புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
மனித வாழ்வுக்கு தீங்கு இழைக்கும் புகைத்தல் பழக்கம்

மனித வாழ்வுக்கு தீங்கு இழைக்கும் புகைத்தல் பழக்கம்

உலகிலே வாழும் உயிரினங்களான மிருகங்கள், பறவைகள் மற்றும் பிராணிகள் தமக்கு இறைவன் அளித்த ஊணையும் தீனையும் உண்டு மகிழ்ச்சியோடு வாழ்கின்றன. உணவுத் தேவைக்கு அப்பாற்பட்ட தீய பழக்க வழக்கங்கள் இந்த உயிரினங்களுக்கு இல்லை. அதனால் அவற்றுக்கு நவீன வைத்திய வசதிகளும் சிகிச்சைகளும் மருந்துகளும் தேவைப்படுவதில்லை. ஆனால் பகுத்தறிவோடு படைக்கப்பட்ட மனிதன் தனது வாழ்வின் தேவைக்கு அப்பால் சென்று வலிந்து தேடிக் கொண்ட புகைத்தல், மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களால் தனக்கே தீமையைத் தேடிக் கொள்கிறான். புகைப்பதற்கும் மது அருந்துவதற்கும் அடிமையாகிவிட்ட மனிதன் தனது அகால மரணத்துக்கு அழைப்பு விடுக்கின்றான். தனது வீட்டாரையும் தன்னோடு சேர்த்து வாழ்பவர்களையும் கூட தனக்குத் துணையாகச் சாவுக்கு அழைத்துச் செல்கிறான்.

தற்செயலாகப் புகையிலையைக் கண்டவர்கள் அதைக் காயவைத்துப் புகைத்துப் பார்த்தபோது உடலிலே ஏற்பட்ட சில மாற்றங்கள் உற்சாகத்தை அளித்ததால் மீண்டும் மீண்டும் புகையிலையைச் சுருட்டிப் புகைத்தனரட அதனால் ஒருவித உற்சாகம் பெற்றனர். அந்தப் புகைத்தல் பழக்கம் நாடெங்கும் பரவி உலகளாவிய ரீதியில் மக்கள் புகைத்தலுக்கு அடிமைப்படும் சாபக்கேட்டை ஏற்படுத்தி இருக்கிறது. நவீன விஞ்ஞான ஆய்வுகள் முன்னேற்றமடையாத காலத்திலே தொடங்கிய இத்தீய பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் தற்காலம் கண்டறியப்பட்டுள்ளன.

ஏலவே அபிவிருத்தியடைந்த நாடுகளே புகைத்தலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. மத்திய வலய நாடுகளிலுள்ள காலநிலை குளிராக அமைந்ததால், உடம்பைச் சூடாக்கிப் பேணவும், உற்சாகத்தைப் பெறவும் புகைத்தல் பழக்கம் அவர்களுக்கு உதவியது. ஒருவித ஊக்கியாக புகையிலையில் உள்ள சாறும் பயன்பட்டது. எனினும் காலப்போக்கில் மேற்கத்தேய நாடுகளில் புகைத்தலால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் பட்டறி அனுபவங்களாக கண்டறியப்பட்டன. இதனால் மேற்கத்தேய நாடுகள் புகைத்தலினால் ஏற்படும் தீமைகளை ஆய்வு செய்து அறிந்தன.

புகைத்தலை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் காரணமாக இந்நாடுகள் புகைத்தலை குறைப்பதற்கும், அடியோடு புகைத்தலை விடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. புகைக்கும் பழக்கம் மக்களிடையே குறைவடைந்த போது அபரிமிதமாகச் சிகரெட்டை உற்பத்தி செய்து இலாபமீட்டி வந்த சிகரெட் உற்பத்தியாளரின் வருவாய் பாதிக்கப்படவே அக்கம்பனிகள் வளர்முக நாடுகளை நோக்கித் தமது விற்பனையை ஆரம்பித்தன. இதன் காரணமாக ஏதும் அறியாத வளர்முக நாட்டு மக்கள் புகைத்தலுக்கு அடிமையாகித் தமது வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றனர்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் புகைத்தலுக்கு ஆளாகிப் பலியாவதைத் தடுக்க ‘உலக புகையிலை எதிர்ப்பு இயக்கம்’ புகைத்தலுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புகைத்தல் காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல்கலைக்கழகப் பேராசிரியர்களான டாக்டர் இந்திரகுமார் அவர்களும் டாக்டர் முகியிடீன் அவர்களும் இணைந்தெழுதிய “இதய நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்” எனும் சிறப்பு மிக்க நூலிலே அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கவை. மூப்படைவதற்கு முன் மரணத்தை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.

புகைப்பவர்கள் 50 சதவீதமானோர் இப்பழக்கத்தால் இறக்கின்றனர். உலகில் ஒரு பில்லியன் ஆண்களும் 250 மில்லியன் பெண்களும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நமது இலங்கையிலே ஆண்களுள் இருவருள் ஒருவர் புகை பிடிக்கிறார். அதிர்ஷ்டவசமாக பெண்கள் புகைப்பது மிக அரிது.

தொடர்ச்சியான புகைத்தல் புற்றுநோய், இருதயநோய், மார்புச்சளி முதலிய பல்வேறு பாரதூரமான நோய்களைத் தோற்றுவிக்கின்றன. புகைத்தல் இருதய நோய்க்கான அபாயத்தை இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகரிக்கிறது. புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கை, சுவாசிக்கும் ஆழத்துக்கேற்ப அபாயத்தன்மை வேறுபடுமாயினும் இருதய நோயினால் சடுதியாக இறப்பதற்குப் புகைத்தலே காரணமாகிறது. புகையிலையில் இருந்து வெளியேறும் புகையில் 4000க்கும் அதிகமான தீமை தரும் பதார்த்தங்கள் உண்டு. இவற்றுள் நிக்கொட்டின் காபனோரொட்சைட் (விo2) என்பனவே பாரிய தீங்கை விளைவிப்பவை. நிக்கொட்டின் என்பது இதயத்துடிப்பை அதிகரிப்பதுடன் குருதியமுக்கம், இதயத்தின் வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்வதுடன் புகைத்தலுக்கு அடிமையாகும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புகையிலையில் இருந்து வரும் புகையில் காபனோர் ஒட்சைட் வாயுவாக வெளியேறுகின்றது. வாகனப் புகையில் வெளியேறுவதும் காபனோர் ஒட்சைட்தான். இது குருதியோடு செல்லும் ஒட்சிசனை அகற்றிவிட்டு ஈமோ குளோபினுடன் இணைவதால் உடலின் முக்கிய அங்கங்களுக்கு வேண்டிய ஒட்சிசன் தடைப்படுகின்றது.

புகைத்தலால் குருதிச் சிறுதட்டுக்கள் ஒட்டுதலடையும் போது குருதி உறையும் தன்மை அதிகரிக்கிறது. மேலும் புகைத்தலால் குருதியிலுள்ள கொலஸ்ரோல் அதிகரிப்பதுடன் சுயாதீன கொழுப்பமிலங்களும் அதிகரிப்பதாக இந்த வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிகொட்டின் என்பது அற்ககோல் மற்றும் ஹெரோயின் போன்று புகைப்பவரை மேலும் புகைக்கத் தூண்டுகின்றது. பீடி, சுருட்டு, சுங்கான் என்பவையும் புகையிலைப் பாவனையே என்பதால் அவற்றினாலும் தாக்கங்கள் உண்டு.

புகைப்பவருக்குப் பக்கத்தில் இருப்பவரும் பாதிப்புக்குள்ளாகி இருதய நோய், புற்று நோய் இவர்களுக்கும் ஏற்படுகின்றது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியரான டாக்டர் இந்திரகுமார் அவர்கள் உங்கள் இருதயத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். எனும் தனது சுக நல வாழ்வுக்கான பெறுமதி மிக்க நூலிலே புகைத்தலால் ஏற்படும் உயிராபத்துப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

புகைபிடித்தல் உங்களை விரைவாகக் கொல்லும். இருதயத் தாக்குதல்களுக்கும் மூளைத் தாக்குதல்களுக்கும் பிரதான காரணி புகை பிடிப்பதே. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4 இலட்சம் மாணவர்கள் புகைபிடித்தலால் பாதிப்புறுகின்றனர். உலகில் இதயத் தாக்குதல்களுக்குப் பின்னர் வரும் இரண்டாம் தாக்குதல் மரணத்தை ஏற்படுத்துமாயினும், தாக்குதலுக்குட்பட்டவர் புகையை விட்டால் மரணம் வரும் காலம் நீடிக்கலாம். புகையை விடாமல் தொடர்வாராயின் இரண்டாம் இதயத்தாக்கம் மிக விரைவில் சம்பவிக்கும். சிகரெட் புகைத்தல் சுவாசப்பைப் புற்று நோயை ஏற்படுத்துகின்றது. பீடி, சுருட்டு, சுங்கான் புகைப்பவர்களும் புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்துப் பாவிப்போரும் புகையிலையைப் பொடியாக்கித் தூள் பாவிப்போரும் கூட உயிராபத்தை விலைக்கு வாங்குகின்றனர் என்பது பேராசிரியர் அவர்களின் கூற்றாகும்.

புகையிலை மூலம் ஆக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு, சுங்கான் போன்றவற்றின் புகையில் கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைக்கு அடிமையாக்கும் நிக்கொட்டின் உள்ளது. அது மூளையில் உள்ள சில பகுதிகளைத் தூண்டி விடும். புகைத்தலை நிறுத்தியவுடன் நிக்கொட்டினைத் தேடித் தவிக்கும் நிலையை ஏற்படுத்தும். அத்தகைய தேடுதலைப் பொருட்படுத்தாமல் விடும்போது நிக்கொட்டின் இல்லாமலே இயங்க மூளை பழகிவிடும்.

கட்டுப்பாடற்றவர்கள் தான் புகைக்கு அடிமையாகி வாழ்வைக் கெடுத்துக் கொள்வதாக இம்மருத்துவப் பேராசிரியர் விளக்குகிறார்.

இத்தகைய விளக்கங்களின்படி வீட்டில் இருந்து சிகரெட் குடிக்கும் கணவர் தன் மனைவி, பிள்ளைகள் அயலவரையும் சிகரெட் புகைப் பாதிப்பால் நோய்வாய்ப்படச் செய்கிறார். அவர், தானும் மரணத்தை நோக்கிச் செல்கிறார். வீட்டில் உள்ளவர்களையும் தனக்குப் பின்னால் மறுலோகம் வரும்படி அழைக்கிறார். காரியாலயத்தில் புகைப்பவர் தானும் படிப்படியாக அழிவதுடன் உடன் இருப்பவரையும் அழிக்கிறார். பொது இடங்கள், வாகனங்களில் புகைப்பவர்கள், தம்மோடு மற்றவர்களையும் நோய்வாய்ப்பட வைக்கிறார். இந்த வகையிலே புகைப்பவர் ஒரு சமூக விரோதியாகவும் நோய் காவியாகவும் தொழில்படுகிறார் என்று கூறலாம். எனவே மருத்துவக் கூற்றுக்களை மனத்திலெடுத்துப் புகைத்தலை விட வேண்டிய கடமை புகைப்பவர்களுக்கு உண்டு.

நமது நாட்டிலே புகைத்தல் - மதுபான ஒழிப்புத் தொடர்பான சட்டம் 2006 டிசம்பர் முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. புகைத்தல் சட்டத்தை மீறுவோருக்கெதிரான வழக்குகளில் வருடா வருடம் பல இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டாலும் புகைத்தல் மறைமுகமாகவே இருந்து வருகிறது.

வேலைத்தளங்கள், உணவு விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் பொது வாகனங்களில், புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் புகைப்பதால் அருகில் உள்ள பலரும் புகையைச் சுவாசித்து நோய்வாய்ப்படுவதை புகைப்பவர்கள் உணரக் கூடியதாக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை சுகாதார அமைச்சு நடத்தி வருகின்றது.

“போதைப் பொருளுக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி” எனும் மஹிந்த சிந்தனைக் கோட்பாடுகளுக்கமைவாக சுகாதார அமைச்சு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.

புகைத்தல் பழக்கமும் போதைப்பாவனையும் அற்ற ஸ்ரீலங்காவைக் காண வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கனவாகும். சில ஆண்டுகளுக்கு முன் பாங்கொக்கில் நடைபெற்ற புகைத்தல் ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் 146 நாடுகள் புகையொழிப்பை ஏற்றுக்கொண்டன.

புகை பிடிப்பதால் ஏற்படும் ஆரோக்கியத்துக்குப் பாதகமான தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டி உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகை ஒழிப்புப் பிரிவின் தலைவர் அறிவுரைகளை வழங்கியுள்ளார். உலகில் 700 மில்லியன் சிறுவர்கள் புகை பிடித்தலுக்கு அடிமையாகியுள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தேய நாடுகளில் புகை பிடிக்காதோர் தொகை பெருகி வருவதால் புகையிலை கம்பனிகள் ஆபிரிக்க நாடுகளையே முற்றுகையிட்டு வியாபாரமும் நடத்துகின்றன. மிகச் சிறிய நாடான லாவோசில் 6.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அந்த நாட்டிலே 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எனவே புகைத்தலால் ஏற்படும் அபாயங்களில் இருந்து மீட்க, இன, மத, அந்தஸ்துப் பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்போம். புகைத்தலை அறவே விடுவோம். புகைத்தல் அற்ற புதிய தாய்நாட்டை உருவாக்குவோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.