புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
அரைச் சொகுசு பஸ்களில் மக்கள் படும் முழு அவஸ்தைகள்

அரைச் சொகுசு பஸ்களில் மக்கள் படும் முழு அவஸ்தைகள்

“நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த எங்களது பஸ் வண்டி திடீரென உறுமியது. சாரதி சடசடவென கியர்களை மாற்ற வேகம் பன்மடங்கானது. இருளை கிழித்துக் கொண்டுவரும் ஒளி வெள்ளங்களாக தோன்றி மறைந்தன எதிர்ப்பட்ட வாகனங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் யாழ்ப்பாணம் போய்விடலாம் என்று பேசிக் கொண்டிருந்த என் நண்பர் “இப்படி ஓடினான் எண்டால் காலமை 6 மணிக்கு முன்னமே யாழ்ப்பாண ரவுண் வந்துடும்” என்று புளுகமாக கூறினார்.

உண்மைதான் நாம் சென்ற பஸ் வண்டி புயல் வேகமெடுத்துக்கொண்டு சாலையில் சீறியது. அது சென்ற வேகத்தில் யன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு காற்று உள்ளே வந்து விடுமோ என்று எண்ணத் தோன்றியது. யன்னல் ஓரத்தில் தொங்கிய திரைச் சீலைகள் படபடக்க தொடங்கின. அவை காற்றில் பறந்து கன்னத்தில் மோதுகையில் கடும் உழைப்பாளி ஒருவர் விம்மி புடைத்து காய்த்து மரத்த தன் வலிய கரங்களால் அறைவது போல் வலித்தது. வலி தாங்க முடியாத அச் சீலைகளை மடக்கி பிடித்து சுருட்டிக் கட்டி தலைக்கு மேல் இருந்த கம்பிகளிடையே சொருகிவிட்டோம்.

இத்தனைக்கும் நாம் பயணித்த பஸ்ஸின் இயந்திரம் சளைக்காமல் வெடித்துக் கொண்டிருந்தது. நடத்துனர் பஸ் வண்டியில் இருந்த சீடி பிளேயரை இயக்கி சத்தத்தை உயர்த்தி விட்டார். அந்த பைலா பாட்டு சத்தம் செவிப்பறைகளை அதிரச் செய்தது.

நத்தை வேகத்தில் நகர்ந்த எங்களது அரைச்சொகுசு பஸ்வண்டி இத்தனை வேகம் எடுக்க காரணமாக இருந்தது ஒரு தொலைபேசி அழைப்புத்தான்.

சாரதிக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றையடுத்து தான் நாம் சென்ற பஸ்ஸின் நிலைமை இத்தனை மாற்றம் கண்டது.

ஆம், உண்மைதான் கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையே சேவையில் ஈடுபடும் அரைச் சொகுசு பஸ்கள் பல தொலைபேசி அழைப்புகள் ஊடாக இணைக்கப்பட்டுத்தான் சேவையில் ஈடுபடுகின்றன.

பஸ்களில் ஆட்களை நிரப்பும் வரை பஸ்களின் சாரதிகள் தாம் நிற்கும் இடம், நகரும் வேகம், இன்னும் ஏற்ற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கை, முன்னே செல்லும் பஸ் நகரும் இடம், அதற்கு அடுத்த பஸ் நகரும் இடம், பின்னே வரும் பஸ் எங்கே இருக்கிறது என்ற விடயங்கள் கைத்தொலைபேசி அழைப்புகள் ஊடாக குறித்த வழித்தட சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள், நடத்துனர்களிடையே பரிமாறப்படும்.

தொலைபேசிகள் ஊடாக பரிமாறப்படும் இந்த தகவல்கள் பஸ்களில் பயணிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஏற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். இது தவிர வீதிப் போக்குவரத்து பொலிஸார் எங்கு தரித்து நிற்கின்றனர். போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் எங்கு நிற்கின்றனர் போன்ற தகவல்களும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் ஊடாக பரிமாறப்படுகின்றன.

இது சாரதிகள் தமது இஷ்டத்துக்கு வேகத்தை கூட்டியும் குறைத்தும் பஸ்ஸை செலுத்தவும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் வசதியாக அமைகிறது.

உண்மையிலேயே அரைச் சொகுசு பஸ் பயணம் என்பது பயணிகளை பொறுத்தவரையில் முழு அவஸ்தை பயணமாகவே அமைகிறது. அரைச் சொகுசு எனப் பெயரிடப்பட்ட தனியார் பஸ்களில் பயணிகளின் செளகரியம் கவனிக்கப்படுவதே இல்லை.

எனினும் பயணிகள் வேறு வழியின்றி இந்த அரைச் சொகுசு பஸ்களை தெரிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அரைச் சொகுசு எனப் பெயரிடப்பட்ட இத்தகைய தனியார் பஸ்களில் ஏறி அவஸ்தைப்படுவதை விட சாதாரண பஸ்களில் செளகரியமாக பயணிக்க முடிகின்ற போதும் கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கிடையே சாதாரண தனியார் பஸ் சேவைகள் நடத்தப்படாமையினால் மக்கள் வேறு வழியின்றி இந்த அரைச் சொகுசு பஸ்களை நாட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறான அரைச் சொகுசு தனியார் பஸ்களில் பயணிப்போர் படும் அசெளகரியங்கள் சொல்லில் அடங்காதவை. குறிப்பாக, இத்தகைய தனியார் அரைச் சொகுசு பஸ்களின் ஆசனங்கள் பயணி ஒருவர் செளகரியமாக அமர்ந்து நீண்டதூரம் பயணிக்க ஏற்றவகையில் அமைக்கப்பட்டிருப்பதில்லை.

இந்த ஆசனங்கள் மிகவும் ஒடுக்கமானதாகவும் நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருப்பதனால் பயணிகள் செளகரியமாக அமர முடிவதில்லை. இவற்றில் மிதமிஞ்சிய நெருக்கம் காரணமாக பயணிகள் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு, நெருக்கிக் கொண்டு பயணிக்க வேண்டிய நிலையே காணப்படுகிறது.

நீண்ட தூர பயணத்தின் போது ஒரு பயணி தூங்க நேர்ந்தால் அருகில் இருக்கும் மற்றப் பயணி மீது சாய்ந்து விழும் நிலை காணப்படுகிறது. இது பஸ் பயணத்தில் சகஜமானது என்றாலும் நெருக்கமான ஆசன அமைப்பால் இந்த நிலைமை அசெளகரியத்தை மேலும் அதிகரிக்கிறது.

அதேபோல் பயணி ஒருவர் காலை நீட்டவோ மடிக்கவோ வசதியின்றி ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கமாக ஆசனங்கள் அடுக்கப்பட்டிருப்பதால் பயணத்தின் முடிவில் பஸ்ஸை விட்டு இறங்கும் பயணி நொண்டிக்கொண்டே வீடு செல்லும் நிலையே காணப்படுகிறது.

இத்தகைய பஸ்களில் ஒரு புறத்தில் மூன்று பயணிகள் அமரக்கூடிய ஆசனங்களும் மறுபுறத்தில் இரண்டு பயணிகள் அமரக்கூடிய ஆசனங்களும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இரு பயணிகள் என குறிப்பிடும் ஆசனங்களில் ஒரு பயணியும், மூன்று பயணிகள் என குறிப்பிடும் ஆசனங்களில் இரு பயணியுமே அமரக் கூடிய அளவில் இவற்றின் அளவு காணப்படும்.

எனினும் நிர்ப்பந்த அடிப்படையில் பயணிகள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலையே இத்தகைய பஸ்களில் காணப்படுகிறது.

இவை தவிர, இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதும் பஸ்ஸ¤க்குள் இருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் பயணிகள் நடத்துனர்களின் வைதல்களுக்கு இலக்காகி அவமானப்படுவதும் அரைச் சொகுசு என்ற வார்த்தையை நம்பி ஏறும் பயணிகள் படும் துன்பங்களில் அடங்கும்.

இதைவிட அளவுக்கு அதிகமான சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடுதல் பயணிகள் பஸ்ஸில் இருக்கின்றனர். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ளாமல் வேகமாக செல்லுதல், திடீர் என சடுதியாக பிறேக் பிடித்தல் உள்ளிட்ட சாரதிகளின் சாகசங்களாலும் பயணிகள் அசெளகரிய பட நேர்கிறது.

அரைச் சொகுசு என பெயரிடப்பட்டுள்ள இந்த தனியார் பஸ்களில் அதற்குரிய கட்டணம் அறவிடப்படுகின்ற போதும் பயணத்தில் எந்த செளகரியமும் கிடைப்பதில்லை. ஜன்னல் திரைச்சீலை, நெருக்கமாக அமைக்கப்பட்ட ஆசனங்கள், கறுப்புத்திரை போடப்பட்ட பக்க ஜன்னல் கண்ணாடிகள், பாடல் ஒலிப்பதற்கான கருவிகளை தவிர இந்த பஸ்களில் எதுவும் இருப்பதில்லை.

மேற்குறிப்பிட்ட இந்த விடயங்களும் பயணிகளை மேலும் அசெளகரியத்துள் தள்ளுவதாகவே அமைகின்றன.

குறிப்பாக, ஜன்னல்களுக்கு இடப்பட்டுள்ள திரைச்சீலைகள் தினமும் அல்லது ஒவ்வொரு பயணத்தின் முன்னரும் மாற்றப்படுவதில்லை. மாதக்கணக்கில் இவை கழுவப்படாது, மாற்றப்படாது துர்நாற்றம் வீசுபவையாகவே இருக்கும். மேலும் இதற்கு முன்னர் பயணித்த பயணி உமிழ்ந்த உமிழ்நீர், வெற்றிலை கறை, வாந்தி என்பனவும் அவற்றில் படர்ந்து காய்ந்து கிடப்பதை காண முடியும்.

இது தவிர பஸ் வண்டியில் ஒலிக்க விடப்படும் பாடல்கள் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் அதிக சத்தத்துடன் ஒலிக்க விடப்படுவது மேலும் அசெளகரியத்தை உருவாக்குகிறது.

மறுபுறத்தில், இரவு நேர உணவுக்காக பஸ் வண்டிகள் கடைகளில் நிறுத்தப்படும் போதும் மக்கள் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அநேகமான பஸ் வண்டிகள் தமக்கு சலுகைகள் கிடைக்கும் கடைகளை பார்த்து சாரதிகளால் நிறுத்தப்படுகின்றன. இக்கடைகளில் சாரதிகளுக்கு கொடுக்கும் சலுகைகளுக்காக பயணிகளிடமிருந்தே அதிக பணம் கறக்கப்படும்.

எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சாதாரண விலையைவிட அப்பொருளுக்காக குறைந்தது 10 ரூபாவையாவது அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் அரைச் சொகுசு பஸ்களில் ஏறும் பயணிகள் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்க நேருகின்றது.

இவ்வாறு பயணிகள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும் பயணிகளின் நலன்களைக் கவனத்தில் கொண்டு செயற்படும் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் சிலரும் உள்ளனர். எவ்வாறாயினும் பெரும்பாலான அரைச்சொகுசு பஸ்களில் பயணிகள் வதைக்கப்படுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

எனவே, தொடரும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட வேண்டும் பயணம் நிம்மதியாக அமைய வேண்டும் என்பதே பஸ் பயணிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.