புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

அதிகாரமுள்ள ஆளுங்கட்சியும் ஆளுமைகொண்ட வேட்பாளர்களும்

அதிகாரமுள்ள ஆளுங்கட்சியும் ஆளுமைகொண்ட வேட்பாளர்களும்

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களும் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் தமது நிலைப் பாட்டினை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இவ்விடயத்தில் ஆழமாக ஆராய்வதற்கு எதுவுமே இல்லை. வழமை போலவே இத்தேர்தலிலும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறப்போவது நிச்சயம்.

தமிழ்ப்பேசும் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கு மாகாணம் உட்பட தேர்தல் நடைபெறும் மத்திய மற்றும், வடமேல் மாகாண சபைகளில் தமிழ்க் கட்சிகள் சில போட்டியிட்டாலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்பேசும் வேட்பாளர்களையே அவர்கள் நிச்சயம் ஆதரிப்பர். இந்நிலையில் வடமாகாண சபையை கைப்பற்றுவது யார் என்பது குறித்தே உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பலரதும் கவனம் இப்போது சென்றுள்ளது.

இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் அதிகாரம் எதுவுமே இல்லாத நிலையில் இருந்துவந்த வடமாகாண சபையை ஆளுங்கட்சி கைப்பற்றுவது என்பது உறுதி என்றாகிவிட்டது. இதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெரிவாக இடம்பிடித்துள்ள ஆளுமையான வேட்பாளர்கள் சாட்சியாக அமைந்துள்ளதுடன் அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் துரிதமான அபிவிருத்திப் பணிகளும் இதற்குச் சான்று பகர்வதாக உள்ளன.

வடக்கில் மிகப் பலம் வாய்ந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பியின் தலைமை வேட்பாளர் சின்னத்துரை தவராசா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் இராம நாதன் அங்கஜன் அடங்கலாக பல முக்கிய பிரமுகர்கள் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலை ஓர் அரசியல் கண் ணோட்டத்தில் பார்வையிடாது மக்களுக்குச் சேவை செய்யும் ஒன்றாக நோக்குகின்றனர்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழமை போன்று தமது வீர வசனங்களுடனும், நடைமுறைப்படுத்த முடியாத உறுதிமொழி களுடனும் தேர்தலில் குதித்தாலும் அவர்களுக்கு முன்னர் போன்று தமிழ் மக்களிடையே இப்போது செல்வாக்குக் கிடையாது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழ் மக்களிடையே தொடர்ந்தும் கூறிவரும் பொய்களே ஆகும். அத்துடன் அக்கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் நிலையும் இன்னொரு பக்கம் பிரதான காரணமாக உள்ளது. இதனை விடவும் தமிழ் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் அண்மையில் அக்கட்சியினுள் உள்வாங்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களால் எதிர்பார்த்துள் ளதைப் போன்று ஒருசில ஆசனங்களைப் பெறுவதே கடினமாக இருக்கும்.

இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால்தான் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்புக்கள், தேவைகள் என்பவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கடந்த காலங்கள் போன்று முரண்டுபிடிக்கும் அல்லது எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ் கட்சிகளின் அரசியலைத் தமிழ் மக்கள் இப்போது ஏற்றுக்கொள்வதில்லை. ஜனாதிபதி, பாராளுமன்றம், ஏனைய மாகாணசபைகள், தொண்ணூற்று ஒன்பது சதவீதமான உள்ளூராட்சிச் சபைகள் எனச் சகல அதிகாரங்களும் ஆளுங்கட்சி வசம் இருக்கும்போது இந்த ஓரிரு சபையில் மட்டும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதனையும் பெரிதாகச் சாதித்து விட முடியாது என்பது தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக்குமே நன்கு தெரியும்.

இதனால் முன்னொரு காலத்தில் மக்களை ஏமாற்றியது போன்று இப்போதும் ஏமாற்றலாம் எனத் தமிழ்க் கட்சிகள் நினைக்குமானால் அதனைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறெதுவுமாக இருக்க முடியாது. அடுத்து இத்தேர்தலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை ஆராய்ந்து பார்த்தால் அக்கட்சிகளும் பெரும் பாலான இடங்களில் அரசாங் கத்துடனேயே இணைந்து போட்டி யிடுகின்றன. அதனால் முஸ்லிம் மக்களின் ஆதரவும் நிச்சயம் அரசாங் கத்திற்கு உள்ளதை உறுதி செய்துகொள்ள முடியும். சில இடங்களில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டாலும் முஸ்லிம் மக்களின் முதலாவது தெரிவு ஆளுங்கட்சியை நோக்கிய தாகவே உள்ளது.

அரசியல் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தமது பலத்தைத் தத்தமது பிரதேசங்களிலுள்ள மக்களுக்குக் காட்டுவதற்காக ஆங்காங்கே தமக்கிடையே பலப்பரீட்சையையும் நடத்தி வருகின்றன. எனினும் இறுதியில் அவற்றின் ஆதரவு ஆளுங்கட் சிக்காகவே உள்ளது. அதனால் இந்தப் பலப்பரீட்சை அவசியமற்றதொன்றாகவே உள்ளது. இத்தகைய பிரிந்து சென்று ஆதரவளிக்கும் நிலையை இக்கட்சிகள் மாற்றிய மைத்திருக் கலாம். ஆனால் தமது பலம் தம்மை ஆதரிக்கும் மக்களுக்குத் தெரிய வேண்டும் எனும் எண்ணம் இக்கட்சிகளின் தலைவர்க ளிடையே காணப்படுகிறது.

இதேபோன்று மலையகத்தில் வழமைபோன்றே இம்முறையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அதனால் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பின்னால் அணிதிரண்டு நிற்பர் என்பதில் ஐயமில்லை. மலையக மக்களுக்காக அரசாங்கத்தினூடாக அமைச்சர் தொண்டமான் அனைத்தையும் செய்து வருகின்றார்.

எனவே நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்துச் செயற்பட்டுத் தமது வாக்கு களை வழங்க வேண்டும்.

வெறுமனே எதிர்க்கட்சியிலிருந்து கூக்குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளால் எதனையும் செய்ய முடியாது. அதிகாரம் உள்ள ஆளுங்கட்சியையும் அதன் ஆளுமை கொண்ட வேட்பா ளர்களையும் ஆதரித்து எமது தேவைகளை நாமே வென்றெடுக்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.