புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
காந்திய சிந்தனையாளர் மு. மாரியப்பன்

காந்திய சிந்தனையாளர் மு. மாரியப்பன்

நினைவில் நிறைந்த கலைஞர்

காந்தியம் தழைக்கவும் சர்வோதயம் மலரவும் பணியாற்றிக்கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த காந்திய சிந்தனையாளர் மு. மாரியப்பன் தனது 75ஆவது வயதில் அண்மையில் காலமானார்.

இலங்கை சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரட்னா குறிப்பிடுவது போல, இலங்கை, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மகாத்மா காந்தி காட்டியவழியில் சர்வோதய சமூக முறைமையொன்றைக் கட்டியெழுப்ப பிரயத்தனம் மேற்கொண்ட ஒருவர் மாரியப்பன் ஆவார்.

அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் தனது அவதானத்தை இலங்கை வாழ் சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு மத்தியில் ஓர் சுமுகமான வாழ்வை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்பி நின்ற ஒருவருமாவார்.

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் காந்தியம் மிக வேகமாகப் பரவவேண்டும் என்றும் இந்தியாவில் காந்தியத் தலைமை உருவாக வேண்டுமென்றும் மாரியப்பன் கூறிவந்தார். அதற்கு சர்வோதய அன்பர்கள் அயராது உழைக்கவேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

காந்தியத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் கிராம ராஜ்யம், சர்வோதயம் தமிழ், ஆங்கில இதழ்களில் காந்திய நோக்கில் அரசியல், சமூக,பொருளாதார துறைகளை ஆராய்ந்து பல கட்டுரைகளை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

சர்வோதய இலக்கியப் பண்ணையின் தலைவராக விளங்கி பல காந்திய சர்வோதய வெளியீடுகள் வர காரணமாக இருந்தவர் மாரியப்பன். வினோபா அடிகளின் கருத்துக்கள் அடங்கிய நூல்தொகுப்புகள் தமிழில் வெளிவர முயற்சி செய்தவர்.

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சர்வோதய வேலைக்காக சென்ற மாரியப்பன் அந்நாடுகளிலுள்ள காந்திய அறிஞர்களுடனும், சமய சமூக தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிவந்தார்.

நமது நாட்டில் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் மூத்த தலைவர் சோ.க. தம்பிப்பிள்ளையுடனும் சர்வோதய அமைப்பின் தலைவர் ஏ.ரி. ஆரியரட்னாவுடனும் இணைந்து செயற்பட்டார்.

சமயங்களின் ஒருமைப்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் பணியாற்றிவரும் ‘போக்கலோரே’ அமைப்பினர் இத்தாலியில நடத்திய கருத்தரங்குகளில் பங்குகொண்டபோது மாரியப்பன், காந்தியடிகளின் சமய ஒருமைப்பாடு பற்றிய கருத்தை விளக்கிக் கூறியது இத்தாலிய நண்பர்களை மிகவும் கவர்ந்ததாக காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் நா. மார்க்கண்டன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.


மனைத்தக்க மாண்புடையாளுடன் மு.மாரியப்பன் அவர்கள்

மாரியப்பன் ஓர் எளிமையான வழக்கறிஞராக விளங்கினார். அண்ணல் காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றியபொழுது வழக்குரைஞர் தொழிலையோ எப்படி தொண்டாகச் செய்ய முடியுமென்பதை உலகிற்குக் காட்டினார். மாரியப்பன் அவர்களும் தனது தொழிலில் அண்ணலின் வழிமுறையைப் பின்பற்றிவந்தார்.

மக்கள் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமிழகத்திற்கு வந்திருந்தபோது அவரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை மொழிபெயர்ந்து அனைவரின் பாராட்டைபெற்றவர். மு. மாரியப்பன்.

இதற்குக் காரணம் அவர் மாணவப் பருவத்திலிருந்தே காந்தியத்தைப் பயின்று கொண்டிருந்தமையாகும். காந்திய மூல நூல்களை நிறையப் படித்த அவர் ஒரு தெளிந்த சிந்தனையாளராக காந்தியக் கருத்துகளை பல நிலைகளில் உள்ளவர்களுக்கு வழங்கினார்.

இளம் வயதிலிருந்து காந்தியச் சிந்தனை ஆசிரியப்பணி, காந்திய அருங்காட்சியத்தில் பல்வேறு கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தும் பணி, சர்வோதய மாநாடுகளில் பங்கேற்பு, அறமுனிவர் வினோபா மாலேயின் ஆசிரமத்திற்குச் செனறு அவரைத் தரிசிக்கும் பேறு என அவர் பெற்ற வாய்ப்புக்கள் அவரை ஒரு சிறந்த காந்திய சிந்தனையாராளக உயர்த்தியிருந்தன.

எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி ஆசிரியர் காந்தீயம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.