண் கலங்கியவர்களாக சட்டத்தின் முன்னிலை யில் விசார ணைக்கு எப்படியாவது அழைத்துச்செல்ல வேண்டு மென்பதில் தமது உறுதியை மாற்றாதவர்களாக பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். எந்தவித மான குற்றங்கள் செய்யாத சாலியின் மகள் வீதியை வெறிச் சோடிப் பார்த்து நின்றாள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.