புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
விக்கிரமாதித்தன் கைதகள் 10

வேதாளம் சொன்ன எட்டாவது புதிர் கதை

‘அரசன் செய்ததே சிறப்பு’

“கண்டசிங்கன் என்னும் அரசன், பிரம்மபுரம் என்ற நகரத்தை ஆட்சி செய்து வந்தான். அவனிடம் காற்படிகன் என்னும் மெய்க்காப்பாளன் இருந்தான்.

அரசன் கண்டசிங்கன் குதிரைமீது ஏறிக்கொண்டு வேட்டைக்குச் சென்றான். குதிரை மிரண்டு மிக விரைவாக ஓடியது. குதிரையைப் பின் தொடர்ந்து காற்படிகனும் ஓடினான். ஓர் இடத்தில் போய், குதிரை நின்றது. அரசனுக்குத் தாகம் மேலிட்டது. திரும்பிப் பார்த்த பொழுது காற்படிகன் மூச்சிரைக்க ஓடி வந்தான்.

அவனைப் பார்த்து, “எனக்குத் தாகமாக இருக்கிறது. எங்கிருந்தாவது குடிக்கத் தண்ணீர் கொண்டு வா” என்றான்.

உடனே, தன் மடியில் வைத்திருந்த இரண்டு நெல்லிக் கனிகளை எடுத்து அரசனிடம் கொடுத்துவிட்டு, தண்ணீர் கொண்டு வருவதற்குச் சென்றான் காற்படிகன்.

தூரத்தில் இருந்த சுனையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அரசனுக்குக் கொடுத்துத் தாகத்தைத் தீர்த்தான்.

காற்படிகனுடைய சேவையை அரசன் புகழ்ந்து உயர் பதவி அளித்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, காற்படிகனை அழைத்து “சிங்கள நாட்டு அரசகுமாரியை உன்னால் இங்கே அழைத்து வர இயலுமா?” என்று கேட்டான் அரசன்.

“நான் போய் அழைத்து வருகிறேன்” என்று கூறி, கப்பலில் சிங்கள நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான் காற்படிகன். காற்படிகன் ஏறிச்சென்ற கப்பல் நடுக்கடலில் உடைந்து மூழ்கிவிட்டது. அவனை ஒரு சுறாமீன் விழுங்கிவிட்டது. மீன் வயிற்றுக்குள் சென்றவன் அதைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். அதன் பின் நீந்திக்கொண்டிருக்கும்போது, மிதந்து கொண்டிருந்த கொடி ஒன்றைப்பற்றிக்கொண்டே நீந்தி சென்றான். அந்தக் கொடியானது அவனைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்ந்தது.

கரையேறியதும் காற்படிகன் அங்கே ஒரு காளிக்கோயிலைக் கண்டு அங்கே சென்றான். அப்பொழுது தோழியர் பலர் சூழ, அரசகுமாரி கோயிலிருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் காற்படிகனுக்கு அவளிடம் காதல் உண்டாயிற்று. அரசகுமாரியின் தோழி ஒருத்தியைக் கூப்பிட்டு, தன் கருத்தை தெரிவித்தான். அவள் சென்று அவன் கூறியதை அரசகுமாரியிடம் சொன்னாள்.

அரசகுமாரி, காற்படிகனைப் பார்த்து, “உண்மையாகவே என்னை நீ காதலித்தால், இதோ இந்தக் கிணற்றில் இறங்கி முழுகி வா” என்று கூறினாள்.

அரசகுமாரி சொன்ன உடனே, காற்படிகன் அருகிலுள்ள கிணற்றில் முழுகி எழுந்தபோது, தன் சொந்த ஊரில் இருந்தான். “கப்பலில் மூழ்கி இறந்துபோன காற்படிகன், பிழைத்து வந்து விட்டான்” என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர்.

அரசனுக்குச் செய்தி எட்டியதும் காற்படிகனை வரவழைத்து விசாரித்தான். தான் புறப்பட்டது முதல் கிணற்றில் முழுகி எழுந்த வரையில், நிகழ்ந்தது அனைத்தையும் காற்படிகன் கூறினான்.

உடனே அரசன், காற்படிகனை உடன் அழைத்துக் கொண்டு, அவன் கண்ட அரசகுமாரியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். நடுக்கடலில் தென்பட்ட கொடியைப் பின் தொடர்ந்து கப்பலைச் செலுத்திக் காளிகோயிலை நோக்கிச் சென்றார்கள்.

வழக்கம்போல் அரசகுமாரி அன்று கோயிலுக்கு வந்திருந்தாள். அங்கு வந்திருந்த அரசனைப் பார்த்துக் காதல் கொண்டாள். தன் தோழி மூலம் அரசனுக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள். அவனும் அரசகுமாரியைக் காண விரும்புவதாக அதே தோழியிடம் சொல்லி அனுப்பினான்.

அரசன் கண்டசிங்கனை நேரில் கண்டு, தன்னுடைய கருத்தைத் தெரிவித்தாள் அரசகுமாரி. அதைக் கேட்ட அரசன் அவளிடம், “என்னை நீ காதலிப்பது உண்மையானால், நான் கூறுவதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறாயா?” என்று கேட்டான்.

அவளும் அதற்குச் சம்மதித்தாள்.

உடனே அரசன், அரசகுமாரியிடம் காற்படிகனைச் சுட்டிக் காட்டி, “இவன் என்னுடைய உயிர் நண்பன். இவனை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான்.

அரசகுமாரியும் அரசனுக்கு வாக்களித்தபடி, காற்படிகளை மணந்து கொண்டாள். “காற்படிகா, நான் தாகமாயிருந்தபோது, அன்று எனக்கு இரண்டு நெல்லிக் கனிகளை கொடுத்தாய்! இன்று இந்தப் பெண் கனியை உனக்கு அளித்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு, முன்பு காற்படிகன் முழுகிய கிணற்றில் அரசன் முழுகித் தன்னுடைய நகரம் போய்ச் சேர்ந்தான்.

“அரசன், காற்படிகனுக்குச் செய்தது சிறந்ததா? அல்லது காற்படிகன் அரசனுக்குச் செய்தது சிறந்ததா?” என்று கேட்டது வேதாளம்.

“காற்படிகன் அரசனுக்குக் கட்டுப்பட்டவன். ஆகையினால், அவனுடைய செய்கையைக் காட்டிலும் அரசன் செய்ததே சிறந்த காரியம்” என்று விடுவித்தான் விக்கிரமாதித்தன். உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போய்க் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தான். வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

வேதாளம் சொன்ன ஒன்பதாவது புதிர் கதை

‘அறிவுக் கூர்மையான ஆண் ஆடு’

(கதைக்குள் கதை)

கிரகபுஜன் என்னும் அரசன் உஷாபுரம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்தான். அவனுக்கு மணிக்கிசை என்று ஒரு பெண் இருந்தாள். அவளை மணிமான் என்ற அரசனுக்கு மணம் செய்து வைத்தான். மணமக்கள் இருவரும் சுகமாக வாழ்ந்து வந்தனர்.

கணவன் - மனைவி இருவரும் ஒருநாள், கட்டிலில் படுத்திருந்த போது அந்தக் கட்டிலுக்கு கீழே எறும்புகள் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தன. முன்னே சென்று கொண்டிருந்த எறும்புகள் ஒரு இடத்தில் தயங்கி நின்றன.

அப்பொழுது பின்னால் வந்து கொண்டிருந்த எறும்புகள் அவற்றைப் பார்த்து, “ஏன் நின்று விட்டீர்கள்?” என்றன. அதற்கு “மேலே செல்ல இடம் இல்லை. கட்டில் தடுக்கிறது” என்றன முன்னால் சென்ற எறும்புகள்.

“அப்படியானால், கட்டிலைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றன பின்னால் வந்த எறும்புகள்.

“அரச தம்பதிகள் படுத்திருக்கும் கட்டிலைத் தூக்கி எறிந்தால் குற்றம் உண்டாகும்” என்றன முன்னால் சென்ற எறும்புகள்.

அரசகுமாரன் மணிமானுக்கு சகல உயிர் இனங்களின் மொழியும் தெரியும். ஆகையால், எறும்புகளின் உரையாடல்களைக் கேட்டு அவன் சிரித்தான். கணவன் சிரிப்பதைக் கண்ட மனைவி, “ஏன் சிரிக்கிaர்கள்?” என்று கேட்டாள்.

அரசகுமாரி மணிக்கிசை தன் கணவனிடம் கேட்ட கேள்வி எறும்புகளின் காதில் விழுந்தது. உடனே எறும்புகள் அரசகுமாரன் மணிமானைப் பார்த்து, “எங்களுடைய உரையாடலை நீர் யாரிடமாவது சொன்னால், அப்பொழுதே உமது தலை ஆயிரம் சுக்கலாக வெடித்து விடும்” என்றன.

அதனால், மனைவியின் கேள்விக்குப் பதில் கூறாமல் தயங்கினான் மணிமான். கணவனுடைய தயக்கத்தைக் கண்டதும் மனைவி கோபமுற்று, “என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் கூறாவிடில் நான் உயிரை விட்டு விடுவேன்” என்றாள்.

அரசனுக்கோ தர்மசங்கடமாய்ப் போய்விட்டது. “உன்னுடைய கேள்விக்கு நான் பதில் சொன்னால், என்னுடைய தலைவெடித்து இறந்து விடுவேன்” என்றான் மணிமான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்று வற்புறுத்தினாள் மணிக்கிசை.

“அப்படியானால், நாளை சுடுகாட்டில் விறகை அடுக்கச் செய்து அதில் நான் உட்கார்ந்துகொண்டு சொல்கிறேன். சொல்லி முடித்ததும் தலை வெடித்து நான் இறந்து விடுவேன். உடனே கட்டையில் நெருப்பு வைத்துவிடு” என்றாள் மணிமான்.

“சரி, அப்படியே செய்கிறேன்” என்றாள் மணிக்கிசை. மறுநாள், சுடுகாட்டில் அடுக்கப்பட்ட விறகுக் கட்டைகளில் மணிமான் உட்கார்ந்திருந்தான். எறும்புகளின் உரையாடலை மனைவிக்குச் சொல்லப்போகும் சமயத்தில், இரண்டு ஆடுகளின் உரையாடலைக் கேட்டான்.

ஆண் ஆட்டிடம், கிணற்றின் உட்பக்கம் முளைத்திருக்கும் புல்லைப் பறித்துத் தரும்படி கேட்டது பெண் ஆடு. “உன் பேச்சைக் கேட்டு நான் கிணற்றில் இறங்கினால், விழுந்து செத்துப் போவேன். பெண் பேச்சைக் கேட்க எனக்குப் பைத்தியமா, என்ன? இனிமேல், என் அருகில் வராதே” என்று கூறிவிட்டு அப்பால் போய்விட்டது ஆண் ஆடு.

அதைக் கேட்ட மணிமாறனுக்குத் தன்மானம் கிளர்ந்து எழுந்தது. அடுக்கப்பட்ட கட்டையிலிருந்து கீழே இறங்கி, மனைவியிடம், “தீயவளே, என் மரணத்தைப் பற்றிக் கவலையுறாத உன்னிடம் எறும்புகள் கூறிய இரகசியத்தைக் கூற வேண்டியது என்ன அவசியம்? மேலும் உன்னுடன் வாழ்க்கை நடத்துவது பைத்தியக்காரத்தனம். இனி, உன் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று கூறி, அவளை விட்டுப் போய்விட்டான்.

“இந்தக் கதையில், “அறிவில் சிறந்தவர் யார்?” என்று கேட்டது வேதாளம்.

“ஆட்டு பிறவியாயிருந்தாலும், பெண் புத்தி கேளாத ஆண் ஆடே அறிவில் சிறந்தது” என்று கூறி கதையை விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போய்க் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தான். வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

வேதாளம் சொன்ன பத்தாவது புதிர் கதை

‘திருடனே சிறந்தவன்’

(கதைக்குள் கதை)

தீரவீரன் என்னும் அரசன் கோசல நாட்டை ஆட்சி செய்தான். அங்கே, தனதத்தன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தத்தன் என்ற மகனும் மதனசேனை என்ற மகளும் இருந்தனர்.

தன் மகள் மதனசேனையை சமுத்திரதத்தன் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் மதனசேனை பந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது தத்தனுடைய தோழனான தருமதத்தன் அவளைச் சந்தித்து, அவனிடம் தனக்கு ஒரு மலரைத் தரும்படி கேட்டான்.

அதற்கு அவன், “எனக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.

மதனசேனைக்கும் சமுத்திரதத்தனுக்கும் திருமணம் சிறப்பாக நிறைவேறியது. தன் கணவனிடம் “சில நாட்களுக்கு முன், என் சகோதரனின் நண்பன் என்னிடம் ஒரு மலரைத் தரும்படி கேட்டான். அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே, நான் கொடுத்த வாக்குத் தவறாமல் நடந்துகொள்ள எனக்கு உத்தரவு தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.

தன்னுடைய மனைவியின் கள்ளங்கபடமற்ற குணத்தைக் கண்டு வியந்து அவளுக்கு விடை கொடுத்தான் கணவன். மதனசேனை நடு இரவில் தருமதத்தன் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.

வழியில், ஒரு திருடன் அவளை மறித்தான். அவள் பயந்து, தன்னுடைய நகைகளை எல்லாம் கழற்றி அவனிடம் கொடுத்தாள். ஆனால், அவன் அதை வாங்க மறுத்துவிட்டு, தனக்கு ஒரு அவனும் மலரைத் தரும்படி கேட்டுக்கொண்டான்.

அவள், தான் போகும் காரியத்தை அவனிடம் கூறிவிட்டுத் திரும்பும்போது அவன் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொன்னாள். திருடனும் அவள் கூறியதை ஏற்று அவளைப் போகும்படி கூறினான்.

பிறகு, அவள் தருமதத்தன் வீட்டை அடைந்து, அவனுக்கு மலர் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். அவளுடைய நேர்மையைக் கண்டு தருமதத்தன் பயந்து நடுங்கி விட்டான், அவளை தன் சகோதரியாகப் பாவித்து, மரியாதையுடன் திருப்பி அனுப்பி வைத்தான்.

மதனசேனை திரும்பி வரும் வழியில் திருடனைக் கண்டு, தருமதத்தன் வீட்டில் நிகழ்ந்ததைக் கூறினாள். திருடனும் அவளுடைய உறுதியையும், நேர்மையையும் பாராட்டி, மேலும், தன்னிடம் இருந்த நகைகளை அவளுக்குப் பரிசாக அளித்து, மரியாதையோடு அவளை அனுப்பி வைத்தான்.

மதனசேனை வீட்டுக்கு வந்து கணவனிடம் நடந்தவற்றைக் கூறி, திருடன் பரிசாக அளித்த நகைகளையும் காட்டினாள். கணவன் சமுத்திரதத்தன் மனைவியின் நேர்மையைக் கண்டு மகிழ்ந்து அவளை மிகவும் பாராட்டினான்.

“இக்கதையில் வரும், மதன சேனையின் கணவன், நண்பன், திருடன் ஆகிய மூவரில் யார் சிறந்தவர்?” என்று கேட்டது வேதாளம்.

“மதன சேனையின் உறுதியைப் பாராட்டி, தன் கையில் இருந்த நகைகளைப் பரிசாக அளித்த திருடனே சிறந்தவன்”

என்று கதையை விடுவித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் கட்டு அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போய்க் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தான். வேதாளம் மறுபடியும் கதை சொல்லத் தொடங்கியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.