புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

‘KAVITHAIMANJAREY’

தூய்மையாய் வாழ்வோம் வாராய்!

- அமு.அப்துல் கஹ்ஹார்

கண்மணி போன்ற தாயின்
காலடி சொர்க்க மென்று
பெண்மணி யாளின் மிக்க
பெருமையை உரிமை தன்னை
மண்ணிலே முதன்மை யாக
மதித்ததைக் கொடுத்த எங்கள்
அண்ணலாம் நபிகள் வாக்கை
அறிந்திடாச் செல்வப் பெண்ணே!

இறையவன் பெயர்மு ழக்கி
இகமதன் இருள கற்றி
கறையிலா வாழ்வை யூட்டுங்
கவினதை பெற்ற குர்ஆன்
மறையதன் வழிசெ லுத்தி
மாசினை யகற்றி வாழ்விற்
துறைதொறும் மேன்மை பெற்றுத்
துலங்கிட வாராய் கண்ணே!

செப்பிடும் நாவில் இன்பம்
சேர்த்திடும் கலிமா ஓதி
ஒப்பிலா இறையை நித்தம்
ஓம்பியே தொழிது, வாழ்விற்
தப்பிதஞ் செய்தி டாமற்
தடுத்திடும் நோன்பை நோற்று
துப்பிலார்க் கீந்து ஹஜ்ஜை
தூய்மையாய் செய்து வாழ்வோம்!


 

காலமெழுதிய விதி

- பாஹிரா பதுளை

பல்லாண்டுகள் சுகம் பேசிய
பலமுள்ள நல்லாண்டுகள்
கசக்கியெறியப்பட்ட காகிதமாக
வில்லங்கத்தால் நசுக்கப்பட்டு நயம்கெட்டது
சுடுகாட்டு சொப்பனங்கள் மருட்டுகிறது

ஊழ்வினை, விதிவசம் எனவாய்
தாழ்வினையையும், தோல்விகளையும்
அள்ளிக் குவித்ததில்
அகவெளி பேதலிப்பில், ஆரோக்கியத்தையிழக்கும்
கணப்பாடல்களுக்குள், காணாமல் போனது
இனப்பாடல்களின் இதய பகிர்வுகள்
அன்பு வட்டங்களின் வசந்த கைக்குலுக்கல்கள்
முடிவேயில்லாத தொடர்கதையாக
இழப்புகளால் இன்னல்படும்
நிலாக்கால கவிதைகள்
உண்மையின் விம்பங்களை விழுங்கிய
வேஷங்களின் விஸ்வரூபங்களால்
ஆத்மா அலறும்

ஆளும் நிறை ஆன்மாவை
துவட்டியெடுத்த வதந்திகளும், வசைகளும்
ஓராயிரம் வாள் செருகப்படுவதான வலிகளில்
துணை சேராத நல்ல நிமித்தங்களை
விழிகள் விரைந்து தரிசிக்க
பிரார்த்தனைப் பொழுதுகள்
அமைதியாக நகர்கின்றன.


 

சூரியனிடம் ஒரு கேள்வி

- எஸ்.பி.பாலமுருகன் பதுளை

எப்போதும்
எதிர்முனைக்கு காட்டப்படும்
எமது பிழைகள் பற்றி
நாம் நினைப்பது இல்லை
நம் பிழைகளை பற்றி
நினைத்தால்
அடுத்த
தருணத்தின் அமைதி
சந்தோஷம் இழக்கப்படுவதில்லை

மிக மெதுவான
கோபங்கள் கூட
கோபுரங்களைச் சாய்த்துவிடுவதை
பற்றி
யோசிக்காததால்
சிறிது சிறிதாக
இழக்கப்படும் நம் பலம்!

சூரியனிடம்
பிழைகளைத் தேடுவதை விட
பகலின் வெளிச்சத்தில்
எங்கள் பிழைகளை
கழற்றிய உடைகளை போல
நகர்ந்தால்
நாம்
சூரியனை விட
ஒளியின் சொந்தமாகுவோம்


 

மேன்மை

- ஏறாவூர் தாஹிர் -

மும்மலம் அடக்கும் தன்மை,
முகம், அகக் கனிவு, நன்மை
பயத்திடும் செயல்கள், தூய்மை
பகர்ந்திடும் வார்த்தை வாய்மை,
உயிரறும் போதும் நேர்மை,
உயிரினப் பாசம், கேண்மை
இவை தினம் தொடருமாயின்...
இகத்தினில் பெறலாம் மேன்மை!

அந்தரங் கத்திற் கூட
அப்பழுக்கற்ற வாழ்வும்,
சொந்தமே எனினும் நீதி
சோரம்போ காது, மேலும்
வந்தனை, வழிபாட்டோடு
நிந்தனையில்லாதாயின்...
மந்திரம், மாயமில்லை!
மனிதருட் கிட்டும் மேன்மை!

இனம், மொழி கடந்து நின்று,
இனிய நற் பண்புகொண்டு,
மனக்குகை இருளை வென்று,
மனிதமென் றொளியைக்கண்டு
இணக்கமாய் இல்லம்நின்று,
இடர், தடை அனைத்தும் வென்றால்....
மணம் தரும் பூவாய், செண்டாய்
மண்ணிலே கொட்டும் மேன்மை!


 

வெப்பிசாரங்கள்

- நீலாபாலன் -

எல்லாம் இங்கு தலைகீழாய்....
எப்படி யெல்லாமோ நடக்கிறது

உன்னுடைய குரலில் ஏக்கம்...
உன்னுடைய முகத்தில் சோகம்....

ஆனால்...
கொன்றாற் பாவம்
தின்றாற் தீரும் என்பதுபோல...
எல்லோரது முகத்திலும் இறுக்கம்

எல்லோரும்....
எப்பொழுதும்
தங்களது பொறுப்பிலிருந்து
தானாகவே விலகிக் கொள்ளுகிறார்கள்

எவனுடைய கழுத்தறுத்தால்
எவனுக்கென்ன?

உன்னுடைய கழுத்தறுத்து
உருசி பார்க்கத்தான்
எல்லோருக்கும் ஆசை...
எல்லோருக்கும் துடிப்பு

என்ன செய்ய....
என்னவென்று
கேட்கும்

பலம் எதுவும் இல்லாத
உன்னைப்போல் நானும்
கட்டுப்பட்டுக் கிடக்கும் கன்று


அந்த முடிச்சு
இந்த முடிச்சென்று
ஆயிரத்தெட்டு முடிச்சு போட்டு
கட்டிவைத்துக் கருமமாற்றுகிறார்

நாமும்
கட்டுப்பட்ட கால்களோடு
கடைந்தேற வழியின்றி
மெளனத்திற் குள்ளேயே
மறைந்து கிடக்கின்றோம்
எல்லாம் நடக்கிறது
இருட்டில்........

ஆருக்குப் புரிகிறது
அடுத்தவனின் துயரம்


 

மனிதனை ஏன் படைத்தாய்

- ஏ.சீ.அப்துல் றகுமான், ஏறாவூர்

மனிதனை ஏன் படைத்தாய் இறைவா
மனிதனை ஏன் படைத்தாய்
மறைபுகல் வேதம் பொய்யாய்
மறுத்துரை பகன்றென்னாளும்
இறைவனென்றொருவனிங்கே
இல்லையென்றிழிவாய்ப் பேசும்
மனிதனை ஏன் படைத்தாய்

பெற்றவர் பசியில் வாடிப்
பெருந்துயர் கொண்டு நிற்கச்
சற்றேனும் கவலையில்லாச்
சண்டாளப் பாவியான
மனிதனை ஏன் படைத்தாய்


நல்லன செய்வார் தம்மை
நன்றி வைத்துணராதிங்கே
வல்லன இதுதானென்று
வாயினால் தூற்றுமிந்த
மனிதனை ஏன் படைத்தாய்

பெற்றிடும் பொருளையெல்லாம்
பெருங்குடி தன்னில் விட்டே
பற்றிடும் உறவினுக்குப்
பாரமாய் வாழுமிந்த
மனிதனை ஏன் படைத்தாய்

கனிதரு மரத்தைக் காற்றைக்
கடலினைப் படைத்தாய் நன்று
புனிதனைப் பூவில் நாளும்
புகழ்பெறப்படையாதிங்கே
மனிதனை ஏன் படைத்தாய்

மலையினை மலரைத்தேனைக்
கலையினைக் கணக்கின்aந்தாய்
கொலையினைச் செய்ய என்றும்
கூசி டாப்பாவியான
மனிதனை ஏன் படைத்தாய் இறைவா
மனிதனை ஏன் படைத்தாய்


 

உன் நினைவுகளுடன்

- தஸ்லிம்ஸியாத், பண்டாரவளை -

காலம் கடந்து செல்ல
அவளும் நடந்து செல்ல
யாரும் இல்லாத
ஒற்றையடிப் பாதையில்

அவள் மீதான ஆசைகள்
கொதிக்கும் கறியில்
போடப்படும்
வாசனை திரவியங்களாய்
மணம் வீசி சுவையூட்டுகின்றன
அவள் நினைவுகளை
என் கொதிக்கும் நெஞ்சுக்குள்
வைத்த போது.....

சமைத்து வைத்த
பழங்கறி
நாவை சுவையூட்டுவது போல
அவளுடன் பழகிய - அந்த
பழைய காலங்கள்
நினைக்க நினைக்க
உள்ளம் குதூகளிக்கின்றது

அவளது நினைவுகளை
இதயத்தில் சேமித்து வைத்து
வெளியிடுகிறேன்
காகிதத்தில் கவிதைகளாக
என்பசியைப் போக்கடி

வா.......
தீமூட்டிச் செல்
விறகுகளை
என் இதயவறையில்
அடுக்கி வைத்து
உன் வார்த்தைகளால்
நானும் குளிர்காய்கிறேன்
உன் நினைவுகளுடன்.....


 

பதில் சொல் பெண்ணே!
 

- மருதங்கேணியூர் வே.வே.அகிலேஸ்வரன் -

நெஞ்சாங்கூட்டை
அலங்கரித்தவள்
விட்டு போனாளே
அருகில் அவள்
இருந்தும் கூட
பேச முடியாமல்
அவஸ்தையுறுகிறேன்
எனை வாட்டி
வதைப்பது
எதற்கடி
பெண்ணே!

நீ என்னுடன்
பேசாத
ஒவ்வொரு
நாட்களையும்
எண்ணிப்
பார்க்கிறேன்
மீண்டும்
அவலச்சாவுகள்
என் வாழ்விலே
தொடர்கதை
ஆகிறது

காதலில்
அடியுண்ட
மனங்கள்
கண்ணீரிலே
மிதக்கிறது
கவலைகளை
எழுத்துக்களில்
கனநாளாய்
சுமக்கிறது

உன் வில்லங்க
பார்வைகள்
எனை
சலனப்படுத்துதடி
பெண்ணே!
எதற்காய்
என்னுடன்
வீராப்பு பேசி
வீணாக என்னை
சாகடிக்கிறாய்


 

மண்ணும் மரமும்
 

- அட்டாளை றிநி நிஸ்றி -

சற்றென்று
நிகழ்ந்து விடுகிறது
சில பிரிவுகள்;
காரணமில்லாத
இந்தப் - பிரிவுகளுக்கு
காரணம்
தேடித் தேடியே
கண்ணீரெல்லாம்
வற்றிப் போய் - கிடக்கிறது...
மண்ணும்
மரமும் - எனக்
கலந்திருந்த - உறவு
விலகிப்
போய் விடுகையில்
- மட்டும்
இரண்டும்
வேறு வேறென்று
ஆகிடுமா???
மண்ணும் - மரமும்
வேறாகிப் போனால்
இந்த மரம்
இறந்து போகாதா??
இதனை
மரமோ! - மண்ணோ
எண்ணிப் பார்க்காதா??


 

பேசு!

- கல்முனை முசாறி -

அமைதிப் போர்வைக்குள்
துயிலும்
உன் ஆசைகள் சிறகு முளைக்காத
பட்டாம் பூச்சிகள் போல
படைப் பலங்களுடன்
வந்த வார்த்தைகளே
மடியும் போர்க்களத்தில்
நிராயுத பாணிகளான
மெளனங்களுடன் வந்திருக்கிறாய்

உன் தேசிய மொழி
பலமானது தான்
காதலில் மட்டும்

மனதின் அதிர்வுகளை
விழி அசைவுகள் அறிவிக்கும்
உருவமே இல்லையெனினும்
ஒன்றிணைந்த உள்ளங்கள்
ஒன்றையொன்று புரிந்து கொள்ளும்
ஆனால்
ஒத்திகைக்கும்
அரங்கேற்றத்திற்குமிடையில்
ஓராயிரம் நடைமுறைகள்
உறங்காதிருக்கும்
உன்னையும் என்னையும் போல்


 

“தேயாத நிலவுகள்”
 

- கொக்குவில் கே.எஸ்.சிவஞானராஜா

கோயில்கள் கொடியேறுது, கிராமங்கள் செழிக்கும்
குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுங்கள்,
தாய்மார்களோடு தந்தையரும் கூடவே சென்று
தமிழர் பண்பாடுகளை குழந்தைகளோடு அனுபவியுங்கள்

நோயில்லாமல் நீடுவாழ வேண்டுமாக இருந்தால்
நீங்கள் குழந்தைகளின் இதயங்களோடும் வாழவேண்டும்,
வாயில்லாச் சீவன்கள் கூட வாரிசுகளை அரவணைக்க
வாயுள்ள சீவன்கள் வக்கிரமாய் ஆக்கிரமிப்பது அழகோ?

பாயில்லாத குடும்பங்கள் பண்பாடாய் வாழ்ந்திட
பணக்காரக் குடும்பங்கள் பாத்திரமாய் விளங்கிட
தாயில்லாத குழந்தைகளும் தரணியில் மிளிர்ந்திட
தருமமென அவர்களையும் தாங்கியே வாழ்வோம்

காயாமல் நனையாமல் காத்து வளர்த்த பிள்ளைகள்
கலியுகத்தில் காதலில் சிக்கவைக்கப்படுகிறார்கள்
தேயாத நிலவுகளாகத் தேசம் போற்ற வேண்டுமாயின்
தீராத அன்போடு தாய் தந்தை அருகிலிருங்கள்



- எஸ்.அரவிந்த்ராஜ், பருத்தித்துறை

தமிழ் மொழி கொண்டது வெற்றி
அதன் வழிதனைப் பற்றி
பாடிடுவோம் தமிழ்ப் புகழ்தனை ஏற்றி
தமிழ் உயர் நூல்கள் தனைச் சுற்றி
உணர்ந்தால் வஞ்சமனமது வற்றி
இவ்வுலகுதனை மாற்றி நூலால்
உயர் செந்தமிழ்தனைப் போற்றிடுவோம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.