புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
சுவாமி விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர்

அறிமுகம்

1942ஆம் ஆண்டிலே மதுரையில் நடைபெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி தலைமைப் பேருரை நிகழ்த்திய விபுலானந்த அடிகளார் பின்வருமாறு கூறினார்:

இரண்டரைக் கோடியென்னும் எண்ணினராகிய நம் தமிழ்க் குலத்தார் அனைவரும் பசியும் பிணியும் பகையும் நீங்கிப் பொருட் செல்வமும் செவிச்செல்வமும் அருட்செல்வமும் ஏற்ற பெற்றியெய்தப் பெற்று மண்ணக மாந்தர்க்கு அணி யெனச் சிறந்து வாழ்வார்களாக.

பந்த பாசங்களை துறந்து மனுக்குலத்துக்குச் சேவை செய்ய வந்த விபுலாநந்தர் தமிழ்க் குலத்தவர் பசியும் பிணியும் நீங்கி பொருட் செல்வம் முதலிய செல்வம் பெற்று வாழ வேண்டுமென்று கருதுவதும் ‘நம் தமிழ்க் குலம்’ என உளப்பாட்டுத் தன்மைப் பன்மையிற் கூறுவதும் ஏனைய சமூகங்களை விடத் தமிழ்ச் சமூகம் மேலாக வாழவேண்டும் என்று அவாவுவதும் துறவு பூண்ட போதிலும் தமிழரையும் தமிழர் சமூகத்தையும் துறக்காத விபுலாநந்தரின் உளப்போக்கையும் தமிழ்ப்பற்றை விடாத மனப்பாங்கையும் காட்டுவனவாயுள்ளன.

1948ஆம் ஆண்டிலே விபுலாநந்தர் மறைவையொட்டி திரு. க.க. முருகேசப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘ஈழமணி விபுலாநந்த நினைவு மலரில்’ விபுலாநந்தர் பற்றிக் கூறவந்த கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.

சங்கத் தமிழ் கேட்க வேண்டுமானால் இருவரிடம் கேட்க வேண்டும். ஒருவர் பெரும் பேராசிரியர் சாமிநாதர் மற்றொருவர் விபுலாநந்தர். நான் அவர்களைப் பார்த்து இருபத்திரெண்டு ஆண்டுகளாயின. ஆனால் அக்காலத்தில் அவர் உடல்மெலிந்தே வந்தது. தமிழ்த்துடிப்பு வலுவாய் இருந்தது. அந்தத் துடிப்பு இன்று பல்லாயிரம் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும் அடிகளார் பலருக்குத் தமிழ் வெறியேற்றினார்கள்.

துறவுக் கோலம் பூண்ட அடிகளாரைத் தமிழ் பற்றிக் கொண்டது. தமிழைத் துறக்க முடியாத துறவியானார் விபுலாநந்தர்.

விபுலாநந்தரை அறிந்து கொள்ள அவரைப் புரிந்து கொள்ள உடனடியாக எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தாம். எனினும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், சிறு குறிப்புக்கள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், அவருடன் தொடர்பு கொண்டோர் அவர் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைப்பின் சரியான கணிப்பீடுகளைச் செய்ய முடியும்.

விபுலாநந்தரின் வாழ்க்கைப் பின்னணி

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காரைதீவில் சாமித்தம்பியருக்கும் கண்ணம்மைக்கும் மகனாக 27.03.1892 அன்று விபுலாநந்தர் என்ற துறவுப் பெயரினைப் பின்னாளில் பெற்ற மயில்வாகனன் பிறந்தார். தனது சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், 1904 ஆம் ஆண்டில் கல்முனை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும், 1907ஆம் ஆண்டில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கல்வி பெற்று அதே பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றினார். பின்னர் கொழும்பு அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியல் இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று மீண்டும் 1912இல் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார்.

இரண்டு ஆண்டுகள் இக்கல்லூரியில் கடமையாற்றிய பின்னர் கொழும்புப் பொறியியல் கல்லூரியில் கற்று டிப்ளோமா பட்டமொன்றினைப் பெற்றுக் கொண்டார். இதே நேரத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, இலங்கையிலேயே முதன் முதலாக பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் அறிவியல் துறை ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றிய காலத்தில் தனது சொந்த முயற்சியில் கற்று இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய விஞ்ஞானமாணித் (பி.எஸ்.சி) தேர்வில் 1919ஆம் ஆண்டு தேர்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமையாசிரியராகச் சில வருடங்கள் சேவையாற்றினார். இந்நிலையில் 1924 ஆம் ஆண்டு சென்னை சென்ற மயில்வாகனனார் அவ்வாண்டு சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று துறவறம் பெற்று ‘சுவாமி விபுலாநந்தா’ எனும் நாமத்தைப் பெற்றார்.

1925ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய சுவாமி அவர்கள் இராமகிருஷ்ணமடம் சார்பில் தாம் பிறந்த காரைதீவில் பெண்களுக்கென சாராதா வித்தியாலயத்தையும் மட்டக்களப்புக்கு அருகேயுள்ள கல்லடி, உப்போடையில் சிவானந்த வித்தியாலயத்தையும் நிறுவினார்.

1931 இல் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட போது அதன் தமிழ்ப் பேராசிரியர் பதவியினை ஏற்குமாறு அண்ணாமலைச் செட்டியார் விடுத்த அழைப்பையேற்று அங்கு சென்று 1933 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.

இதைத் தொடர்ந்து 1943ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தினர் தமது தமிழ்த் துறைக்குத் தலைவராக வரும்படி சுவாமி அவர்களை அழைத்தனர். இவ்வழைப்பை ஏற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் பதவியினைப் பொறுப்பெடுத்தார்.

அடிகளாரின் நீண்டநாள் ஆராய்ச்சியின் பயனாக நூலுருப் பெற்ற ‘யாழ்நூல்’ இன் அரங்கேற்ற விழா கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் 1947ஆம் ஆண்டு ஆனி மாதம் 20 மற்றும் 21இல் சிறப்பக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய அடிகளார் உடல்நலிந்து நோயுற்று கொழும்பில் 19.07.1947 அன்று காலமானார்.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.