புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
காச நோயைக் கட்டுப்படுத்த

காச நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனம்

உலகளாவிய ரீதியில் மனிதரின் உயிரைப் பறிக்கும் முக்கிய நோய்களில் காசநோயும் ஒன்றாகும். மனித நாகரிகம் தொடங்கிய காலம் முதல் இந்நோயின் தாக்கம் தொடர்கிறது. சுமார் 18 ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த இந்நோய் மிருகங்களிலிருந்து மனிதருக்குத் தொற்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர். எகிப்திய பிரமிட்டுக்களில் வைக்கப்பட்ட கெடாத பதனப்படுத்தப்பட்ட பிணங்களில் (Mummies) இந் நோயை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். ரியுபர் குளோசிஸ் (Tuberculosis) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படும் கிப்போகிரேடிஸ் இந்நோய் மிகவும் வேகமாக பரவி மரணத்தை ஏற்படுத்தியதைக் கண்டார். இது உடலுக்குள் இருந்து கொண்டு உள் உறுப்புக்களை மெதுவாகத் தாக்குவதால் இதைச் சுட்டெரிக்கும் நோய் (|Cunsumption) என்றே முன்பு அழைத்தனர்.

இது முதலில் நுரையீரல் தாக்கத்தை ஏற்படுத்தி (Pulmonary Tuberculosis) உரிய சிகிச்சை அளிக்காவிடில் உடலின் ஏனைய உறுப்புக்களையும் பாதிக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றும் போதுதான் இந்நோய் தாக்குகிறது. இதனால்தான் சிலரின் உடலுக்குள் காச நோய் பக்டீரியாக்கள் உட்சென்று இருந்தும் அவர்களை நோய் தாக்குவதில்லை. இதை வளர்ச்சியுறாத காநோய் (Latent TB) என அழைப்பர்.

உலக சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் (02 மில்லியன்) இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விநாடியும் ஒருவர் இந்நோயின் தொற்றுக்கு ஆளாகிறார். ஒவ்வொரு 15 விநாடியும் ஒருவர் இந்நோய் காரணமாக மரணமடைகின்றார். வருடம் தோறும் 8 முதல் 10 மில்லியன் புதிய நோயாளர்கள் இனம் காணப்பட்டு இரண்டு மில்லியன் பேர் மரணமடைகின்றனர்.

காச நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த செயல்திட்டங்களைக் கொண்ட நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை இனம் காணப்பட்டுள்ளது. இங்கு 100,000 பேரில் 89 பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 11,000 பேர் சிகிச்சை பெற்று 400 பேர் மரணமடைகின்றனர். 2011 ஆம் ஆண்டு 10329 காச நோயாளர்கள் இனம்காணப்பட்டனர். 80 சதவீதமான காச நோய் நுரையீரலில் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில் இது படிப்படியாக ஏனைய உறுப்புக்களையும் தாக்கும். கண், காது, மூளை, தண்டுவடம், முதுகெலும்பு, எலும்பு, கல்லீரல், இரைப்பை, உணவுக்குழாய், சிறுநீரகம், இருதயம், அதிரீனல் சுரப்பி (Adrenal Gland) நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, பாலுறுப்புக்கள், தோல், மூட்டுக்கள் போன்றவற்றையும் இந்நோய் பாதிக்கும் இருதயத்தைத் தாக்கினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். பாலுறுப்புக்களில் ஏற்படும் நோய் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

87 சதவீதமான காச நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே காணப்படுகின்றனர். கடந்த ஆண்டு 2012 இல் இங்கு 2096 பேர் இனம் காணப்பட்டனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வின்மையே இந்நிலைக்குக் காரணமாகும். சூரிய ஒளி மற்றும் காற்றோட்டமில்லாத வதிவிடம், சிறிய வீட்டில் அதிகமானோர் வசிப்பது இந்நோய் தொற்ற ஏதுவாக இருக்கிறது. நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து தினமும் 400,000 பேர் கொழும்பு மாநகரத்திற்குள் வருகின்றனர். இவர்கள் இங்கு இந்நோயின் தொற்றுக்கு ஆளாகி ஊர் திரும்பி அங்குள்ளோருக்குத் தொற்றை ஏற்படுத்துகின்றனர். 15 வயது முதல் 55 வயது வரையானவர்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பரம்பரை நோயல்ல. இது ஏனைய மிருகங்கள், பூச்சிகள், நுளம்புகள் மூலம் பரவாது. இது தடுக்கக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதுமான ஒரு நோயாகும். இந்நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், அதிகமானோர் நோய் முற்றிய கட்டத்திலேயே மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெறச் செல்கின்றனர். சிலர் வெட்கம் காரணமாக மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்குப் போவதில்லை. இன்னும் சிலர் கொடுக்கப்பட்ட மருந்தை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டபடி எடுப்பதில்லை. சிறிது குணம் தென்பட்டவுடன் மருந்தை விட்டு விடுகின்றனர்.

இதனால் மீண்டும் நோய் தலைதூக்கும். இப்படி நோய் மீண்டும் ஏற்பட்டபின் சாதாரணமாகக் கொடுக்கப்படும் மருந்துகள் திறன் அற்றதாகிவிடும். இதனால் நோய் குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படும்.

முன்பு பலர் காசநோய் என்றதுமே பீதியடைந்தனர். ஆனால், இன்று அந்நிலை மாறிவிட்டது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 24ஆம் திகதி உலக காசநோய் எதிர்ப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு மக்களிடையே இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமையே இதற்கு முக்கிய காரணமாகும். இந்நோய் ஏற்பட்டால் ஆறு மாதங்களில் பூரணமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என மக்கள் அறிந்திருக்கின்றனர். ஏனைய நோய்களைப் போலன்றி காசநோய் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதொரு நோயாகும்.

2000 ஆம் ஆண்டளவில் இந்நோய் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. எனினும், போஷாக்கு குறைபாடு, வறுமை, எச்.ஐ.வி. எயிட்ஸ் அதிகரிப்பு காரணமாக இந்நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது. எயிட்ஸ் நோயாளர்களில் ஐந்தில் ஒருவர் காச நோய் காரணமாகவே மரணமடைகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்தாவிடில் அடுத்த இருபது வருடங்களில் உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு பில்லியன் பேர் புதிதாக இந்நோயின் தொற்றுக்கு ஆளாவர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும், உலகளாவிய ரீதியில் 2050 ஆம் ஆண்டில் இந்நோயைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் நம்புகிறது.

1882ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி இந்நோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை ஜேர்மன் நாட்டு மருத்துவர் ரொபட் கொக் கண்டுபிடித்தமை பற்றி அறிவித்தார். இதனால் தான் அத்தினத்தில் உலக காச நோய் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இக் கண்டுபிடிப்பு அக்காலத்தில் காச நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவியது. இவ் அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1905ஆம் ஆண்டில் நோபல் பரிசு கிடைத்தது.

காசநோய் (Tuberculosis) அல்லது TB என்ற பயங்கரமான தொற்று நோய் மைகோபக்டீரியம் டியுபர் குளோசிஸ் (Mycobacterium Tuberculosis) என்ற பக்டீரியா நுண் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் தொற்றிய ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது. தொற்றுக்கு உள்ளாகியவர்களில் பத்து சதவீதமானோருக்கே முற்றிய நோய் ஏற்படும். இவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை அளிக்காவிடில் ஐம்பது சதவீதமானோர் மரணமடைய நேரிடுகிறது. இந்நோய்க்கான தடுப்பூசியான பிசிஜி (BCG) மருந்து 1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நுரையீரலுக்குள் மண், தூசி, சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு நோய், புகைத்தல், மது, போதைப்பொருள் பாவனை, சுண்ணாம்புச் சத்து குறைபாடு, விட்டமின் டி குறைபாடு, வாத நோய், எயிட்ஸ், இருதய நோய், கல்லீரல் புற்று, இரத்தப்புற்று, வீரியமிக்க மருந்துகள், உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை, நுரையீரல் வியாதிகள் போன்றவை காச நோயை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன.

நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியமையே இதற்கு காரணமாகும். போசாக்குக் குறைபாடு போதிய கல்சியம் அடங்காத உணவு, பழைய மற்றும் அமில உணவுகள், தவறான சேர்மானம் அடங்கிய உணவுகள், மாப்பொருட்களுடன் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடல், வயிற்றில் புளிப்பு, மன உளைச்சல், விந்து விரயம் மூலம் சக்தி இழத்தல், வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத வீடுகளில் வசித்தல், குளிர், போதிய உறக்கமின்மை, உட்கார்ந்து கொண்டே பெருமளவு, நேரத்தைக் கழித்தல், அளவுக்கு மீறிய வேலை, பழுதான பால், தேனீர், காப்பி, போத்தலில் அடைத்த மென்பானங்கள் அதிகம் பருகல் போன்றவை காரணமாகக் காச நோய் ஏற்படும். போதிய ஒட்சிசனெதிரிகள் அடங்காத உணவுகளை உட்கொள்ளுதல் காசநோயை ஏற்படுத்தும். ஒட்சிசனெதிரிகள் காச நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவையாகும்.

உணவுகள் மூலமும் காச நோய் ஏற்படுகிறது. மாமிசம் உட்கொள்வோரை விட மரக்கறி உணவுகள் உட்கொள்வோருக்குக் காச நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு. மரக்கறி உணவுகளில் இரும்புச் சத்து, விட்டமின் கி12, விட்டமின் ளி போன்ற குறைவு, விட்டமின் ளி குறைபாடு காசநோயை ஏற்படுத்தும்.

நெஞ்சுநோ, இருமும் போது சளி, நுரை ஈரலின் அடியிலிருந்து வெளிவரல், சளியில் இரத்தம் காணப்படல், மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், காய்ச்சல், நடுக்கம், அஜீரணம், இரவில் அதிகமாக வியர்த்தல், பசியின்மை, எடைகுறைதல், மூச்சு விடக்கஷ்டம், வெளிறிய முகம், சோர்வு, களைப்பு, தோள்பட்டையில் நோ என்பன நுரையீரல் காச நோயின் அறிகுறிகளாகும். 90சதவீதமான காச நோயாளர்களிடம் எவ்வித அறிகுறிகளும் தென்படாது.

டியுபகிள் பசிலஸ் என்ற காச நோயை ஏற்படுத்தும் பக்டீரியா ஒரு காச நோயாளி இருமும் போதும், தும்மும் போதும் கதைக்கும் போதும், முத்தமிடும் போதும், பாடும் போதும், புல்லாங்குழல் வாசிக்கும் போதும், வெளிப்படுகிறது. இது சுகதேகியின் வாய் மூக்கு வழியாக உட்சென்று நுரையீரலில் தங்கி இருக்கும். பின் மெதுவாக மில்லியன் கணக்கில் பெருகி சிறு கொப்பளங்களை நுரையீரலுக்குள் ஏற்படுத்தும். இதையே டியுபாகுளோசிஸ் என்பர். இக்கட்டத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிடில் நோய் முற்றி மீண்டும் இவர்மூலம் நோய் பரவும். இந்நோயை ஏற்படுத்தும் பக்டீரியா சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் மரணிக்காமல் காற்றில் மிதக்கும் சக்தி கொண்டவையாகும். நோயாளி தும்மும் போது இக் கிருமி நீண்ட தூரம் காற்றில் மிதந்து செல்லும். எனவே, நோயாளி தும்மும் போதும், இருமும் போதும் முழங்கையை மடித்து அதற்குள் தலையை வைத்து கீழே குனிய வேண்டும் அல்லது கைக்குட்டை பாவிக்கலாம். நோயாளியின் பக்கத்தில் இருப்போரும் கைக்குட்டையால் வாய், மூக்கை மூடவேண்டும், அவ்விடத்திலிருந்து அகல வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் நோய் தொற்றுவதை ஓரளவு தவிர்க்க முடியும்.

ஏற்கனவே குறிப்பிட்டவாறு இந்நோய் தடுக்க கூடியதும் பூரணமாகக் குணப்படுத்தக்கூடியதாகும். காசநோயின் ஆரம்ப அறிகுறிகளை அவதானித்து மார்பு நோய் சிகிச்சை நிலையம் சென்று எச்சிலைப்பரிசோதனை செய்து தாமதியாது உரிய சிகிச்சை பெறவேண்டும். மேலும், அவரின் வீட்டிலுள்ளோரும் இந்நோய் ஏற்படும் அபாயத்தைக் கொண்டோரும் இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகப்படுவோரும் அவர்களுடன் தொடர்புடையோரும் இப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். பி.சி.ஜ. (கிவிமி) தடுப்பு மருந்து ஏற்றி சிறார்களை இந்நோய் தொற்றாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் இந்நோய் தாக்காதவாறு பாதுகாக்கும். நாம் உட்கொள்ளும் சில உணவுகளில் அடங்கியுள்ள ஒட்சிசனெதிரிகள்,நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து காசநோய் ஏற்படாது தடுப்பதோடு ஏற்பட்ட பின்பும் விரைவில் குணப்படுத்தும் சக்திவாய்ந்தவை. வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் உள்ள ஒட்சிசனெதிரிகள் போர்வீரர் போன்று காசநோய் பக்டீரியாக்களுடன் போராடி அவற்றை அழித்து நோய் ஏற்படாது பாதுகாக்கும் வல்லமை கொண்டமையாகும். நோய் ஏற்பட்டபின்பும் விரைவில் குணப்படுத்தும். நோய் மீண்டும் தாக்காதவாறு பாதுகாக்கும். காசநோய்க்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முன் காசநோய்க்கு வெங்காயம் மருந்தாகப்பயன்படுத்தப்பட்டது என்றால் மிகையாகாது. (தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.