புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 

பெருந்தோட்ட சமூக, பொருளாதார மேம்பாட்டில்

பெருந்தோட்ட சமூக, பொருளாதார மேம்பாட்டில்

மக்களின் நம்பிக்கையை வென்ற ~ட்ரஸ்ட்'

பெருந்தோட்டத்துறையிலும், பெருந் தோட்டத்துறையில் பணியாற்றுபவர்களின் சமூக, பொருளாதார விடயங்களிலும் கூடுதல் அக்கறையுடன் செயற்படும் அமைப்பான பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் (ட்ரஸ்ட்) 20 வருடங்களாகத் தனது சேவையை ஆற்றிவருகிறது.

இந்த அமைப்பின் 20வது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் விமரிசையாக நடைபெற்றது. கொழும்பு 7ல் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களான ஜீ.டி.வி.பெரேரா மற்றும் கலாநிதி டி.வி.சீவரட்ணம் ஆகியோர் மீண்டும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் பணியாளர்களின் பழைமைவாய்ந்த லயன் வீடுகளை மாற்றி தனியான கல்வீடுகள் அமைத்துக்கொடுத்தல், சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நீர் வழங்கல் சேவைகளை சீர்படுத்திக் கொடுத்தல், பெருந்தோட்டத்துறை மாணவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்கல், பெருந்தோட்டத்துறை தாய்மார்கள் மற்றும் பொது மக்களுக்கான சுகாதார வசதிகள், மலசலகூட வசதிகள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான போசாக்கு உணவு வேலைத்திட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையம் உதவிகளைச் செய்து வருகிறது.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளுடன் பெருந்தோட்டத்துறைக்கு அந்த அமைப்பு பரந்துபட்ட ரீதியிலான சேவைகளை வழங்கி வருகின்றது.

பெருந்தோட்டத்துறையில் கடந்த காலங்களில் அதிகளவான முதலீடுகள் வர ஆரம்பித்திருப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர்சபை உறுப்பினர் கலாநிதி சீவரட்ணம் குறிப்பிட்டார்.

இலங்கையின் பெருந்தோட்டத்துறை மக்களின் குடிநீர்த் தேவைகள் மற்றும் அப்பகுதி மாணவர்களின் கல்வித்துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பங்களிப்புச் செய்து வருவதாக அங்கு உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்தார்.

யுனிசெப் அமைப்புடன் இணைந்து பெருந்தோட்டத்துறை யிலுள்ள 100 பாடசாலைகளுக்கு 4.8 மில்லியன் டொலர் செலவில் போசாக்குத் திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், 3.5 மில்லியன் டொலர் செலவில் வேல்ட் விஷன் அமைப்புடன் இணைந்து குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், இதனால் 4000 க்கும் அதிகமான குடும்பங்கள் நன்மை அடைவதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்டத்துறை யில் 10 க்கும் அதிகமான குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார். பெருந்தோட்டத்துறைக்குத் தொடர்ந்தும் உதவிகளை வழங்க அவுஸ்திரேலியா தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் 20வது வருடாந்த பொதுக் கூட்டத்தில், பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 7 மாணவர்கள் பரிசுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் கல்வி நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் இவ்வாறு மாணவர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரம், பெருந்தோட்டத்துறையிலுள்ள சிறுவர்களைப் பராமரிப்பது தொடர்பில் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தால் பயிற்சியளிக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் 35 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் பல்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் புனரமைக்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடியதாக உள்ளது என இங்கு கருத்துத் தெரிவித்த சிறுவர் அபிவிருத்தி அதிகாரியான சுபரத் மெனிகே சுட்டிக்காட் டியிருந்தார்.

இதுமட்டுமன்றி 20 வருட காலத்தில் தம்முடன் இணைந்து செயற்பட்டுவரும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கிக் கெளரவித்திருந்த பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம், தமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிவரும் அதிகாரிகளையும் கெளரவித்திருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.