புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

ஈரானின் புதிய ஜனாதிபதி

ஈரானின் புதிய ஜனாதிபதி

ரான் இஸ்லாமிய குடியரசு தனது ஏழாவது ஜனாதிபதியாக ஹஸ்ஸான் ரூஹானி என்ற 64 வயதுடைய இஸ்லாமிய பெரியாரை நியமித்தது. இங்கிலாந்தில் கிளாஸ்கோ கலிடோனியாவில் இஸ்லாமிய சமய சட்டம் சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி நடத்தி கலாநிதிப்பட்டம் பெற்றவர் ருஹானி. முன்னர் இவர் தனது பெரிமோன் என்ற குடும்ப பெயரினால் இருந்தவர். இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ருஹானி என்று தன்னை அழைத்துக்கொண்டார்.

ஈரான் அரசியலில் அன்று முதல் மிகவும் நெருங்கிய தொடர்பை இன்றுவரைக்கும் கொண்டுள்ள இவர் இஸ்லாமிய குடியரசின் பல முக்கிய அரச பொறுப்புக்களில் இருந்தவர். பாராளுமன்ற அங்கத்தவர், பிரதி சபாநாயகர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பல கமிட்டிகளின் அங்கத்தவர், ஈரானின் அணுவாயுத பேச்சுவார்த்தை தூதுக்குழுவின் தலைவர் இப்படியாக பல பதவிகளில் இருந்து அனுபவம் பெற்றுள்ள ஒரு பழுத்த அரசியல்வாதி.

ஹஸ்ஸான் ரூஹானி தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களுடனும் வெளிநாட்டு விவகாரங்களுடனும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டவர் இவருக்கு ஒரு முறை தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இரகசிய சேவைக்கான அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை பொறுப்பேற்க ஹஸ்ஸானி ருஷானி மறுத்துவிட்டார்.

தேர்தல்களில் இவர் மாத்திரமே மதகுருமார் பட்டியலில் இருந்து போட்டியிட்டவர். இவருக்கு முன்னாள் ஜனாதிபதிகளான ரப்ஸன் ஜானியினதும், மொஹம்மத் காந்தமியினதும் ஆதரவு உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது இந்த இருவரும் தங்களது ஒத்துழைப்பை ருஷானிக்கு வழங்கினர். மொஹம்மத் ரீஸா ஆரீப் என்ற சீர்திருத்த போக்கினை கொண்ட வேட்பாளர் வாபஸ் பெற்றுக்கொண்டது ரூஹானிக்கு ஜனாதிபதியாவதற்கு மேலும் வழி செய்தது. இளைஞர்கள் யுவதிகள் என்போரும் ஈரானில் மாற்றங்களை எதிர்பார்த்து இவருக்கு வாக்களித்தனர். ஹஸ்ஸான் ரூஹானி தனது அமைச்சரவை எப்படி இருக்கும் என்பதனை அறிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய நாடுகள் சபையில் முன்னர் ஈரான் பிரதிநிதியாக கடமையாற்றிய முஹம்மத் ஜாவித் ஸரீப் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நியமிக்கப்பட்டுள்ள பலர் செல்வாக்குமிக்க முன்னாள் ஜனாதிபதியான அரிஹாஷிமிய் ரப்ஸன்ஜாத் நிர்வாகத்தில் கடமையாற்றியவர்கள்.

வேலையில்லாமை, பணவீக்கம், உணவுப் பண்டங்களின் விலைவாசி ஏற்றம், எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளமை என்பன பொருளாதார ரீதியில் ஹஸ்ஸான் எதிர்நோக்கும் முக்கிய விடயங்களாகும். இது தவிர ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினாலும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அகற்றுவது வெளி உலகத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ள சிக்கல்களாகும். ஈரான் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் ஹஸ்ஸான் ரூஹானி அவர்கள் தனது அணுவாயுத பேச்சு வார்த்தைகளின்போது வர்த்தக வாணிப நோக்கத்திற்காக சில விடயங்களில் விட்டுக்கொடுத்தார் என்றும் குறை கூறப்படுகின்றது.

இந்த சமாச்சாரம் இவர் ஈரான் அணுவாயுத தூதுக் குழுவிற்கு தலைமை வகித்த காலத்தில் இடம்பெற்றதாகும். மேற்குலக நாடுகளுக்கு வளைந்து கொடுத்தார் என்றும் வர்த்தகத்திற்கு ஈரானின் யூரேனியம் பதன்படுத்தலை நிறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மேற்குலகத்திற்கு சலுகைகள் ருஹானியால் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்கா ருஹானியின் நியமனத்தை வரவேற்று எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதேநேரம் அமெரிக்கா இன்னும் ஈரானில் என்ன நடப்பது என்பதனை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என தனது முதல் பத்திரிகையாளரின் சந்திப்பின்போதே ஹஸ்ஸான் ருஹானி கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பது இவர் எதிர்நோக்கும் அடுத்த அரசியல் சிக்கலாகும். இன்று சுமார் 800 அரசியல் கைதிகள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது இவர்களில் முக்கியமானவர்களாக எதிர்கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளனர். பச்சைக் கட்சியினை சேர்ந்த மீர் ஹுசைன் முஸாவீய் இவரது மனைவி சுஹ்றா ரஹ்னாவார்த் மற்றும் மெஹ்தி கரூபிய் ஆகியோர் முக்கியமானவர்கள். இது தவிர பத்திரிகையாளர்களும் கல்விமான்களும் சிறையில் உள்ளனர். அத்துடன் ‘பஹாய்’ மதத்தின் எல்லா முக்கியஸ்தர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க கோரியும் மக்கள் ருஹானிக்கு வர்க்களித்துள்ளனர்.

இன்று மேற்குலக நாடுகளுடன் ஈரான் கொண்டுள்ள எல்லா தடைகளையும் நீக்கி சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ருஹானி. தான் ஜனாதிபதியாக இருக்கும் எதிர்வரும் நான்கு வருடங்களில் இவற்றில் வெற்றி காண ஆவலுடன் செயல்பட ருஹானி முடிவு செய்துள்ளார்.

பஸ்லி... -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.