புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

அல்பிரட் நோபல்

அல்பிரட் நோபல்

அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் திகதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெ ரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். இளம் வயதில் அறிவியலில் மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஐந்து மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர், தன் தந்தையைப் போன்று வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் பற்றிய ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டார்.

நைட்ரோ கிளிசரினை கீசல்குர் எனும் களிமண்ணுடன் கலந்து அதனை உலர்த்தி தூளாக்கிக் கொண்டார். இதனை என்ன செய்தாலும் வெடிக்காது. ஆனால் அதை மின்சாரத்தின் உதவியுடன் அழுத்தக் கெப்பினால் பற்ற வைத்தால் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். இதற்கு டைனமைட் என பெயரிட் டார்.

நோபல் கண்டுபிடித்த டைனமைட் ஆபத்து நிறைந்தது. போர்க்காலங்களில் டைனமைட்டினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதே வெடிமருந்து பல நல்ல விடயங்களுக்கும் பயன்பட்டது. மலையைக் குடைந்து ரயில் பாதைகளை அமைக்கவும், பு+மியிலுள்ள கனிமப் பொருட்களை வெளிக் கொணரவும், கிணறுகள், பள்ளங்கள் வெட்டவும் பயன்படுத் தப்பட்டது. நோபலின் வெடிமருந்து கண்டுபிடிப்பு பெரும் புகழையும் செல்வத்தையும் ஈட்டியது. நாடு முழுவதும் டைனமைட்டிற்கு அமோக வரவேற்பு இருந்தது. இதன் மூலம் நோபல் பெரும் செல்வந்தர் ஆனார். எனினும் தான் கண்டுபிடித்தது அழிவுப் பொருளாகையால் அதற்காக மனம் வருந்தினார். இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இவர், தான் பெற்ற செல்வங்களை மக்களுக்கே வழங்க தீர்மானித்து அறக்கட்டளையொன்றை நிறுவினார். அந்த நிதியிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்தார். இதற்கான உயில் ஒன்றையும் 1895ஆம் ஆண்டில் எழுதினார்.

நோபல் பரிசானது நோபல் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே கண்டு பிடிப்புகளுக் காக வழங்கப்படும் மிகப்பெரிய பரிசு நோபல் பரிசாகும். நோபல் நினைவு நாளன்று சுவீடன் தலைநகரான ஸ்டொக் ஹோமில் வழங்கப்படுகிறது. நோபல் பரிசானது இயற்பியல், இரசாயனவியல்;, உடற்கூறு அல்லது மருத்துவம், சமாதா னப்பணி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த வர்களுக்கு வழங்கப்படுகிறது. தான் ஈட்டிய செல்வத்தை தனக்கென வைத்துக்கொள்ளாமல் உலகிற்கே அர்ப்பணித்த நோபல் 10.12.1896 அன்று காலமானார்.

வாழும் கலை!

புத்தர் வாழ்ந்த வாழ்க்கை - வாழ்ந்து
புனிதம் ஆக வேண்டும்!
கர்த்தர் சொன்ன வேதம் - கற்க
கனவு காண வேண்டும்!

* * *

கண்ணன் உரைத்த கீதை - கேட்டு
கண்கள் மூட வேண்டும்!
அண்ணல் நபியைப் போல - அன்பு
ஊற்றில் மூழ்க வேண்டும்!

* * *

காந்தி நடந்த பாதை - புரிந்து
கருத்தில் கொள்ள வேண்டும்!
சாந்தி பெற்று வாழ்வில் - நிதமும்
சொர்க்கம் தோன்ற வேண்டும்!

* * *

அன்னை தெரேசா போல - வாழ
ஆசை கொள்ள வேண்டும்!
என்னை நானே புரிந்து - வாழ்வில்
ஏற்றம் காண வேண்டும்!

* * *

அன்பைக் கொடுக்க வேண்டும் - நல்ல
அறிவை வளர்க்க வேண்டும்!
இன்பம் துன்பம் இரண்டும் - சமமாய்
உணரும் வாழ்வே வேண்டும்!

* * *

சிந்துஜா, கண்டி.

பத்திரிகையின் பயன்

பத்திரிகை குறைந்த செலவில் இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடியதொரு சிறந்த ஊடகமாகும். உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் பத்திரிகைகள் வெளிவருகின்றன. நாடுகளில் நடைபெறும் அன்றாட சம்பவங்களை செய்திகளாக வெளியிடுவதில் பத்திரிகைகளின் பங்கு அளப் பரியது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி வரும் பத்திரிகைகளை மாணவர்களாகிய நாம் தினமும் பார்த்து தேவையான தகவல்களை திரட்டிக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக ளில் வெளிவரும் பத்திரிகைகளில் நாட்டு நடப்புகள், வெளிநாடுகளில் நடைபெறும் சம்பவங்கள் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிவருகின்றன. எனவே பத்திரிகைகளை படித்து பல தகவல்களை அறிந்து பயன் பெறுவோம்.

ஏ.ஆர்.பாத்திமா ரஸ்மினா,
தரம் - 04தி, ப / அல். இர்ஷாட் ம.வி,
ஹாலி - எல.

காலை உணவைத் தவிர்த்தல் கூடாது...!

காலையில் எதையும் சாப்பிடாமல் இருப்பதனால் உடலுக்கு நன்மை ஏதேனும் உண்டா? காலை உணவு விடயத்தில் பொதுவாக எல்லோரும் அலச்சியம் காட்டுகின்றனர். நேரமின்னையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது. இரவு முழுதும் வயிறு வெறுமையாக இருப்பதால் உடலுக்கு சக்தியை அளிக்கும் குளுகோஸின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப்பெற காலை உணவு அவசியம். இவ்வாறு காலை உணவை உட்கொண்டால் தான் நாள் முழுவதும் உரிய சக்தியுடன் அசதியின்றி இயங்க இயலும் காலை உணவை தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர குறைவதில்லை. ஆகவே நாம் உயிர்வாழ காரணமான உணவைப்பற்றி அக்கரை செலுத்த வேண்டியது நம் கடமையல்லவா...!

ஆர். லுஷா

புனித தோமையார் பெண்கள் பாடசாலை

மாத்தளை.

தேன் குடம் எங்கே?

கரடி திடீரென விழித்துக் கொண்டது. கடுமையான பசி, குடலைத் தீயாய்ப் பற்றி எரித்தது. பசியைத் தணிக்க, வழக்கம் போல் தேன் குடம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது. அந்தக் குடம் கரடி வாழும் குடிசையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் தான் கரடி, காட்டு மலர்களில் உள்ள தேனை எல்லாம் தேடி, எடுத்துச் சேகரித்து வைக்கும். தனக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் சுவைத்து உண்ணும்.

இப்பொழுது, தேன் குடத்தில் தேன் இல்லை. பசியோடு வந்த கரடி, குடம் இருப்பதைப் பார்த்து, ஏமாந்து. கடும் கோபம் கொண்டது.

“குடத்தில் இருந்த தேனை எல்லாம் திருடிக் குடித்தது யார்? யாருக்கு இந்தத் தைரியம் வந்தது. ஒரு வேளை ஓநாய் குடித்திருக்குமோ, சே! ஓநாய் தேன் சாப்பிடாதே. அது அசைவமல்லவா, பிறகு, யார் குடித்திருப்பார். ஒரு வேளை முயல் இந்தக் காரியத்தைச் செய்திருக்குமோ, ஆமாம்! அந்தக் குறு முயல்தான் இப்படிப் பட்ட வேலையைச் செய்யும்; முயல்தான், முயலே தான்! சந்தேகமே இல்லை”.

கரடி கடுங்கோபத்துடன் முயலைத் தேடி, காடு முழுவதும் அலைந்தது. கடைசியில். ஒரு வழியாக, முயலைக் கண்டு பிடித்து விட்டது. முயல் தனது கம்பீரமான மீசையைச் சரிசெய்து கொண்டு, அமைதியாக ஒரு மேட்டில் உட்காந்து கொண்டிருந்தது.

“இங்கேதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாயா, ஏய், திருட்டு முயலே மீசையை வேறு முறுக்கிக் கொண்டிருக்கிறாயா, உன்னைச் செம்மையாக உதைத்தால்தான் சரிப்படும். இந்தா முதல் உதை; இதை வாங்கிக் கொள்” கரடி பெரிதாக உறுமியது. கண்கள் சிவக்கக் கோபத்தோடு காலைத் தூக்கி, உதைக்கப் பாய்ந்தது.

அந்தக் குறு முயல், எதையும் கண்டு கொள்ளவில்லை. சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், சொன்னது;

“நண்பர் கரடிக்கு உடல்தான் பெரிதாக இருக்கிறது. அந்த அளவுக்கு அறிவு இல்லை. இருக்கும் கொஞ்சம் அறிவும் வேலை செய்ய மறுக்கிறது. நல்ல நண்பனைச் சந்திக்கும் பொழுது, முதலில் வணக்கம் சொல்ல வேண்டும், என்ற மரபு கூடத் தெரியவில்லையே. யாராக இருந்தாலும், எனக்கு முதலில் வணக்கம் தெரிவித்த பிறகுதான். என்னோடு பேச வேண்டும். இதுதான் வழக்கம்.”

கரடிக்குக் கோபம் வந்தது. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், பற்களை மெதுவாக அடக்கமாகக் கடித்துக் கொண்டது. உம்! உம்! என்று மெல்ல முணங்கியது.

‘சரி வணக்கம் சொல்ல விருப்பம் இல்லை என்றால், பரவாயில்லை. முதல் முறைதான்; அதனால், உன்னை மன்னித்து விடுகிறேன். அடுத்த முறை சந்திக்கும் பொழுது, மரபுகளை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் சரி, இப்பொழுது, என்னைப் பார்க்க வந்ததன் நோக்கமென்ன, உனக்கு இப்பொழுது என்ன வேண்டும்?”

“ஒன்றும் தெரியாதது போல் பேசாதே; அற்ப முயலே, நான் சேகரித்து வைத்திருந்த தேனை எல்லாம், திருடிக் குடித்து விட்டு, என்னைக் கேலி வேறா செய்கிறாய், திருட்டு முயலே.”

“என்ன, தேனா, நீ என்ன சொல்கிறாய், நீ வைத்திருந்த தேனை, நான் திருடினேனா, தேன் என்றால், என்ன என்றே எனக்குத் தெரியாது.

அது கறுப்பா, சிவப்பா என்று கூடத் தெரியாது. அது எப்படி இருக்கும் என்று பார்த்தது கூட இல்லை. இந்தப் பிறவியில், நான் தேனைத் தீண்டியதுமில்லை. குடித்ததுமில்லை. சரி, தேன் வைத்திருந்தால், எனக்குக் கொஞ்சம் கொடேன்; குடித்துப் பார்க்கிறேன். உனக்கு ரொம்பப் புண்ணியமாய்ப் போகும்”.

கரடி பொறுமை இழந்தது. ஆத்திரத்தோடு கத்தியது. அதன் கர்ஜனை அந்தக் காடு முழுவதும் எதிரொலித்தது.

அஞ்சா நெஞ்சம் கொண்ட முயலுக்கே சிறிது அச்சம் வந்து விட்டது. என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

“நீ பொய் சொல்லுகிறாய்; நீ என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். எத்தனை நாளாக இந்தத் திருட்டு நாடகத்தை நடத்துகிறாய்; ஏய், போக்கிரி முயலே.”

அந்தக் குறுமுயல், உருவத்தில்தான் சிறியது. உள்ளத்தால் வலிமை வாய்ந்தது.

“கொஞ்சம் யோசித்துப் பேசு; முட்டாள் கரடி என்றால், உனக்குக் கோபந்தான் வருகிறது. ஆனால், முட்டாளேதான். நீ சேகரித்து வைத்திருந்த தேன் எங்கே இருந்தது என்று கூட எனக்குத் தெரியாது. அது காணாமல் போனது எப்படி என்று எனக்குத்தான் தெரியவில்லை; உனக்குமா தெரியவில்லை. என் உயிரை வந்து வாங்குகிறாயே, முரட்டுக் கரடியே.”

“மறுபடியும் பொய் சொல்லாதே; தேன் குடத்தில் இருந்த தேன். இப்பொழுது எங்கே இருக்கிறது. என்று எனக்கு நீ உண்மையைச் சொல்ல வேண்டும். இல்லை என்றால், என்னோடு இந்தக் காட்டில் நீண்டநாள் வாழ்கிறாய், என்று பார்க்காமல், உன்னை ஒரு நொடியில், ஒரு பிடியில் கொன்று விடுவேன். ஆமா, எனக்குக் கடுமையான பசி; விளையாடாதே.”

முயல் செய்வதறியாது விழித்தது. இந்த முரட்டுப் பிடிவாதமான கரடியிடமிருந்து, என்னை நாம் முயலுக்கே உரிய விவேகம்தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது. அதனால் கரடியிடம் மிகவும் சாதுரியமாக நடக்கத் தொடங்கியது. கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் பேசியது.

“என்னோடு வா; உன்னுடைய தேன் குடம் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன். வா, என்னுடன்.”

முயல் கரடியை அழைத்துக் கொண்டு, காட்டில் பெரிய பெரிய மரங்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்றது. அங்கே, நெருக்கமான கிளைகள் உடைய ஒரு மரத்தின் அடியில் நின்றது. மரத்தின் உச்சியில் ஒரு தேன் கூடு இருந்தது.

கரடிக்கு அந்தத் தேன் கூட்டைக் காட்டி முயல் இவ்வாறு கூறியது.

“இந்த மரத்தின் உச்சியைப் பார். அங்கேதான் நீ தேடும் தேன்குடம் இருக்கிறது. உன்னுடைய தேனை ஈக்கள் திருடிக்கொண்டுள்ளது, இந்தக் குடத்தில் வைத்துக் குடித்துக் கொண்டிருக்கின்றன. பார்த்தாயா, இந் நேரம் தேன் முழுவதையுமே குடித்திருக்கும். மரத்தின் மேல் ஏறிச் செல். ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் நீயும் கொஞ்சம் ‘நக்கிக் குடித்து, உன் பசியைப் போக்கிக் கொள். இப்பொழுது, வேறு என்னதான் செய்ய முடியும்?”

கரடிக்குத் தேன் திருடுபோன ஆத்திரம், ஒரு பக்கம்; இப்பொழுது, பசியைப் போக்கிக் கொள்ளச் சிறிதளவாவது கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி மறு பக்கம். எனவே, மிகுந்த ஆர்வத்துடன், மரத்தில் ஏறியது. தேன் கூட்டின் அருகில் சென்று பார்த்தது.

‘இந்த அற்ப ஈக்களுக்கு எவ்வளவு துணிச்சல்; நான் பாடுபட்டுச் சேகரித்து வைத்திருந்த தேனைக் குடத்தோடு தூக்கிக் கொண்டு வந்து விட்டனவே’ என்று ஆத்திரப்பட்டது.

‘முதலில் தேனைக் குடித்துப் பசியை அமர்த்திக் கொண்டு, பிறகு என்ன செய்கிறேன் இந்த ஈக்களை’ என்று தனக்குள் கூறிக் கொண்டே, தனது முன்னங்காலால் மெதுவாகத் தேனடையைத் தொட்டுப் பார்த்து; அவ்வளவுதான்! தேனீக்களின் படையே, ‘மொய்’ என்று திரண்டு எழுந்து கரடியைச் சுற்றி மொய்த்துக் கொண்டது.

உடனே தேனீக்கள் கரடியின் உடல் முழுதும் கொட்டின. கரடிக்குப் பயங்கரமாய் வலி எடுத்தது. கரடி மரத்திலிருந்து வேகமாய்க் கீழே இறங்கியது.

முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும், என்ற நிலையில் திரும்பிக் கூடப் பார்க்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாய் ஓடியது. ஓடிய வேகத்தில், வால்தான், ‘டொய்ங் டொய்ங்’ என்று ஆடியது. வாலில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்ககள் ‘மொய்ங் மொய்ங்’ என்று பறந்தன.

கரடி, முயல் எங்கே என்று பார்த்தது. தனக்கு முன்னால், முயல் வெகு தூரத்தில் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது.

கரடி தன் உடல் வலிமையை நம்பி, தான் தான் பெரியவன் என்று இறுமாந்து, உடலால் சிறியதான முயலை மிரட்டியது. ஆனால் முயல் தன் அறிவாற்றலால், கரடியிடமிருந்து தப்பித்துக்கொண்டது.


பா. மிதுர்ஜன்,
தரம் - 03,
திகோ / தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்,
தம்பிலுவில், திருக்கோவில்.

ச. பிருந்தா,
தரம் - 02தி,
ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹட்டன்.

பாத்திமா சஹானி சாஜித்,
தரம் -11,
தேசிய பாடசாலை, பறகஹ தெனிய,
வே உட.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.