புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
சாண்டில்யனின

சாண்டில்யனின

அழகைத் தொடர்ந்த ஆபத்து

முன்பின் தெரியாத அந்தக் கட்டழகியின் முழு மதியையும் பழிக்கும் முகத்தில் முளைத்திருந்த பங்கய விழிகள் சொன்ன செய்தியால் சிறிதளவும் குழப்பமோ கோபமோ அடையாத அப்துல்லா வாஸப், உடனடியாக அவர்களை நெருங்கினானில்லை. சிறிது நேரம் அவ்விருவரையும் பார்த்துக்கொண்டே நின்றான். வாஸப் தனது பெரிய வலுவான சிவந்த முரட்டு இதழ்களில் புன்முறுவலையே படரவிட்டுக் கொண்டான்.

அப்துல்லாவின் புன்முறுவல் ஏற்கெனவே பலவித இன்ப வேதனைகளால் தத்தளித்துக் கொண்டிருந்த இளம்பரிதிக்கு சற்றே சினம் ஊட்டினாலும், அந்தச் சினப்பொறிகளை அணைக்கும் பல சாதனங்கள் அவன் கைகளில் கிடந்ததால் அவன் கோபத்தை வெளியே காட்ட வலுவற்றவனான். தாமரையின் மென்மை இதில் இருப்பதற்குப் பதிலாக திண்மை இருக்கிறதே! ஆகவே உவமை சரிதானா என்றும் சிந்தித்தான் இளம்பரிதி.

பண்பிற்கே இருப்பிடமான பாண்டிய வம்சத்தில் பிறந்த இளம்பரிதி அத்தனை மோகனாஸ்திரங்களையும் தன் மன உறுதியால் தடுத்தான். முன்பின் அறியாத அந்தப் பெண்ணிடம் தனக்குக் கடமை உணர்ச்சிகள் இருக்க முடியுமே தவிர, அதனால் அவன் வேறு உணர்ச்சிகளிலிருந்து மீள முயன்ற சமயத்தில் அப்துல்லா வாஸப்பும் தனது கேள்விக் கணைகளை வீசியதால் அவன் மனம் இன்ப எண்ணங்கள் பின்னிய வலையிலிருந்து விடுபடவே, அப்துல்லாவை அவன் தைரியமாகவே ஏறெடுத்து நோக்கினான். அப்துல்லாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தான். அந்தப் பெண் யாரென்பதை ஓரளவு அவன் ஊகித்திருந்தாலும் அதைச் சொல்ல முயலவில்லை.

இவள் யாரென்பதைத் தானே சொல்வதாக அப்துல்லா கூறியதும் அதைக் கேட்ட அந்த இள மங்கை தன் கண்களால் அழைப்பு விடுத்ததும், பெரும் குழப்பத்தை அளித்தன இளம்பரிதிக்கு. எந்த ஒரு இரகசியத்தைத் தான் பாதுகாக்க முயன்றானோ, அது அம்பலமாகும் நிலை வந்துவிட்டதை எண்ணி செய்வது என்னவென்று தெரியாமல் திகைத்தான். அவன் கண்களுடன் இணைந்த அவள் கண்கள் ஏதோ தூது விடுத்திருக்க வேண்டும். அதனால் ஏதும் பேசாமல் எச்செய்கையிலும் இறங்காமல் சிலையென நின்றான் இளம்பரிதி.

அப்துல்லா வாஸப் இளம்பரிதியின் கைகளில் கிடந்த அந்தப் பெண்ணை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். அப்படி வந்ததும் அவளை மிகவும் நெருங்காமல் கண்ணியமாக சிறிது விலகியே நின்றான். அப்படி நின்ற நிலையில் அவளை நோக்கி அழைத்தான், “பாண்டிய ராஜகுமாரி” என்று. இந்த அழைப்பு இளம்பரிதிக்கு வியப்பை அளித்தாலும், அந்தப் பைங்கிளிக்கு எந்த வியப்பையும் அளிக்காததால், “நீங்கள் தான் அந்தப் பயணியாயிருக்க வேண்டும்?” என்று வினவினாள் அந்த அரச மகள்.

பதிலுக்கு தனது தலையைத் தரையை நோக்கி நன்றாகச் சாய்த்து வணங்கினான் அப்துல்லா. “பிறரைப் பற்றிய கண்காணிப்பு பாண்டிய நாட்டில் சிறப்பாயிருக்கிறது” சிலாகிக்கவும் செய்தான்.

பதிலுக்கு இளநகை கூட்டினாள் பாண்டிய நாட்டுப் பைங்கிளி. “ஆம், பாண்டிய நாடு செல்வம் மிகுந்தது. அதைப் பார்க்கப் பலர் வருகிறார்கள்” என்றாள் அவள், பவள உதடுகளை அதிகமாகவே விரித்து.

“பாண்டிய நாட்டு முத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பாண்டிய மன்னன் கருமித்தனத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று மெதுவாகக் கூறினான் வாஸப், அவள்மீது நிலைக்க விட்ட கண்களை எடுக்காமலே.

அவள் விழிகள் பெரிதாக மலர்ந்தன. “கருமித் தனமா?” என்று வினவினாள் அவள் வியப்புடன்.

அப்துல்லா தனது கருத்தை நிலைநாட்டும் முறையில் தலையை அசைத்தான். “ஆம், முத்து விஷயத்தில் மட்டும், அரை ஸாகியோ எடைக்கு மேற்பட்ட முத்துக்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற தடை விதிக்கவில்லையா உங்கள் மன்னன்?” என்ற வாஸப், “அந்தத் தடையும் ஒரு விதத்தில் நல்லது. உங்களை இளம்பரிதி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

நான் தூரத்திலிருந்தே ஊகித்துக்கொண்டேன். பாண்டிய அரச குலத்தாரைத் தவிர பெரும் முத்துக்களை வேறு யாரும் அணிய முடியாதென்று எங்கள் நாட்டிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அதற்கு அத்தாட்சியும் கிடைத்தது. பாண்டிய அரசகுல மகளுக்கு உதவும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று விளக்கிய அப்துல்லா, மீண்டும் அந்தப் பெண்ணுக்குத் தலை வணங்கினான்.

அவன் விளக்கமும் வணக்கமும் அரசகுமாரிக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. வாஸப்பைப் பற்றிய செய்தி ஏற்கெனவே பாண்டிய நாட்டில் எட்டியிருந்தது. ஆகையால் அவள் கேட்டாள்: “வாஸப்! நீங்கள் என்னைப் பாதுகாப்பதாக உறுதி கூறியிருக்கிaர்கள் - நினைப்பிருக்கிறதா?” என்று.

“நினைப்பை அத்தனை எளிதில் மறக்கும் நிலைக்கு இன்னும் வாஸப் வரவில்லை” என்று மிகுந்த வணக்கம் தொனித்த குரலில் கூறினான் அப்துல்லா. பிறகு இளம்பரிதியை நோக்கி, “நீ இனிமேல் அரசகுமாரியை சுமக்க வேண்டிய அவசியமில்லை. கீழே விட்டுவிடலாம்” என்று கூறிப் புன்முறுவலும் கொண்டான்.

இளம்பரிதியின் முகம் சிறிதே சிவந்தது காரணமில்லாமல். மெள்ள அரசகுமாரியைக் கீழே இறக்கினான் தனது கைகளிலிருந்து. அரசகுமாரியும் பூமியில் கால் பட்டவுடன் சிறிது அசைந்து கலைந்த தனது ஆடைகளை சீர்திருத்திக் கொண்டாள். அவள் ஒரு நிலைக்கு வந்த பிறகு இளம்பரிதியை நோக்கினாள். “உங்கள் நண்பரிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது” என்றும் சொன்னாள்.

இளம்பரிதியின் கண்களில் சினம் துளிர்த்தது. “மறைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டான் சினம் குரலில் ஒலிக்க.

“பல விஷயங்கள் இருக்கின்றன. நான் அரச குலத்தவள் என்பதை முத்திலிருந்து இருவரும் ஊகித்துக் கொண்டீர்கள். ஆனால் அரசருக்கு நான் என்ன சொந்தம் என்பது தெரியாது உங்களுக்கு பாண்டிய ராஜகுமாரி என்ற பட்டம் பாண்டிய ராஜவம்சப் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும். ஆகவே, நான் திட்டமாக யார் என்பது உங்களுக்குத் தெரியாது. இரண்டாவது, என்னைத் துரத்தி வந்தவர்களைத் தூண்டியது யாரென்பது தெரியாது. மூன்றாவது, இனிமேல் எதிர்ப்படவிருக்கும் அபாயம் இப்பொழுது நிகழ்ந்ததைவிடப் பன்மடங்கு அதிகமானது என்பதும் உங்களுக்குத் தெரியாது.” என்று விவரித்தாள் அந்தப் பெண்.

“அப்படியானால் உன் பெயரென்ன?” என்று வினவினான் இளம்பரிதி.

“அவளை எதுவும் கேட்க வேண்டாம்” என்று இளம்பரிதியை அடக்கிய வாஸப், தனது புரவியை நோக்கிச் சென்று, அதில் தொங்கிக் கொண்டிருந்த தோற்பையிலிருந்து பெரிய படுதாவொன்றை எடுத்து வந்து இளம்பரிதியிடம் நீட்டி, இளம்பரிதி! இதைக் கொண்டு அரசகுமாரி மீது போர்த்திவிடு.

(தொடரும்)

அவள் பர்தா அணிந்தவளாக நம்முடன் வரட்டும். யாரும் அவளை அபகரிக்கவோ அவளுக்குத் தீங்கிழைக்கவோ முன்வரமாட்டார்கள் என்றான்.

அந்தப் படுதாவை அரசகுமாரியை கைநீட்டி வாஸப்பிடமிருந்து வாங்கிக் கொண்டாள். அதைத் தன்மீது தலையிலிருந்து கால்வரை போர்த்திக் கொண்டாள். அடுத்து அப்துல்லாவின் ஆணை எழுந்தது. “இளம்பரிதி! அவளை உன் புரவிமேல் ஏற்றிவிடு. நீ கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நடந்து வா” என்றார். பிறகு அப்துல்லா தனது இரு அடிமைகளுக்கும் கண்களால் ஏதோ ஜாடை காட்டினான். அதைத் தொடர்ந்துஇரு அடிமைகளும் சற்று எட்டக் கிடந்த பாண்டிய வீரர் சடலங்களை அணுகி, தங்கள் வாள்களால் அவர்கள் தலைகளைத் துண்டித்து எடுத்து உருட்டிவிட்டார்கள். பிறகு தங்கள் ஒட்டகங்களில் ஏறிக்கொண்டார்கள்.

இளம்பரிதி அரசமகளைத் தனது புரவிமேல் ஏற்றி உட்கார வைத்தான். புரவியின் கடிவாளங்களையும் கையில் பிடித்துக்கொண்டான். அப்துல்லா வாஸப் சிறிது நேரம் ஏதோ சிந்தித்துவிட்டுத் தன் புரவியில் ஏறிக்கொண்டு அரசகுமாரியின் புரவிக்கருகே வந்தான். “அரசகுமாரி! அப்துல்லா ஆபத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்லன்; அதனால் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிaர்களா?” என்று வினவினான். அரசகுமாரியின் குரல் படுதாவுக்குள்ளிருந்து வந்தது. “சிவந்த பெரும் புரவிமீது வீரன் யாராவது வந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கூறினாள் அரசகுமாரி.

“சரி அரசகுமாரி” என்ற அப்துல்லா, பயணத்தைத் துவங்கலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையால் சைகை செய்தான். இரு புரவிகளும் இரு ஒட்டகங்களும் நகர்ந்தன மெதுவாக. அடுத்து இரண்டு நாட்கள் எந்தவிதத் தொல்லையுமில்லை அவர்களுக்கு. யாரும் தென்படவும் இல்லை. ஆனால் மூன்றாவது நாள் தோன்றினான் சிவந்த பெரும் புரவிமீது ஆரோகணித்து வந்த ஒரு பெரிய வீரன். அவன் உடல் முழுவதையும் இரும்புக் கவசம் மறைத்திருந்தது. புரவியை மிக மெதுவாக செலுத்திக்கொண்டு வந்தான். அவர்களை நோக்கி நேராக வந்தவன், சிறிது தூரத்திலேயே புரவியை நிறுத்தி, “அவளை அழைத்துப் போக வந்திருக்கிறேன்” என்று கூறி புரவியிலிருந்த வண்ணம் தனது வலதுகையை உயர்த்திப் படுதாவுக்குள் இருந்த அரசகுமாரியைச் சுட்டிக்காட்டினான்.

தரையில் உட்கார்ந்திருந்த நால்வரில் அப்துல்லா வாஸப் அசையவில்லை. “அழகுடன் எப்பொழுதும் ஆபத்தும் வருகிறது” என்று மெதுவாகச் சொன்னான். இளம்பரிதியின் கை அவன் வாளை நோக்கிச் சென்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.