புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
கோவேறு கழுதையின் கதை

கோவேறு கழுதையின் கதை

“பெருமைக்குரிய பூதமே! இந்தக் கோவேறு கழுதை என்னுடைய மனைவிதான்! இவள் மீது நான் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தேன். ஆனால் இவள் எனக்குத் துரோகம் செய்துவிட்டு ஒரு நீக்ரோ அடிமையுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாள்.

ஒரு தடவை இவளது தகாதச் செயலை நான் கண்களால் பார்த்துவிட்டேன். இவளைக் கொல்வதற்காக கத்தியுடன் இவள் மீது பாய்ந்தேன்.

இவளுக்கு மந்திரசக்தி உண்டு. உடனே அவர் என் மீது நீரைத் தெளித்து தனது மந்திர சக்தியினால் என்னை ஒரு நாயாக மாற்றிவிட்டாள்.

நான் நாய் உருவத்துடன் எங்கெங்கோ அலைந்து திரிந்தேன். கடைசியாக ஒரு மந்திரவாதியிடம் புகலடைந்தேன். என்னைப் பற்றிய வரலாற்றை விளங்கிக் கொண்ட அவன், என் மீது இரக்கப்பட்டு நான் மனித உரு பெற உதவினார்.

பிறகு அவர் எனக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுத் தந்து, “யார் மீதாவது சிறிது நீரைத் தெளித்து இந்த மந்திரத்தைச் சொன்னால், நீ விரும்பும் உருவத்திற்கு அவர்களை மாற்றிவிடலாம்” என்று சொன்னார். நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்று மந்திர சக்தியினால், என் மனைவியை கோவேறு கழுதையாக மாற்றிவிட்டேன். இதுதான் என் கதை.

இவ்வாறு மூன்றாவது வழிப்போக்கன் கூறினான்.

“இந்தக் கதையும் வினோதமாகத்தான் இருக்கிறது” என்று கூறிய பூதம் வணிகனை முற்றிலுமாக தண்டனையில் இருந்து விடுதலை செய்துவிட்டு மறைந்துவிட்டது.

இவ்வளவு நேரமாகக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த ஷாரியர் மன்னன், “ஷாரஜாத், உண்மையிலேயே இந்தக் கதை பிரமிப்பு ஊட்டுவதாகத்தான் இருக்கிறது. அடுத்த கதையில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்துடன் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்று பாராட்டினான்.

ஷாரஜாத், ஷாரியர் மன்னனை நோக்கி வணக்கத்துடன், “மன்னாதி மன்னர் அவர்களே, இதுவரை நான் சொன்ன கதைகள் மிகவும் சாமானியமானவை. மிகவும் சாமர்த்தியமாக ஒரு பூதத்தை ஏமாற்றி, அதன் பிடியிலிருந்து தப்பிய செம்படவன் கதை மிகவும் பரபரப்பூட்டுவதாகும்” என்றாள்.

“அப்படியா? அந்தச் செம்படவன் கதையைக் கூறு கேட்போம்” என்று ஷாரியர் மன்னன் கேட்டுக் கொண்டான். ஷாரஜாத் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

பூதத்தை ஏமாற்றிய செம்படவன்

கடற்கரை ஓரமாயிருந்த ஒரு கிராமத்தில் வயது முதிர்ந்த செம்படவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு மனைவியும், மூன்று மக்களும் உண்டு. மீன் பிடிக்கும் விஷயத்தில் அவன் ஒரு நியதியைக் கடைப்பிடித்து வந்தான். மீன்பிடிக்கச் சென்றால், ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் மட்டுமே வலையை வீசுவான்.

அந்த நான்கு தடவைகளிலும் மிகவும் குறைவாக மீன் கிடைத்தால் கூட, ஐந்தாவது தடவையாக வலை வீசாமல், கிடைத்தவரை போதும் என வீடு திரும்பி விடுவான்.

ஒரு தடவை மீன் பிடிக்கப் படகில் கடலுக்குச் சென்ற செம்படவன் முதலில் மூன்று முறை வலையை வீசினான்.

முதல் தடவை வலையில் செத்த கழுதையின் உடல் கிடைத்தது. இரண்டாவது தடவை மண்குடம் ஒன்று வலையுடன் வந்தது. மூன்றாவது தடவை உடைந்த மண் குடத்து ஓடுகள் தான் வலையுடன் வந்தன. கிடைத்தவற்றை கடலுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்துவிட்டு நான்காவது தடவையாகச் செம்படவன் வலையை வீசி இழுத்தான்.

அப்போது மிகவும் சிறிய பித்தளைச் சொம்பு ஒன்று வலையில் சிக்கி இருந்தது.

அந்தச் சொம்பின் வாய் மூடியிருந்ததைக் கண்ட செம்படவன் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. என்றாலும் அந்தச் சொம்பை எடுத்துக் கொண்டு கரையை வந்தடைந்தான்.

சொம்புக்குள் என்ன இருக்கக் கூடும் என்ற ஆவலுடன் அதன் வாய் மூடியைச் சிரமப்பட்டு அகற்றினான். உடனே சொம்பினுள்ளிருந்து புகை தோன்றியது. சற்று நேரத்திற்கெல்லாம் மேலும், மேலும் வெளிவந்த புகை வானத்து அளவுக்கு உயர்ந்து எங்கும் சூழ்ந்து கொண்டது.

புகை இலேசாகக் கலைந்தபோது பிரம்மாண்டமான உருவத்தில், பயங்கரமான தோற்றமுடைய ஒரு பூதம் செம்படவன் முன் நின்றது.

செம்படவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. மனத்திலே மூண்ட அச்சத்தால் அவன் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை.

ஒரு மலையைப் போன்று உயர்ந்து நின்ற அந்த பூதம் தனது பழுத்த கண்களைச் சுழற்றி பயங்கரமான கோரப் பற்களுடன் காட்சியளிக்க வாயைத் திறந்து, “ஏ மனிதனே, இப்போது நான் உன்னைக் கொல்லப் போகிறேன்” என உறுமியது.

செம்படவன் கொஞ்சம் யோசித்தான். இந்தப் பயங்கரமான பூதத்திடமிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று எண்ணினான்.

யோசிப்பதற்குச் சற்று அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பூதத்தை நோக்கி, “பூதப் பெரியவரே, என்னைக் கொல்வது என்று நீர் தீர்மானித்த பிறகு நான் என்ன செய்ய முடியும்? நான் சாவதற்கு முன்னர் உம்மைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்” என்றான்.

“நானும் என் வரலாற்றை யாரிடமாவது சொல்லித் தான் ஆகவேண்டும். அதனால் உன்னிடமே சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, பூதம் தனது கதையைக் கூறியது.

“தாவீதின் குமரன் சுலைமானை எதிர்த்து ஒரு பூதக் கூட்டம் போராடியது. அந்தப் பூதக் கூட்டத்தில் நானும் ஒருவன். மற்ற பூதங்கள் அடக்கப்பட்டன. நான் மட்டும் அடங்காமல் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்ட சுலைமான் என்னைப் பிடித்துக்கொண்டு வருமாறு அவருடைய மந்திரி குமாரர் ஆசப் என்பவருக்கு உத்தரவிட்டார்.

ஆசப் என்னைத் தமது மந்திர சக்தியினால் புகை உருவமாக்கி ஒரு சிறிய சொம்பினுள் போட்டு மூடிக் கடலில் எறிந்துவிட்டார். கடலில் சொம்பினுள் சிக்கிக்கொண்டு திண்டாடிய நான் என்னை யாராவது காப்பாற்றினால் அவர்களுக்கு செல்வத்தை அளிப்பது என தீர்மானித்துக்கொண்டேன். பல்லாண்டு காலமாகியும் என்னை யாருமே காப்பாற்றாததினால் எனக்கு மனித குலத்தவர் மீதே, வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இனி யார் என்னைக் காப்பாற்றினாலும் அவரைக் கொன்றுவிடுவது என முடிவெடுத்தேன். இப்போது நீர் என்னைக் காப்பாற்றினீர். என் தீர்மானப்படி உம்மை நான் கொன்றாக வேண்டும்” என்று பூதம் கூறியது.

“என்னை நீர் கொல்வதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. அதற்கு முன்னதாக ஒரு சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும். இந்த மாதிரி வானளவும் உயரத்துடன் உள்ள உம்மை சுலைமான் இந்தச் சொம்பினுள் அடைத்து வைத்திருந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.” என்று செம்படவன் கூறினான்.

“நான் பொய் சொன்னேன் என்றா நினைக்கிறாய் இதோ பார்” என்று கூறியவாறு பூதம் தன்னை புகை உருவமாக மாற்றி சொம்பினுள் சென்று அடங்கிக் காட்டியது.

செம்படவன் உடனே செம்பின் மூடியைப் போட்டு நன்று அழுத்தமாகத் திருகி மூடிவிட்டான். முட்டாள் பூதம் சொம்பினுள் நன்றாக மாட்டிக் கொண்டுவிட்டது.

தான் ஏமாந்து மாட்டிக் கொண்டதைக் கண்ட பூதம் சொம்பினுள் இருந்தவாறே செம்படவனை நோக்கி, “ஐயா, தயவு செய்து என்னை வெளியே விடும். உம்மை நான் கொல்லமாட்டேன்” என்று குரல் கொடுத்து கெஞ்சியது.

“நன்றி கெட்ட உன்னை வெளியே விடமுடியாது. உன்னை மறுபடியும் கடலில்தான் போடப் போகிறேன். உன்னை நம்பி வெளியே விட்டால் யூனான் மன்னனைப் போலத்தான் நீயும் நடந்து கொள்வாய்” என்று செம்படவன் கூறினான்.

“யூனான் அரசன் எவ்வாறு நடந்து கொண்டான்?” என பூதம் கேட்டது.

“அது ஒரு கதை. அதை உனக்குச் சொல்லுகிறேன்” என்று செம்படவன், பூதத்திற்குக் கதை சொல்லத் தொடங்கினான்.

தீராத நோய் தீர்த்த துறவி

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை யூனான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வற்றாத செல்வத்தையும், உயர்ந்த குணநலன்களையும் பெற்றுத் திகழ்ந்த யூனான் மன்னனை தீராத தொழுநோய் பிடித்துத் தொல்லை கொடுத்து வந்தது.

நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் முயன்றும் தொழுநோயைக் குணப்படுத்த இயலவில்லை. யூனான் மன்னன் கவலையும், வேதனையும் அடைந்தான். தனக்குள்ள நோயை யார் தீர்த்தாலும் ஆயிரக் கணக்கில் பொன்னையும், பொருளையும் பரிசாக அளிப்பதாக விளம்பரப்படுத்தினான்.

ஒரு நாள் துபான் என்ற பெயருடைய துறவி ஒருவன் அரச சபைக்கு வந்து மன்னன் யூனானைச் சந்தித்தான். மன்னனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைத் தன்னால் குணமாக்கிவிட முடியும் என துறவி உறுதியுடன் கூறினான்.

யூனான் மன்னனுக்கு துறவியின் பேச்சில் நம்பிக்கை விழா விட்டாலும், துறவி துபானை சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்தான்.

துறவி துபான் எந்தவித மருந்தையும் மன்னனுக்கு உள்ளுக்குக் கொடுக்காமல் எல்லோரும் ஆச்சரியப்படும் விதத்தில் மன்னனுக்கு இருந்த தொழுநோயை முழுமையாகக் குணமாக்கி விட்டான்.

பெருமகிழ்ச்சி அடைந்த யூனான் மன்னன் துறவி துபானுக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவித்ததோடு, கணக்கு வழக்கின்றி பொன்னும் பொருளும் வெகுமதியாக அளித்தான்.

பிறகு மன்னன், துறவி துபானை தன்னுடனேயே தங்கி விடுமாறு வேண்டிக்கொண்டான். துறவி துபானும் மன்னனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அரண்மனையில் தங்கிவிட்டான். துபான் வசதியுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை மன்னன் யூனான் செய்து கொடுத்தான்.

யூனான் மன்னன் துறவி துபானுடன் நெருக்கமாக ஒட்டியுறவு கொண்டு வாழ்ந்தான். நாள் முழுவதும் துபானுடனேயே கழித்தான். துபான் பேச்சுக்கு மறு பேச்சே இல்லை என்ற நிலை அரண்மனைக்குள் உருவாகிவிட்டது.

அரண்மனையில் துறவி துபானின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அமைச்சர்களுக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை.

முன்பு மன்னனிடம் செல்வாக்கு பெற்றவனாக இருந்த ஓர் அமைச்சன், துபான் வந்த பிறகு தான் செல்லாக்காசாகி விட்டதைக் கண்டு துபான் மீது பொறாமையும், ஆத்திரமும் கொண்டான்.

ஒருநாள் அமைச்சர் மன்னன் யூனானை சந்தித்து, “மன்னர் பெருமானே, துறவி துபான் மீது முழு நம்பிக்கை வைத்துச் செயற்படுவதன் மூலம் உங்களை நீங்களே அழித்துக் கொள்கிaர்கள்” என்று சொன்னான்.

“உனக்கு ஏன் அவ்வாறு தோன்றுகிறது?” என்று மன்னன் கேட்டான். “துபான் நமது பரம எதிரியான ஒரு நாட்டு மன்னனின் ஒற்றன். சமயம் பார்த்து தங்களைத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி கபட நாடகமாடுகிறான்.” என்றான் அமைச்சன்.

மன்னன் அலட்சியமாகச் சிரித்தான்.

“துறவி துபான் மீது எனக்கு ஏற்பட்டி ருக்கிற பொறாமையின் பிரதிபலிப்பு இது.

உன் சொற்களை நம்பி நான் துறவி துபான் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், கிளியைக் கொன்றவன் பிறகு வருத்தப்பட்டதைப் போல நான் வருத்தப்பட நேரிடும்” என்றான் மன்னன் யூனான்.

“கிளியைக் கொன்றவன் யார்? எதனால் அவன் வருத்தப்பட நேர்ந்தது?” என அமைச்சன் கேட்க, மன்னன் யூனான் அந்தக் கதையைத் தொடங்கினான்.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.