புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
இந்தியா, சீனா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வடபகுதியின் பிவிருத்திக்கு பெரும் பங்களிப்பைச் செய்கின்றன

இந்தியா, சீனா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வடபகுதியின் பிவிருத்திக்கு பெரும் பங்களிப்பைச் செய்கின்றன

வடக்கு அதிவேக பாதை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சீன pறுவனத்திற்கு ஜனாதிபதி பணிப்பு


இந்திய கொன்சியூலர் ஜெனரால் வீ. மகாலிங்கம்

tடமாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்காக இந்திய அரசாங்கம் பெருமளவு பணத்தை முதலீடு செய்து வருகிறது.

இரண்டாம் கட்ட வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீட்டு உரிமையாளர்களே இந்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியைப் பயன்படுத்தி 40ஆயிரம் வீடுகளை கட்டும் பணி துரித வேகமாக தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 3ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கென எல்லாமாக 1,000 கோடி இந்திய ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

2013ம் ஆண்டு ஜூன் 5ம் திகதியளவில் இதில் 12,500 வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரித வேகமாக மேற்கொள்ளப்படுகிறது. 43ஆயிரம் வீடுகளும் 2015ல் முழுமையாக நிர்மாணித்து முடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது வரையில் 1000 வீடுகள் இந்திய உதவியின் கீழ் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. எல்லாமாக இந்திய அரசாங்கம் இலங்கையில் 50ஆயிரம் வீடுகளை தனது சொந்த செலவில் நிர்மாணிக்க இருக்கிறது. இதில் 42ஆயிரம் வீடுகள் வடபகுதியிலும், 4000 வீடுகள் கிழக்கு மாகாணத்திலும் மேலும் 4000 வீடுகள் மலையகத்திலும் நிர்மாணிக்கப்படும்.

வடபகுதிக்கான ரயில் பாதையை புனர்நிர்மாணம் செய்வதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட உள்ளது. இவ்வாண்டு மே மாதம் 14ம் திகதியன்று மதவாச்சியில் இருந்து மடுவுக்கான 43 கிலோமீற்றர் தூரத்திற்கான ரயில் பாதை அங்குரார்பணம் செய்யப்பட்டது.

தற்போது ஓமந்தையில் இருந்து காங்கேசன் துறைக்கான ரயில் பாதையும் மடுவில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதையும் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் கட்டத்தை அடைந்துள்ளது. கிளிநொச்சியில் இருந்து பளைக்கான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியளவில் நிறைவுபெறும்.


புனரமைக்கப்படவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம்

பின்னர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான நிர்மாணப் பணிகள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதியன்றும் நிறைவுபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு டிசம்பர் 31ம் திகதியன்று பூர்த்தி செய்யப்படும்.

அதையடுத்து தலைமன்னார் இறங்குதுறையின் நிர்மாணப் பணிகள் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து ஒராண்டு காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் சீர்குலைந்து போயிருக்கும் வடமாநிலத்தின் விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்காக கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாயப் பீடம் 300 மில்லியன் ரூபா செலவில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போது இடம்பெறுகின்றது.


கண்ணிவெடி அகற்றும் பணி

அதுபோன்று மேலும் 300 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்திய அரசாங்கம் வவுனியா ஆஸ்பத்திரியில் 187மில்லியன் ரூபா செலவில் 200 படுக்கை வசதியுடைய ஒரு நவீன ஆஸ்பத்திரியை நிர்மாணித்து வருகிறது. இதற்கு தேவையான வைத்திய உபகரணங்கள் 228மில்லியன் ரூபா செலவில் தருவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்பத்திரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பேருதவியாக அமையும்.

இதுமட்டுமன்றி கல்வியில் ஆர்வம் கொண்ட திறமை மிக்க 79 மாணவ, மாணவியருக்கும் இந்திய அரசாங்கம் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.

அடுத்தபடியாக இலங்கையின் கலாசார பாரம்பரியங்களை கட்டிக் காப்பதற்காக இந்திய அரசாங்கம் 1000மில்லியன் ரூபா செலவில் ஒரு பிரமாண்டமான கலாசார நிலையத்தை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கவுள்ளது.


அறுவடைக்குத் தயாராகவிருக்கும் நெல் வயல்

யுத்தத்தினாலும், அப்பிரதேசத்தில் உள்ள அமைதியின்மையினாலும் பொலிவிழந்து கிடந்த பண்டைய பெருமைக்குரிய சிவதலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலையும் புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கையின் கட்டடக் கலைஞர் கல்லூரியும் ஏனைய இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்த புனர்நிர்மாண பணிகளை வடிவமைத்து செயற்படுத்தவுள்ளன.

இந்திய அரசாங்கம் 220மில்லியன் ரூபா செலவில் அச்சுவேலியில் கைத்தொழில் ஊக்குவிப்பு வலையமொன்றை நிர்மாணித்துள்ளது.

ஆரம்பத்தில் இங்கு 21 கைத்தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அங்கு 2000பேருக்கு நேரடியாக தொழில்வாய்ப்பும் மேலும் 4000பேருக்கு மறைமுமாக தொழில்வாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்படும்.


வீதி அபிவிருத்தி

இந்த கைத்தொழில் வலயத்தை அமைக்கும் பணிகள் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தில் பூர்த்தியாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தொழில் வலயத்திற்கு செல்வதற்கான புதிய பாதைகளும் இப்போது நிர்மாணிக்கப்படுகின்றன.

காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மாணம் செய்யும் பணி இந்திய அரசாங்கம் வடமாகாணத்தில் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய திட்டமாகும்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் யுத்தத்தின் போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்றுவதற்கு 2.18பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத்தில் மூழ்கியுள்ள பாரிய சிதைவுகளை அகற்றும் பணி இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க ஆய்வுகள் கடந்த மே மாதம் 3ம் திகதி ஆரம்பமாகியது.

இந்த புனர்நிர்மாண வேலைகள் நிறைவடைந்ததை அடுத்து காங்கேசன்துறை துறைமுகம் துறைமுக அதிகார சபைக்கு மே மாதம் 6ம் திகதியன்று வழங்கப்பட்டது.


புதிய வவுனியா வைத்தியசாலை

இந்த துறைமுகத்தை விஸ்தரிப்பதற்காக அலைதடுக்கிகளும் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. அத்துடன் துறைமுகத்தின் கப்பல்கள் நங்கூரமிடும் பகுதியும் விஸ்தரிக்கப்பட்டு அங்கு கூடுதலான கப்பல்களை நங்கூரமிடுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய கைப்பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளித்து அவர்களின் கைப்பணிகளை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் கைப்பணி பொருட்களை தயாரிக்கும் கிராமம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் 9 மாகாணங்களிலும் ஆங்கில மொழியில் கல்வி கற்பிப்பதற்கான விசேட பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மாணவ, மாணவியருக்கு இந்தியாவில் உயர்கல்வியை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 91.4 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியிருக்கிறது. இவ்வாண்டில் இந்தப் புலமைப் பரிசிலுக்காக 790 மாணவ, மாணவியர் தெரிவு செய்யப்படுவார்கள்.


இந்திய வீடமைப்புத் திட்டம்

இதில் 290 மாணவர்களுக்கு இந்தியாவின் உயர் கல்வியை பெறுவதற்கான புலமைப்பரிசிலாகவும், 500 மாணவர்களுக்கு இலங்கையில் உயர்கல்வியை பெறுவதற்கான புலமைப்பரிசிலாகவும் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் 166 மில்லியன் ரூபா செலவில் இந்தியா மீன்பிடி வலைகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு உதவி செய்துள்ளது.

இந்தப் பணத்தில் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்கி, அவற்றை பொருத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் மீன் உற்பத்தி 60 மெற்றிக்தொன்னில் இருந்து 300 மெற்றிக் தொன்னாக அதிகரிக்குமென்று எதிர்பார்க்க ப்படுகிறது.

மீன்பிடி வலைகளை தயாரிப்பதில் புதிய இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி இப்போது முடிவடைந்துள்ளது. மிக விரைவில் இந்த தொழிற்சாலை முழு அளவிலான தனது உற்பத்தி பணியை ஆரம்பிக்குமென்று எதிர்பார்க்கபடுகிறது.

சிறிய அளவிலான வர்த்தக முயற்சிகளை முல்லைத்தீவில் 91மில்லியன் ரூபா முதலீட்டிலும், கிளிநொச்சியில் 39.5மில்லியன் ரூபா செலவிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.


கோழி வளர்ப்பு

இத்திட்டத்தின் கீழ் 1230 பயனாளிகள் நன்மையடைவார்கள். இவ்விதம் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் 25ஆயிரம் ரூபா முதல் 2இலட்சம் ரூபா வரை ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.

இந்தியா ஆரம்பித்திருக்கும் மாதிரி வீடமைப்பு திட்டத்தின் கீழ் 1000 வீடுகள் அமைக்கப்படும். இதில் 250 வீடுகள் முல்லைத்தீவிலும், 250 வீடுகள் கிளிநொச்சியிலும், 175 வீடுகள் வவுனியாவிலும் 175வீடுகள் மன்னாரிலும் மற்றும் 150 வீடுகள் யாழ்ப்பாணத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் இப்போது அங்குள்ள பயனாளிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன.

வடமாகாணத்தில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 66.74 மில்லியன் ரூபா செலவில் 10ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள் விநியோகிக்கப்பட்டன.

இது வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. வடபகுதிக்கு 2500 துவிச்சக்கர வண்டிகளும் முல்லைத்தீவுக்கும் கிளிநொச்சிக்கும் தலா 1750 துவிச்சக்கர வண்டிகளும், மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு தலா 1500 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு இந்திய பணத்தில் 111மில்லியன் ரூபா செலவில் வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பெரிய ஆஸ்பத்திரிக்கும், முல்லைத்தீவு மாவட்ட ஆஸ்பத்திரிக்கும் 117மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.


வேளாண்மை

இவை வெவ்வேறு வகையான 89 இயந்திர பொருட்களாகும். மெனிக்பாமிலும், யாழ்ப்பாணத்திலும் செயற்கை கால்களை பொருத்துவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலும், மெனிக்பாமிலும் இருந்த யுத்தத்தினால் கால்களை இழந்த 2573 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

புல்மோட்டையில் இந்திய அரசாங்கம் நடத்திய அவசரகால வைத்திய பிரிவில் 50ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

மேலும் 3000 உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 70.96 மில்லியன் ரூபா செலவில் 175 வெளியில் பொருத்தப்பட்ட மோட்டார்களையுடைய படகுகளும் மீன்பிடிப்பதற்கான உபகரணங்களும் மீசாலையிலுள்ள 350 பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள பனைமர ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வு கூட உபகரணங்களுக்காக 68.78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் உள்ள கமநல நிலையங்களின் ஊடாக அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு 500 உழவு இயந்திரங்கள் கொடுக்கப்பட்டன.

2மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 95ஆயிரம் விவசாய உபகரணங்களைக் கொண்ட வெவ்வேறு பார்சல்கள் கொடுக்கப்பட்டன.

இவற்றுடன் 48,500 கிலோகிராம் விதை நெல்லும் விநியோகிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் 187.70மில்லியன் ரூபா செலவில் வடமாகாணத்தில் உள்ள 79 பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்தது.

வடமாகாணத்தில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி 70மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் அரசசார்பற்ற அமைப்புகளான சர்வத்ரா மற்றும் ஹொரைசன் ஆகிய நிறுவனங்கள் இந்த தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

வீடுகளை அமைப்பதற்காக இந்தியா 10,400 மெற்றிக்தொண் நிறையுடைய இரும்புக் கம்பிகளையும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு உள்ளூரில் இடம்பெயர்ந்த குடும்பத்திற்கும் 12 கூரைத் தகடுகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனடிப்படையில் எல்லாமாக 95ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைந்தன.

பலாலி விமான நிலையத்தை புனரமைக்கும் பணிகளும் இப்போது துரித வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 950 மீற்றர் நீளமும் 75மீற்றர் அகலமும் கொண்ட விமான இறங்குதரையின் நிர்மாணப் பணிகள் இப்போது பூர்த்தியடைந்துள்ளன.

யுத்தம் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகளில் இத்தகைய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்வதற்கு இந்தியா அளித்த பங்களிப்பின் ஒரு பகுதியே இவையாகும்.

இந்தத் தகவல்களை வழங்கிய இந்திய கொன்சியூலர் ஜெனரால் வீ. மகாலிங்கம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம் அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராயலாம் என்று நினைக்கிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.