புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

‘KAVITHAIMANJAREY’

உறவு

இருந்தாலும் உனக்கென்மேல் அதிக இஷ்டம்
இல்லாது விட்டால் ஏன் எனைத் தொடர்ந்து
வருகின்றாய்.... நிற்கின்றாய்... வந்து என்பின்
வாலாட்டிக் கொண்டென்னைத் தொடரு கின்றாய்
கரும்போநான் உனக்கு இந்தக் காதல் ஏன்...ஏன்...?
கற்றவரே தடுமாறி... தடயம் மாறி
இடம்மாறிக் கூடுகிறார், ஆனால் நீயோ
எப்போதும் தடுமாறா திருக்கின் றாயே!
***
தேவைகளைப் பூர்த்திசெய்யச் சிலர் வருவார்
சீனிகண்ட எறும்பாக அவர் தொடர்வார்
காவாலித் தனங்காட்ட ஒன்று சேர்வார்
காட்டெருமை போல்குதறி விட்டுப் போவார்
பாவம்நீ.... உன்னிடத்தி லுள்ள பாசம்
பதிலெதையும் எதிர்பாரா துனது நேசம்
யாவையுமே நானறிவேன்... எனக்கு ஏதும்
நடந்துவிட்டால்... நீசிலிர்த்துச் சிங்கம் ஆவாய்
***
எப்போதும் என்னோடே இருப்பாய்... எழுந்து
எங்கேநான் சென்றாலும் வருவாய், உன்னில்
தப்பில்லை... அஃதுனது பிறப்பியல்பு
தடுமாற்ற மில்லாத சிறப்பியல்பு
கைப்பற்ற நினைக்காத பாச உறவு
கைத்தடிபோல் எனைத் தொடரும் நீ இருக்க....
எப்போதும் சிறந்திடுவேன் என்றும், எங்கும்,
இணைந்தேநீ இருக்கையிலே வருமோ தோல்வி?
***
உன்னைப் போல் உறவொன்று சேர்ந்திருந்தால்...
உலகத்தில் தோல்வியென்ப தெவர்க்கும் இல்லை
உன்னோடு இருப்பதனால் என்னை விட்டு
ஓடி ஒதுங்கிப்போகும் ஊத்தை கள்பார்
கண்ணைப்போல் காக்கின்ற உறவொன் றேதான்
மானிடத்தைக் காக்கின்ற கவச மாகும்
எந்நாளும் எப்போதும் துன்ப மென்றே
எனக்கில்லை... நீ என்னோ டிருக்கின் றாய்ஓய்

மரணம்

நீ விடும் ஒவ்வொறு மூச்சும்
மரணத்தை நோக்கிய
ஒவ்வொறு கால் அடிகள்.

உன் ஒவ்வொறு பிறந்த நாளும்
உன் ஒவ்வொரு அழிவின்
மீதி நாட்கள்.

ஜெயவீரன்

விடுதலை கேட்கும் விழிகள்!

கூண்டில் வைத்த பழத்தைப் பார்த்தும்
களித்திட வில்லையே;
பச்சைக் கிளியும் கூண்டுக்குள்ளே
கண்ணீர் வடிக்குதே!

பச்சைப் புல்லை அள்ளிக் கொடுத்தும்
பயனே இல்லையே;
குட்டி மானும் கூண்டுக்குள்ளே
கண்ணீர் வடிக்குதே!

நித்தம் உணவை நீரில் போட்டும்
நாட்டம் இல்லையே;
தொட்டிக்குள்ளே சுற்றும் மீனும்
கண்ணீர் வடிக்குதே!

விடு! விடென்றே கெஞ்சும் பார்வை
அவற்றின் விழிகளில்
விடுதலை செய்தால் மகிழ்ந்தே
எங்களை வாழ்த்துமே!

- கல்லொளுவை பாரிஸ்

காட்டு மரம்

விடிகின்ற பொழுதில்
வெளிச்சம் இல்லையெனில்
என்பொழுது
விடியாமலேயே போகட்டும்

என்
இரவுகளுக்கு
ஒளியைப் பாய்ச்ச
மின்மினிகளே போதும்

சிணுசிணுத்த மழைக்கு
அஞ்சியவன்தான்
இன்று
சுனாமி அலைக்கே
துணிந்து நிற்கிறேன்

பருவம் பார்த்து முளைவிட
நான் ஒன்றும்
விதையல்ல
தானே விளைந்த
காட்டுமரம்

-எஸ்.எல்.எம்.ரிலா

பட்டாம் பூச்சிகளே

வான் மனக்கவி மழை
வஞ்சிப்புல் காகிதத்தில்
வடிக்கிறதே வண்ணப்
பேனையின் மைத்தூரிகைகளால்
எழுத்துக்கள் பூக்கிறதே - இந்த
எண்ணத்தில் கவிப்பூவாய்
பூக்களும் பூங்காவாய் ஆனதே
படித்த நீங்களும்- என்
கவிப்பூங்காவில் கண்ணால் நுகரும்
தேன் தனை பருகிய
பட்டாம் பூச்சிகளே
ஈரேழு லோக நாளில்
இனிதாக வாழ்ந்திடுவோம்
வாழ்நாளில் வண்ணக்கனவுடன்

- கா. காயசிறிதேவி

தினமும் சுதந்திர தினம்

மனிதனாக
நீ வாழ புறப்படு
இரத்தங்கள் எல்லாம்
சிந்துவதை விட
அன்பை கொஞ்சம் கொஞ்சம்
சேமித்து
உன் அடுத்த
தலைமுறையிடம் சொல்லு

இனம் என்று ஒன்றுமில்லை
சாதியென்று மனிதனில் இல்லை

காதலும்
அன்பும்
கருணையும்
கொஞ்சம் இதயத்துள்
உரமிட்டு வளர விட்டு
புதிய
சுதந்திர தினத்தை
தேசத்துள் வாழவிடு.

- எஸ். பி. பாலமுருகன்

காதலிக்கச் சொல்லும் இளைஞன்

கடுக்கண்
போட்டவளே
காரிகை
ஆனவளே!

இடுக்கண்
இல்லாம
ஏற்றிடுவாய்
என் மனதே!

- பி.ரி. அkஸ்

இயல்பு

காதல்
கணவாய்க்குள் வீழ்ந்து
எழுவதென்பது
அவ்வளவு சுலப மல்ல....
தெரிந்தும்
மன செல்லாம்
குருடாகிப் போகிறது
அந்த பாதையில் தான்!!

- நதார், ஜின்னா நகர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.