புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
அமரர் கல்கியின்

அமரர் கல்கியின்

ஏ.வி.எம்

“இவர் யார் அப்பா, அட்டைப் படத்திலே அமோகமாக ஜொலிக்கிறவர்?” என்று கேட்கும் நேயர்களுக்கு “வேறு யாரும் இல்லை, நமது ஏ.வி. மெய்யப்பா அவர்கள் தான்!” என்று தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ ஏ. வி. எம். அவர்கள் தமது ஸ்டூடியோவில் பலரைப் படம் பிடித்து வெள்ளித்திரையில் விளங்கச் செய்திருக்கிறார். ஆனால் தமது சொந்தப் படத்தைப் பிடித்ததுமில்லை; வெளியிட்டது மில்லை. எனவே, நம் அட்டைப் படத்தில் அவரைப் பிடித்துப் போட்டதுடன், ஸ்டூடியோ விளக்கையும் அவர் மீது திருப்பி விட்டிருக்கிறோம்.

சென்ற வருஷத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் “வாழ்க்கை என்னும் படமே தலை சிறந்தது என்று சென்னை ரஸிகர்கள் பெரும்பான்மை ‘வோட்டு’ மூலம் தீர்மானித்தார்கள். இதிலிருந்து சென்னை ரஸிகர்களின் ரஸிகத் தன்மையில் நம்முடைய நம்பிக்கை உறுதிப்பட்டது. இது மட்டுமல்ல; தமிழ்ப் பொது மக்களின் தீர்ப்பும் ரஸிகர்களின் தீர்ப்பையே வற்புறுத்தி நின்றது. “வாழ்க்கை” படம் தமிழ்நாடு முழுவதும் “அடாடா!” என்று அதிசயித்துக் கொண்டிருந்தது. “தமிழில் இவ்வளவு நன்றாகவும் உயர்தரமாகவும் ஜனரஞ்சகமாகவும் ஒரு படத்தைக் கொண்டு வர முடிந்ததே!” என்று தமிழ்நாட்டு ரஸிகர்கள் வியந்து கொண்டிருந்தார்கள். அந்த அதிசயமும் வியப்பும் இன்னும் தீர்ந்த பாடில்லை அதற்குள்ளே நமது மெய்யப்பா அவர்கள் தமிழ் “வாழ்க்கை”யைத் தெலுங்கு “ஜீவிதம்” ஆக்கி வெளியிட்டிருக்கிறார். “ஜீவிதம்” ஆந்திர தேசத்தையே ஒரு ஆட்டு ஆட்டி வைத்து விட்டுச் சென்னை நகருக்கு வந்திருக்கிறது. தீபாவளியின் போது சென்னையில் “ஜீவிதம்” வெகு சோபிதமாக விளங்கும்.

ஸ்ரீ ஏ. வி. மெய்யப்பன் அவர்களுடைய வாழ்க்கையில் இந்த “வாழ்க்கை” படமும் “ஜீவித” மும் இரண்டு உயர் சிகரங்கள் ஆகும். தமிழ்நாட்டிலும் சரி, ஆந்திர தேசத்திலும் சரி, இந்தப் படங்கள் இதற்கு முன் வெளியான எந்தப் பிரமாதமான படத்தைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் பிரமாதமான வெற்றியை அளித்திருப்பதாக அறிகிறோம்.

இத்தகைய அமோகமான வெற்றி ஸ்ரீ ஏ.வி.எம். அவர்களின் மடியில் ஏதோ அதிர்ஷ்டத்தினால் ‘திடுதிப்’ பென்று வந்து விழுந்துவிடவில்லை. ஏறக்குறையப் பதினைந்து வருஷகாலமாக இடைவிடா முயற்சியுடன் ஏகாக்கிர சித்தத்துடன் உழைத்த உழைப்பின் பலன் இதுவாகும். இந்தப் பதினைந்து வருஷ காலம் ஸ்ரீ ஏ. வி. எம். அவர்கள் ‘பணவசூல்’ மட்டும் பிரதானம் என்று கருதாமல், உயர்தரமான படங்களையே கொண்டு வர வேண்டும் என்று பாடு பட்டு வந்திருக் கிறார். அவர் எடுத்த படங்க ளில் விரஸமான கட்டங்களையோ ஆபாசக் காட்சிகளையோ காண முடியாது. உயர்தரமான படங்களைத் தூய்மையாகவும் ஜனரஞ்சகமாகவும் எடுத்து வெற்றி காண வேண்டும் என்ற இலட்சியத்துடன் பதினைந்து வருஷம் பாடுபட்ட பிறகு “வாழ்க்கை” படத்தில் அவருடைய ‘ஜீவித’ இலட்சியம் நிறைவேறியிருக்கிறது.

ஸ்ரீ ஏ. வி. எம் தமது சொந்த வாழ்க்கையில் பல அரிய குண நலங்களைப் படைத்தவர்; இனிய சுபாவம் உடையவர்; உண்மை நட்பு என்னும் பண்புக்குச் சிறந்த உதாரண புருஷர்.

பாரதியாரின் பாடல் உரிமைகளைப் பல்லாயிரம் ரூபாய் கொடுத்து ஸ்ரீ ஏ. வி. எம். வாங்கியபோது பலர் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்கள்.

(21ஆம் பக்கம் பார்க்க)

ஏ.வி.எம்....

(15ஆம் பக்கத் தொடர்)

பிறகு அவர்களே அந்தப் பாடல்களினால் ‘மேனா’ பஸத்தை வாரிக் கட்டிக் கொண்டு விடுகிறார் என்று புகார் செய்தார்கள்.

பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கிய பாரதி பாடல் உரிமையை ‘மேனா’ எவ்வித நிபந்தனையுமின்றிப் பொது ஜனசர்க்காருக்கு உரிமையாக்கியபோது, எதிரிகளும் அவருடைய அரிய செயலைப் பாராட்ட வேண்டியதாயிற்று.

பாரதி மண்டபக் கைங்கரியம் முதலிய பொதுக்காரியங்களுக்கு ஸ்ரீ ஏ. வி. எம். அவ்வப்போது அளித்துள்ள உதவிகளைப் பற்றிக் “கல்கி” நேயர்கள் அறிந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் தமது சொந்த நன்கொடையைக் கொண்டு பிரசவ விடுதிச்சாலை ஒன்றை ஏற்படுத்த அவர் முன் வந்திருப்பதை அறிந்து பாராட்டுவார்கள்.

ஸ்ரீ ஏ.வி.எம். மேலும் மேலும் படத்தொழிலில் வெற்றி அடைந்து அகில இந்தியாவிலும் ஏ. வி. எம். புகழை நிலைநாட்டுவார் என்று நம்புகிறோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.