புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
நவபாரத சிற்பி நேரு

நவபாரத சிற்பி நேரு

நண்பருக்கு பணிவிடை

ஒரு சமயம் நேருவும் நண்பர் சையது முகம்மதுவும் ஒரே சிறைக்குள் ஆனால் வெவ்வேறு அறைகளில் இருக்கும்படி நேரிட்டது. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் திடீரென்று நேரு தம் அறையை மாற்றி சையது முகம்மது அறைக்கே வந்து விட்டார். முதலில் எல்லோரும் வியப்படைந்தனர். அவர்களுக்குக் காரணம் புரியவில்லை.

அதன் பிறகு தான் தெரிந்தது, சையது முகம்மதுவுக்கு உடல்நலம் சரியில்லை என்று. அவருக்குப் பணிவிடை செய்வதற்காகவே நேரு அவரது அறைக்கு மாற்றிக் கொண்டார். நேரு மாதக்கணக்கில் அவருக்கு பணிவிடை செய்தார்.

அன்பு தொல்லையிலிருந்து நழுவினார்

ஒரு நாள் புத்தகக்கடை ஒன்றிலிருந்து சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார் நேரு. வாசலில் அவரைக் காண்பதற்காக பெருங்கூட்டம் கூடியிருந்தது. அந்த அன்புத் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று சற்று நேரம் யோசனை செய்தார். அங்கு பலூன் விற்றுக் கொண்டிருந்தவரிடம் நிறைய பலூன்களை விலைக்கு வாங்கிக் கொண்டார். கொஞ்ச நேரம் கையில் வைத்துக் கொண்டிருந்தார். நேரு பலூன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை கூட்டத்திலிருந்தவர்கள் தெரிந்து கொண்டனர். திடீரென்று நேரு அந்த பலூன்களை பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்துவிட்டு வேறு பக்கம் திரும்பி தமது கார் இருந்த இடத்திற்கு வந்துவிட்டார். பலூன் வைத்துக்கொண்டிருப்பவர் நேருதான் என்று எண்ணி அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது கூட்டம். நேரு காரில் புறப்பட்டார்.

குறைச் சொல்லாதே

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் ஒன்று நேருவின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு உறுப்பினர் இங்கு பின்பற்றப்படும் முறை மாகாண சட்டசபைகளில் பின்பற்றப்படும் முறையைப் போல இல்லையே என்று நேருவிடம் வந்து குறைச் சொன்னார்.

நேரு சட்டென்று.... “ஏன் இந்தச் சபையும் உங்களுடைய மாகாணச் சட்டசபையின் நிலைக்கு கீழே இழுத்துக் கொண்டு வரட்டுமே என்று சொன்னதும் குறை சொன்னவர் வாயடைத்துப் போனார்.

பிறர் பசி அறிதல்

வார்தாவுக்கு நேருவைச் சந்திப்பதற்காக சென்றிருந்தார் லல்பகதூர் சாஸ்திரி. இரவு சாப்பாட்டின்போது அவரைத் தேடினார் நேரு. அவரைக் காணவில்லை. எனவே நேரு மட்டும் உணவருந்தினார், பின்பு ஒரு தட்டில் பழங்களும், ஒரு தம்பளரில் பாலும் எடுத்து லால்பகதூர் சாஸ்திரிக்காக அவர் கட்டிலின் அருகில் வைத்துவிட்டார்.

படுக்கப்போகும் போது தமது கட்டிலின் அருகில் பாலும், பழமும் இருப்பதைப் பார்த்தார், லால்பகதூர் சாஸ்திரி. நேருவின் அன்பு உள்ளத்தை நினைத்தார்.

அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

ஜே வேண்டாம்!

சேவை செய்!

ஒரு சமயம் பட்டப்பகலில், புது டில்லியில் ஒரு தெருவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். எத்தனையோ போக்குவரத்துக்களுக்கிடையே அவர்கள் தங்களையும் மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு பெரிய பஸ் வந்தது. சிறுவர்கள் அங்கும் இங்கும் கலைந்து ஓடினர். ஒரு சிறுவனுக்கு மட்டும் விரைவாக ஓட முடியவில்லை. பஸ்ஸின் சக்கரம் சிறுவனின் காலில் உராய்ந்து காயப்படுத்திவிட்டது. அவன் விழுந்துவிட்டான். பஸ் நின்றுவிட்டது.

இந்த சமயத்தில் நேருவை சுமந்துகொண்டு ஒரு கார் வந்தது. நேருவைக் கண்டதும் எல்லோரும், “ஜவகர்லால் நேருவுக்கு ஜே!” என்று கூவத்தொடங்கிவிட்டனர்.

நேருவின் கார் நின்றது. அவர் காரிலிருந்து இறங்கி காயப்பட்டுக்கிடந்த அச்சிறுவனை நோக்கி ஓடி வந்தார் அவர் கோபத்துடன், “ஒரு சிறுவன் காயப்பட்டுக் கிடக்கிறான், அவனை கவனிக்காமல் எனக்கு ஜே போடுகிaர்களே!” என்று கூச்சலிட்டார். அந்தச் சிறுவனை தமது காரில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார், ஒரு நாட்டின் பிரதமரைக்கண்டு ஆரவாரம் செய்வதைவிட சாதாரணச் சிறுவனுக்கு ஆபத்தில் உதவுவது மேல் என்பதை மக்களுக்கு உணர்த்திய நேர்மையாளர் அவர்.

கலங்கிய பேச்சு

மகாத்மா காந்தி காலமானபோது மட்டும்தான் ஜவகர்லால் நேருவின் எதற்கும் கலங்காத இதயம் செய்வதறியாது திகைத்து நின்றது. முன் தயாரிப்பு ஏதுமின்றி அவர் அன்று இரவு ரேடியோவில் பேசியதை கேட்டவர்களுக்கு இது தெரியும்.

பிரதமர் அல்ல சகோதரரே!

நேருவும் ஜெய்பிரகாஷ் நாராயணனும் நெருங்கிய நண்பர்கள். நெருங்கிய சினேகிதர்களான அவர்கள் சகோதரமுறையில் தான் பழகினர்.

சினேகிதர்கள் இருவரும் அடிக்கடி கடிதங்கள் எழுதிக் கொள்வார்கள். நேரு ஜெய்ப்பிரகாசுக்கு எழுதினாலும், அன்புச் சகோதரருக்கு என்று தான் எழுதுவது பழக்கம்.

நேருவை விட்டுப்பிரிந்த ஜெய்பிரகாஷ், தனியே சோஷலிஸ்ட்கட்சி அமைத்தபின் அவருக்கு ஒரு தடவை கடிதம் எழுதினார். அது வழக்கம்போல் அன்பு சகோதரருக்கு என்று தொடங்காமல் அன்பு பிரதம மந்திரிக்கு என்று தொடங்கியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு நேரு பதில் எழுதும்போது, “அன்புச் சகோதரருக்கு! நீங்கள் என்னை எப்போதும் போல அழைத்துக் கொண்டு எழுதாமல் அன்பு பிரதம மந்திரிக்கு என்று எழுதியிருந்தது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. நான் என்னதான் பதவியிலிருந்தாலும் என்றுமே உங்களுக்குச் சகோதரர்தான். இனிமேல் சகோதரனுக்கு என்றே எழுதுங்கள்”

கடிதத்தைப் படித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மனம் நெகிழ்ந்துபோனார். இதுதான் மேன்மக்கள் குணம் என்பது.

பிறந்த நாள் பரிசு

நேரு தமது சகோதரி கிருஷ்ணாவின் பிறந்த நாளை மறக்க மாட்டார். பிறந்த நாள் பரிசு கொடுத்து வாழ்த்துவார். ஒரு சமயம் கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று பிரிட்டிஷ் அரசு நேருவைக் கைது செய்து கொண்டு போய்விட்டனர்.

பிறந்த நாள் பரிசுக்கு என்ன வழி....?

சிறையிலிருந்து அவர் அவளுக்குக் கீழ்க்காணும்படி கடிதம் எழுதினார்.

“எதிர்பாராமல் சிறைக்குச் சென்று விட்டேன். என் அன்பு சகோதரியே! உனக்கு என்னால் பிறந்தநாள் பரிசாக எதையும் அளிக்க முடியவில்லை.

இடைக்காலத்தவரின் நம்பிக்கையான வாழ்க்கை, தற்கால மனிதனின் சமய வாதம் எதிர்காலத்திலேற்படக் கூடிய உன்னத வாழ்க்கை - இவை தொடர்புடைய சிறந்த புத்தகங்களைப் பொறுக்கி எடு, அதற்கு நீயே பணம் கொடுத்து விடு! உன் பிறந்த நாளுக்கு உன் அன்பான அண்ணன் அளித்த பரிசாக நினைத்துக் கொள். இதுதான் சகோதர பாசம்.

மகள் மீது புகார் சொன்ன உறுப்பினர்

பாராளுமன்றத்தில் வெளிநாட்டு விவகார வரவு, செலவுத் திட்டம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பீகாரைச் சேர்ந்த உறுப்பினர் பேச எழுந்தார்,

நேருவின் மகள் இந்திராவைப் பற்றி அருவருக்கத்தக்க முறையில் ஆபாசமாகப் பேசிக் கொண்டே போனார்....

“திருமதி இந்திரா வெளி நாடு ஒன்றிற்குச் சென்றிருந்த சமயம் அந்த நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தின் காரை எடுத்துக் கொண்டு இந்திய அரசாங்கச் செலவிலேயே நடனசாலை, நாடக சாலை என்றெல்லாம் சுற்றி உல்லாசமாக இருந்தார். இதுபோன்று அவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த போது நேரு ஒரு பத்திரிகையை வைத்துக்கொண்டு என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சங்கூடப் பொறுமையை இழக்கவில்லை.

உறுப்பினர் பேசி முடித்தார். அவர் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமே, எனவே நேரு புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசிய வெளிநாட்டு இலாகாவின் தொடர்புடையவன் நான், எனவே இதற்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்.” உறுப்பினர் கூறியதுபோல் நான் அறிந்தவரையில் ஏதும் நடக்கவில்லை என்று நான் உறுதியாக கூறுவேன். ஆனால் உறுப்பினரிடம் இது பற்றிய உறுதியான ஆதாரங்கள், தகவல்கள் தெரியுமென்றால் நான் அவசியம் பரிசீலனை செய்கிறேன்.

இதை அந்த சின்னப் பெண்ணின் தந்தை என்ற முறையில் இந்த உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைதியாகக் கூறிவிட்டு அமர்ந்தார் நேரு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.