புத் 65 இல. 32

விஜய வருடம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 03

SUNDAY AUGUST 11 2013

 

 
புலம்பெயர் தமிழரிடம் பாரிய நிதி சேகரிப்பு மோசடி முயற்சியில் வுNயு

வடக்கில் அரசாங்கத்தின் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மூடி மறைத்து கபட நாடகம்:

புலம்பெயர் தமிழரிடம் பாரிய நிதி சேகரிப்பு மோசடி முயற்சியில் வுNயு

* பெறும் நிதியில் ஒரு சதமாவது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டதா? கடந்த வருடம் இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?

* கனடாவிற்கான சம்பந்தன், சுமந்திரன் விஜயம் குறித்து சக எம்.பி. மாரும், மக்களும் கடும் அதிருப்தி

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறித்து வடபகுதி மக்களும், தமிழ்க் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் கனடா சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு இதுவரை என்ன நடந்தது எனத் தெரியாத நிலையில் இவ்வருடமும் இவர்கள் அங்கு நிதி சேகரிக்கச் சென்றிருப்பது வடக்கில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி நடவடி க்கைகள் எதனையும் கூறாது மூடிமறைத்து இங்கு மக்கள் கஷ்டப்படுவதாகக் கூறி சேகரிக்கப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து ஒரு சதம் கூட தமிழ் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை எனவும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் சிலரால் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் எண்பது இலட்ச ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பணம் மாவை சேனாதிராஜா எம்.பி.யின் பெயரிலேயே வைப்பிலிடப் பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறே கடந்த காலங்களில் வெளிநாடுகளிலிருந்து மக்கள் அனுப்பி வைத்த பெருந்தொகை நிதி தனிப்பட்டமுறையில் கையாடப்பட்டதாகவும், மக்களுக்கு இவை சென்றடையவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள வட மாகாண தேர்தலை முன்னிறுத்தி புலம்பெயர் நாடுகளில் மீண்டுமொருமுறை நிதி சேகரிப்பு முயற்சியில் இரா. சம்பந்தனும் சுமந்திரனும் ஈடுபட்டுள்ளனர். மாவை சேனாதிராஜா எம். பி. ஏற்கனவே பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையை புலம்பெயர் மக்கள் அமைப்புக்கள் கண்டுபிடித்துள்ளமையால் இம்முறை அவரை அழைத்துச் செல்லாத சம்பந்தன் தன்னுடன் புதுமுகமான சுமந்திரனை அழைத்துச் சென்றுள்ளதாகவும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

இந்த உண்மை நிலை புரியாத புலம்பெயர் வாழ் தமிழர் அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் இவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருகின்றனர். அரசாங்கம் வடக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களையும், மக்கள் அப்பகுதியில் சமாதானமாக அமைதியான சகஜ வாழ்வு வாழ்ந்து வருவதனையும் புலம்பெயர் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.