புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
வரலாற்று நாயகனின் கதை

வரலாற்று நாயகனின் கதை

,தையடுத்து, இராணுவத்தினரும், பொலிஸாரும் ஜே.வி.பியினரை நாடெங்கிலும் சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்து, தங்கள் கையில் அகப்பட்ட ஜே.வி.பி. சந்தேக நபர்களை ஸ்தலத்திலேயே சுட்டுக்கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் முகமாக ஜே.வி.பியினர் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப அங்கத்தவர்களை படுகொலை செய்தனர். இதனால் ஆயுதப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஜே.வி.பியினர் மீது இருந்து வந்த பகைமை காரணமாக ஜே.வி.பியினர் மத்தியில் உயிரிழப்புக்கள் அதிகரித்தன. கொழும்பிலும் நாட்டின் பல்வேறு பிரதான நகரங்களிலும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் சடலங்களை மக்கள் பார்க்க கூடியதாக இருந்தது. களனி கங்கையிலும், களு கங்கையிலும் நாளாந்தம் 50,60 சடலங்கள் அடித்துக் கொண்டு வந்து கடலில் சங்கமித்தன.

கடலுக்கு அடித்து வரும் மனித சடலங்களை மீன்கள் சாப்பிடும் என்ற அருவருப்பு உணர்வு நாட்டு மக்களிடையே வலுப்பெற ஆரம்பித்ததனால் பெரும்பாலானோர் மீன் உணவை தவிர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால், மீனவர்களும், மீன் வர்த்தகர்களும் அன்று, பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் கமநாயக்க, இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ரோஹண விஜேவீர, தலைமறைவாகி ஒரு தோட்ட சொந்தக்காரர் போன்று அத்தநாயக்க என்ற போலிப் பெயரில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவரும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து தொலைக்காட்சியில் தோன்றிய விஜேயவீர, தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நாம் தவறு செய்து விட்டோம். இனிமேல் அந்த தவறுகள் இடம்பெறாது என்று மன்னிப்பு கோரினார். ஆயினும், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவாகி சில மணித்தியாலங்களில் ரோஹன விஜேயவீரவும் இராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

இவ்வளவு வன்முறைகளுக்கும் பின்னணியிலிருந்து செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் சோமவங்ச அமரசிங்கவும், தலைமறைவாகி கள்ளத்தோணியில் இந்தியாவுக்கு தப்பிச் சென்று, பின்னர் இங்கிலாந்துக்கு இரகசியமாக சென்றதாக கூறப்படுகிறது.

இவர் 87,88,89ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. வன்முறைகள் நாட்டில், உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை 1987ஆம் ஆண்டில், இந்தியா கைச்சாத்திட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கும் முகமாக, இலங்கையிலிருந்த இந்திய இராஜதந்திரிகள், இந்தியர்கள் மற்றும் இந்தியா என்ற பெயருடைய வர்த்தக நிறுவனங்களையும், அடித்து சேதப்படுத்துவதற்கு சோமவங்ச அமரசிங்க பின்னணியில் இருந்தார் என்று கூறப்படுகிறது. ஜே.வி.பி. வன்முறைகள் உச்ச கட்டத்தை அடைந்த காரணத்தினால் இந்திய அரசாங்கம் தமது தூதரக அதிகாரிகளையும், இலங்கையில் உள்ள இந்திய பத்திரிகையாளர்களையும், இந்திய பிரஜைகளையும் கொழும்பு தாஜ் ஹோட்டலில் அறைகளை வாடகைக்கு எடுத்து, தனது செலவில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்தது.

அவ்விதம் இந்தியாவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த சோமவங்ச அமரசிங்க, இங்கிருந்து மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, முதலில் இந்தியாவுக்கே தப்பிச்சென்று, அங்கிருந்து பின்னர் இங்கிலாந்துக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. அன்று இந்தியாவின் ஒரு மறைமுக அரசியல் கைதியாக இருந்துவந்த, வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்திய அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அழைத்துவந்து, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் ளுமாறு வற்புறுத்தியது. எங்கள் யோசனைப்படி நடந்தால், உமக்கு எல்லாவிதமான செல்வாக்கையும், அதிகாரத்தையும் நாம் பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிப்போம் என்று தெரிவித்தது. யோசனைகளை ஏற்றுக் கொள்வதாக நடித்த பிரபாகரன், தனது விடுதலைப் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு வந்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்ததாக, இந்த சம்பவம் பற்றி பின்னர் பிரபாகரனின் அரசியல்

 ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் ஒரு சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்திய அரசாங்கம் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தது. பகிரங்கமாக அன்று இந்தியாவை எதிர்ப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல என்று கருதிய பிரபாகரன், அதனை ஏற்றுக்கொள்வது போன்று பாசாங்கு செய்து, யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் இருக்கும் பழைய பூங்காவில், பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, தற்போது பயன்படுத்த முடியாத பழைய ஆயுதங்களையும், ரொக்கற் மற்றும் ஏனைய குண்டுகளையும், பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு வெற்றிடத்தில் வைத்து, இலங்கை இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெரி சில்வாவிடம் இந்த ஒப்பந்தத்தை, எல்.ரி.ரி.ஈ ஏற்றுக்கொண்டு விட்டது என்பதற்கு ஒரு அறிகுறியாக கையளித்தது. எல்.ரி.ரி.ஈ யின் சார்பில் யோகி என்ற போராளி, தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியை, ஆயுதங்களை ஒப்படைப்பதன் ஒரு சின்னமாக, இலங்கை இராணுவத் தளபதியிடம் நட்புறவுடன் கையளித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை, ஏற்றுக்கொள்ள விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பல்வேறு சதிவேலைகளைச் செய்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மறைமுகமான முட்டுக்கட்டைகளை விதித்தது. எல்.ரி.ரி.ஈ யும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இந்த காலகட்டத்தில், திலீபன் என்ற எல்.ரி.ரி.ஈ போராளி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்ததையடுத்து, முதற்தடவையாக எல்.ரி.ரி.ஈ யினர் தங்களை பாலூட்டி வளர்த்து, இராணுவப் பயிற்சியளித்த இந்திய இராணுவத்தினருடன் நேரடியான மோதலை ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் எல்.ரி.ரி.ஈ தலைவர் குமரப்பாவும், அவரது 12 சகாக்களும், இலங்கைக் கடற்படையினரால் ஆழ்கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டு பலாலி முகாமுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர், அங்கிருந்து அவர்களை இராணுவத்தினர் அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவுக்கு அமைய கொழும்புக்கு பலவந்தமாக கொண்டுவர எத்தனித்ததை, அடுத்து அவர்கள் 13 பேரும் சைனைட் வில்லைகளை கடித்து, மரணத்தை தழுவிக் கொண்டதே இந்த மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

அதையடுத்து, மறுதினம் யாழ்ப்பாண நகரில் வெடித்த வன்முறையில் சுமார் 300 சிங்களப் பொதுமக்களும், 20க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் இலங்கை ரூபவாஹினியைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் உட்பட 4 பேரும் எல்.ரி.ரி.ஈ யினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்விதம் ஆரம்பமாகிய எல்.ரி.ரி.ஈ யுத்தம், ஒரு தொடர் கதையைப் போன்று, 1987 இல் இருந்து தொடர்ந்தது. எல்.ரி.ரி.ஈ யுத்தத்தை, ஒரு பிச்சைக்காரன் தனது காலில் உள்ள காயத்தை காட்டி அனுதாபத்தைப் பெற்று பிச்சை எடுப்பதைப் போன்று, ஜே.ஆர்.ஜெயவர்தனவின், அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ க்கு எதிராக யுத்தத்தை நடத்திக்கொண்டு, அதன் மூலம் சிங்கள மக்களை ஏமாற்றி, அரசியல் இலாபம் தேட முயற்சி செய்தது.

அதுபோன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அதே கொள்கையைக் கடைப்பிடித்து, எல்.ரி.ரி.ஈயை இராணுவ ரீதியில் துவம்சம் செய்வதற்கு விருப்பமின்றி, எல்.ரி.ரி.ஈ தோல்வியடையும் கட்டத்திற்கு வரும்போது, யுத்தத்தை இடைநிறுத்தி அவர்களுக்கு சிதறிப்போன தங்கள் படைகளை மீண்டும் தயார்படுத்துவதற்கு அவகாசம் கொடுக்கக்கூடிய, தேசியப் பற்றற்ற கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்.

2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த பின்னரே, சரியான யுத்த யுத்திகளை பயன்படுத்தி, வடக்கிலும், கிழக்கிலுமுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில், யுத்தத்தை படிப்படியாக விஸ்தரித்து கொண்டு போய், வெளிநாட்டு வல்லரசுகளின், யுத்தத்தை இடைநிறுத்தி சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் என்று, கொண்டு வந்த அழுத்தங்களை உதாசீனம் செய்து, இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை முற்றாக துவம்வம் செய்து, 30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த சாதனையை ஏற்படுத்துவதற்கு இராமனுக்கு தம்பி இலக்குமணன், இலங்காபுரி யுத்தத்தில் உறுதுணை புரிந்து, இராவணனை சங்காரம் செய்ததைப் போன்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவரது இளைய சகோதரரான, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதுணை புரிந்து, பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் மறைவுக்கும் உதவியமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.